Friday, March 28, 2014

சந்திரா மனோகரனின் ”உதிரும் மௌனம்” துளிப்பா நூல் மதிப்புரை - - யாழினி முனுசாமி

சந்திரா மனோகரனின் பதினெட்டாவது நூல் உதிரும் மௌனம். அவரது முதல் ஐக்கூ நூலிது. 17.01.2014 அன்று நூறாவது வயதை நிறைவுசெய்து நூற்றிவொன்றாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் தன் அப்பா அ. நாகசோன் அவர்களுக்கு இந்நூலை அர்ப்பணித்திருக்கிறார். (இன்றைய தேதியில் ( 05- 03- 2014) உலகின் வயதானவர் ஜப்பானைச் சேர்ந்த மிசாவ் ஒகாவா. மிசாவ் ஒகாவாவின் வயதைக்கடந்து வாழ நாகசோன் அய்யாவை வாழ்த்துவோம்!)
    
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

  மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
   என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

எனும் குறள்கள் நினைவுக்கு வருகின்றன.

பெற்றோரைப் போற்றும் குணம் கொண்டிருப்பதனால்தான் சந்திரா மனோகரனால்

       அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
         எப்பவோ கேட்ட பாடல்
         இப்ப நீங்க எங்கே?

என்று எழுத முடிகிறது.

     கவிதை என்பது படிப்பவரின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவே நல்ல கவிதையாக இருக்க முடியும். அப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய உள்ளன.

    இயற்கை நிகழ்வுகளின்மீது தம்கற்பனையை ஏற்றிக் ( தற்குறிப்பேற்ற அணி) கவிதையாக்கிவிடும் கலை சந்திரா மனோகரனுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. நாம் பார்த்துக் கடந்துபோய்விடுகிற பல காட்சிகளை இவர் அழகான கவிதைகளாக்கியிருக்கிறார்.

   கவனம் ஆதவனே!
    மாலையில் நீயிறங்க
    அச்சத்தில் குழந்தை

எனும் முதல் கவிதையே அதை மெய்ப்பித்துவிடுகிறது.

   மழைக்காலங்களில் சூரியனை மேகம் மறைத்துவிடும் . அந்த இயற்கை நிகழ்வை-

     இரவின் அடைமழை
       எழவே தயக்கம்
        உனக்குமா சூரியனே!

என்று கவிதையாக்கிவிடுகிறார். மழைக்கால விடிகாலைகளில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவதற்குச் சுகமாக இருக்கும். சூரியனுக்கும் அப்படி இருக்குமோ என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர்.

     கிணற்றில் தெரியும் நிலாவை வானில் மேலேறித் தற்கொலை செய்துகொண்டதாக எழுதுகிறார். அந்தியில் சூரியனின் மறைவை அதனுடைய வீடு திரும்புதலாகஎழுதுகிறார். மற்றொரு கவிதையில் சூரிய வெளிச்சத்தை வெப்ப வலையாக உருவகப்படுத்துகிறார்.

    பகலவன் வீசிய
     வெப்ப வலையில்
     சிக்கிய உலகம்

இதுவோர் அழகான கற்பனையாகும்.

     இயற்கைக் காட்சிகள் - மூட நம்பிக்கைகள் – அழகியல் – அரசியல் என இவரது கவிதைகள் பயணிக்கின்றன. இறை நம்பிக்கையும் சில கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.

    வீடும் வாசலும்
      முதலில் தந்தாய் கடவுளே
      புயலில் என்ன சேதி?

என்று கேட்கிறார். மனிதர்களுக்கு வீடும் வாசலும் கடவுளா தருகிறார். அப்படியெனில் வீடற்ற மனிதர்களை ஏன் கடவுள் நடைபாதையில் வீசியெறிந்திருக்கிறார்? கடவுளர்களுக்கு வீடும் வாசலும் கோபுரங்களும் கட்டித்தருவதே மனிதர்கள்தான் என்று சொன்னால் அந்த உண்மையை எந்தக் கடவுளும் மறுக்க மாட்டார்தானே? வீடும் வாசலும் தந்தது கடவுள்தான் என்றால் புயலைத் தருவதும் கடவுள்தான் என்றாகிறது. அத்தனை அப்பாவி உயிர்களை ஏன் பலிவாங்க வேண்டும்? அதுவும் எளிய மக்கள்தான் பலியாவார்கள்…பணக்காரர்கள் அல்லர். இப்படியெல்லாம் இக்கவிதை குறித்துக் கேள்விகளை முன்வைக்கலாம் என்றாலும் இக்கவிதையின் கடைசி வரி கேட்கும் கேள்விக்குப் பதில்…. இயற்கையை அழிக்காதே! சக மனிதனை மனிதனாக நடத்து. எப்போது வேண்டுமானாலும் உன் வாழ்க்கை முடிந்துபோகலாம் என்பதுதான்.

