Thursday, October 20, 2011

பச்சைரத்தம் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்: யாழினி முனுசாமி - கி.நடராசன்

“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்”

மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக முக்கியமான ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் தவமுதல்வன. அந்த ஆவணப் படம் அவரை தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களின் வரிசையில் சேர்த்திருக்கிறது. அவருடன் ஒரு நேர்காணல்...


கே: பச்சை ரத்தத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?


படத்தைப் பொறுத்தவரை பாராட்டுகளும் கசப்பான அனுபவங்களும் நிறையவே உள்ளன. உள்ளுரில் ஆகா ஒஹாவெனப் பாராட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவர்கள், சிந்தனையாளர்கள் என்கிற பல பட்டங்களோடு உலவுகிறவர்கள், தொண்டு நிறுவனங்களையெல்லாம் இதன் தயாரிப்புப் பணிக்காகச் சந்தித்தேன். வெளியிடவும் கேட்டேன். அவர்களுக்கு புராஜக்ட் வேலைகள், மக்கள் நலப்பணிகள் (!) இருந்ததால் ஒத்துழைப்பு இல்லாததை உணர்ந்தேன்.

சாதாரண மக்களைப் பொறுத்தவரை படம் அவர்களின் வேதனையை உள்ளபடியே வெளிப்படுத்துவதாக உள்ளன்போடு தெரிவித்தனர். பல குடுப்பங்களில் படம் பார்த்து பழைய நினைவுகள் கிளர்ந்து அழுத்ததாகவும் நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்தனர்.
கே: இந்தப் படத்தை எப்படித் திட்டமிட்டு எடுத்தீர்கள்?
படத்தில் வரும் எல்லா கருத்துக்களும் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை நடத்தவில்லை. சிலவற்றை மட்டும் உறுதியாக தொகுத்துக் கொண்டேன்.
1. மலையக மக்களின் இலங்கை வரலாறு.
2. துரோக அரசியல் தலைமைகள்
3. இலங்கையிலும் தமிழகத்திலும் தேயிலைத் தோட்டப் பசுமைகளுக்குப் பின்னால் உறைந்திருக்கிற உழைப்பின் வரலாறு. ஊடகங்களில் காண்பிக்காத மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவது போன்றவைதான்.
பல காட்சிகள் படப்பிடிப்பு செல்லும் போதுதான் எடுக்க நேர்ந்தது.
கே: இந்த ஆவணப்படம் எடுக்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
படத்தின் மையமான கருத்து எதுவென்றால், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, உழைப்பாளிகளாக இருக்கிற.. தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வுகூட இன்றும் முழுமைபெறாமல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது...இந்த வரலாறு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்குத் தெரியாமல் இருப்பது... அதை வெளிப்படுத்துவது.
கே: மலையகத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான காரணங்களாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
பூர்வீக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், பறைத் தமிழன் என்று சொல்லுவதற்கு முக்கிய காரணம், அவர்களிடையே ஊறிப்போயிருந்த சாதீயம்தான். மேலும் இங்கிருந்து போனவர்கள் பலர் வணிகர்களாக வளர்ந்தது... அவர்கள் நகர்ப்பகுதிகளில் குவிந்தது... இந்தியாதான் தன் உறவுக்கான மண் என நடந்து கொண்டது.. மலையகத்தவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருந்தது போன்றவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்படக் காரணமாக இருந்தது. குறிப்பாகச் சொன்னால், பூர்வீக இலங்கைத் தமிழர்களின் தலைவர்கள் ஓரிருவரைத் தவிர மலையகத் தமிழர்களை அந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்கிற புரிதலை விரிவாகப் பேசி அந்தக் கருத்தை நிலைபெறச் செய்ய முயற்சிக்கவில்லை. கண்டுகொள்ளாத இந்தப் போக்குதான் தொடர்ந்தது.
கே : இந்த ஆவணப்படம் உருவானவிதம் பற்றிச் சொல்லுங்கள்...?
முன் அனுபவம் என்பதெல்லாம் ஓரிரு குறும்படங்களில் வேலை செய்திருக்கிறேன். வீடியோ கிராபராக திருமண வீடுகளுக்கு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் குறுப்படங்களை நிறைய பார்ப்பது... அது தொடர்பான புத்தகங்களைப் படிப்பது, சிறுகதைகளை எழுதுவது எனப் பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.
இதில் முதன்மையான பங்களிப்பு என்றால்... ஒருவர் இப்படத்தின் இணை இயக்குநராகப் பணி செய்த G.M சண்முகராஜ் அவர்களைச் சொல்வேன். எழுத்திலும் கருத்திலும் தொகுப்பதிலும் என்னோடு இரண்டு வருடங்கள் தான் சார்ந்த திரைப்பட வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உழைத்தார். இன்னொருவர்... தொகுப்பாளர் திரு.செல்வா அவர்கள். படத்தின் மையக் கருத்துடன் ஒன்றிப்போய் பணமே வாங்கிங் கொள்ளாமல் பலமுறை படத்தொகுப்பை மாற்றியபோதும் எதுவும் சொல்லாமல் சரியான காட்சிகளைத் தொகுத்தும் அதற்கேற்ற இசையை சேர்த்தும் கொடுத்தார்.
படப்பிடிப்பைப் பொறுத்தவரை தனியொருவனாக நானே பெரும்பாலான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்.
கே :  வரவேற்பும் அங்கிகாரமும் எப்படி இருக்கிறது..?

வரவேற்பைப் பொறுத்தவரை கருத்தாளர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக தோழர் அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், எஸ்.வி ராஜதுரை, அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் செழியன், மலையக எழுத்தாளர் மு.நித்யானந்தம், தோழர் தியாகு போன்றோர் நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள்.
தமிழக அளவில் கும்பகோணம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில்  திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலர் இலங்கையில் மலையக மக்கள் பற்றிய செய்திகள் வியப்பாக உள்ளதாக  அன்றாடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறுந்தகடு வெளியிடும் திட்டம் உள்ளது. தற்பொழுது வெளியிட்ட குறுந்தகடுகளின் நிதி உரிய முறையில் வராத காரணத்தால் பெரும் கடன் சுமையில் உள்ளேன். கடன் தீர்ந்த்தும் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தில் உள்ளேன்.
எங்கள் ஊரைப்  பொறுந்தவரை (நீலகிரி) வரவேற்பு சாதாரண மக்களிடம்தான் உள்ளது. இவர்கள் மத்தியில் “சமூகப்பணி“ செய்வதாகச் சொல்லும் பலருக்கும் “படம் பார்க்கவே நேரமில்லை“. குறைந்த பட்சம் ஐந்து  குறுந்தகடுகளை வாங்கிக் கொள்ளக்கூட நிதியில்லை. அவர்கள் “புரோஜெக்ட்” வேலைகளில் மூழ்கியுள்ளார்கள். கட்சிகளில் உள்ள ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் வாக்குச் சீட்டு அரசியலின் பிழைப்புவாதத்தில் உள்ளனர். இலங்கையில் மலையகத் தலைவர்கள் சிலர் செய்த அதே கருங்காலி வேலையை இந்த மக்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும், வாக்கு வங்கி இருப்பதாக பேரம்பேசி கட்சிகளிடம் பணம் வாங்குவது எனத்தொடர்கிறது அவர்கள் “சமூகப்பணி” . எனவே அவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில், தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சங்கப் பணிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்கு மேற் சொன்னவைகள் காரணமாக உள்ளன. கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் கொடுக்கும் மரியாதை தொழிற்சங்கப்பணிகளுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சில தேயிலைக் தோட்டங்களில் முதலாளிகளே நடத்தும் பெயரளவிற்கான தொழிற்சங்கங்கள் உள்ளன.
மற்ற தொழிலாளர்கள் வீட்டைச் சொந்தமாக வைத்துக் கொண்டு நிறுவனங்களில் வேலை செய்து உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். தேயிலைத் தோட்டங்களில் வீடே அவர்களுகளுடையது. முதலாளகளின் வீட்டிலிந்துகொண்டு உரிமைபேச  யாருக்குத் துணிவு வரும்? வீட்டை காலி செய்யும் நினைப்புதான் முதலில் வரும் உரிமை பற்றிப் பேசினால்.
கே : நில உச்சவரம்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே...அது அங்கு நடைமுறையில் இருக்கிறதா?
நில உச்சவரம்புச் சட்டத்தை டாட்டா, பிர்லாக்களுக்கு யார் நடைமுறைப் படுத்தச் சொல்வது....? அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட தேயிலை நிறுவனங்கள் இங்கே பல உள்ளன. புறம்போக்கு நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் தோட்டங்களாக மாறியுள்ளன.
நில உச்சவரம்புச் சட்டம் நிலங்களை அவர்கள் பிரித்துக் கொண்டு தன் குடும்ப சொந்தக்காரர்களின் பெயரில் எழுதிக் கொள்வதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சத்தமின்றி எதையும் பட்டா பதியலாம்... தோட்டமாக்கலாம்.
தொழிலாளிகளாக உள்ள தாயகம் திரும்பிய மக்கள் தான் குடியிருக்க 10* 10 என ஒரு இடத்தில் குடிசை போட்டால்தான் போலீஸ் வருகிறது. அரசு அதிகாரிகள் வருகிறார்கள். வனத்துறை வருகிறது. சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.  பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை சட்டமெல்லாம் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்.
கே : உங்களது பச்சை ரத்தம் அரசாங்கத்தின் கவனம் பெற்றிருப்பதாக உணர்கிறீர்களா?
ஆமாம். தற்போதைய அ.இ.அ.திமுக. அரசு கடந்த சட்டசபை விவாதத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. திராவிடமணி (தி.மு.க) தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது பற்றிப் பேசியுள்ளார்.
யானை அடித்து இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக இதுவரை 25,000 கொடுக்கப்பட்டது. தற்பொழுது 2,50,000 (இரண்டரை லட்சம்) ரூபாயாக முதல்வர் அவர்கள் கொடுத்துள்ளார்கள். ஏதோ ஒருவகையில் இதை என் ஆவணப் படத்திற்கான எதிர்வினையாகக் கருதுகிறேன்.
கே : நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பிய மக்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு?
நல்ல உழைப்பாளிகள். தொட்டால் துலங்கும் கரங்களுக்குச் சொந்தக் காரர்கள். படத்தில் சொல்லியிருப்பதுபோல இவர்களின்றி தேயிலைத் தோட்டங்களில் பசுமையில்லை.
ஆனால் காலம் காலமாகக் கல்வியறிவு இல்லாத காரணத்தால் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து பழகியதால் அதே அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இம் மாவட்டம் முழுவதும் சுமார் 400 - க்கு மேற்பட்ட இடங்களில் காலனிகளை வாழ்கிறார்கள். பெரும்பாலான வீடுகளுக்குப் பட்டா இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. முறையான கல்விக்கூடங்கள் இல்லை. மருத்துவம் இல்லை. இதைப் பற்றிய கவலை அவர்களிடம் விழிப்புணர்வாக வெளிப்படுவதில்லை. ஊருக்கு ஊர் கோயில் கட்டுவது. அதற்கு வரி வசூலிப்பது.   அது தொடர்பான சண்டை சச்சரவுகள். பிறகு சபரிமலைக்கு ஆண்கள். மேல்மருவத்தூருக்கு பெண்கள் எனக் கோயில்களுக்கு பண்டிகைகளுக்குச் செலவு செய்தது போக மீதி மருத்துவமனைகளுக்குப் போய்விடுகிறது.
குடியிருக்க வீடில்லாதபோதும் கோயில் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். புதிதாக வருகிற இளைஞர்களும் பெரும்பாலும் அதைநோக்கியே செல்வது வருத்தமளிக்கிறது. எனவே கல்வி அடிப்படையான விசயமாகவும் நல்ல தலைமைகளும் தேவைப்படுகிறது.
கே : இலங்கையிலுள்ள மலையக மக்களைப் பற்றி...
இனம், வர்க்கம், சாதி என்கிற மூன்று அடையாளங்களால் இம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. சாதியில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பால் தொழிலாளிகளாகவும் இருப்பதால்தான் இவர்கள் ஈழத் தமிழர்களைப்போல் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து போக முடியவில்லை. அவர்களைப்  பற்றிப் பேசவும்  பெரிய ஆட்களில்லை. மு. நித்யானந்தம், தெளிவத்தை, மாத்தனை சோமு போன்றவர்களைத் தவிர. ஈழப்பிச்சினையைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு இவர்களைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பயன்பாடுகூட இருக்கப் போவதில்லை. எனவே பேசவில்லை. இங்கு அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், தியாகு, எஸ்.வி. ஆர்., சி.மகேந்திரன் போன்றவர்கள்தான் சிறப்பான பதிவுகளை தந்துள்ளனர்.
கே : உங்களது தனிப்பட்ட அனுபவம்....?
வேதனையானதுதான் என்றாலும் இதனால் ஏற்பட்ட கடன் சுமை பற்றியோ இதன் தயாரிப்பாளர் தனலெட்சுமி (என்மனைவி) கொழுந்து கிள்ளிய பணத்தில்தான் இப்படம் தயாரிக்க முடிந்தது என்பது பற்றியோ எனக்குக் கவலையில்லை. ஈழப் பிரச்சினையில் வாய்கிழிய வீராவேசமாகப் பேசுகிற பலருக்கு ஈழத்தின் பிரச்சினை பற்றிய முழுமையான வரலாற்றுப் பார்வையோ, மலையக மக்கள், பூர்வீக இலங்கைத் தமிழர்கள் பற்றிய புரிதலோ இல்லை. தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்கள் மட்டும் மறந்துவிடுகிறது அல்லது தெரியவில்லை. அவர்களுடைய தேடல் எல்லாம் “அண்ணன் வருவார்” … “அண்ணன் பார்த்துக் கொள்வார்”  …   “அவர் இருக்கிறா...?இல்லையா?” என்பதுதான்.

