மோகினியுடனான சாத்தானின் உரையாடல்
அலைந்து திரிந்த களைப்புக்கு இதமாய்க்
குளிர்ந்த பழச்சாற்றைக் கண்ணாடிக் குவளையில்
கொண்டுவந்து நீட்டியது மோகினி
மோகினியின் விரல்தொடாமல்
பெற்றுக்கொண்ட சாத்தான்
தன் உதடுகளை அழுத்தி உறிஞ்சியது
கண்ணாடிக் குவளையில் பதிந்திருக்கும்
மோகினியின் உதட்டு ரேகைகளையும் சேர்த்து.
பிறகு எதிரெதிரமர்ந்து உரையாடிக்கொண்டே
தரைபாவாத மோகினியின் கால்விரல்களை
மோகிக்கத் தொடங்கிய சாத்தான்
கொஞ்சம் கொஞ்கசமாய் ஊர்ந்து
கழுத்தின் கீழ்ப் பகுதியில் தடைப்பட்டு நின்றது.
பிறகு
மோகினியிடம் யாசித்துப் பெற்ற
செந்நிற சிறு நிலவுகளைப்
பெருவிருப்புடன் புசிக்கத்தொடங்கிய
சாத்தானின் பசி
மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.
நன்றிகூறி விடைபெற்றபின் மோகினியாலன்றி வேறொன்றாலும்
தீர்க்க முடியாத தீராப்பசியோடு
அலைந்து திரிகின்றான் சாத்தான்
இப்பெருநகரமெங்கும்.
சிதைவுற்ற சிற்பம்
இதுதானே நடந்துவிடக்கூடாதென்று நான் நினைத்தது
எத்தனை ஆண்டுகள் ஆகின
இச்சிற்பத்தை நாம் அழகுற வடிப்பதற்கு
சிதறுண்ட பிறர் சிற்பங்களோடு ஒப்பிட்டு
எத்தனை பெருமை கொண்டிருந்தோம் நாம்
இன்று இப்படிக் கிடக்கிறது
யாரின் துளி இரக்கமும் பரிவுமின்றி
கேட்பாரற்று .
ஒருவர்மீது ஒருவர்
குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோம்
சிலைக்குத் தெரியும் குற்றவாளியை .
வாழ்வின் இறுதிவரை நம்முடன் இருக்குமென்று
வடித்த சிற்பம்
இப்படிச் சிதைந்து போனது யாரின் திருவிளையாடல் ?
சிற்பத்துகள் காலில் இடறியபடி
வேறுவேறு திசையில் பயணிக்கிறோம் .
கண்ணீர் சிந்தியபடியும்
நகைத்தபடியும் கிடக்கிறது
நம் சிற்பம் .
..............................................................................
இருளில் ஒளிரும் விழிகள்
இருள் நிறம் குறித்தான ஏராளமான வடுக்கள்
உறைந்திருக்கின்றன அவளின் மன ஆழியில் .
இருளில் மட்டுமே அவள்
நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள் .
எந்த ஏளனப் பேச்சும் அப்போதுதான் அவள் செவியை
எட்டுவதில்லை .
சிவந்த தோழி ஒருத்தி
வகுப்பில் கைமீது கைவைத்து
ஒப்பிட்டபோது தொடங்கிய ரணம் அது .
எப்போதாவது மைதீட்ட நேர்கையில்
ஞாபகம் வரத் தவறுவதில்லை
' மைக்கு யாராவது மை வைப்பாங்களா '
என்ற யாரோ ஒருவனின் கேலிக்குரல் .
உதட்டுச் சாயம் பூசுவதை
நிறுத்தியாகிவிட்டது
உறவுக்காரப் பெண்ணொருத்தி
டீ.எம்.கே.(DMK ) கலர் மாதிரி இருக்கு
என்ற நாளிலிருந்து .
வரன்கள் தள்ளிப் போனபோது
நம்பிக்கை வரண்டுபோனாள்.
உள்ளம் புரிந்த ஒருவன்
வெளிச்சம் பாய்ச்சினான் அவள் மனத்தில்.
கட்டிலில் கரைந்தபோது
ஒளிரும் அவள் கண்களை
இருளிலும் காண்கிறான் அவன்.
......................................................................
புத்திசாலித் தோழர்கள்
வேறெது குறித்தும் கவலைப்படாதவர்கள் .
சமூக மாற்றம் குறித்து மட்டுமே
கனவு கண்டு கொண்டிருந்தவர்கள்.
நகரம் ஆழ்ந்துறங்கும் அதிகாலைப் பொழுதில்
போஸ்டர் ஒட்டியவர்கள்.
புற நகர்களிலும் திரையரங்குகளிலும்
இரகசியக் கூட்டங்கள் நடத்தியவர்கள் .
இரகசியப் பெயர்களில் இயங்கியவர்கள்
தொடர்வண்டியிலும் பேருந்திலும்
உண்டியல் குலுக்கி
தொலைதூரம் சென்று
புரட்சிகர மாநாடுகளில் பங்கு கொண்டவர்கள்.
அவர்களை எது மாற்றியது ?
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
என்று பேசிய தோழர்கள்
'ரியல் எஸ்டேட் பிசினஸ் '
செய்யப் போந்தது எங்ஙனம்?
முழு நேரக் கட்சி ஊழியனாய்
ஆகா ஆசைப்பட்ட தோழர்
அரசு ஊழியனாய் ' செட்டில் ' ஆனது
எவ்வாறு நிகழ்ந்தது ?
அரசு வேலை கிடைக்காத தோழர்
மன உளைச்சலில் புலம்பிக் கொண்டிருப்பது எதனால் ?
அரசியல் கட்சிகளை ஓட்டுப் பொறுக்கிகள்
என்ற தோழர்கள் ஓட்டுப் பொறுக்கிகளுடன்
திரை மறைவில் கைகோத்தது எப்படி?
எதிர்த்துப் பேசிய கட்சிகளிலேயே
கரைந்துபோய் கொள்கை பரப்புவது
எங்ஙனம் நிகழ்கிறது ?
மொழி
பண்பாடு
தொழிலாளர் வர்க்கம் என
எல்லாவற்றையும் வெற்றுச் சொற்களாய் ஆக்கியது எது ?
பிழைப்புவாதமன்றி வேறெது தோழா !
....................................................................................
அகால மரணம்
மொழியப்பட்ட விதிமுறைகளைச்
சிந்தையில் ஏற்றும் ஏற்காமலும் விரைகின்றனர்
அவரவர்க்கான மேற்பார்வை அறைக்கு
பேராசிரியர்கள் .
எனக்கான அறையடைந்து
தாழிடப்பட்ட கதவைத் திறந்து
ஒவ்வொருத்தராய் அனுமதிக்கிறேன்
அடையாள அட்டையையும் நுழைவுச் சீட்டையும்
பரிசோதித்து .
அப்போதுதான் அக்கறையாய்ப் படிக்கின்றனர் சிலர் .
வகுப்பறைக்கு வருவதைப் போல்
தாமதமாய் வருகின்றனர் சிலர் .
வகுப்பறையில் பேசியது போக
மிச்சமிருப்பதைப் பேசுகின்றனர் சிலர் .
