Sunday, December 11, 2011

ஏ. இராஜலட்சுமி கவிதைகள்...


நவீனத் தமிழ்ப் பெண்கவிஞர்களில் தனித்துவமானவர், கவிஞர் ஏ. இராஜலட்சுமி. எனக்கான காற்று எனும் அற்புதமான கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமானவர். அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ... நீயும் நானும் நாமும் இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வெளிவர உள்ளது. அதிலிருந்து சில கவிதைகள்...



ப்பொதேனும்
கடந்திருக்கிறீர்களா?
அரசு மருத்துவமனை
வளாகத்தை
ஒரு பயணியாகவாவது?

காலி குளுக்கோஸ் பாட்டில்களும்
குருதி தோய்ந்த
பஞ்சுப் பொதிகளும்
துடைத்தெறியப்பட்ட
நைந்த துணிகளும்
குடலைப் புரட்டும்
துர் நாற்றமும்...

இவற்றுக்கிடையில்
எப்பொழுதும்
வழியற்று
நிறைந்திருக்கிறது
ஒரு கூட்டம்

அதிகபட்சமாய் தன்
பெண்ணிற்குப்
பிறக்கப்போகும்
ஆண்குழந்தைப் பற்றிய
உரையாடலுடன்..

எவற்றையெல்லாம்
சகிக்க வேண்டியுள்ளது
பெண்ணாகப் பிறந்தால்.
************************

ன்னுள் நிறைந்து வழிகிறாய்
குறைவற்று..

பசுமைப் பிடித்து
நிமிர்ந்து தளிர்க்கும்
மரத்தின் வேரென
பரவி நிற்கும்
உன் ஞாபகம்

வெகு தூரம்
பயணித்த
பறவை கண்ட
கிளைப்
படபடப்பின் உச்சம்
உன் அருகாமை

குவிந்துகிடக்கிறது
மனதின்
இடமெங்கும்
உன் வாசம்
எந்தச் சலனமுமற்று...
**********************
யிர்த்தலை
உணர்ந்த பொழுது
நீ
என்னுள்
உருவான தருணம்

குடல் முடுக்கி
எழும் வாந்தியும்
மயக்கமும்
நிலை குலைத்திருக்கும்.

பொட்டில் அறைந்த
இறுகிய வலி
அங்கமெங்கும்
நிறைந்து..

உன்னோடு
நடந்த தருணம்
இதம் தரும்
அசைவுகள்
பனியாய் குளிர்விக்கும்.

உன் வருகைக்கான
ஆவல்
என் உயிரின்
நரம்பு தெரித்திடும்
ரணவேதனையூடே
குருதி கொப்பளிக்க
கண்ணீர் வற்றிய
கதறலின்
உச்சம்

உன் அழுகுரல்
நான்றியாதது

பரிதவிப்புடன்
அருகில் தேடுகிறேன்
நீ இல்லை
கனத்துக் கிடக்கிறேன்
அழுகையோடும் விசும்பலோடும்

இழப்பின்
கொடிய வலியுடன்
நிறைகிறது
என் வாழ்வு

மருத்துவமனை வாயிலில்
தயவு செய்து
மாலைகளை
விற்காதீர்.
************

No comments:

Post a Comment