Monday, March 26, 2012

ஆட்சியாளர்கள் பற்றி முகநூலில் படித்த சிறுகதை...



பட்ஜெட் – விலை உயர்வு குட்டி கதை
மூன்று மீன்கள்

“லச்சுமி... ஏய் லச்சுமி... நா கூப்பிடுறது காது கேட்கலயா?”
மீனவன் மிகவும் உற்சாகமாக சத்தம் போட்டுக் கூப்பிட்டான்.

“ஏய் மனுசா! தொண்டை கிழிய ஏன் இப்படிக் கத்தற... வானமா இடிஞ்சி விழுத்திடுச்சி.”

“கொழுத்த மீன் ... நல்ல மீனு ... லச்சுமி, மூணு பிடிச்சிட்டேன். கரம் மசால் தூக்கலா போட்டு நல்லா வறுத்துவை.”

“உனக்குயின்னா மூளை கீளை மழுங்கி போயிடுச்சா என்ன? ஒரு வாரமா நான் நாயாட்டம் கத்திகினு இருக்கேன். வீட்ல உப்பும் இல்ல, மிளகாயும் இல்ல, இதுல கரம் மசாலாவுக்கு எங்க போறது?”

“சரி சரி புலம்பாத, எண்ணெயில் போட்டாவது பொறிச்சு வை”

“இன்னாய்யா இஷ்டத்துக்கும் பேசிகிட்டே போறே, உப்பில்லாத வீட்ல எண்ணெய்க்கு எங்க போறது. நம்ம குழந்தைங்க சாப்பாட தொட்டு நாலு நாள் ஆகுது.”

“உம் புராணத்தை எல்லாம் இங்க பாடாத, மீனை நெருப்பிலாச்சும் பொறிச்சு வை.”

“இன்னாய்யா நினைச்சுக்கிட்டு இருக்கிற. நெருப்புக்கு எங்க போறது. விறகு கட்டைக்கு நான் எங்க போறது?”

“இன்னா பொம்பள நீ. மீனை பிடிச்சு கொடுத்தாலும் சமைக்க மாட்டுறியே? நான் ஒரு முட்டாப் பயல். தேவையில்லாம இந்த மீன்களைப் புடிச்சி வந்துட்டேன். பாவம் தண்ணீரிலே கொண்டு போய் விட்டுடறேன். இதுகளாவது உயிர் பொழைச்சு போகட்டும்.”

இப்படி சொல்லிவிட்டு மீனவன் குளத்தை நோக்கிச் சென்றான். உயிருக்கு துடித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று மீன்களையும் எடுத்து தண்ணிரில் வீசி எறிந்தான். தண்ணிரில் அந்த மீன்கள் வீழ்ந்தவுடன். “ஜிந்தாபாத் .. ஜிந்தாபாத்”என்று முழக்கமிட்டன.

மீனவனுக்கு ஆச்சரியத்தில் வாய் பிளந்து கொண்டது. மூன்று மீன்களில் ஒரு மீன் “செயலலித்தா ஜிந்தாபாத்” என்று கத்தியது.

மற்றொரு மீன் “மன்மோகன் சிங், சோனியா ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மூன்றாவது மீன் “கருணாநிதி, அத்வானி ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மீனவன் அவைகளைப் பார்த்து கேட்டான் : “மோசமான பிசாசுகளாக இருப்பீங்க போல இருக்கே. நான் தானே உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தேன். நன்றி கெட்ட ஜென்மங்களா… நீங்க செயலலிதா, மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, கருணாநிதி என்று புதியதாக யார், யார் பெயரையோ புகழுறீங்க.”

அதற்கு மீன்கள் பதில் உரைத்தது.

“ஏய் பாவப்பட்ட மனுசனே! இவர்கள் ஆட்சி புரிவதனால் தான் உங்க வீட்ல சாப்பிட ஏதும் இல்லை. அதனால நாங்க உயிர் பொழச்சோம். இல்லாவிடில் இன்னேரம் நீ எங்களை சாப்பிட்டு விட்டு இருப்பாய்.”
---------------------------------------------------------------------
விஜய்(தெலுங்கு)…. மக்கள் பண்பாடு இதழ், 2000

----------------------------------------------
நன்றி...தோழர் கி.நடராசன்.

No comments:

Post a Comment