விடைத்தாளையும் வினாத்தாளையும்
விரைந்தளித்து
இறுதியாய் எச்சரிக்கின்றேன்
' யாரும் கொஷன் பேப்பரில்
எதுவும் எழுதக்கூடாது
மொபைல் வைத்திருந்தால்
வெளியே வைத்துவிடுங்கள் '
அப்போதுதான் ஜீன்ஸ் பான்ட்டிலிருந்து
எடுத்தொருவன் என்னிடம் நீட்டுகிறான்
சுட்ச் ஆப் பண்ணி வச்சிக்கலாமா சார் ?
என்கிறான் வேறொருவன்
ஒவ்வொரு பருவத் தேர்வின்போதும்
நான்கைந்து காணாமல் போனாலும்
கவலைப்படுவதாய் இல்லை இவர்கள்.
நோட்டு புத்தகம் பேனா இல்லாமல்கூட இருப்பார்கள்
மொபைல் இன்றி இருக்கமாட்டார்கள் .
எல்லாம் முடிந்து
எழுதத் தொடங்கினர்
MCP1A ...PSC4R ... SAH6E ...
ஒவ்வொரு சுப்ஜெக்ட் கோடாக அழைத்து
வருகைப் பதிவுக்கான கையெழுத்தைப் பதிவு செய்கிறேன்
'MCN1A ...'
கைவுயர்த்தினார்கள்
2280430 எண்ணின் இருக்காய் காலியாய் இருந்தது
அடுத்த எண்காரனை வினவினேன்
நான் கேட்டது அவனுக்கும் அவன் சொன்னது எனக்கும்
புரியவில்லை .
அவன் வட மாநில மாணவன்
அதற்கடுத்த மாணவன் சொன்னான் ...
'சார் ... அவன் எறந்துட்டான் .'
ஒரு கணம் அதிர்ந்து
'எப்ப ?' என்றேன்
'ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சார் '
'எப்படி?'
'தெரியல சார் ஏதேதோ சொல்றாங்க '
காரணம் எதுவோ ...
மனம் வருந்தினேன்
அவனின் பெற்றோருக்காகவும்.
.....................................................................
குழந்தைமையிடம் பொய்வுரைக்காதீர்
நரபலியிடும் சாமியாருக்குத் தெரியும்
குழந்தைப்பேறு வேண்டிவரும்
பேதைப் பெண்ணை வஞ்சித்துப் புணரும்
சாமியாருக்குத் தெரியும்
உண்டியல் பணத்தில்
பொய்க் கணக்கு காட்டும்
குருக்களுக்குத் தெரியும்
கன்னியாஸ்திரியை வன்புணர்ச்சி செய்யும்
பாதிரியாருக்குத் தெரியும்
ஆசிரமத்தைக் காமச்சுரமாக்கும்
ஆனந்தாக்களுக்குத் தெரியும்
தர்காவுக்கு வருபவர்களிடம் மந்திரித்துப்
பணம் பறிப்பவருக்குத் தெரியும்
கருவறையில் காமுகனாக உருமாறும்
அர்ச்சகருக்குத் தெரியும்
' தொழில் ' சேவை புரியும்
மாது அதிபர்களுக்குத் தெரியும்
நடிகையை பூஜித்தனுப்பும்
இளந்துறவிக்குத் தெரியும்
கணக்கு கேட்கும் நிர்வாகியின்
' கணக்கை முடித்துவிடும் '
மடாதிபதிக்குத் தெரியும்
.........தெரியும்
...........தெரியும்
............தெரியும்
'தவறு செய்பவர்களின் கண்ணை
சாமி குத்தாது ' என்பது .
........................................................
' இல்லை ' குறித்தான உரையாடல்
இல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?
உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்
கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்
நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
' ஷாக்'காவது அடிக்குமா?
காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
' இல்லை ' எதை உணர்த்துகிறது?
எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்
பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்
என்னிடம் பேசாதே !
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
......................................................................
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான் .
.................................................................................................
இலக்கிய நேர்மையாளனின் மறுபக்கம்
அவன் சிற்றிதழ்களில் எழுதியவன்
அல்லது நடத்தியவன்
அதனாலேயே தன்னைப்
பெரும் இலக்கியக் கர்த்தாவாகப்
பாவித்துக் கொள்பவன் .
இப்போது ஒரு பெரும் பத்திரிகையில் வேலை பார்ப்பவன் .
சகலவித சமரசங்களைச் செய்துகொண்டே
இலக்கியக் கலைத்துவம் மொழிந்துகொண்டிருப்பவன் .
தான் ஒருதலையாகக் காதலித்தவளை
அல்லது அந்தரங்கமாகக் காதலித்துக்கொன்டிருப்பவளை
'புரோமோட் ' பண்ணிவிடுபவன்.
கவனித்துப் பார்த்தால்
சுழற்சி முறையில் வரும் அந்த நான்கு பேர்
அவனது வட்டத்தைச் சார்ந்தவராகவோ
வட்டாரத்தைச் சார்ந்தவராகவோ
சாதியைச் சார்ந்தவராகவோ
நண்பராகவோ இருப்பதை அறியக்கூடும்.
மேலும்
' டாஸ்மாக் பாரில் சியர்ஸ் ' சொல்லுபவர்களுக்கும்
விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சிபாரிசு செய்பவர்களுக்கும்
பெரும் இதழின் பக்கங்களைத் திறந்து விட்டுக் கொண்டே
' இலக்கிய நேர்மை ' கொண்டவனாகக் காட்டிக் கொள்பவன் .
சக பத்திரிகையாளனைக் கண்டால்
'இப்ப எங்க இருக்கீங்க '
எனக் கேட்டுக் கொள்ளும் சூழலில் இருப்பவன்
சிற்றிதழ் நடத்தியோ இலக்கியம் படைத்தோ
பிழைக்க முடியாத அவனால்
வேறென்னதான் செய்ய இயலும்?
............................................................
விண்ணப்பங்களால் நிறைந்த வாழ்க்கை
பிரசவ அறையின் வாயிலில்
பதற்றத்தோடு காத்திருக்கும் கணவனிடம்
ஏதோ விண்ணப்பத்தில்
கையெழுத்துப் பெற்றுச் செல்கிறாள் செவிலி .
புத்துயிர் ஒன்று
பூவுலகின் கண்விழித்தது .
மருத்துவமனையிலிருந்து நீங்கிய நாளில்
நீட்டிய விண்ணப்பத்தில்
தேர்ந்திருந்தப் பெயரை
எழுதிச் செல்கின்றனர் இணையர்.
மழலையர் பள்ளியில் நீட்டப்பட்டது
கல்விக்கான முதல் விண்ணப்பம் .
பிறகு,
பிறப்புச் சான்றிதழ்
வசிப்பிடச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
வேண்டி விண்ணப்பங்கள் .
படிப்பு முடியும்வரை தொடரும்
பல விண்ணப்ப விளையாட்டுகள் .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய
அஞ்சலகத்திலோ வங்கியிலோ
கணக்குத் தொடங்க
குடும்ப அட்டை
அடையாள அட்டை
வாக்காளர் அட்டை
எதுவொன்றையும் பெற
பூர்த்திசெய்தாக வேண்டும் விண்ணப்பத்தை.
விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்தே
வாழ்க்கையைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர்
வட்டாட்சியர் அலுவலக வாசலில் சிலர் .
யாரையும் சந்தேகம் கேட்காமல்
எந்த விண்ணப்பத்தையும் பூர்த்திசெய்ய முடியவில்லை .
விண்ணப்பம் தவறானால்
நிராகரிக்கப்படலாம் நம் கோரிக்கை .
விண்ணப்பங்களிலேயே உழல வேண்டியிருக்கிறது
இந்த வாழ்க்கை -
நமக்கான இறப்புச் சான்றிதழ்
நம் வாரிசுகள் பெறும்வரை !
.................................................................
துயர் நீர் பரவும் என் நிலம்
இன்று
பெரும் சத்தத்துடன் இடி இடிக்கிறது
என் நிலமெங்கும்
துயர நீர் பரவுகிறது
ஏன் நடந்தது இப்படி ?
என்றேனும் உனது சொற்களை
மறுதளித்திருக்கிறேனா?
உன் நிழலல்லவா நான்.
நமது பாதையெங்கும்
இணைந்தே பதிந்திருக்கின்றன
நம் சுவடுகள் .
உனது துயரங்களில்
நான் கலங்கியிருக்கிறேன் .
உனது மகிழ்ச்சிகளில் நான் களித்திருக்கிறேன்.
எனது குருதியில்
ஓடுகிறது உன்மீதான
கலங்கமற்ற அன்பும் தோழமையும் .
எப்படி நீ என்னை சந்தேகித்தாய் ..?
என் நிலமெங்கும் பரவுகிறது துயர நீர் .
..........................................................
தணிந்திருக்கும் கோடை
கந்தக நெடியை
ஊனமாக்கப்பட்ட கொடூரத்தை
துரோகத்தை
புதைகுழி நினைவுகளை
நம்பியவர்களால் கைவிடப்பட்டதை
புறாக்கள் சிதறடிக்கப்பட்டதை
இந்தக் கோடை நினைவுபடுத்தினாலும்
சற்றுத் தணிந்துதான் இருக்கிறது.
...........................................................................
யாசகம்
யாசிக்கப் படாத யாசகங்கள்
அகால மரணமடைந்த
இளம் பெண்ணின் ஆவியைப்போல்
பெரும் ஏக்கத்தோடு
அலைந்து கொண்டிருக்கின்றன
மன அடவியில் .
...............................................................
தேவதையை தரிசிக்கும் தருணம்
எதேச்சையாய்ச் செல்வதைப் போல்
செல்லலாமென்றால்
அவள் எந்தக் கோவிலுக்குப்
போகிறாள் என்று தெரியவில்லை .
எந்த இணையத்தள மையத்திற்குப்
போகிறாள் என்றும் அவனுக்குத்
தெரியவில்லை .
அவளது தெரு முனையில் சந்திப்பது என்பது
சாத்தியமற்றது .
கடைவீதிக்குப் போகும் நேரமும்
அவன் அறியாதவை .
அவள் தோழிகளைச் சந்திக்கும்
நேரம் எதுவாக இருக்கும் ?
செல்லும் சாலை எதுவாக இருக்கும் ?
யோசித்தபடியே இருக்கிறான்
அவளை மீண்டும்
தரிசிக்கும் தருணத்திற்காக.
............................................................
அச்சம்
சூடுபட்ட பூனை
பயந்து பயந்து நெருங்குகிறது
பால் குண்டானை .
........................................
மறைபொருள்
மெல்லிய வெளிச்சம் அரும்பும் இளங்காலையில்
நேற்றைய நிலவுப் பொழுதை நீராட்டி
இன்றைய கதிர்ப்பொழுதில் நுழைகிறாள் .
உச்சியிலிருந்து மயிர்க்கற்றை வழிந்து
நுனி சொட்டும் நீர்த் திவலைகளைப்
பூத்துவாளையால் துவட்டுகிறாள் .
மணம் உமிழ் மலர்ச்சரம் சூட்டுகிறாள் .
மென்விரல்களுக்கு மெரூன் வண்ண நகப் பூச்சும்
இதழுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் பூசியும் ,
பிடித்த ஆடையை அணிந்து
ஆடை நிற வளையல் அணிந்து
அலங்கரித்த அழகையெல்லாம்
பர்தாவுக்குள் புதைத்து
நடந்து போகிறாள்
அழகின் சமாதியென .
(குறிப்பு : மறைபொருள் எனும் இக் கவிதை, பொன்.சுதா இயக்கிய மறைபொருள்
எனும் குறும்படத்தை அடியொற்றி எழுதப்பட்டது .)
..............................................................................
குழந்தை உலகம்
கிட்ஸ் வேர்ல்ட்
கிட்ஸ் லேன்ட்
கிட்ஸ் கார்னர் எனப்
பார்த்து பார்த்து வாங்குகின்றனர்
குழந்தைகளுக்கான ஆடைகளைப் பெற்றோர்கள் .
பெற்றோர்களின் பழைய ஆடைகளை
அணிந்து கொண்டு
குதூகலிக்கின்றன குழந்தைகள் .
.......................................................................
ஒரு கவளம் அன்பை யாசிப்பவன்
உன் பொக்கைவாய்த் தாத்தா
மாராப்பை ஒழுங்காக மூடாத பாட்டி
உன் கோபக்கார அப்பா
அன்பைப் பொழியவே
பிறவியெடுத்த உன் அம்மா
எதற்கெடுத்தாலும்
உன்னோடு போட்டிபோடும் உன் தங்கை
சதா சண்டையிடும் உன் தம்பி
பக்கத்து போர்ஷன் குழந்தையென
எல்லோருக்கும் போக
மீதமிருக்கும் அன்பில்
எனக்கும் ஒரு கவளம் கொடேன்.
...........................................................
செல்லமாய் ஒரு சிணுங்கல்
முகம் முழுக்க
பவுடரை அப்பிவந்து
“ நா அழ்கா க்கேனா ”யென
பீரோ கண்ணாடியைப் பார்த்தபடிக்
கேட்கிறாள் குட்டிப்பிசாசு நித்திலா.
“ நீ எம்பொண்ணுல்லமா
அழகாத்தாயிருப்ப ”
என்கிறேன் நான்.
“ அப்ப நாங்க அழகாயில்லயாக்கும் ”
என்றபடி
“ இப்பக்கூட ஒண்ணும்
கெட்டுடல
யாராவது அழகான பொண்ணா பாத்து
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு்
உங்கப்பாவ ”
யெனச் செல்லமாய்க்
கோபித்துக் கொள்கிறாள் தலைவி.
சாதாரணமாக இருப்பதைவிட
அவள் அழகாயிருக்கும் இத்தருணங்களில்தான்
உயிர்த்திருக்கிறது
வாழ்க்கை.
......................................................
பிரிவு
உனது பிரிவு
வருத்தம் தரவில்லையென
நண்பர்களிடம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
வருத்தத்தை
மறைப்பதற்காக.
.........................................................
பொய்த்துவிடும் நம்பிக்கைகள்
இப்போதெல்லாம்
என் நம்பிக்கையைப்
பொய்த்துவிடுகிறாய்.