    ஒரு சில கவிதைகளில் பறவைகளைப் பெண்களுக்குக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்.

    வானமில்லா இலக்கு இப்போது
     தாய்ப் பறவைக்கு
     தன் கூடு. தன் குஞ்சு.

திருமணம் ஆகாதவரையில் பெண்கள் வாழ்க்கையில் இலட்சியங்களை வைத்துக்கொண்டிருப்பார்கள். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும்… குடும்பமும் அந்தக் குழந்தையுமே அவளது வாழ்க்கையாகிவிடும். அதனை இக்கவிதை அழகாகச் சித்திரிக்கின்றது. மற்றொரு கவிதையில் பெண்களின் சுதந்திரம் வீட்டுக்குள்ளாக மட்டும் சுருக்கப்பட்டிருப்பதைச் சித்திரித்திருக்கிறார். அக்கவிதை-

     அந்தப் பறவைக்கு
      விடுதலை
      கூண்டுக்குள்ளேயே

கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும் மூடநம்பிக்கையைக் கவிஞர் அறவே வெறுக்கிறார்.  எதற்கெடுத்தாலும் நல்லநாள் நல்லநேரம் பார்ப்பவர்களுக்கு உறைக்கும்படியாக எழுதியிருக்கிறார்.

      “ அன்று அகால மரணம்
      எதற்கெடுத்தாலும்
      நல்லநாள் பார்த்தவன்

இக்கவிதை பல கேள்விகளைப் பொதித்துவைத்திருக்கிறது. நல்லநாள் நல்லநேரம் பார்த்துத்தான் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நல்ல நேரம் பார்த்துத்தான் பயணங்களைத் தொடங்குகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் திருமணத்திற்குச் செல்பவர்கள் விபத்தில் இறக்க நேரிடுகிறது? அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் ஏன் விபத்தில் கொத்து கொத்தாகச் சாகிறார்கள்? கும்பமேளாக்களில் ஏன் நூற்றுக்கணக்கானவர்கள் சாகிறார்கள்? இதே சாயலில் இன்னொரு கவிதையையும் எழுதியிருக்கிறார்.

 மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதைப்போலவே சடங்குகளையும் எதிர்க்கிறார் கவிஞர்.

      இறந்தவன் போயாச்சு
      இருப்போர் கிளறுவர்
      சடங்குக் குப்பைகள்

என்ன கொடுமையென்றால் வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடவுள் நம்பிக்கைகளையும் மறுத்து நாத்திகராகவும் தோழராகவும் வாழ்ந்தவர்களையும் அவர்களது வாரிகளும் உறவினர்களும் தங்களின் சாதி மதச் சடங்குகளின்படியே அடக்கம்செய்வதுதான்.   

      தன்னைப்பற்றி மட்டுமின்றித் தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் உற்றுநோக்கி எழுதுபவனே கவிஞன். புறவுலகை உற்றுநோக்கி எழுதுகிறார் சந்திரா மனோகரன். மனிதர்களின் புழுக்கத்தைப் போக்கும் மரத்திற்கே வியர்க்கிறது அவருடைய கவிதையில்.

      உயரும் நூதனக் கட்டடங்கள்
      வியர்த்தது மரத்துக்கு
      விஞ்சுவதே அடுத்த இலக்கு

கட்டடங்களால் மரத்திற்கு வியர்க்கும் சிந்தனை நல்ல சூழலியல் சிந்தனையாகும்.