மனம் திறந்த விமர்சனங்களோ உரையாடல்களோ அதற்காக உணர்வாளர்களைப் பயிற்துவிப்பதோ பெரும்பாலான முன்னணியாளர்களிடம் இல்லை. இவர்கள் பின்னால் திரள்கிற உண்மையிலேயே உணர்வாளர்கள் பலர் வேதனையுடன் இருப்பதைக் காண முடிகிறது. இந்தப் போக்கு அவர்களை எதிர்காலத்தில் எதிலும் நம்பிக்கையற்றவர்களாகத்தான்  உருவாக்கும்.
கே : முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு இப்படத்தில் எதிரொலிக்கிறதா?
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு படத்தில் இல்லை. ஆனால் கடைசிக்கட்ட போரில் இறந்துபோனவர்கள்... இப்போது முள்வேலிகளுக்குப் பின்னால் இருப்பது பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் என்பதை எழுத்தால் மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது.
கே : குறிப்பிடும்படியான விமர்சனங்கள்.....?
பலர் தயக்கத்துடன் இது இப்போது தேவையில்லை என்றனர். ஆனால் பேசப்பட வேண்டியது என்றனர். ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக்க் கூறினர். அதற்காக இதைப் பேசாமல் இருக்க முடியாது. அப்போது பேசமுடியவில்லை. விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இப்போதும் பேசத் தயங்கினால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை எனக்கூறினேன்.
விடுதலை என்பது மக்களுக்கானது. குறிப்பாக உழைக்கும் மக்களுக்கானது...... அதில் மலையக மக்களைப் பற்றிப் பேசாமல் இனிமேலும் மௌனம் சாதிப்பது இங்கே உள்ள தலைவர்களை சந்தேகப்படவைக்கும்.
கே : இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
சிலருக்குத் தனிப்பட்ட முறையில்  நன்றிகள் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இப்போதும் கொழுந்து கிள்ளி கடன்கட்டும் என் மனைவி... படத்தில் பின்னணிக்குரல் கொடுத்ததோடு நிதிக்காகவும் பலரிடம் சென்று நிதி திரட்டி முழு ஒத்துழைப்பையும் கொடுத்த விழுப்புரம் கவிஞர் ராமமூர்த்தி, கேமிரா கொடுத்து உதவிய புகைப்படக் கலைஞர் திரு. ஹரிசாந்தன், கவிஞர் யாழ்மதி போன்றோர்கள் எனது நன்றிக்குரியவர்கள்.
nandri: thadagam.com

Saturday, October 1, 2011

சிறுகதை - அறியாப் பருவத்தில்... - யாழினி முனுசாமி



ன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவள் வெகு நாட்களுக்குப் பிறகு தேவாலயத்திற்குச் சென்று முழங்காலிட்டு மனதுக்குள் ஜெபிக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஆண்டவரே... பிரிட்டோ காணாமப் போய் இன்னையோட ரெண்டு நாள் ஆகுது. நாங்க  யாருக்கு என்ன பாவம் செஞசோம்...? எப்படியாவது அவனை எங்க கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிறுத்திடு. இல்லனா இங்க நான் இனிமே வரவே மாட்டேன்...

பிரார்த்தனை முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியேறினாள்.

என்ன நடந்தது என்று புரியாமல் அழுகையாக வந்தது கேத்ரினுக்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது , எங்கடா போறே?என்று கேட்ட அம்மாவுக்கு , பாட்டி வீட்டுக்கு என்று ஏனோதானோவென்று பதில் சொல்லிவிட்டுப் போனான். அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்த தாத்தாவைப் பார்த்ததும் அனைவரும் குழம்பினர்.

பிரிட்டோ அங்கு செல்லவில்லை என்ற செய்தி அனைவரையும் கலவரமடையச் செய்தது. அவன் அங்கதானப்பா வரேன்னு சொன்னான் என்று அழத் தொடங்கிவிட்டாள் அம்மா. அழாதம்மா , வேற எங்கனா போயிருப்பான். வந்துடுவான் என்று தேற்றினார் தாத்தா.

இரவு வெகுநேரமாகியும் அவன் வீடுதிரும்பவில்லை. ஆளுக்கொரு பக்கமாய்த் தேடத் தொடங்கினர்.

ஏதேதோ சிந்தனைகள் தோன்றி கேத்ரினை க் குழப்பத்தில் ஆழ்த்தின.

கேத்தி நான் செத்துட்டா நீ அழுவியா?என்று பிரிட்டோ கேட்டது நினைவுக்கு வந்தது.
என்ன உளர்றே? என்றவளிடம் ,
இல்லை கேத்தி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். யார்க்கிட்டயும் சொல்லக் கூடாது, சின்னுவ நான் விரும்பறேன். அவ இல்லனா நான் செத்துடுவேன் என்றான்.
அவளுக்குத் தெரியுமா?
இல்லை கேத்தி. நான் எதுவும் அவக்கிட்ட சொல்லவுமில்ல  கேட்கவுமில்ல. கேட்டு அவ இல்லைன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாது கேத்தி என்றழுதான்.
இதெல்லாம் சரி வருமா? ஏதோ ஃபேமலி ஃபிரெண்டா வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்காங்க... இது தெரிஞ்சதுன்னா பிரச்சினையாயிடுமில்ல? நாவேண்ணா கேட்டுப் பாக்கட்டுமா?

வேண்டாம் கேத்தி. சின்னோட படிப்பு வசதியெல்லாம் வச்சிப் பாக்கும்போது கண்டிப்பா ஒத்து வராது.

பிரிட்டோவின் டைரியில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த காதல் கவிதைகளிலும், காதல் வசனங்களிலும், காதல் பாடல்களிலும் சின்னுவே நிறைந்திருந்ததும் சின்னுவின் புகைப்படம் ஒன்றையும் டைரியில் மறைத்து வைத்திருந்ததும் நினைவுக்கு வந்து அவளை பயமுறுத்தின. இடையிடையே, கடவுளே, அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது என்று மனத்தில் வேண்டிய படியே வந்து கொண்டிருந்தாள். வீட்டை நெருங்க நெருங்க  அவள் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது. ஓட்டமும் நடையுமாக வீடடைந்தாள்.

தெருக்காரர்கள் எல்லாம் அப்பாவைச் சூழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் மனத்தில் கலவரம் உண்டானது. வழியில் சுகுமார் அண்ணன் சொன்னது உண்மைதான் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது.

அந்த அண்ணன் சொல்றது உண்மையாப்பா?என்றவளின் முகம்பார்க்க முடியாமல் குமுறி அழத்தொடங்கினார் அப்பா. அவளுக்கு அழுகை பெறுக்க முடியவில்லை. வீரிட்டு அழுதாள்.

தகவலறிந்து சிறிது நேரத்திற்குள் உறவினர்கள் ஒவ்வொருவராய் வீடுவரத் தொடங்கினர்.

சின்ன வயசு. என்ன பண்றது...நாமதான் மனச தேத்திக்கணும்பா!
அம்மாடி, அம்மா அம்மானு உன்னயே சுத்தி சுத்தி வருவானேம்மா அவனுக்கு எப்படிமா உன்னவிட்டுப் போக மனசு வந்தது?

ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இனிமே எனக்குன்னு யாருக்கா இருக்கா...? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்?என்று அம்மா உடைந்து அழுதுகொண்டிருந்தாள். தெருவில் சாமியானம் கட்டப்பட்டது. உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன.

தொலைபேசி மணி அடித்தது. ஓடிப்போய் எடுத்தாள் கேத்ரின். எதிர்முனையில் அத்தைமகன் தேவா. அப்பாவிடம் கொடுத்தாள்.

நீங்களே எல்லாத்தயும் பாத்துக்குங்கஎன்றபடி போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது ஓடிவந்து கேத்ரினைக் கட்டிக்கொண்டு அழுதாள் சின்னு. சின்னுவின் அம்மா அழுதுகொண்டே புலம்பிக்கொண்டிருந்தாள்.
ஏன் இப்படிச் செஞ்சான்... அழகுபையனாச்சேம்மா! யாரு கண்ணுபட்டதோ...வீட்டுக்கு வரும்போதெல்லாம் மாமி ...மாமின்னு உயிரை விடுவானே...இனிம யார் என்ன அப்படி கவனிப்பாங்க...
மல்லிகா மாமியின் புலம்பல் கேத்ரினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லாம் உன்னாலதானடி பாவி...ஒனக்கு சாதி முக்கியம் . சாதியையும் ஒறவுங்களையும் விட்டுக்கொடுக்க முடியாதவங்க எதுக்கு அவனோட மனசுல ஆசையை விதைக்கணும்? இப்ப வந்து புலம்பறாளே  என எரிச்சல் பட்டாள்.
“ அந்தக் கொடுமைய நான்தானே முதல்ல பார்த்தேன். காணும்னு தேடிட்டுப் போனப்ப ரெட்டேரியில அவனோட சட்டையைப் பார்த்தேன். பாடிய போலிசு  ஜிஎச்.க்கு எடுத்துட்டுப் போயிட்டதா பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க... இப்படி  ஆகும்னு தெரிஞ்சிருந்தா அவன  நான் தனியா விட்டிருக்க மாட்டேனே...என்று முகத்தைப் பொத்திக் கொண்டு கேவிக்கேவி அழுதான் தேவா.