அனுப்ப மாட்டாய் என்றிருக்கும்
நேரத்தில்
பதில் குறுஞ்செய்தி
அனுப்பி விடுகிறாய்.
பத்துப் புறாக்களைப்
பறக்கவிட்டால்
இரு புறாக்களுக்காவது
பதில் கொடுத்தனுப்புகிறாய்.
முன்புபோல்
உனது நாவில்
கங்குகள் தெறிப்பதில்லை.
பேசவே மாட்டாய்
என்றிருக்கும் நேரத்தில்
அலைபேசியில் அழைத்து
எனை அந்தரத்தில்
மிதக்க விட்டுவிடுகிறாய்.
நம்ப முடியவில்லை என்னால்
என்னவாயிற்று உனக்கு?
நீயும் என்னை
நேசிக்கத் தொடங்கிவிட்டாயா என்ன?
ஒருகால்
என்னை நேசிக்கும் மனம்
இன்னும் உனக்குக் கைவரவில்லையெனில்
வெறுக்காமலாவதிரு.
வாழ்க்கையொரு
நீர்க்குமிழடி பெண்ணே!
.....................................
மௌனம்
நீ மௌனமாயிருக்கிறாய்
என்பதைத் தவிர
வேறொன்றையும்
புரிந்துகொள்ள முடியவில்லை
உன் மௌனத்திலிருந்து.
.....................................
தற்கொலையைக் கைவிட்டவள்
இப்பொழுதெல்லாம் அவள்
தற்கொலை குறித்துப் பேசுவதில்லை
முன்பெல்லாம்
நேரிலோ
தொலைபேசியிலோ பேசினால்
தற்கொலையில்தான் முடிப்பாள்
தற்கொலைதான் துயரங்களிலிருந்து
தன்னைப் பூரணமாக விடுவிக்குமென
நம்பினாள்.
முன்னெப்பொழுதும் காணாத சிரிப்புகள்
அவள் முகத்தை அலங்கரிக்கின்றன இப்போது.
உண்மையில்
இப்போதுதான் இந்த உலகம்
அவள் காலின்கீழ் இருப்பதை உணர்கிறாள்.
இப்பொழுதுதான் அவள்தன் இருப்பை
முழுமையாய் உணர்கிறாள்.
தளைகளை அறுத்தெறிந்த மகிழ்ச்சி அவள் நடையில்.
சிறைச்சுவரைத் தகர்த்தெறிந்த பெருமிதம் அவள் பேச்சில்.
ஊர்பாட்டுக்குப் பேசிக்கொண்டு திரிகிறது
அவள்பாட்டுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறாள்
தன் வாழ்க்கையை.
.....................................................
மின்மினிகளும் நட்சத்திரங்களும்
என் தோட்டத்தில்
கண்சிமிட்டிக் கொண்டிருந்த
நட்சத்திரங்களெல்லாம்
மேலே மேலே பறந்துசென்று
மேகத்துள் மறைந்துபோயின.
வானில் மின்னிக்கொண்டிருக்கும்
மின்மினிகளை இரசித்துக் கொண்டிருக்கிறேன்.-
...............................................................
புதிய களம்
சண்டையிட புதிய களம்
கிடைத்திருக்கிறது அரசிக்கு
தலைவிரி கோலமாய்
தலைசாய்த்துப் பார்க்கும் பெண்கள்
கண்கள்மேய தனத்தின் அடிவாரம்தெரிய
உடுத்தும் பெண்கள்
இறுக்கமாய் அணிந்து
மிடுக்காய் போஸ் கொடுக்கும்
வேற்றுநாட்டு இராணிகள் இளவரசிகள்
இப்படியாரேனும்
ஃபேஸ்புக்கில் நண்பராக இணைய
அரசனுக்கு வேண்டுகோள் விடுக்கையில்...
அறிந்த தோழிதானெனினும்
இரவில் அரட்டையில் வருகையில்...
“உர்”ரென்று ஆகிவிடுகிறாள் அரசி.
சமாதானப் படுத்துவதற்குள்
ஃபேஸ்புக்கும் வேண்டாம்
ஒரு எழவும் வேண்டாம்
என்றாகிவிடுகிறது அரசனுக்கு
............................................................................
இரகசியக் கூழாங்கல்
நதியின் அடியாழத்தில் இரகசியமாய்ப்
பதிந்து கிடக்கும் சிறு கூழாங்கல்லில்
வளிநிரப்பினேன்.
பெரும்பலூனாய் மேலெழும்பித்
தத்தளித்துக் கொண்டிருக்கிறது அலையில்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
ஒப்படைக்க அருகில் நெருங்கினால்
மீண்டும் கூழாங்கல்லாகி
அடியாழத்தில் பதிந்துவிடுகிறது.
............................................................................
மாறுவேட அரசியல்வாதிகள்
கலாச் சாலைச் சிறுவர்களினும் வெகு ஆர்வமாய்க்
கலந்துகொள்கின்றனர் மாறு வேடப்போட்டியில் அரசியல்வாதிகள் .
நம் மூதாதையரை ஆண்ட அரசர்கள் இரவில்
மாறுவேடத்தில் நகர்வலம் வந்ததாகக் கதைகள் உலவுகின்றன.
நவீன மன்னர்களோ எப்போதும் மாறுவேடத்தில் .
எல்லோர்க்கும் பிடித்த எளிதான மாறுவேடம்
ரம்ஜான் நாளில் முஸ்லிமாக மாறிவிடுவது.
ஓரே ஒரு குல்லாய் போதுமானது
ஒட்டுமொத்த தேசத்திற்கே போட்டுவிட.
அன்று முதல் இன்று வரை
எல்லோர்க்கும் பிடித்த வேடம்
விவசாயி .
இவ் வேடத்தின் முதன்மைப் பொருள் கலப்பை.
உபரிப் பொருள்கள்,
முண்டா பனியனோ கை பனியனோ
அல்லது சட்டையோ . அவரவர் வசதிக்கேற்ப .
புரட்சியாளனாய் வேஷம் போடுபவர்கள்
தொண்டர்களிடம் ஈர்ப்பையும்
தோழர்களிடம் வெறுப்பையும் உண்டாக்கி விடுகிறார்கள்.
உடல் முழுதும் கரு நீல வண்ணம் பூசி
கிருஷ்ணனாய் இராம லட்சுமணனாய் அனுமனாய்
வேடமிட்டு அலைகின்றனர்
வறுமை துரத்திய "ஹை-டெக்" மாநில விவசாயிகள் .
ஏதேதோ வேடமிட்டு நம்பவைத்து
மக்களைப் பிசைக்காரர்களாக்கி விடுகிறார்கள்
அரசியல்வாதிகள்.
............................................................................................
அன்புமுறி
எனைத் தூற்று
பழித்துப் பேசு
நான் பிறந்த சாதியை
இழித்துக் கூறு
கொஞ்சம் போல் அவமானப் படுத்து
எனது மனப் பறவையை
உனது பாழ்மண்டபத்தே
அண்டவிடாது துறத்து
கடுஞ்சொற்களால் காயப்படுத்து
என் காடு மணத்துக் கிடக்கும்
உன் மணத்தை
செத்துக் கிடக்கும் நஞ்சரவத்தின் நாற்றமாக்கு
எனை எனதாக்கு
நான் நானாக வாழவேண்டும்.