      இன்றைய நவீன மனிதர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகத் தமிழர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் கல்விமுறை ஒன்று. தனியார் கல்வி நிறுவனங்களில் முறையற்ற கட்டணங்கள் கெடுபிடிகள் என்றால் அரசுக்கல்வி நிலையங்களில் பொறுப்பற்ற ஆசிரியர்களால் தரமற்றக் கல்விச் சூழல் நிலவுகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் என்பது பெருஞ்சுமையாகத்தான் இருகின்றது. வீட்டுப்பாடங்களையும் செய்முறைகளையும் பெற்றோர்கள்தான் செய்யவேண்டி இருக்கின்றன. அதனை ஒரு கவிதையில் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

      பேய் மழை
      பள்ளிகளுக்கு விடுமுறை
      பெற்றோரை எழுப்பாதீர்

   சில நேரத்தில் தர்க்கத்தைப் புறந்தள்ளிவிட்டால் கவிதையை இரசிக்கலாம். அப்படியான ஒரு கவிதை –

      மேலே போகிற அவசரத்தில்
      கடவுளின் கடைசி ஹைக்கூ
      ஒரு பட்டாம்பூச்சி


உழவர்களின் பாடு பெரும்பாடுதான் . மழை பெய்யவில்லையென்றாலும் பிழைப்பு கெடும். அதிகமாகப் பெய்தாலும் பிழைப்ப கெடும். ஒரு கவிதையில் அதைச் சுட்டியுள்ளார் –
     
      வெள்ளநீர்ச் சகதியில்
      பயிரோடு
      உழவன் வாழ்வும்

போராளியின் அர்ப்பணிப்பையும் உறுதியையும் ஒரு கவதையில் பதிவு செய்கிறார்-
       
      போர்வீரன் கீழே சாய்கிறான்
      பிரிக்க முடியாமல்
      கையில் துப்பாக்கி”

சர்வதேச போர்விதிமுறைகளைப் புறக்கணித்துவிட்டு அட்டூழியங்கள் புரியும் இனவாத அரசுகளின் இழிசெயலைப் பின்வரும் கவிதையில் பதிவுசெய்துள்ளார் –

      தொடரும் அமைதிப்பேச்சு
      காத்திருக்கும்
      சவக்குழிகளுடன் அந்தி

அமைதிப்பேச்சை நடத்திக்கொண்டே மக்களையும் போராளிகளையும் கொன்றுகுவிக்கும் அரசுபயங்கரவாதத்தை இக்கவிதை நினைவுபடுத்துகிறது.

      தோழமையோடு ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறேன். எதைப் பற்றி எழுதுகிறோமோ அது படிப்பவர் மனத்தை ஏதோவொரு விதத்தில் பாதிக்க வேண்டும். சில கவிதைகள் வெற்றுக் காட்சிகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. ஒருசில கவிதைகள் முரண்பாடாக உள்ளன. குறிப்பாகப் பின்வரும் இரண்டு கவிதைகளைச் சொல்லலாம்.

      கிழிந்த ஓலைக் குடிசைக்கு
      கம்பீரம் வந்தாயிற்று
      ஆதவன் நுழைவு

            ” குடிசை பற்றி எரிகிறது
      சிதிலங்களுக்குள் திணறின
      ஒளிச்சிதறல்கள்

சூரியவொளி விழுவதால் எப்படி ஒரு குடிசைக்குக் கம்பீரம் வந்துவிடும்? ஓட்டைக் குடிசை ஓட்டைக் குடிசைதானே? மழைக்காலத்தில் தண்ணீர் கொட்டுமே…. அப்போது என்ன சொல்வது ? அதைப்போலத்தான் பற்றியெரியும் குடிசையில் ஏழையின் வாழ்க்கைக் கருகுவதைப் பார்க்கவேண்டுமே ஒழிய சிதிலங்களுக்குள் திணரும் ஒளிச்சிதறல்களையல்ல. விமர்சிக்கப்படவேண்டிய கவிதைகள் இன்னும் உள்ளன. அதைவிட அதிகம் உள்ளன … படித்து இரசிக்க வேண்டிய நல்ல கவிதைகள்.

                        ---------------

Friday, March 21, 2014

கவிதை நூல் மதிப்புரை - அகரமுதல்வனின் “ அத்தருணத்தில் பகைவீழ்த்தி ”