தன் தோள்மீது சாய்ந்து அழுதுகொண்டிருந்த சின்னுமீது கோபம்கோபமாய் வந்தது கேத்ரினுக்கு.

ஒருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது சின்னுவும்  அவள் அம்மாவோடு வந்திருந்தாள். தனியாக இருந்த சமயம்பார்த்து கேத்ரினும் தேவாவும் பிரிட்டோ அவளைக் காதலிக்கும் விசயத்தைச் சொன்னார்கள்.

நான் பிரிட்டோகிட்ட இதுவரைக்கும்  அப்படி நெனச்சுப் பழகல என்று சிரித்தாள்.

அவன் உன்ன ரொம்ப டீப்பா லவ்பண்றான் சின்னு!

எதைவச்சு அவன் அப்படி நினைச்சான்னு எனக்குத் தெரியல. ஆனா நான் அவன அப்படி நெனக்கல என்று மறுத்துவிட்டாள்.

பிரிட்டோ ...எப்படி சொல்லறதுன்னு தெரியல. அவ மனசுல அப்படியெல்லாம் ஒண்ணுமில்லனு சொல்லிட்டா.என்றதும்,
சொல்லாத கேத்தி! சொல்லாதஎன்று கத்திக்கொண்டே ஓடினான்.
பிரிட்டோ நான் சொல்றதைக் கேளு! தயவுசெஞ்சி தப்பாப் புரிஞ்சுக்காத. என்ற தேவாவிடம்,
உங்கள யாரு கேட்கச் சொன்னது? தெரியாம இருந்தாலாவது அது முகத்தைப் பாத்துப் பேசறத கேட்டுக்கிட்டே சந்தோசமா இருந்திருப்பேனில்ல. இனிமே இங்க வந்தா நான் எப்படிப் பாப்பேன்...நேர்ல நின்னு எப்படிப் பேசுவேன்?என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

என்ன சொன்னுச்சு...அப்படி நெனச்சு பழகலையாமா? அப்போ அது பேசுனது பழகினதுக்கு ...என்னையே சுத்தி சுத்தி வந்ததுக்கெல்லாம் என்ன அர்த்தமாம்? நல்லா படிக்குது. இங்கிலீஷ்ல எல்லாம் பேசுது. அதான் வேணாங்குது. அவங்க கேஸ்ட்ல பொறந்திருந்தாலாவது எனக்குக் கட்டிக் கொடுத்திருப்பாங்கல்ல என்று குழந்தைமாதிரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒருதடவை வீட்டுக்கு வந்திருந்தப்ப மல்லிகா மாமி, பிரிட்டோ பாக்கறதுக்கு அழகா இருக்கான். எங்க கேஸ்ட்டா இருந்தா சின்னுவ அவனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருப்பேன் னு பேசிக் கொண்டிருந்தது பிரிட்டோவின் செவியில் நுழைந்து மனத்தில் ஆழப் பதிந்துவிட்டிருக்கிறது.
அவங்க ஏதோ விளையாட்டா சொல்லி இருப்பாங்க. அதைப்போய் மனசுல வச்சுக்கிட்டு. எல்லாத்தையும் மறந்துடு பிரிட்டோ.

முடியாது கேத்தி.என்று தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். அதற்குப் பிறகு அவன் சந்தோசம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. சின்னுவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டது. பிரிட்டோ மௌனமாகவே இருந்தான். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

ஆம்புலன்ஸ் வேன் தெருமுனையில் நுழைந்தது. வாசலிலிருந்து தெருவுக்கு ஓடிய கூட்டம் பெருங்குரலெடுத்துக் கதறியது. ஆம்புலன்ஸ் வீட்டுவாசலில் வந்து நின்றது. பாடி இறக்கப் பட்டது.  பாட்டி மார்பிலடித்துக் கொண்டு அழுதாள். அம்மா தெருவில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். தம்பி தங்கைகள் கதறினார்கள். அப்பா பெரியப்பா சித்தப்பாவெல்லாம் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள்.

உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு முகம் கருவடைந்து காணப்பட்டது. இறந்து மூன்றுநாள் ஆகிவிட்டதால் பாடியை சீக்கிரமாக எடுத்துவிட அவசரப்படுத்தினார்கள்.

மொகம் பாக்கிறவங்கயெல்லாம் சீக்கிரமா பாத்துடுங்க.!

கேத்தி...வாம்மா...கடைசியா ஒருதடவை அண்ணனைப் பாத்துடு. எடுத்துடப் போறாங்கம்மா... என்று  வற்புறுத்தி அழைத்து வந்து காட்டினார்கள்.

முகம் பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.

இது எங்க அண்ணன் இல்ல...இது பிரிட்டோ இல்ல...என்று பயந்து கத்தினாள்.

கொஞ்ச நேரத்தில் அதே ஆம்புலன்ஸ் வேனில் பாடியை இடுகாட்டிற்குக் கொண்டுபோனார்கள்.

பிரிட்டோவுடன் சேர்ந்து அவனது காதலும் புதைந்துபோனது.
--------------------------------------------------------------




Sunday, August 21, 2011

கவிதை - புதிய களம்

ண்டையிட புதிய களம்
கிடைத்திருக்கிறது அரசிக்கு

தலைவிரி கோலமாய்
தலைசாய்த்துப் பார்க்கும் பெண்கள்

கண்கள்மேய தனத்தின் அடிவாரம்தெரிய
உடுத்தும் பெண்கள்

இறுக்கமாய் அணிந்து
மிடுக்காய் போஸ் கொடுக்கும்
வேற்றுநாட்டு இராணிகள் இளவரசிகள்

இப்படியாரேனும்
ஃபேஸ்புக்கில் நண்பராக இணைய
அரசனுக்கு வேண்டுகோள் விடுக்கையில்...

அறிந்த தோழிதானெனினும்
இரவில் அரட்டையில் வருகையில்...

“உர்”ரென்று ஆகிவிடுகிறாள் அரசி.
சமாதானப் படுத்துவதற்குள்
ஃபேஸ்புக்கும் வேண்டாம்
ஒரு எழவும் வேண்டாம்
என்றாகிவிடுகிறது அரசனுக்கு.

Saturday, August 13, 2011

என் கவிதைகள்

உங்களை அறிந்துகொள்ளுங்கள் 


ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 .............

எண் ஒன்றெனில்
நீங்கள் வெகுஜன அரசியலில் ஆர்வமுள்ளவர்
இரண்டெனில்
நீங்களொரு தீவிர வாசகர்
மூன்றெனில்
நீங்களொரு கம்யூனிஸ்ட்
அல்லது எதிர்ப்பாளர்
நான்கெனில்
நல்லது
நீங்கள் பாக்கியவான்
நீங்கள் நிம்மதியானவர்
நீங்கள் சுயநலவாதி
நீங்கள் வெகுளி
நீங்கள் ஞானசூன்யம்
எதுவாகவுமிருக்கலாம்.


* பொய்த்துவிடும் நம்பிக்கைகள் *
--------------------------------

இப்போதெல்லாம்
என் நம்பிக்கையைப்
பொய்த்துவிடுகிறாய்.
அனுப்ப மாட்டாய் என்றிருக்கும்
நேரத்தில்
பதில் குறுஞ்செய்தி
அனுப்பி விடுகிறாய்.
பத்துப் புறாக்களைப்
பறக்கவிட்டால்
இரு புறாக்களுக்காவது
பதில் கொடுத்தனுப்புகிறாய்.
முன்புபோல்
உனது நாவில்
கங்குகள் தெறிப்பதில்லை.
பேசவே மாட்டாய்
என்றிருக்கும் நேரத்தில்
அலைபேசியில் அழைத்து
எனை அந்தரத்தில்
மிதக்க விட்டுவிடுகிறாய்.
நம்ப முடியவில்லை என்னால்
என்னவாயிற்று உனக்கு?
நீயும் என்னை
நேசிக்கத் தொடங்கிவிட்டாயா என்ன?
ஒருகால்
என்னை நேசிக்கும் மனம்
இன்னும் உனக்குக் கைவரவில்லையெனில்
வெறுக்காமலாவதிரு.
வாழ்க்கையொரு
நீர்க்குமிழடி பெண்ணே!

* சிறு தூறலாய் *
-----------------

பெருமழையாய்
என் நிலத்தில்
நீ கவிய வேண்டாம்
சிறு தூறலாகவேணும்
வந்து போயேன்.
  
nadri: www.thadagam.com

Monday, August 8, 2011

நூல் விமர்சனம் சாருமதியின் அறியப்படாத மூங்கில் சோலை ...



“ முந்திய பகலில் எம்முடன் இருந்தோர்
இந்த இரவில் இல்லாது போயினர் ”


‘கந்தசாமி யோகநாதன்’ எனும் இயற்பெயரைக் கொண்ட சாருமதியின் தொகுக்கப்பட்ட கவிதைகள், அறியப்படாத மூங்கில் சோலை. 1926-இல் இலங்கையில் பிறந்து 51-ஆவது வயதில் 1998-இல் மரணித்துப்போன சாருமதியின் கிடைத்த கவிதைகளைத் தொகுத்து 2010-இல் வெளியிட்டுள்ளனர். பதின் பருவத்திலே மார்க்சியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு மார்க்சிய அரசியல் களத்தில் செயலாற்றியவர், சாருமதி . இந்தியப் புரட்சியாளர் சாருமஜூம்தார்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக ‘க. யோகநாதன் ’ என்னும் தன் பெயரை சாருமதி என மாற்றிக் கொண்டதே மார்க்சியத்தின்மீது அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலை உணர்த்துகிறது. தன் பெயரை மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னிரு பிள்ளைகளுக்கும்கூட சாரு நிவேதன், சாரு வினோதன் எனப் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நூறு கவிதைகளை இந்நூலில் தொகுத்துள்ளனர். பெரும்பாலான கவிதைகள் உலக உழைக்கும் மக்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் ஒரே சித்தாந்தமான மார்க்சியத்தின் அடிப்படையிலே இயங்குகின்றன.

ஒரு சில தீவிரமான காதல் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. தீவிரமான அரசியல் கவிதைகளை எழுதுபவர்கள் காதல் கவிதைகள் எழுதுவதைப் பெரும்பாலும் தவிர்க்கவே செய்கின்றனர். சாருமதி அக்கூச்சத்தை உடைத்திருக்கிறார். தான் நேசித்த ராஜியை உருகிஉருகி எழுதியிருக்கிறார். பாரதிக்குக் கண்ணம்மாபோல், நகுலனுக்கு சுசீலாபோல் சாருமதிக்கு ராஜியாகவும் இருக்கலாம்.

தன் நிலத்தின் அரசியலையும், மக்களையும், சக மனிதர்களின் நயவஞ்சகங்களையும், காதல் ஏக்கங்களையும், துரோக அரசியலையும், குருதிதோய்ந்த நாட்களையும் கவிதையாக்கியிருக்கிறார் ,சாருமதி.

1972-ஆம் ஆண்டு தொடங்கி 1997 வரை கால்நூற்றாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட இக்கவிதைகளில் அக்காலகட்டத்து இலங்கை அரசியல், தமிழின ஒடுக்குமுறை மட்டுமல்லாது இந்திய அரசியல் சூழலையும் கவனப்படுத்தி எழுதியிருப்பது சாருமதியின் அரசியல் புரிதலை உணர்த்துகிறது. தொடக்ககாலக் கவிதைகளுக்கும் பிற்காலக் கவிதைகளுக்குமான வேறுபாடுகள் சூழலின் காரணமாக அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட கருத்துநிலை மாற்றத்தால் விளைந்தவை என்பதனை நம்மால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெரும்பாலான கவிதைகளின் மொழிநடை வானம்பாடிகளின் பாணியில் அமைந்திருப்பது வாசிப்பில் ஒருவித அயர்வை உண்டுபண்ணினாலும் கவிதைகளின் களமும், எழுதப்பட்ட காலமும், பின்புலமும் அவ்வயர்வைத் தணித்துவிடுகின்றன.