............................................................................
விரகம்
நகரம் இருளில் கரையத் தொடங்கிய
பின்மாலைப் பொழுதில்
சொற்களின்வழி அவன் கரையத் தொடங்குகிறான்.
அவனது சொற்களெல்லாம்
அவளின் அன்பை இறைஞ்சுகின்றன.
அவளும் மெல்லக் கரையத் தொடங்குகிறாள்
அப்போது அவர்கள் உரையாடிக்கொண்டிருக்குமிடம்
தேவதைகள் உறையும் இடமாகிப்போனது.
அவள் தனது கனிவான சொற்களால்
அவன் மனத்தின் தீராப் பசியைக்
கொஞ்சம் கொஞ்சமாய்த் தணித்துக்கொண்டே
சொற்களால் கவசம் அணிந்துகொள்கிறாள்.
கொதித்துக் கொண்டிருக்கும்
உடலின் வாசனையை விழிகளில்
உணர்ந்த பின்னும்
அவரவர் திசையேகுகின்றனர்
விதிக்கப்பட்ட சட்டகங்களுக்கஞ்சி.
.................................................................................
பாராட்டு விழா
எது எதுக்கு
யார் யார்
யார் யாருக்கு நடத்தலாம்
சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ
வீரர்க்கோ என்றில்லை
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும்
நடத்திக்கொள்ளலாம்
அதிகம் கொலை செய்தவர்க்கு
கொலைக்குத் துணை நின்றவர்க்கு
கொலை செய்யப்பட்டவருக்கு
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு
பிரபலமாவதற்கு
விழா நடத்துவதற்கு
மனத்தில் இடம் பிடிப்பதற்கு
சும்மா பாராட்டுவதற்கு
பாராட்டு விழா நடத்தியதற்கு
சிலரைப் புறக்கணிப்பதற்கு
பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில்
நாமேகூட நடத்திக்கொள்ளலாம்
அல்லது
பிறரைத் தூண்டி
நடத்திக்கொள்ளலாம்
பாராட்டு விழாக்கள்
பாராட்டுவதற்காக மட்டும்
நடத்தப்படுவதில்லை !
நன்றி : ஆனந்த விகடன் ( 27 - 04 - 2011 )
................................................................................
இன்னும் புரியவில்லையெனக்கு
நீ
சாத்தானா
தேவதையா?
...................................
தவிப்பு
பூக்கக்கூடாத இடத்தில் பூத்துவிட்டு
ஏனிந்தப் பூஞ்செடி
இப்படி அல்லாடிக் கொண்டிருக்கிறது?
...................................................
புரிந்துகொள்ளப் படாத அன்பு
பாலைவனத்தில்
பதியமிடப்படும் ஒற்றைப் பூஞ்செடி.
----...................................................
உங்களை அறிந்துகொள்ளுங்கள்
ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 .............
எண் ஒன்றெனில்
நீங்கள் வெகுஜன அரசியலில் ஆர்வமுள்ளவர்
இரண்டெனில்
நீங்களொரு தீவிர வாசகர்
மூன்றெனில்
நீங்களொரு கம்யூனிஸ்ட்
அல்லது எதிர்ப்பாளர்
நான்கெனில்
நல்லது
நீங்கள் பாக்கியவான்
நீங்கள் நிம்மதியானவர்
நீங்கள் சுயநலவாதி
நீங்கள் வெகுளி
நீங்கள் ஞானசூன்யம்
எதுவாகவுமிருக்கலாம்.
.....................................................
தந்திரமிகு சொற்களைச்
சுமந்து வருபவர்கள்
நேற்றைய மீனையும்
எளிதில்
விற்றுவிட்டுப் போய்விடுகிறார்கள் .
....................................................
கால வெம்மையில் என்றன்
மனசின் நீருற்றுகள் வற்றத் தொடங்கிவிட்டன
தாகத்தோடு நீளும் எந்நாவுக்கும் அவை
முன்புபோல் சுரப்பதில்லை
நீருற்றுகள் ஈரமற்றுப் போவது
எத்தனைக் கொடுமையானவை .
................................................
சுட்டி மேதைகள்
என்ன செய்தும்
ஊட்டிக்கொள்ள
அடம்பிடிக்கும்
2 1/2 வயது நித்திலாவை
'சந்திரமுகி'யிடம்
பிடித்துக் கொடுத்துவிடுவதாக
மிரட்டிக் கொண்டிருக்கிறாள்
அவள் அம்மா
ரிமோட்டை இயக்கியபடி
டி.வி. யில் மூழ்கியிருக்கும்
5 வயது யாழினி
'சந்திரமுகி வராதுமா
அது சூர்யாவுக்கு
காப்பி ஊட்டிக்கிட்டிருக்கு'
என்கிறாள்.
.....................................................
எல்லோராலும் கைவிடப்பட்ட
வயதுபழுத்தவர்
நடையலைந்து கையேந்துகிறார்
ஊரில் தனித்திருக்கும் அம்மா
நினைவில் நிழலாட
துழாவுகின்றன எனது கைகள்.
-------------.......................................................
ஞமலி
கமலி
எமிலி என்பதுபோல்
அழகாய்த்தானிருக்கிறது இச்சொல்.
மொழிமுதல் ஞகரம்
அரிதாயிருப்பதாலும்
அழகாகிவிட்டிருக்கலாம்
ஆசையெழுகிறது
ஞமலி பெயரில் கவிதையெழுத
அச்சமுமெழுகிறது
இகரத்தில் முடிவதால்.
அணங்கு
முரண்களரி வரும் பட்டினப்பாலையில்
கடியலூர் உருத்திரங்கண்ணனால்
மொழிந்திருக்கிறார் ஞமலியை.
திருவல்லிக்கேணி ஞானக்கூத்தனார்
சேலம் சிபிச்செல்வனார்
மாதவரம் பால்பண்ணை தமிழ்மணவாளனாலர்
வியார்பாடி சொர்ணபாரதியாரெல்லாம்கூட
எழுதியிருக்கின்றனர் அவரவராய்.
ஞமலி அழகானதுதான்
அதன்மீதான கற்பிதம் புலனாகாதவரை.
.................................................................
அறம் நிமித்த உரையாடலில்
அதிகாரத்தாலெனை முடமாக்குகிறாய்
எனக்கு மேலிருப்பவன் நீ
என் கருத்திற்குமேலல்லவே
நீள்வராந்தாவில் எதிர்ப்படுகிறோம்
மனங்கனிந்து சொல்லவேண்டிய காலை வணக்கத்தை
அச்சத்துடன் சொல்லிச் செல்கிறேன்
உன் குரூரத்திற்கஞ்சி.
மணக்கூட முகப்பில்
கைகூப்பி வணங்கும் இயந்திரப்பெண்ணின்
வணக்கத்திற்கொப்பானது என் வணக்கம்
என்பதையாவது உணர்வாயா?
......................................................................
துயரம் நிரம்பிய குரல்
நதியின் ஊற்றாய்
காட்டின் தூய காற்றாய்
மண்ணின் உயிராயிருக்குமென் சியால்த்...