கடந்த ஆண்டு கவிஞர் அகரமுதல்வனின் “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பேச அழைத்திருந்தார். அப்போது என் இளைய மகள் நித்திலா வண்டியிலிருந்து விழுந்து கையை உடைத்துக்கொண்டாள். விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இரண்டுமாத சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிட்டது. பிறகு அந்த நூல்குறித்து மதிப்புரை எழுதி அகரமுதல்வனுக்கு அனுப்பி வைத்தேன். ஈழத்தில் ஒரு பத்திரிகையில் வெளிவருகிறது அண்ணா என்று சொன்னார். ஒரு வருடத்திற்குமேல் ஆகிவிட்டது. வந்ததா... வருமா...வராதா என்று தெரியவில்லை. அவரது அடுத்த கவிதைநூலும் வெளிவந்துவிட்டது. இனியும் காத்திருக்க முடியவில்லை. எனவே இங்கு அதை வெளியிடுகிறேன். 
                                        - தோழமையுடன்
                                          யாழினி முனுசாமி
                                          21-03-2014 சென்னை       

 சபிக்கப்பட்ட ஒரு தரித்திர வாழ்வில் காலங்களை கடந்தபடியிருக்கிறேன்.
உலகத் திட்டமிடலில் ஊனமாக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டிருக்கும் எனது இனத்தின் வலியாகவும் ஏக்கமாகவும் விடுதலை வெறியோடும் எனது தாய்மொழியின் முழுப் பங்கோடு கவிதையெனும்  ஆயுதத்தை பிரசவிக்க விரும்புபவன் நான்  -
அகரமுதல்வனின் மேற்கண்ட வரிகள் அவர் யார் என்பதையும் கவிதை பற்றிய அவரது நிலைப்பாட்டையும் நமக்கு உணர்த்துகின்றன.  அகரமுதல்வனின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி அவரது இரண்டாவது கவிதைத்தொகுதி. மித்ர வெளியீடாக 2012 டிசம்பரில் முதல்பதிப்பு வெளிவந்திருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொகுதி தொடரும் நினைவுகள் ”.
ஈழ இலக்கியம் இன்று புலம்பெயர்ந்தோர் இலக்கியமாகவும் போர் இலக்கியமாகவும் பிற்போர் இலக்கியமாகவும் தொழிற்படுகின்றது. உண்மையில் ஈழத்தில் நடந்தது போரல்ல ... இனப்படுகொலையே. அந்தக் கொடூர இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவ்வரிசையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதி இது. பேரளவில் இன்றைய ஈழத்துப் படைப்புகள் போரின் கொடூரமுகத்தை மட்டுமே காட்சிப்படுத்துபவைகளாக உள்ளன. அவற்றில் வலியும் வேதனையும் ஆற்றாமையும் கையறுநிலையும் துயரம் தோய்ந்த நிலையில் வெளிப்படுத்துகின்றன. மாறாக அகரமுதல்வனின் அத்தருணத்தில் பகைவீழ்த்தி கவிதைத்தொகுதி சிங்கள இனவாத அரசால் சிதைந்துகிடக்கின்ற ஈழத்தமிழ்மனங்கள் நம்பிக்கைகொள்ளும் வித்த்தில் படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனது எழுதுகோலின் வழியே ஏக்கங்களையும் துயரங்களையும் வன்மங்களையும் எதிரியால் கொல்லப்பட்ட உறவுகளையும் செருக்களத்தில் விதையானவர்களையும் நினைத்து அழுது அழுது அடையாளமில்லாமல் அழிவதில் உடன்பாடற்றவன் நான்.
கடந்து போன காலங்களில் எம்மை விலங்கிட்ட தோல்வியின் உயிர் பறிக்க நினைக்கும் மானமுள்ள தமிழின ஆத்மாவின் தேசப் பிரியமே அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்று தம் கவிதைகளைப் பற்றிக்  குறிப்பிடுகிறார் அகரமுதல்வன்.
தமிழ்ச்சூழலில் தன்னம்பிக்கை என்பது ஒரு வியாபாரத்தனமான கருத்தியலாக மாற்றப்பட்டிருக்கும் இந்நிலையில் ஈழத்து இளம் கவிதைப்போராளியான அகரமுதல்வன் கவிதைகள் ஏற்படுத்தும் நம்பிக்கைகள் நமக்குள் ஒரு விரிந்த பார்வையைத் தருகின்றன .

ADD HERE MORE CRITICISM…
போராட்டவுணர்வெழுச்சியைக் கிளர்த்தும் வரிகளை இங்கு வரிசையாகத் தருவதே இத்தொகுப்பை அடையாளப் படுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகிறேன்.