மார்க்சியத்தை அவரின் கொள்கையாக வரித்துக் கொண்டதால் இந்தியப் புரட்சிகர இயக்கத்தைத் தோற்றுவித்த சாருமஜூம்தார் பற்றியும், மேதினம், போபால் துயரம், வெண்மணிப் படுகொலை பற்றியும் எழுதியிருக்கிறார். வர்க்க உணர்வும், மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும் இத்தொகுப்பு நெடுக ஊடாடி இருக்கின்றன.

எழுபதுகளில் எழுதிய கவிதைகளில் தமிழன் என்கிற அடையாளத்தை மறுத்தும், உணர்ச்சிகரமான தமிழ் அரசியல் பேசுபவர்களை நகைத்தும், தமிழின விடுதலையை வெறுத்தும் ‘நாங்கள் இலங்கையர்கள்’ (ப.5) எனும் கவிதையை எழுதியிருக்கிறார். அக்கவிதையில் ,
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனைக் கிண்டலடித்திருப்பதோடு, தமிழ் பொல்லாதது என்றும் சாடுகிறார். காரணம், காசி ஆனந்தனின் உணர்ச்சிகரமான கவிதைகளைப் படிக்கும் தமிழர்கள் சிங்களர்கள் மீது காரணமின்றிப் பகைவுணர்வு கொள்கின்றனர் என்று சாருமதி கருதியிருக்கிறார். அதனால் அவர் தமிழன், சிங்களன் வேறுபாடுகளை வெறுத்து, வர்க்க ஒற்றுமையை நேசித்து இக்கவிதையை எழுதியிருக்கிறார். பட்டினி கிடக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்காக ஒரு சிங்களவன், தமிழன் ஒருவனிடம் கடன்வாங்கி அப்பெண்ணுக்கு உதவுவதை நெகிழ்வான கவிதையாக்கித் தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘நாங்கள் மக்கள்; நாங்கள் இலங்கையர்’ (ப. 8) என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

‘ இராமர்களின் வருகைக்காய் அகலிகைகள் காக்கட்டும் ’(ப.23) எனும் கவிதையிலும் அதே உணர்வைப் பதிவு செய்திருக்கிறார்.

“ ....உன்னைப் போலவே
நானுமோர் இளைஞன்
உன்னைப் பிறப்பித்த
இந்த மண்தான்
என்னையும் பிறப்பித்தது
பிறப்பால் நீயும் நானும்
இலங்கையர்
பிறப்பால் மட்டும்தானா?
இல்லை
உணர்வாலும்தான்
அதை நீ
சொல்லில் காட்டிவிட்டாய் ” (ப.25)

என்று.

கால ஓட்டத்தில் வரலாறுகள் மாறுகின்றன. மனிதர்கள் மாறுகின்றனர். சிந்தனைகளும் மாறுகின்றன. ‘அவரே இட்டார்’ (ப.109) எனும் கவிதையில்,

“ ....வாழப் பிறந்தவர் நாங்கள் இல்லையென்ற
வக்கிரம் அவர் கொண்டால்
காலக் கலண்டரில் கட்டாயம் இந்நாடு
கடைசியில் ரெண்டாகும்...
....
....
கயவர் ஆட்சியிலே எங்கள் இனக்
காப்பும் எரிந்த தடா
சொத்தினை இழந்தோமடா நாங்கள் எங்கள்
சுதந்திரம்தான் இழந்தோம்
இத்தனை காலமும் இருமொழி நாடென்ற
இருப்பினை நாம் இழந்தோம்
இனி
எங்களில் ஏது பிழை
இத்தரை இரண்டாய்ப் போவதற்கான வித்தினை
அவரே இட்டுவிட்டார்.” (ப.109-110)

ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில், 1984-இல் சாருமதி எழுதிய கவிதை இச்சூழலுக்கும் பொருந்தி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ‘இந்த நாட்கள்’ (ப.171) எனும் கவிதை இப்படி முடிகிறது-

“ ....
எல்லா எலும்புகளும் ஒன்றாய்த் திரளும்
எல்லாத் தலைகளும் ஓர் நாள் நிமிரும்
கிழக்கின் வானில் செவ்வரி படரும்
தமிழன் தன் கால்களில் எழுவான்
உதய ஞாயிறை என் பூமி காணும்.”

இத் தொகுப்பிலிருக்கும் முக்கியமான கவிதைகளில் ஒன்று... ‘இன்றும் நாளையும் தமிழனின் வாழ்வும்’ (ப.172) என்பது. அக்கவிதையில் தமிழனின் தலைவிதியை எண்ணி அழுது வடிந்து கொண்டிராமல் இறுதி வெற்றி மக்களுக்கே எனச் செயல்படத் தூண்டுகிறார்.

“ ....
பங்களாதேஷ்
இங்கும் நிகழலாம்
சரித்திரத் தவறுகள்
மீண்டும் நடக்கலாம்
ஆயினும் ஆயினும் மக்கள் இருப்பர்
மார்க்சீசம்
சொல்வதால் மட்டுமல்ல
மானிட வரலாறும்
அதைத்தான் சொல்கிறது
இறுதி வெற்றி
மக்களுக்கே
அந்த வைகறை வரட்டும்
நான் இல்லாவிடினும்
என் பிள்ளை
புல்லின் நுனியில்
தூங்கும் பணியை
கைகளால் தழுவி
முகத்தில் பூசி
மகிழ்ந்து கொள்ளட்டும் ” என்கிறார்.

அந்நாள் எந்நாளோ..?

“ ..... நன்றியும் வேண்டாம்
நம்பிக்கையும் வேண்டாம்
வெந்ததைத் தின்போம்
விதி வந்தால் சாவோம் ” (ப.22)
என்று விரக்தியாகவும் பேசுகின்றார்.

“......
குடிசைக்கு விடிவுவரும் - அம்மோவ்
கொடுமைக்கு முடிவு வரும்
உடைமைக்கு உரியோராய் - அம்மோவ்
உழைப்பவர்கள் வென்றுவிட்டால் (ப.80)

என்று நம்பிக்கையாகவும் பேசுகின்றார்.


“ ஓ...என் மௌனப் பறவையே
ராஜிப் பேடையே
நீ யெனக்குக் காதலியா?
அல்லது கடவுளா?” (ப.48)

எனக் காதலிக்காக உருகவும்செய்கிறார்.


“.....
சொத்துடைமை வர்க்கங்களின்
சித்தங்களினால்
சிறைவைக்கப்பட்டிருக்கும்
பெண்ணின் சிந்தனைகள்
எப்பொழுது
சுதந்திரத்தை தரிசிக்கும்?
வளையல்களினதும் கொலுசுகளினதும்
வாழ்வில் மதிமயங்கி
வாழ்வின் துயரங்களைப் புதைக்க முயன்ற
தோழியரே எழுக
இனி எழுக .” (ப.88)

என்று பெண்ணுரிமைக்காகக் குரலும் கொடுக்கிறார்.

“கருமை ஒளியாய் நீயிருப்பாய்” என்றும்

“ இயற்கை தந்த இன்னிசையே
இறக்கை கொண்ட வாத்தியமே”

என்றும் குயிலை வியக்கவும் செய்கிறார். காதல், விரக்தி, அரசியல், அழகியல் என அனைத்துவிதமான உணர்வுகளையும் தம் கவிதைகளில் பதித்திருக்கிறார், சாருமதி.

தொடக்ககால ஈழத்துப் புதுக்கவிதைப் போக்கையும், கால்நூற்றாண்டு இலங்கை - இந்தியச் சூழலையும் புரிந்துகொள்ள இத் தொகுப்பு துணைபுரிகிறது.

நூல்: அறியப்படாத மூங்கில் சோலை...(கவிதை)
ஆசிரியர்: சாருமதி
வெளியீடு : நந்தலாலா
133 , 1 / 1 , திம்புல்ல வீதி ,
ஹற்றன்,
இலங்கை.
பக். 242 .
இலங்கை விலை ரூ. 200 . 00 

நன்றி- www.thadagam.com

Sunday, July 24, 2011

கவிஞர் தி். பரமேசுவரியின் ”ஓசை புதையும் வெளி” - நூல் விமர்சனம்





எரியும் பனிவனத்தின் குளிர்க் கங்குகள்

 

முதலில் இந்த விமர்சனத்திற்கு காமம் நுரைத்துப் பொங்கும் கவிதைகள்என்று தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் எல்லாக் கவிதைகளையும் திணிப்பதாகத் தோன்றியதால் அத்தலைப்பைத் தவிர்த்தேன். எனக்கான வெளிச்சம் (2004) எனும் தன் முதல் கவிதை நூலைத் தந்த கவிஞர் தி்.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. கையடக்கப் பதிப்பாக 72 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

காதல், காமம், விரக்தி, பெண்விடுதலை எனும் பொருண்மைகளுக்குள் இவரது கவிதைகள் இயங்குகின்றன. எதார்த்தம், புனைவு, ரொமான்டிக் தளங்களில் மொழிநடை அமைந்திருக்கிறது.

முதல் கவிதை ஞாயிற்றின் மகள் புனைவுவெளியில் இயங்குகிறது. சிறகுகள் கோதும் சாளரம் எனும் கவிதை எதார்த்தவெளியில் பயணிக்கிறது. ஒன்றைக் காட்சிப் படுத்தி வேறொன்றை உணர்த்துகிறது.

“.....    .....
குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய் கண்டிக்கும் தாய்ப்பறவை
சன்னலில் பதித்த முகத்தில்
பதியும் கோடுகள்
வலிக்க வலிக்க
ரசித்துக் கொண்டிருக்கிறாள்.” (ப. 9)

சுதந்திரமான பறவைகளின் செயல்களைக் கூண்டுப் பறவையாய் அடைந்து கிடக்கும் வீட்டுப் பெண் வலிக்க வலிக்க ரசித்துக் கொண்டிருக்கறாள்” .

குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப் பறவை

எனும் வரிகள் பிள்ளைக்கும்  தனக்குமான இடைவெளியை... பிரிவை உணர்த்துகிறது.  அதனால் உண்டான ஏக்கத்தின் காரணமாகவே வலிக்க வலிக்க ரசித்துக் கொண்டிருக்கிறாள்எனும் வரி வந்துள்ளது.

கவிதைச் செடிகவிதை எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

உன் மர விரல்கள்
ஊர்ந்து கொண்டிருக்கும்
என்னுள் கவிந்திருக்கிறது
ஒரு நூற்றாண்டுத் தனிமை” (ப. 11)

எனும் கவிதை வரிகளில் உணர்ச்சியற்ற விரல்கள் என்பதனை  மர விரல்கள்என நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்.

“....  ...
குழிக்குள் அலையும் உடலைத்
தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்
பசியாறும் உடல் தடவி
சற்றே தளர்ந்து ஆசுவாசிக்கையில்
மீளக் குழிக்குள் தள்ளிக்
கையுதறி நடக்கின்றன வன்கால்கள்” (ப. 12)

மென்கரங்கள் என நம்பியவையும் வன்கரங்களாகிப் போன அவலத்தை வெளிப்படுத்துகிறது இக்கவிதை.  இதே தொனியில் அமைந்த மற்றுமொரு கவிதை என்றும்பெயர்”(ப.18). இரண்டாவது அல்லது புதிய காதலின் அவஸ்தையைப் பேசும் கவிதைகள் இவை.