இப்பொதெல்லாம் உன்குரல் மிகவும் அச்சுறுத்துகிறது
மனிதர்களினும் கூடுதல் அன்பைப் பொழிந்த நாயொன்று
நெடுஞ்சாலையில் ரத்தமுறைந்து கிடக்கிறது.
பாம்பொன்று நசிந்து நசிந்து
ஒட்டிக்கிடக்கிறது
” விலங்குகளுக்கு நேர்வதெல்லாம்
மனிதர்களுக்கும் நேரும்”
உனது குரல் மேலும் அச்சுறுத்துகிறது
பெரும்பணத்திற்கு மனிதர்கள் தங்கள்
முன்னோர் மூச்சுக்காற்று தவழ்ந்து கிடக்கும்
பெருமரங்களையும் பூர்வீக நிலங்களையும்
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
” இந்த பூமிக்கு நேர்வதெல்லாம்
மனிதர்களுக்கும் நேரும்”
துயரம் நிரம்பிய உனது குரல்
அநாதையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
..........
சியால்த் ..-. -அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலைவர்.
..........
...............................................................
ஒற்றைக் கொலுசைக்
கழற்ற வேண்டினாள்
உடைந்துபோனதை நினைவுறுத்த.
.................................................................
தன்னலமற்று வாழ்தல்
அவ்வளவு எளிதன்றென உணர்த்திக்
கடைசிசொட்டு நம்பிக்கையையும்
அழித்துப் போகின்றீர்
உங்களிடம் வாங்கிய கடன்
சீழ்பிடித்த கட்டியாய்க் கடுக்கிறது
வலிதானெனினும்
பிதுக்கித் துடைத்தெறிய வேண்டும்
நட்பின் பாசாங்கையும்
தோழமையின் போலிமையையும்.
....................................................................
சலிப்பேற்றுகிறது உங்கள் உரையாடல்
புதைக்கப்பட்டவற்றை அகழ்ந்தெடுத்து
மீண்டும் தொடங்குகின்றீர்
புழுத்துப்போன உங்கள் உரையாடலில்
பங்கேற்காமல் போவதற்காக யெனைத்
தலைக்கனம் பிடித்தவனென இகழாதீர்கள்.
-....................................................................
மரணம் மலிந்த பூமி
வயதுகனிந்து
உடல் தளர்ந்து
உயிருதிரும் இயற்கை மரணங்கள்
அரிதாகிவிட்டன.
இளம்பிஞ்சு உடல்களை
எமனிடம் அள்ளிச் செல்கின்றன
சாலைவாகனங்கள.
காலனின் வாகனங்களை
உற்பத்திசெய்து குவிக்கும்
பெருமுதலாளிகளையும்
தரகுஅரசியல்வாதிகளையும்
பழிவாங்கக் காத்திருக்கின்றன
அகாலமரணமடைந்தவர்களின் ஆவிகள்.
போராட்டங்களில்
கலவரங்களில்
சதா கொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்
மனிதர்கள்.
தற்கொலை நிகழ்த்திக் கொள்கின்றனர்
கடன்மீளா விவசாயிகள்.
மீதமிருக்கும் மனிதர்களைக்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கின்றன
புற்று
மாரடைப்பு
எய்ட்ஸ்
மற்றும்
சாதி மதம்
இன்ன பிறவும்.
...............................................................
உழைப்பவளின் காதல்
உன்னப்பாத்து வெக்கப்பட்டு
கட்ட வெரலால நெலத்துல
கோலம்போட முடியாது என்னால்.
சேத்துல நாத்து நடும்போது
பாழாப்போன மக்கினமுள்ளு
நகக் கண்ணுல பொத்தொடஞ்சி
நாளுநாளா நடக்க முடியலடா.
நகத்த கடிச்சிக்குனு
சின்னதாக்கூட சிணுங்கவும் முடியாது
அறுப்பறுக்கும்போது
சுண்டுவிரலையும் சேர்த்து அறுத்துக்கினு
துடிச்சிப்புட்டேன் துடிச்சி.
இடுப்பின் நளினத்தைக் காட்டி
உன்ன நெகிழ வெக்கவும் முடியாது
சூல வேலைக்குப் போயி
செங்கல்ல சுமந்ததால
பாவியிடுப்பு வலியா வலிக்குதுடா.
காதல் கீதல்னு கண்டபடி ஒலறாம
கண்ணாலம் கட்டிக்கோடா
எங்க அப்பன் ஆத்தாளுக்கு
ஒரு பெரிய தொல்லை விட்டுடும்.
அதுங்களுக்கு இன்னும் ரெண்டு
சின்ன தொல்லைகள் இருக்குடா.
(இக்கவிதை பாரதீயன் என்ற பெயரில் மக்கள் பண்பாடு எனும் இதழில்
ஜனவரி-----...மார்ச் 2000 இல் வெளிவந்தது. வடிவம் சார்ந்த சந்தேகத்தால்
எனது முந்தைய தொகுப்புகள் இரண்டிலும் இந்தக் கவிதையைச் சேர்க்கவில்லை.
இப்போது மக்கள் பண்பாடு இதழ்த்தொகுப்பு வெளிவந்துள்ளது.
தொகுப்பாசிரியர் மணிக்கோ.பன்னீர் செல்வம். அதில் இந்தக் கவிதை
வெளிவந்திருக்கிறது. மணிக்கோவிற்கு நன்றி.)
...........................................................................................................................
சேதி கேள்விப்பட்டு
அழுதேவிட்டாராம் அம்மா.
“பொறுணா பாப்போம்”
ஆறுதல் சொல்கிறான் எம்.ஜி.தம்பி.
“அவசரப்படாதே பாக்கி
இன்னும் ஒண்ணு பாரேன்”
போதையிலும் நிதானமாகப்
போதித்துவிட்டுப் போகிறான் குமார் மச்சான்.
“ஊர்ல எடமிருந்தா தேக்கு கண்ணு வாங்கி வைங்க
பின்னால உதவும்”
என்கிறார் நண்பர் மணவழகன்.
“நெறைய கொடுக்க வேண்டியிருக்குமே
இப்பல்லாம் ஒடுக்கப்பட்டவங்ககூட வரதட்சனை வாங்க
ஆரம்பிச்சுட்டாங்க”
பயமுறுத்துகிறார் தோழர் பாஸ்கர்.
“
அய்யய்யோ...இதுவும்...”
பாலறியும் சோதனைக்கு விதித்தைப்போல்
விதிக்க வேண்டும் இவர்களின் நாக்குக்கும் தடை
ஆறுதலளித்தது
கவிஞர் தமிழ்மணவாளன் துணைவியார் வார்த்தைகள்
“இப்ப நினைக்குறோம்
ஒரு பெண்பிள்ளைகூட இல்லையேனு”
இப்பல்லாம் எங்க...
பையனுங்க கல்யாணம் ஆனதும்
தனியா போயிடறானுங்க
சமாதானம் சொல்லிக் கொள்கிறாள் வசந்தி.
.........................................................................
வயதில் ஒன்று கூடும் நாள்
இப்போதுதான் வந்ததுபோலிருக்கிறது
மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்.