எவையெல்லாம் இழந்தோமோ
அவையெல்லாம் மீட்கவேண்டும்

".....
பறிகொடுக்கப்பட்ட எனது இனிமைகளையும்
என்னூர் வளங்களையும்
எப்போது மீட்பேன்

எப்படியும் மீட்க வேண்டும்
உயிர்கொடுத்துதான் மீள வேண்டும்
எனது ஊர்
எனது வாழ்வு
எவையெல்லாம் இழந்தோமோ
அவையெல்லாம் மீக்க வேண்டும்
 ....“ (.22)

நான் வரிச்சாதி

“...
மீண்டும் மீண்டும்
பூக்கும் தமிழ்க்கருவில்
மீண்டும் மீண்டும்
தாக்குகிறது இனவெறி
விழவிழ எழுவதாய் எழுவோம்
...“   (ப.29)

”...
அழுதென்ன ஆகும்?
காலம் பார்த்துக் களம் புகுதல்
சாலச்சிறந்தது என்தாய் மண்ணுக்கே

நீளும் மவுன இடைவெளியில்
அந்நியரால்
கோவணத்தைப் பிடுங்கியும்
அம்மணத்துடன் குறிகளை அறுத்தெறிந்தும்
என் தாய்மண்ணில்
சந்ததி வாழ்விழக்குமெனில்
தயக்கம்கொள்வது
தமிழர்வழக்கமல்ல

...
...
நேற்றும் இன்றும்
விலங்கினை என் கரம் ஏற்பது
அடிமைவிலங்கினை உடைக்கவே தவிர
உன் அடிமைவிலங்காயிருக்கவல்ல.“ (ப.30)

அடுத்த பாடத்துக்கான ஏடுதொடக்கல்

“...
தோழா
பகைக்கு நன்கு தெரிந்த
உன் பாய்ச்சலை
உன் நகங்களை
உன் உறுமலை
தோல்வியென உலகறிவித்த
நிலத்தினிலிருந்து நகர்த்து
அதுதான் உன்
இனமானம் காக்கும்.” (ப.32)

முள்ளிவாய்க்காலின் பிந்தைய நாட்களுக்காய்

“...
பாவம்
வவாஅக்கா முள்ளிவாய்க்காலில்
எல்லாம் இழந்து - எதையும்
எடுக்காமல் உடுத்த துணியோடு
வந்தவர்களில் ஒருவர்

ஆனால்
கடைசி மகன் அடுத்த சந்ததியின்
இருத்தலை உறுதிபடுத்த ஏதோவொரு
பொக்கிஷத்தை எடுத்து வந்துள்ளான்
முள்ளிவாய்க்காலின் பிந்தைய நாட்களுக்காய்.“ (ப.35)

சுடுகாடு போகிறார்

“...
ஆனந்த அலைகளால்
திகைத்து நிற்கிறேன்
உணர்ச்சி தோய நான் எறிந்த வார்த்தைகளால்
மீட்கப்படுகிறது எனது நிலம்.
...“ (ப.39)

அத்தருணத்தில் பகைவீழ்த்தி

“...
வாழ்க்கையில் ஒரு அத்தியாமும்
வழிமுறையில் ஒரு கட்டமும்
முடிந்திருக்கிறதே தவிர
இப்போதும்
தீராமல் எரிந்துகொண்டுதானிருக்கிறது
வலியினதும் வேட்கையினதும்
அகல்விளக்கு
...”  (ப.41)

என் உலகு

“...
நான் தீர்மானித்திருந்த இலட்சியங்களை(ப்)
பொறாமையினால் பறிக்கப்பார்க்கின்றனர்
அதைத் தகர்த்து
வெல்வேனென்ற உறுயிலே
இயங்கிக்கொண்டிருக்கிறது
என் உலகு.” (ப.46)

உயிர்போதுதான் உத்தேசம்

“...
அடங்குபவர்கள் நாமல்ல பகைக்குத் தெரிவதில்லை
அடிமைநாமென்று அடிக்கடி சொல்வதுண்டு
எம்குடியழித்த பகைக்கு கொஞ்ச நாளுண்டு
பாடையேறும் பதவி வழங்கப் பருவமுண்டு

இவர்கள் நீ்ட்டும் துப்பாக்கி
எம்முணர்வைத் துருப்பிடிக்கச்செய்திடுமாம்
அடாப் பாவமே
இவர்கள் உலகின் மறதிக்காரர்கள்
எங்கள் கைகள் என்ன
எலிமருந்து செய்தனவா இதுவரை நாளும்
...” ( ப.54)