ஆதரவு தேடித்
தோள் சாய்கிறேன்
அடி வயிற்றில்
கத்தி செருகுகிறாய்
சிதறும் துளிகள் கொண்டு
தீட்டுகிறேம் உன் ஓவியம்

எனும் கவிதையும் மனங்கொத்திப் பறவை, மௌனக் கலவை,  செம்மலர்ஆகிய கவிதைகளும் தலைக்கேறிய காதல் போதையில் உலறும் பேதையின் குரலாகவே ஒலிக்கின்றன.

ஓசை காட்டி
அழைக்கிறது மழை
ஓடிப் பிடிக்க எத்தனிக்கையில்
எங்கேயோ நினைவூட்ட
மனசுக்குள் மழை மறைந்து
இறுக்கம் பரவுகிறது மெல்ல (ப.15)

என்பது ஓர் அழகான குறியீட்டுக் கவிதையாகும். தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஏதோவொன்று தன்னை அழைக்கிறது. மனம் அதன்பின் செல்ல எத்தனிக்கையில் எதிர்விளைவுகளைக் குறித்து எச்சரிக்கின்றன உறவுகள். ஆசை நிராசையாவதைச் சுட்டுகிறது இக்கவிதை.

அனைத்தையும் விட்டொழித்துத்
திசைவெளியெங்கும் பரவுகிறேன்
மென் காற்றாய்
மலை முகடுகளில் அலைகிறேன்
மேகமாய் உருமாறுகிறேன்
மெல்லக் கரைகிறேன்
துளிகளால் நனைகிறது பூமி ” (ப. 19)

அழகான புனைவாக இருக்கிறது இக்கவிதை.

பொதுவாக, சிறைப்பட்ட பெண்ணின் மனநிலையிலும் விடுபட்ட பெண்ணின் மனநிலையிலும் இவரது கவிதைகளின் சாரம் மையங் கொண்டிருக்கிறது.

சங்கிலியில் திரியும் சுதந்திரம்எனும் கவிதை, சங்கிலியில் பிணைக்கப்பட்ட வளர்ப்பு நாயாக மனைவிகளைச் சித்திரிக்கிறது. மனப்பாறையில் சிதறும் பரல்கள்எனும் கவிதை சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்யும் பின்நவீனத்துவக் கவிதையாக அமைந்திருக்கறது.

காமம் சார்ந்த கவிதை ஏதேன் சர்ப்பம்” . உடலிலிருந்து வெளியேறி விருப்பம்போல் தனித்தலைந்து மீண்டும் உடலுக்குள் நுழையும் மனம் பற்றிய புனைவுக்கவிதை இரவில் முளைக்கும் சிறகு” (ப.27).


   திருமணம், கணவன், குடும்பம் எனும் பந்தத்திலிருந்து விடுபட்ட பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்துகிறது தாழியின் வெளி”(ப.29).

இடம் பெயரும் விதைகள் கவிதையும் குறியீடாகவே பேசுகிறது. பாறை இடுக்கில் விழும் விதை பனித்துளி, காற்று, ஒளி ஆகியவற்றின் உதவியுடன் தடம் பதிக்கும் என்கிறார், கவிஞர்.

முளைக்கக் கூடாத இடத்தில் முளைத்துவிட்டு அல்லாடிக்
கொண்டிருப்பது செடிகளுக்குத் தானே தெரியும்? பாறை இடுக்கிலோ, கட்டட விரிசல்களிலோ முளைப்பது செடிகளுக்கு
நல்லதல்ல; அந்த இடத்திற்கும் நல்லதல்ல.

இருளுக்குப்பின் வெளிச்சம் என்பது போல வெளிச்சத்திற்குப் பின்
இருள் என்பதும் இயற்கை விதி.

தண்டனை எனும் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் மீது கருணை கொண்ட ஆசிரியராக பலி கேட்கும் பிரம்புகள் எனும்
கவிதையை எழுதியிருக்கிறார்.

நீண்ட சிறகுகள்
வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்தேன்
உன் வாசலில்
அள்ளியெடுத்து மருந்திட்டாய்
மென் மெதுவாய்த் துளிர்த்தன சிறகுகள்
.... ...... .....
..... ..... .....
துளிர்த்த சிறகுகள் கத்தரித்துக்
கூண்டுக்குள் அடைத்தாய்
...... ....... ..........

மருந்திட்ட கரங்களே மீண்டும் சிறகு கத்தரிப்பதும் கூண்டுக்குள்
அடைப்பதும் பரிதாபம் தானே? புரிந்துகொள்ள முடிகிறது கூண்டுப்பறவையின் வலியை. எதற்கு இந்தக் கவிதை என்ற
எண்ணத்தை ஏற்படுத்துகின்றன இதயத்தின் சவப்பெட்டி போன்ற
கவிதைகள் .

கலவி குறித்து சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசுகின்றன.
இரண்டுவிதமான கலவிகளை அக்கவிதைகள் பேசுவதாக உணரமுடிகிறது. ஒன்று வெறுப்புக் கலவி மற்றது விருப்புக்கலவி. புணர்ச்சியில் கூட முனகல்கள் / தெருவெங்கும்
இறைவதாய் / எரிச்சல்பட்டாய். என்பது வெறுப்புக்கலவி. விருப்புக்கலவிக்கு எடுத்துக்காட்டு ஒளிரும் உடல் கவிதை.

இரவை ஆடையாய் போர்த்தி
உன்னருகில் நான்
சற்று நேரத்துக்கு முன் தான்
வானவில்லின் வண்ணங்களை
வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும்
நரம்புகளில் இன்னமும்
சங்கீதம் அலை அலையாய்
....... ....... ...........   

புணர்ச்சி இரவில் எழுதப்பட்ட இக்கவிதையை மிகவும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் செய்திருக்கிறார்.

எரியும் பனிக்காடாய்
எனை மாற்றி
ஏதும் அறியாதவன் போல் உறங்குகிறாய்

இதில் வரும் ஏதுமறியாதவன் போல் என்பது செய்யறத எல்லாம் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாதவன் போல் இருக்கான் பாரு!’ என்பார்களே ஊரில் அந்த தொனி!. ஏதும் அறியாதவன் என்பது எல்லாம் அறிந்தவன் என்று பொருள் படும்.

காட்டாற்றில் மிதந்து வரும்
சிறு இலையென மிதக்கிறேன்

காட்டாற்று வெள்ளம் திடீரென்று வருவது கட்டுப்பாடற்றது.

புரள்கையில்
 நுகர்கையில்
 தழுவுகையில்
ஒவ்வொரு முறையும் உயிர்க்கிறேன்
நாபிச்சுழி மலரும் மஞ்சள் மலரெடுத்து
அதிகாலை பரிசாய் அளிக்கிறேன்

புணர்ச்சியை ஆழ்ந்தனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது இக் கவிதை.
இந்தக் கவிதையைச் சுண்டக்காய்ச்சித் தந்திருக்கிறார் வேறொரு கவிதையில் (நீல மலர் ப. 45).

மெல்ல உரைத்தல் (ப. 67) கவிதை, இயக்கங்களையும் இசங்களையும் விவாதித்தோம் மணிக்கணக்கில் என்று தொடங்குகிறது. இயம் என்பதும் இசம் என்பதும் வேறுவேறல்ல;
இயம் தமிழ்; இசம் ஆங்கிலம் .

    ‘Feminism’என்ற ஆங்கிலச்சொல் பெண்ணியம் என்று
வழங்கப்படும்போது ‘ism’, இயம்ஆக வழங்கப்படுகிறது.

இக் கவிதையில் தன் அறிவை வியந்த ஆடவன் தன்னை அழகானவள் என்று சொன்னதை விரும்பும் மனம் வெளிப்பட்டுள்ளது.

ஒரேமாதிரியான கவிதைகள் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தொகுப்பு நிறைவாகவே உள்ளது.
யாரோ ஒருவரின் கவிதையாகப் பார்க்கும்போது பிரச்சினை
ஒன்றுமில்லை. மா.பொ.சி எனும் மாபெரும் ஆளுமையின்
பெயர்த்தியின் கவிதைகள் என்று பார்க்கும்போது ஏமாற்றம்
ஏற்படுவதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை.

        .......................................................................................


  

Sunday, July 17, 2011

என் கவிதை - என் செல்ல செல்லமே


என் செல்ல செல்லமே

ன் அசைவுகளில்
நிரம்பியிருக்கிறது
எனக்கான மகிழ்ச்சி
உன் பனிக்குழைவிதழில் முகிழ்க்கும்
குறுநகையும்
அன்பு குழைந்த பார்வையும்
மலர்த்திவிடுகிறதென்னை
நெற்றியிலும் கன்னத்திலும்
அனிச்சையாய் நீ
கைவைத்துக்கொள்ளும் அழகில்
கரைந்துபோகிறேன்.
பறவைகளின் பாடல்களில்
மனமொன்றி
மெல்லியதாய் நீ குரலெழுப்புகையில்
உயிருருகிப்போகிறேன்
விழியுருட்டி
நீ வேடிக்கை பார்க்கையில்
உன்னையே வியந்து பார்க்கிறேன்.
எப்போதாவது நேரும்
உன் சிறு துயரை
பொறுத்துக் கொள்ளவியலாமல்
உடைந்து போகிறேன்.
வலிகளை உடல்கடத்தும் அற்புதம்
ஏதும் நிகழுமாயின்
என்னுடல் கடத்திக்கொள்வேன்.
------------------------------------------------------
                                                             

Wednesday, July 13, 2011

எனக்குப் பிடித்த பாரதியின் கவிதை ...

படிக்கப் படிக்கப் புதிதாகத் தோன்றுபவன் பாரதி.
பாரதியின் பல கவிதைகள் நம்மை வெகுவாகக் கவர்பவை. எனக்குப் பிடித்த பல கவிதைகளில் ஒரு கவிதையை எங்கள் கல்லூரியில் சேர்ந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் வகுப்பில் படித்துக் காட்டினேன்.வேண்டுவன எனும் தலைப்பிலான அக்கவிதையை இங்கே தருகிறேன்.

னதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லன வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதிவேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காத்திட வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
-------------------------------------------

Friday, June 24, 2011

நூல் வெளியீட்டு விழா - விடுதலைப் புலிகளுக்கு அப்பால்



ங்கிலத்தில் ராஜீவ் சர்மா எழுதி தமிழில் ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கும் “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடிகள் “ எனும் நூலை அண்மையில் (04-06-11) சவுக்கு இணையத் தளத்தின் பதிப்பகமான சவுக்கு வெளியீடு சென்னையில் வெளியிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் நூலை வெளியிட, தோழர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

சவுக்கு சங்கர் அறிமுகவுரை நிகழ்த்த , தோழர்கள் கஜேந்திரன், விடுதலை இராசேந்திரன், தியாகு ,வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நூல் குறித்து உரை நிகழ்த்த, நூலாசிரியர் ராஜீவ் சர்மா, மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை நிகழ்த்தினர்.

தோழர் கஜேந்திரன் நூல் குறித்துப் பேசுகையில், “ இந்த நூலை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் நீங்கள் படித்தாக வேண்டும். கார்த்திக்கேயன் தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு திராவிட வழிப்பட்ட தமிழ்த்தேசிய அரசியலை முடக்கிவிடும் துடிப்பு இருந்ததை இந்நூலைப் படித்தப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். அரசியல் உணர்வுசார்ந்து சிறு உதவி செய்தால்கூட உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும் என்கிற விதமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் அந்தக் குழுவுக்கு இருந்திருப்பதையும் நான் உணர்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தி.க.வையும் தி.மு.க.வையும் சிக்க வைக்க ஜெயின் கமிசன் பிரயத்தனப் பட்டிருக்கிறது. பொதுத் தளத்தில் தி.மு.க.வால் நடிக்கக்கூட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.