நண்பர் கொடுத்த நாட்குறிப்பேட்டில்
ஜனவரிகூட முழுதாய்த் தாண்டவில்லை
அலுவலகத்தில் தந்த அழகான நாட்குறிப்பேடோ
கவிதை நோட்டாய் அலமாரியில்
ஒருவருட திட்டங்கள்
டைரி எழுதுவதைப் போலவே
ஒரு மாதத்தோடு முடிவடைந்துவிடுகின்றன.
“இந்த ஆண்டாவது பி.எச்டி.முடித்துவிட வேண்டும்”
என நினைத்த ஒன்பதாவது ஆண்டிது.
வயதில் ஒன்று கூடுவதைத் தவிர
ஒன்றும் பெரிதாய் நடந்துவிடுவதில்லை
செக்குமாட்டு வாழ்வில்.
என்றாலும்
எதிர்பார்ப்புடன் வரவேற்கத்தான் செய்கிறோம் அந்த நாளை.
..................................................................................
அர்ச்சுனன் குறி வைப்பதைப் போல்
அவர்களின் முகத்ததைப் பார்த்தே பேச வேண்டும்
பிசகினால் அவ்வளவுதான்
வேறெங்கோ குறி வைப்பதாக
நம் கணக்கில் குறித்துக் கொள்வார்கள்
நாம் எச்சரிக்கையுடன்
பேச வேண்டும்
அவர்கள் எப்படி வேண்டுமானாலும்.
நாம் சிரித்துப் பேசினால்
முகம் திருப்பிக் கொள்வார்கள்
அவன் பார்வையே சரியில்லையே எனப்
பிரசங்கிப்பார்கள்.
புதிதாய் வந்திருக்கும புத்தகம் வாங்க
கூட்டம் முடிந்து வீடு திரும்ப
வரவிருக்கும் நூலுக்கு மெய்ப்பு பார்க்கவென
எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நம்மை
அழைக்கலாம்
ஒருபோதும் நாம் அவர்களை அப்படி
அழைத்துவிடக் கூடாது
ஏனெனி்ல்
நாம் ஆண்கள்.
............................................................
வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
தமிழ்
இனவுணர்வு
தமிழீழம்
முத்துக்துமாரின் தீக்குளிப்பு
மாணவர் போராட்டம்
வழக்கறிஞர்கள் மீதான காவல்துறை தாக்குதல்
போராளிகள் அவமதிப்பு
போர்க்குற்றம்
இராணுவ வன்புணர்ச்சி
புதைகுழிகள்
கம்பிவேலி முகாம்கள்
உயிர்பிழைக்க இறைஞ்சும் அபயக்குரல்கள்...
வேண்டாம்
தயவுசெய்து எது குறித்தும் பேச வேண்டாம்
நமக்குப் பிழைப்பிருக்கிறது.
....................................................................
அப்பா அப்பாவென
வளையவரும் என் பிரிய மகளைக்
குற்றவுணர்வோடுதான் கொஞ்சமுடிகிறது
சிங்கள இராணுவன் சிதைத்த
பிஞ்சுக் குழந்தைகளைத்
தொலைக்காட்சிகளில் கண்ணுறுகையில்.
....................................................................
வையகத்தீரே
ஒன்றுணர்வீர்
போரறம் வகுத்த எம்மினம்
தோற்றுப் போயின்
போராட்ட வரலாறு தோற்றுப் போகும்
வெற்று வேடிக்கை பார்க்கும் நீங்கள்
புதையுறும் ஓரினத்தின் சாட்சியங்களாவீர்
உங்கள் மனசாட்சியை
எங்களுக்காகவும்
கொஞ்சம் அசைய விடுங்கள்.
.....................................................................
குருதியுமிழ் நிலம்
எம் நிலத்தைக்
குருதியுமிழ் நிலமாக்கினீர்
வெடியில் சிதறுண்ட
எம் தசைகள் உம் கால்களில் நசநசக்கின்றன
சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டவனின் வாரிசுகள்
எங்கள் வானில்
கழுகுகளைப் பறக்கவிடுகின்றனர்
நடிப்பும் அரசியலும் ஒன்றாய்ப் போனது எம் தலைவிதி
சாகும்வரை நடிக்கிறீர்
சாவுவீட்டிலும் நடிக்கிறீர்
மகா நடிகர்கள் நீங்கள்
எம் பேரோலத்தை
மிஞ்சிவிட்டது உம் வசன ஓலம்
பதவியை உதறமறுத்தவர்களா
எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்கித் தருவீர்
எம் உயிரைக் காக்க முடிந்ததா உம்மால்?
வீர வசனமெல்லாம் வெற்று வசனமாகிப்போயின.
முடிந்துவிட்டன எல்லாம் முடிந்துவிட்டன
நாளை எம் முகத்தோடு வருவீர்
எம் தலைவர்களென?
.......................................................................................
நாம் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்.
கொல்லப்படுவதற்கான நியாயமான காரணங்கள்கூடச்
சொல்லப்படத் தேவையில்லை.
தப்பிக்க வேண்டுமெனில்
வார்த்தைகளுக்கு வண்ண ஆடைகள் அணிவிக்கும்
சாதூர்யம் கைவரப் பெற வேண்டும்.
நம்மைக் கண்காணிப்பவரின் மூளை
காவிநிறமெனில்
காவியும்
பச்சையெனில்
பச்சையும்
கறுப்பெனில்
கறுப்பும்
சிவப்பெனில்
சிவப்பும்
வெள்ளையெனில்
வெள்ளையும்.
நமக்கென்று தனித்த நிறம் கூடாது.
சற்று நாட்களுக்கு முன்
ஒருவனைக் கொலை செய்தான்
சமீபத்தில் மேலும் ஒருவனைக் கொலைசெய்தான்.
நம்மைக் கொலைசெய்வதற்கு முன்
நம் மூளையை வழித்து
அவன் காலடியி்ல் வைத்துவிடுவோமாக.
.......................................................................
பூவென உதிரும் பெண்நட்புகள்
9841...
அதே எண்தான்
அதே ஆதிகாலத்துக் கருவிதான்.
முன்னிரவில் நெடுநேரம் பேசித்த
நெடுநாள் தோழியின் எண்கள்
நண்பகல் உணவுவேளையில்கூட
இப்போதழைப்பதில்லை.
“பனிக்குடத்தில் என் கவிதை வந்திருக்கு
பார்த்தீங்களா சார்“
கவிதை குறித்து அவ்வப்போது
அபிப்ராயம் விழைந்த
புதுத் தோழியின் குரலும் கேட்பதில்லை.
அநேகமாக அவளுக்கு
நிச்சயதார்த்தமோ கல்யாணமோ
முடிந்துவிட்டிருக்கலாம்.
கொஞ்சநாளாய்க் குறுஞ்செய்திக் கவிதை
அனுப்பிக் கொண்டிருந்தவளும் அனுப்புவதில்லை.
ஆறு மாதத்திற்கொருமுறையாவது
நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருந்த மதுரகவித் தோழி
இனியொருபோதும் பேசப் போவதில்லை
சமீபத்தில்தான் அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது.
ஆம் நண்பர்களே...