தீதின்று வெடியான தீரர்கள்

“....
சோராமல் விழித்திருப்போம் - தேசத்தேரை
மறவாமல் வடம் பிடிப்போம் கனவுதனை
வெல்லாமல் ஓயமாட்டோம்
ஊரிலொரு விடியல் காணாமல் தூங்கமாட்டோம்
..” ( ப.59)

வடிந்துவரும் குருதியில்
வடியாமலிருக்கும் தேசத்தின் கனவு

”...
மாதவிடாய்
நாட்களிலும் வலிதரும்
யோனித்திரவத்தை
பொருட்படுத்தாமல்
சோர்வடையாமல்
பகைதின்ற தன் குழந்தைகளின்
கனவுகளை வென்றுகொள்ள
வலம்வருகிறாள்
விடுதலைக்கன்னி விரைவில்
ஒருநாள் எண்ணி.” (ப. 75)

என் உடலெரியும் தாய்நாடு

“....
அகலாத வடுக்கள் மூட்டிய தீயால் தினம்
கண்ணீர்வடிக்கிறது என்இதயம்
அணையாத கொள்கை ஊன்றிய வேரால்
திடமாக உள்ளேன் வரலாறு எழுத
...” (ப. 78)

மண்ணுக்காய் வீழ்ந்தோம்

“...
காலம் எமக்கெனபிறக்கும் என்பதே
எனக்குள் இன்னும்
இராமலிருக்கும் சாகாவரச் சிந்தனை
...”(ப. 82)

“...
விடுதலைச்சட்டை அணிய
விரைவில்
காலம்உன் கதவுதட்டும்
நீ தயாராகு,” (ப. 83)

சாவுகளுக்கு அஞ்சுவோர்
சாதித்துவிட முடியாது

“...
ஆயிரம் வலிகள் அனர்த்தும் தருணத்திலும்
அழுவது தீர்வன்று...” ( ப.85)

வீழும் உயிர் வீழாத வேட்கை

” கனத்த மௌனங்களில் ஒளிந்துகிடக்கும்
பெரும் துக்கமென
எனக்குள் ஒளிந்திருக்கும்
பாரிய இழப்புகள்
ஓர் உயிரில்லாதவனைப்போல
என்னை உறைய வைப்பதில்லை

திரவம் நிரம்பிய குவளையாய்
என்னை நிரப்பியிருக்கும் இலட்சியநெறி
காற்றில்பட்டு கரைவதுமல்ல
சேற்றில் புதைவதுமல்ல
....
...

வீழும் உயிர்
வீழாத வேட்கை
வாழும் நாளெல்லாம்
தேசம் மீட்க
ஓயாத பெரும்பணியென
சிக்கிய ஒரு புறாவாய் எழுந்து
பறக்க முனைகிறேன்
வானம் எமக்கென இப்போது” (ப. 93)

இழந்த மண்

“...
என் எழுதுகோல்
கவிதை எழுதுகிறது
இப்போது இலையுதிர்காலம்தான்
வாசந்தகாலத்திற்காய்.” (ப்.102)


நம்பிக்கையூட்டலையும் போராட்டவுணரவெழுச்சியைக் கிளர்த்தலையுமே
முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது இத்தொகுதி. அதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. என்றாலும் மக்களின்  - போராளிகளின் நெருக்கடியான காலத்து வேறுபட்ட மனநிலைகளைப் போதிய அளவு பதிவுசெய்யப் படவில்லை. அடுத்தக் கட்டப் போராட்டத்திற்காக வழிமுறைகள் எவையென்றும் இக்கவிதைகள் முன்வைக்கவில்லை. என்றாலும்கூட இது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு படைப்பாக்கமாகும். எனெனில்...இது- சமரால் சிதைந்துகிடக்கும் மனங்களைச் சமன்செய்யும் கவிதைகள். பலவீனமாக்கப்பட்டவர்களை பலவான்களாக்கும் கவிதைகள். அதிர்ச்சியினாலும் இயலாமையினாலும் கையறுநிலையில் வீழ்ந்துகிடப்பவர்களை வீறுகொண்டு எழுச்செய்யும் கவிதைகள். தமிழீழ விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்ட இலட்சியக் கவிதைகள். மொழிநடையிலும் வடிவொழுங்கிலும் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால் கனம் கூடியிருக்கும் என்று தோன்றுகிறது.
                                          ------------------