பல்வேறு இதழ்கள், பல்வேறு ஆய்வாளர்களின் செய்திகளையெல்லாம் திரட்டி எந்தச் சார்புமின்றி முடிந்த அளவிற்கு உண்மைகளை வெளிக்கொணர்வதில் ராஜீவ் சர்மா வெற்றி பெற்றிருக்கிறார். விக்கி லீக்ஸைவிட சவுக்கு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மிகச் சிக்கல் வாய்ந்த அறிவுசார்ந்த நூலை ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். திராவிடம் சார்ந்த தமிழ்தேசத்தின் மீதான பயங்கரவாதமாக இந்த கமிசன்களின் செயல்களை நான் பதிவு செய்கிறேன் ” என்று குறிப்பிட்டார்.

விடுதலை இராசேந்திரன் :

இந்த நூல் குறித்து அதிக அளவில் விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார் தோழர் விடுதலை இராசேந்திரன். “அதிகார மையங்களை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற சிறந்த இணையத் தளம் சவுக்கு ” என்று பேசத் தொடங்கினார். ராஜீவ் காந்தி கொலைக்கு சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது என்பதை 6-7 அத்தியாயங்களில் இந்நூல் விளக்குகிறது. காவல் துறையினரின் நாட்குறிப்பிலுள்ள செய்திகளாகவே அரசு ஆவணங்களிலிருந்தும் புலனாய்வுத்துறையின் குறிப்புகளிலிருந்தும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின்போது புலனாய்வுத்துஙையின் இயக்குனராக இருந்த விஜய்கரண் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். எனவே இந்நூலின் மீது சந்தேகம் எழுகிறது.

ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடும் இந்நூல் சர்வதேச நிறுவனங்களின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும் என்கிறது . விடுதலைப் புலிகளைக் குறைசொல்லிக் கொணடிருக்ககும் அமைப்பினருக்கு இந்நூல் உதவி செய்வதாக இருக்கிறது. ராஜீவ் காந்திக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என ஆராய ஏற்படுத்தப்பட்ட வர்மா குழுவிற்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. உரிய பாதுகாப்பை இந்திய அரசும் தமிழக அரசும் வழங்கவில்லை என்று அந்த வர்மாகுழு அறிக்கை குறிப்பிடுகின்றது. எம்.கே. நாரயாணன் இந்திய உளவுத்துறை இயக்குனராக இருந்தபோதுதான் ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றது. ராஜீவ் காந்திக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க முடியாமல் போனதற்கு வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதாரமாக அவரிடமிருந்த ஒரு வீடியோ படத்தை மறுநாளே பிரதமரிடமும் போட்டுக்காட்டியிருக்கிறார். ஆனால் கார்த்திக்கேயன் ஆணையத்திடம் அந்த வீடியோவை கொடுக்கவில்லை ஏன்?

ராஜீவ் காந்தியின் படுகொலையில் காங்கிரஸின் சதி பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் ஜெயின் ஆணையம். ஆனால் அந்த ஆணையத்திற்கு எந்தவிதமான கட்டமைப்பு வசதியும் செய்துத் தரப்படவில்லை. வர்மா ஆணையம் பற்றிய அரசு ஆணையை ஜெயின் ஆணையம கேட்டபோது அரசாங்கத்தின் பதிவேட்டில் காணாமல் பேய்விட்டது என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. பிறகு ஜோடிக்கப்பட்ட கோப்புகள் ஜெயின் கமிசனிடம் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான கோப்புகளை நரசிம்மராவ் அரசு ஜெயின் கமிசனிடம் ஒப்படைக்கவில்லை.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் உறவுகளுடன் விடுதலைப் புலிகள் ராஜீவ் கொலையை நிறைவேற்றியுள்ளனர் என்கிறது இந்நூல். இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மீது வைத்த மோசமான குற்றச்சாட்டாகும். இதை மறுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இஸ்ரேலின் உளவு நிறுவனமாள மொசாட் ஓர் இனவாத அமைப்பாகும். சிவராசன் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர். விடுதலைப் புலிகளின் அமைப்பில் அதற்கு அனுமதி கிடையாது.
சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவும் அவரது தோழர்களும் சென்றுகொண்டிருந்த கப்பலை எல்லைவரம்பு மீறி சுற்றிவளைத்த இந்திய உளவுத்துறையின் மீதான குற்றச்சாட்டை இந்நூல் மழுங்கடிக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. மாத்தையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றிப் பிரபாகரன் மீது மோசமான உள்நோக்கத்தைக் கற்பிக்கிறது இந்நூல். பிரேமதாஸாவைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று குற்றம் சாட்டுகிறது. இக்கருத்து எங்கும் நிரூபிக்கப்படாத ஒன்றாகும். உளவுத் துறையின் மோசமான செயல்களை இந்நூல் வெளிப்படுத்தவில்லை. ஆனால் புலிகள் அமைப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த நூலால் ராஜீவ் கொலைவழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பொருட்டே அல்ல. ஈழவிடுதலைக்காகச் செயல்படுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ” என்று நூல் குறித்து பல செய்திகளையும் மறுப்புகளையும் முன்வைத்துப் பேசினார்.

தோழர் வழக்கறிஞர் புகழேந்தி :

ராதஜீவ்காந்தி படுகொலையில் முக்கியமான குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டார்கள். நளினி ஈழப் பெண்ணல்ல ; தமிழ்நாட்டுப் பெண். முருகனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைத் தவிர ஈழ அரசியல் குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ அவருக்கு ஒன்றும் தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் கொலையால் எந்தப் பலனும் இல்லை. பாதிப்புகள்தான் அதிகம்.

விடுதலைப் புலிகள் இந்தியாவை நட்பு நாடாக எண்ணியிருக்கக் கூடாது . இந்தியாவுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட விடுதலைப்புலிகள் நகர்த்தவில்லை என்றபோதும் இந்தியாவின் துரோகத்தால் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். இந்தியா செய்திருக்கும் இந்த துரோகம் என்றும் மறக்க முடியாதது.

ஜெனரல் டயரைப் பழி வாங்கியது சரியென்கிறோம்.. வாஞ்சிநாதன் பழி வாங்கியதையும் சரியென்கிறோம்.. ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியைப் பழி வாங்கியதில் என்ன தவறு? ராஜீவ் காந்தியின் கொலைக்காக நாம் இன்னும் எத்தனைக் காலம்தான் அழுவது? சிறையில் அடைப்பட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் போன்றோருக்காகவும் நம் மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம் ” என்றார்.

தோழர் தியாகு :

“ சிறைப்பட்டிருக்கிற தமிழர் எழுவரின் விடுதலைக்கு இந்நூலிலுள்ள தகவல்கள் பயன்படக்கூடும் . கிட்டுவும் அவரது தோழர்களும் சென்ற கப்பலை சர்வதேச கடல் பரப்பிலிருந்து இந்திய கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டுவர முயன்றபோது மாலுமிகளைத் தப்ப விட்டுவிட்டு கிட்டு உள்ளிட்ட தோழர்கள் கப்பலை வெடிக்கச் செய்து இறந்துபோயினர் . இது தொடர்பாக விசாகப்பட்டின நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்தக் கப்பலில் வெடிமருந்தோ ஆயுதமோ கடத்தவில்லை என்று தீர்ப்பு வந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தத் தீர்ப்பைக்கூட இந்நூலாசிரியர் குறைகூறியிருக்கிறார். இது விடுதலைப் புலிகள் மீதான இவரது காழ்ப்புணர்வைக் காட்டுகிறது.

ராஜீவ் கொலையால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை . சோவுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் செத்துப்போன இந்தியத்தேசியம் உயிர்பெறவுமே ராஜீவின் கொலை பயன்பட்டது. ஈழத்தேசியத்திற்கு மட்டுமல்ல; தமிழ்த்தேசியத்திற்கும் இது பாதகமாக அமைந்தது . ராஜீவ் கொலைக்கு முன்பு பிரபாகரனைக் கைது செய்வதற்காக இந்திய இராணுவம் ஈழத்திற்குச் சென்றது முதலான இந்தியா ஈழத்தின் மீது எடுத்த அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து இந்நூலில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் படுகொலை என்றால் அரசியல் காரணிகள் ஆராயப்பட வேண்டும். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் ஏதோ அடியாள்போல் நீங்கள் எண்ணிவிட வேண்டாம். வெளிநாட்டு உளவு நிறுவனங்களி்ன் கூட்டாளியாகவும் எண்ணிவிட வேண்டாம் . நம்முடைய வரலாற்றைப் படிப்பதற்கான எதிர்ஆசானாக இந்நூல் பயன்படும் ” என்றார்.

நூலாசிரியர் ராஜீவ் சர்மா ஆங்கிலத்தில் தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக மொழிபெயர்ப்பாளர் ஆனந்தராஜ் ஏற்புரை வழங்கினார். முப்பது ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் நம் இனத்தின் வரலாற்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எனது எண்ணமே இந்நூலை மொழிபெயர்ப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றார்.
Top photo: Thadagam 
நன்றி்  www.thadagam.com

Monday, June 20, 2011

முன்னணி - அரசியல் சிற்றிதழ் அறிமுகம்

   பிரான்ஸிலிருந்து  “ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ” யின் சார்பாக வெளிவந்திருக்கும் இதழ் முன்னணி. விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனங்களைத் தாங்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சில கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இரு கவிதைகளை இங்குத் தருகிறேன்.

இவள் என்ன ஜாதி?
           - லண்டன் விஜி

நீயில்லாமல் நானில்லை என்றிருந்த
என் மாமன் மகன்கூட
எனை மனைவியாக்க மறுக்கிறான்!
நான் என் வீட்டாலும் நாட்டாலும்
புறக்கணிக்கப் பட்டவள்!
ஏனெனில்
நான் நம்பியதோர் இலட்சியத்திற்காக
போராடிய முன்னாள் பெண்போராளி!
                          ----------------

எண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்
                             - கங்கா

ந்திக் கடலில் பேரம் நடந்தது
எம் மக்கள்
நீந்தவும் முடியாது நிர்க்கதியாய்
கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர்
இப்ப மீளவும்
ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது
இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம்
எண்ணையைத் தோண்டிக் கண்டுபிடி தமிழா

அடித்துச் சொல்றாங்கள்
இதுதாண்டா உலகமயமாதல்
அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள்
அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம்
மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம்
மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம்

எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம்
தேர்தல் நெருங்கினால்
அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும்
தம் கையை மீறினால் தான்
ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்...ம்
எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம்

மக்கள் போரெழும் பூமியெல்லாம்
பூந்து நுழைந்தழித்துச் சீரழித்து
அடிவருடிப் பொம்மைகள் அமர்வதுவோ
வீழ்ந்ததுவோ மக்கள் எழுச்சி... இல்லை பார்
அடக்கப்பட்டோர் ஆர்த்தெழும் புயலாய்
அடங்காது
மக்கள் புரட்சி வெடித்துத்தான் ஓயும்....
                 -------------------




Saturday, June 18, 2011

நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம் - யுகபாரதி கவிதை

சூரிய கதிர் 16 - 30  2011 இதழ் படித்தேன். கவிஞர் யுகபாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர் பற்றி. நுட்பமான கவிதை. அரசியல்வாதிகளைப் பற்றி சினிமா கவிஞர்கள் வெளிப்படையாக எழுதமாட்டார்கள். யுகபாரதி எழுதியிருக்கிறார். அவரைப் பாராட்டுவோம்! இது சிறந்த அரசியல் கவிதை.


அவர்
நினைத்ததெல்லாம் நடந்த
காலத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறார்

எல்லாம் தெரிந்தே செய்த
அவருக்கு
இப்போது என்னசெய்வதென்றே
தெரியவில்லை

அவரால் சுயமாகச் சிந்திக்கவும்
முடியவில்லை

அவருக்கு அவரே
எதிரியானதைப்போல
அவ்வப்போது பேசத்
தொடங்குகிறார்

அவரைப் புகழ்ந்தவர்கள்
அவரைவிட்டு விலதுவதைத்
தாங்க முடியாமல் கதறுகிறார்

தூக்கத்தில் கைதுபயமும்
அவலை வாட்டத் துவங்கிவிட்டன

அவர் செய்த கேடுகளால்
அவர் ஒரு விசித்திர வலையில்
சிக்கிக் கொண்டிருக்கிறார்

அவர் உருவாக்கிய
சமஸ்தானத்து ராஜாக்கள்
வெவ்வேறு சூதின் காரணமாக
மக்களால்
விரட்டியடிக்கப்படுகிறார்கள்

அவருக்காக அவரே
உண்மையாக
அழ முடியாத சோகத்தில்
இருக்கிறார்

ஒரு இனம் தன் துரோகிக்குத்
தரும்
சகல கொடுமைகளையும் அவர்
அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்

எழுதியும் பேசியும் வளர்ந்தவர்
எழுதுபவர்களாலும்
பேசுபவர்களாலும்
உதாசீனப்படுத்தப்படுகிறார்

ஆண்மை மிக்க நம்முடைய
தலைவர்
முதல் தடவையாக அதற்காக
வருத்தப்படுகிறார்

கூடா நட்பு கேடாய்
முடியுமென்று
குரல் தளும்ப குமைகிறார்

அளவுக்கு மீறி பிள்ளைகளும்
அதிகாரமும் அவதி என்பதை
ஒத்துக்கொள்ள
துணிந்திருக்கிறார்

நம்முடையத் தலைவருக்கு
இது போதாத காலம்

தலைவர்கள் மன்னர்களாகத்
தங்களை
மாற்றிக்கொள்ள
எத்தனைக்கையில்
மக்கள் அவர்களுக்குப்
போதாத காலத்தை
புரிய வைக்கிறார்கள்.

நன்றி...சூரிய கதிர்
கவிஞர் யுகபாரதி

Monday, June 13, 2011

தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி - குட்டி ரேவதி

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள

நன்றி...www.thamizhstudio.com  

தலைப்பின் பொருளை ஒற்றை அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே! அல்லது அதன் பொருளை இயன்றவரை முழுமையும் விளக்க விரும்பும் என்னுடன் பயணிக்க வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! தமிழ்நதி எனும் கவிஞரை முன்வைத்து, அகதியாயும் நாடோடியாயும் வாழப்பணிக்கப்படும் எழுத்துப்பெண்ணைப் புரிந்து கொள்வது தான் இங்கே நமது பணியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
2007 – ல் முதன் முறையாக ‘இன்றொரு நாள் எனினும்’ என்ற தமிழ்நதியின் கவிதையில் மேற்குறிப்பிட்ட கவிதைப் பத்தியை வாசித்தது முதல் இன்றும் அது, புதியதோர் உணர்ச்சியின் தொனியாய் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வரிகள், வெறுமனே அம்மாவிடம் கேட்கும் அனுமதியாக மட்டுமே இல்லை, பாருங்கள்! பிடிவாதமான, ஆனால் தான் செய்யப்போகும், இதுவரை யாரும் செய்திராத புதியதொரு செயலைத் தான் செய்யப்போவதன் அறிவிப்பாகவும் இவ்வரிகள் இருக்கின்றன. இது ஓர் அபூர்வமான தொனி தான்! இம்மாதிரியான தொனிகள் முழுதும் சுயத்திலிருந்தும், தன் ஆளுமையிலிருந்தும் எழும்புபவை. இன்னொரு கவிதைகளில் இருந்து சுடமுடியாதவை! மேலும், இவ்வரிகளில் குறிப்பிடப்படும், ‘சிலீரென்றெழும் ஓசை’, அவ்வோசை யொத்த பிற ஓசைகளை நினைவுப்படுத்துவதுடன், அவ்வோசையை யுத்தநிலத்தில் கேட்ட ஓசையுடன் இணைத்து, களவுபோன உறக்கத்தையும் குழந்தைமையையும் அவர் நேரடியாகச்சொல்லாமல் சொல்வது இக்கவிதை வரிகளின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. எனக்குப் பிடித்தமான இக்கவிதைத்தொனியைப் பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் என்னுள்ளிருந்து பத்திரமாகக் கண்டெடுக்கமுடிந்தது.
கவிதைகள் சார்ந்து நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது, வேறுபட்ட கருப்பொருள்களுக்கு ஏற்ற, வேறுபட்ட தொனிகளை உள்ளே வைத்திருக்கும் கவிதைகள் தாம் இதயத்தில் நுழையும். நுழைந்த வேகத்தில் வெளியேறாமல் உள்ளேயே கிடந்து, உள்ளத்தின் குகையில் இருட்டிலும் வெளிச்சத்திலும் உழன்று என்னென்னவோ செய்யும். பின், அத்தொனியை, அவரவர் வாழ்வில் கண்டடைவதற்கான வாயில்களை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திறந்து கொண்டே இருக்கும். நல்ல கவிதை என்பதன் செயல்பாடு இதுவாக இருக்கும்!
தமிழ்நதியின் இரண்டு கவிதைத்தொகுப்புகளுமே வேறுபட்ட இரண்டு உலகைச் சித்திரிப்பனவாக இருக்கின்றன. முதல் தொகுப்பு, ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்று மனிதர்களற்ற நிலப்பிரதேசத்தில், அப்பகலைத் தனியே கடக்கவேண்டிய சூரியனின் நிலைக்கு அழுத்தம் கொடுக்கும் தொகுப்பென்றாலும், அகதியாக நாடோடிப் பெண்ணாக, அஞ்ஞாதவாசம் இருக்கும் பெண்ணின் தனி மனித உறவுகளையும் அதுவும் பால்நிலை மையமிட்ட இடத்திலிருந்து நோக்கி, அவதானித்துச் சொல்லும் கவிதைகளாக இருக்கின்றன. எனக்கு இவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்த இடத்து, ‘மொழி’ என்பது ஓர் ஆதிக்கக்குறியின் வடிவில் எழும்பி நிற்பதையும், அதைச் சிதைக்க சொற்களைத் தேடிய சுயப்பயணத்தில் இவரின் எழுத்து வேட்டை இருப்பதையும் உணரமுடிந்தது.
பல சமயங்களில் மொழியென்பது, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறைய பேரரசுகளுக்கு உதவியிருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை, மொழி கொண்டிருந்த நுண்ணரசியலைப் பேச இவ்வெளியும் காலமும் போதாது. என்றாலும், அம்மொழியின் வழியாகத் தான் விடுதலை என்பதை பெண்கள் விளக்கமுடியும் என்பதை தமிழ்நதியின் எழுத்து தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஈரத்தையும், நெகிழ்ச்சியையும், தொடர்ப்பாய்ச்சலையும் கொண்டிருப்பதால், அந்நிலத்தின் தீயை தன் சொற்களால் விளக்குவதாகவும் இருக்கிறது.
ஆண்மை
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப்பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்
ஓடும் பேருந்தில்
திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர்பிடுங்க
கால்நடுவில் துருத்தியது
பிறிதொரு நாள்
வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது
பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில்
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த
உன் கண்களை நினைத்தபடி
‘குறி’ தவறாது சுடுகிறேன்
இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்
என் சின்னஞ்சிறுமியே!
ஆண்மையின் சுடுமூச்சு தன் உடலைத் தொடர்ந்து வரும் வேறுபட்ட தருணங்களை இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார். இதில், ’குறி’ தவறாது அவ்வாதிக்கக் குறியைச் சுடும் ஒரு தருணத்தை தனக்கானதாகவும் ஆக்கிக்கொள்கிறார். ஆணாதிக்க வேட்கைகள், பெண்கள் மீது திணிக்கப்படுவதினும் அது தொடர்ந்து வழங்கப்படுவதும், கைக்கெட்டுவதாய்க் காட்சிப்படுத்துவதுமென பொதுவெளியில் துருத்திக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த விடுதலையானதொரு வாய்ப்பினையும் பெறமுடியாத நிலையில், தன் இதழ்க்கடையில் முளைக்கும் பற்களால் தனக்குள் இருக்கும் சின்னஞ்சிறுமிக்குத் தனக்குத்தானே துணிவேற்றிக் கொள்கிறார்!
பாலை நிலப்பெண்ணைப் போல வெப்ப மூச்செறியும் தனிமையைத் தன் பல கவிதைகளில் தமிழ்நதி முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். நமது சமூகத்தில், தனிமை என்பது கூட்டத்தின் மத்தியிலும், குடும்பத்தின் மத்தியிலும் இருக்கும் பெண்ணுக்குக் கூட அனுபவிக்கத் திணிக்கப்பட்டது. என்றாலும், பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு, தனிமை என்பது அங்கங்கள் எல்லாம் முறையாக மறைக்கப்பட்டும், அவசியங்கள் குறித்த அங்கங்கள் வெளிக்காட்டப்பட்டும் அவள் எப்பொழுதுமே அணிந்திருக்க வேண்டிய, ஓர் ஆடையாகத் தான் மாறியிருக்கிறது. இத்தனிமையை, எழுத்துப் பெண்கள் சொற்களால் நிரப்ப இயன்றவர்கள். வேறெந்த இரத்த உறவையும் விட சொற்களின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டவர்கள்.
இச்சொற்கள், ஏற்கெனவே அகராதியில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களிலேயே இவர்களிடம் பொருள்பெறுவதில்லை. இவ்விவ்விடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொடூரமான விதிகளைப் பொருட்படுத்துவதில்லை. புதிய சொற்களுக்குக் கண்கள் திறக்கும் வேலையை இப்பெண்கள் தங்கள் தனிமைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். குவிக்கப்பட்ட சொற்களுக்கிடையே, தேடி ஏதும் கிடைக்காத தங்களுக்கான சொற்களை, தன் உடலுடன் கொள்ள வாய்த்த தொடர் உரையாடலில் கண்டடைகின்றனர். பின், அவற்றை அடுக்கியும் கலைத்தும் போட்டு தன் விடுதலையைப் பாடுகின்றனர்.
பெரும்பாலும் தமிழ்நதியின் கவிதைகள், கவித்துவம் நிறைந்த பாடல்களாகத்தான் தோன்றுகின்றன. நவீனக் கவிதையின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொண்ட, ஆனால், தரத்திலும் செறிவிலும் கொஞ்சமும் குன்றாத ஓர் உடல் மொழியின் கூக்குரல்களாகின்றன. தோன்றிய வரியிலிருந்து, பாடலைப் போலவே சீரான வேகத்தில் தொலைவிடம் சேரும் பறவையைப் போலவே சொற்களும் சிறகசைக்கும்.
சொற்களுடனான உறவு
அறைக்கதவைப்பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன
செப்புக்களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்துவருகிறது
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்
கனவும் நினைவுமான
காதல்வரிகள்
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞரின் உளறல்கள்
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்
வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு
வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் தவிக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை
---------------------------------------------------------------------------
உடலின் விழிப்பு
சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
காலம் திரும்பிவருகிறது
கனவின் சுவடுகளில்
முன்னேற்பாடாய்
விலங்கின் கூரியபற்களைப்
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம்
அவரவர் மேன்மைகளைக் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும்
பேசித்தொலைக்கிறோம்
வலித்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன
கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொரு காலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்
சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
காலம் தனதிடம் மீள்கிறது
காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே
பெண்ணுக்கு மட்டும் காதல் என்பது, வரையறைகளால் சுட்டமுடியாத உறவு தான். பாலுறவைத் தன் உடலுக்குத் தந்து விட்டாலே, அதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டாலே அது காதல் என்று ஆகிவிடாது. அது ஒரு மிகுபசி! யோனியின் வாயிலை மூடியும் திறந்தும் செயல்படுத்தும் உறவின் வெளிப்பாடு இல்லவே இல்லை அது! உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும், சொற்களைக் கண்டடையும் தீராத பயணம் தான் அது! யோனி என்பது அதற்கு ஒரு விளைநிலமாக மட்டுமே இருக்கமுடியும்! அல்லது சொற்களை உற்பத்தி செய்யும் ஓர் உலைக்களனாக இருக்கமுடியும்!
உடலை விழிப்புறச் செய்து, அதை ஒரு மிகுபசி கொண்ட உடலாய் ஆக்கிக்கொள்ளும் வேலையை பெண்கள் தமக்குத்தாமே தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம், பெண்கள் உடலைச் சவப்படுத்தி உறைந்துபோகும் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து திணிக்கும் போது, தன் உடலை விழிப்புறச் செய்வதற்குத் தேவையான உந்துதலை, முடக்கப்பட்ட இவ்வுடலிலுருந்து தானே பெறவேண்டும். அத்தகைய மிகுபசி, அவர் கவிதைகளெங்கும் கனன்று சொற்களை இரையாகப் புசிக்கும் உணர்வைத்தான் நாம் அடைகிறோம். ‘நரிக் கவிதை’ என்ற கவிதையில், இந்த உடல் விழிப்பு என்பது பெண்ணுடலை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றும் பரிணாமத்தைச் செய்வதை மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட, ’உடலின் விழிப்பு’ கவிதையும், கீழே தொடரும், ‘நரிக்கவிதையும்’ பெண்ணுடலை, தன்னுடலை அரசியல்படுத்த முயலும் ஒரு நாடோடிப் பெண்ணின் உணர்ச்சி நிலையையும், சொற்தெறிப்பையும் கொண்டிருக்கின்றன!
நரிக் கவிதை
நீங்கள் என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்
எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது.
கடந்தமாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்.
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
ஒப்பாரி பாடியிருப்பேன்
சிலமாதங்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை…
பசித்தழும் குழந்தைகளை..
எமது பெண்களின்
இறைச்சியைப் பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.
களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது
இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?
சமீப காலமாக, நிலத்துடனான பெண்களின் உறவு குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெண்கள், தாம் காலூன்றும் நிலமாகக் கண்டறியும் வெளி எது எதுவென்று துருவித்துருவித் தேடுகின்றேன். பல பெண்களுக்கு, எழுதும் பெண்களுக்கே கூட உடல் ஒரு பிரதேசமாக மாறாமலேயே படபடப்புப் பெறுகின்றது. இன்னும் சிலருக்கு, யோனியின் உழப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு அளிக்காத தீயாய் எரியும் வேட்கை!. சிலருக்கு, தேசம் என்ற தன் குடும்பம், சுற்றம் அவருடனான தன் உறவு, பால்யம், நினைவு வெளி என இதில் இடம்பெற்ற பெளதீக வெளிகளைத் தேடித்தேடித் திரியும் காற்றாடி மனம். இந்நிலையில், வேரறுக்கப்பட்ட தன் நிலத்தை எப்படி தனக்குள் வருவித்துக்கொள்வாள் என்பதற்குத் தான் அற்றைத்திங்கள் கவிதை பதிலளிக்கிறது.
தன் உணர்வைக் கூர்மைப்படுத்தி, செம்மையாக்கி வழங்கும் போதெல்லாம் அதற்கு நேர்மையாக இருக்க அத்தனை சிரமங்களையும் எடுக்கும் போதெல்லாம் உருவாகும் கவிதை என்பது தனிமனிதருக்காகவன்றி, பொதுவான உடைமையாகிறது. இப்படித்தான், தமிழ்நதி தன் நிலத்து மக்களுக்கான பொதுக்குரலாகிறார். இது, ஓர் அசாதாரண நிலையே. தன் நிலத்தில் வாழ அனுமதிக்கப்படாத மக்களுக்காகவெல்லாம் தன் குரல் எழும்பி நிற்க, அவர் என்றுமே தயங்காத படிமங்களும் நிகழ்வுகளும் இவர் கவிதைகளில் சூழ்ந்திருக்கின்றன! ’அடையாளமற்ற நிலை’ என்பது அடையாளங்களைத் தனக்குள் உருவேற்றிக்கொண்டோர் மத்தியில் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையுமற்ற நிலையாக இருக்கிறது என்பதை இக்கவிதையில் உணரமுடியும். காலங்காலமாகப் பெண்கள் நிராதராவாக தன் நிலத்தைப் பார்த்து ஏங்கி நின்று கண்ணீர் கசியும் நிலையையும், ‘அற்றைத் திங்கள்’ எனும் அடைமொழியால் அளிக்கிறார். எந்த ஒரு குடும்பத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமையை நிறைவேற்றாமல், முழுதுமாய் வேரைப்பிடுங்கி, வேறு தொட்டியிலோ, அல்லது வெட்டவெளியிலோ நடுவதால், அவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத தட்பவெப்பநிலையை அனுபவிக்க நேர்கிறது. இதே நிலை தான் தாய்நாட்டைப் பிரியநேர்ந்தவருக்கும்!

அற்றைத் திங்கள்
நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப்புன்னகையுமற்றுக்
கடந்து போகிற மனிதர்கள் வாழும்
அந்நியத்தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக்குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்த படி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது
தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே
இரவுகளில் பொழியும் துயரப்பனி
துயரப்பனி பொழியும் இரவுகளில்
எழுத்தின் மெழுகுவர்த்தியை
அறைக்குள் ஏற்றி வைக்கிறேன்
நிலையற்ற இருப்பினை நினைவுறுத்தியபடி
அலைகிறது சுடர்
வேரறுதலின் வலி குறித்த
வார்த்தைகள் தோய்ந்தன
பிறகு தீர்ந்தன
ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை
காத்திருக்கிறோம்…
ஒரு வயலினில் குழைந்து பிறந்து
குரல்கள் இணைந்து இழையத் தொடர்ந்து
சற்றைக்கெல்லாம்
முரசினில் முழங்கி
நரம்புகளில் நடந்து செல்லவிருக்கும்
அந்தப்பாடலுக்காக…
காத்திருக்கிறோம்
சிவந்த நிறத்திலான கொடி
தன்செருக்கில் கிறங்கிக் கிறங்கி
காற்றினில் அலைவுற…
விடுவிக்கப்பட்ட தெருக்களில்
மிதந்து செல்ல…
காத்திருக்கிறோம்
அஞ்ஞாதவாசத்தில் எழுதிய கவிதைகளை
உயிரைச் சலவை செய்யும்
பின்னிரா நிலவில்
மெட்டமைத்துப்பாட…
காத்திருக்கிறோம்
இந்த இரவு
அதிசயமாக விடிந்துவிடலாம்
அதற்கிடையில்
துயரப்பனி கவிந்த இவ்வீட்டில்
அநாதையாய் இறக்காதிருப்பேனாக!
இரவு, பகல் குழம்பியதைப் போன்ற ஒரு மனநிலையை அகதியாய் இருக்கும் ஒரு பெண் பெறுவதாக உணர்கிறேன். தமிழ்நதி, ஈழ விடுதலையின் பெண்குரலாய்த் தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டவர். விடுதலை இயக்கங்களின் பெண் குரலாய் அதிலும், தீர்க்கமான அரசியல் தெளிவுடனும், செயல்பாட்டுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகச்சிலரே. அதற்குக் காரணம், எப்பொழுதுமே பெண்கள் தொடர்ந்த களப்பணியிலும் அதற்குண்டான அரசியல் பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்வதுமில்லை. அல்லது, அத்தகையதான தெளிவுமிக்க சொற்களால் தன் அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது இல்லை. தமிழ்நதி, இந்தக் குறைபாடுகளை தமிழ்த்தளத்தில் முழுமையும் நீக்கியவர். தொடர்ந்து மக்கள் விடுதலைக்கான சொற்களை அரசியல் திறனுடன் வழங்குபவர். தேசம் கடந்து தேசம் போகும் அவரது நாடோடி மனம், அவருக்கு அளப்பறியா துணிவையும் அரசியல் கூர்மையையும் உடல் என்ற தேசத்தின் எல்லைகளைக் கடக்கும் சிறகுகளையும் தந்திருப்பதாக உணர்கிறேன்.
ஆதிரை என்றொரு அகதி
ஐந்து வயதான ஆதிரைக்கு
ஆழ்கடல் புதிது
எனினும்
புதிதாக மெளனம் பழகியிருந்தாள்
குற்றவாளிகளாய் படகேறிய கரையில்
கிளிஞ்சல்களினிடையில் கிடக்கலாம் கேள்விகள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டியிலும்
படகினின்று உயிர் தளம்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
‘கடல் ஒரு நீர்க்கல்லறை’ என்பதன்றி.
கழிப்பறை வரிசை…
கல் அரிசி….
சேலைத்திரை மறைவில்
புரியாத அசைவுகள்…
காவல் அதட்டல்..
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்
சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?
என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொருநாளில்
பூர்வீகம் பிரிய மறுத்து
தனியே தங்கிவிட்ட
என் தாய் மடியில் இளகக்கூடும்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்
“அம்மம்மா! அவையவள் ஏன் என்னை
‘அகதிப்பொண்ணு’ எண்டு கூப்பிட்டவை?”
பெருமூச்செறியும் தொனிகளுடன் விரியும் தமிழ்நதியின் கவிதைகள் நேரடியான அரசியல் பார்வைகளை நெகிழ்ச்சியான மொழியால் வனைந்து தருபவை என்பதால் ஈரம் கசியும் வரிகளை எந்த நேரமும் அவர்கவிதைகளில் நீங்கள் தாண்ட வேண்டியிருக்கலாம்! ஆனால், அந்த ஈரத்திற்காகத் துணிவை இழந்த ஒரு கோழை மனநிலையை நீங்கள் அடையாளம் காணவே முடியாது. ஏனென்றால், அது கீழே உள்ள அதே பிரகடனத்தோடு உங்கள் கண்முன் எந்தவொரு கணமும் தோன்றி நிற்கலாம்!
அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சென்ற கட்டுரையில், தம் கருத்துகளைப் பதிவு செய்த கருணாநிதி, செல்வம் இருவரின் கருத்துகளையும் வாசித்தப்பின் உண்மையிலேயே குற்றவுணர்வில் தாக்குற்றேன். இயன்றவரை இனி இந்த இடறல் நேராதபடிக்குப் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களே! மற்ற கருத்துரையாளர்களுக்கும் என் அன்பையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் இக்கட்டுரையின் வழியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. இவர், ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (2007) மற்றும் ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (2009) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசிக்கிறார். கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.