ஆண் நண்பர்கள் பரவாயில்லை
ஒரு பீர் உள்ளிரங்கினால் போதும்.
..............................................................
தேசப் பாதுகாப்பும் குடிமகனும்
இலக்கியம் பார்க்கப்போகும் என்னிடம்
அடையாளச் சான்று கேட்கிறான்
இணையத்தள மையக்காரன்.
குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும்
எவனோ
மின்னஞ்சலில் விட்ட
கொலைமிரட்டலின் விளைவிது.
குஜராத் மும்பை டெல்லி
எங்கேனும் குண்டு வெடித்தால்
அடுத்த கணம் குவிகின்றனர் காவலர்கள்
முக்கிய இரயி்ல் நிலையங்களில்.
கோடிகோடியாய் கரைகிறது வரிப்பணம்
எல்லாப் பாதுகாப்பையும்
எளிதாய் ஊடுருவுகிறது பயங்கரவாதம்.
வியாசர்பாடி ஜீவாவில் நொறுங்கிக் கிடக்கும்
இரயில் பெட்டிகளில் தெரிகிறது பாதுகாப்பின் பலவீனம்.
மீண்டும் அடுத்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு
வழக்கம்போல் அலசி ஆராயப்படும்
சோத்து மூட்டைகள்
மிரட்டலுடன்.
.........................................................
உயரவுயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாதென்கிறாய்
என் உயர்தலை ஏற்க மனசின்றி
வன்ம வார்த்தைகளாலென்
முன்னகர்வைக் குலைக்கப் பிரயத்தனப் படுகிறாய்
உனதுபுலம்பல்
எனது உயர்பறக்கும் திறனையும்
உனதியலாமையையும் உணர்த்துவதை உணர்ந்துகொள்
ஒன்றைச் சொல்ல வேண்டுமுனக்கு
கோழிக் குஞ்சியைத் கொத்திச் செல்லும் களவாணித்தனம்
ஊர்க்குருவி அறியாதது
இன்னொன்றையும் தெரிந்துகொள்
என்னதான் நீ
பருந்தாயிருந்தாலும்
கருவாட்டுவால் குருவிக்குப் பயந்தேயாக வேண்டும்.
........................................................................
ஒருசொல்
எத்தனைமுறை சொன்னாலும்
சிக்கெடுத்த சீப்பை
அப்படியே விட்டுவிடுகிறாள்.
மின்விசிறிக் காற்றில்
மூலையில் சுழன்று கொண்டிருக்கின்றன
தலையுதிர்ந்த மயிர்க் கற்றைகள்.
சாப்பாட்டில் முடியிருந்தால்
உறவு நீடிக்குமாம்
அதே பஜனைதான்.
மளிகைச் சரக்கெழுத பேனாவை வாங்கினால்
மூடியுடன் திருப்பித் தரமாட்டேங்கிறாள்
தூங்கப் போகும்போதுதான்
கட்டிலில் குவிந்துகிடக்கும்
துணிக்குவியலை ஓரங்கட்டுகிறாள்.
பொங்கி வழியாமல்
ஒருநாளும் பால் காய்ச்சுவதில்லை.
காலையில்
அவசரமாய்க் கிளம்பும்போதுதான்
பீரோ சாவியைத் தேடுகிறாள்
இருக்கட்டும்...
எனது பட்டியலை நொறுக்கக் கூடிய
ஒரு சொல் அவளிடம் இருக்கக் கூடும்.
..........................................................
தோற்றுப் போனவனின் குரல
தோற்றுப் போனவனா நான்?
நீங்கள் பெருவூதியம் பெறுகிறீர்கள்
என் வேலையோ நிரந்தரமற்றது.
நேற்றுவரை சார் என்றவன்
இன்று பெயர்சொல்லி அழைக்கிறான்
ஆறாவது சம்பளக்கமிஷன் அவனுக்கு
என்னை முன்னிலும்
இளக்காரமாக்கி விட்டிருக்கலாம்..
விரக்தி ரேகைகள் படர்ந்திருந்த
அவனது முகத்தில் இன்று
சாதித்துவிட்டதின் பெருமிதம்.
எதுகுறித்தும் கவலைகொள்ளாதவன்
வெற்றியைக் கைக்கொண்டுவிட்டான்.
தமிழ்த்தேசியம்
மார்க்சியம்
ஏகாதிபத்தியம்
புரட்சியென
எங்களைப் பயிற்றுவித்தவர்கள்
ஆளும் வர்க்கத்திடம் அடிபணிந்து போனார்கள்
அவர்கள் விதைத்துச் சென்ற சிந்தனைகள்
பெருங்காடாய் வளர்ந்திருக்கின்றன எம்மூளையில்.
முதலாளிகளின்
தொலைக்காட்சிகளில் அவர்கள்
இன்றைய இளைஞர்களுக்கு
அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
................................................................
எதைப் பேச
எதை எழுத
எதன்மீதும் பிடிப்பற்று
எவர்மீதும் நம்பிக்கையற்று
கனவுகள் கலைக்கப் பட்ட
நம்பிக்கைகள் சிதைக்கப் பட்ட
கொடுங்காலத்து மனிதன் நான்.
........................................................
கவிஞர்கள் அரசியல்வாதிகளாவது
ஆச்சரியமல்ல
அரசியல்வாதிளான பிறகும்
கவிதையெழுதுவதுதான்.
....................................................
பெரியவர்களாகிவிட்ட குழந்தைகள்
முன்புபோலில்லை குழந்தைகள்
குழந்தைகள் முன் எதையும் செய்ய முடிவதில்லை
உண்ணத் தெரியாதபோதும்
தனிக் கிண்ணத்தில் சோறு கேட்டு
அடம்பிடிக்கிறார்கள்
வீட்டிற்குள் வாசல் தெளிக்கிறார்கள்
நாம் கோபத்தில் ஏசும் வார்த்தைகளை
எளிதில் பற்றிக் கொள்கிறார்கள்
இரட்டை அர்த்தப் பாடல்களையும்
தொலைக்காட்சி விளம்பரங்களையும்
வரிவிடாமல் ஒப்புவிக்கிறார்கள்
நெடுந்தொடர் நாயகிகளை
அம்மாக்களுக்குச் சொல்கிறார்கள்
இடுப்பசைத்து அசைத்து
தொலைக்காட்சியைக் கண்ணுற்றபடி
ஆடுகிறார்கள்
வன்முறை விளையாட்டுக்களை
விரும்பிப் பார்க்கிறார்கள்
ஒன்றாம் வகுப்பிலேயே
காதல் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்
இனி என்னவெல்லாம் ஆகுமோ?
எல்லாக் காலங்களிலும்
இருக்கத்தான் செய்கின்றன
பிள்ளைகளைப் பற்றிய பயம்
பெற்றோர்களுக்கு.
........................................
சொல்லிக் காட்டுவதற்காகவே
செய்வார்கள்போலும்
பிரிவுக் காலங்களில் உறுத்துகின்றன
குற்றச்சாட்டுக்கள்.
.............................................
காற்றில் அலையும் சொற்கள்
களைத்த பொழுதுகளில்
தேநீர் பருகியிருப்பார்கள்
பசித்த வேளைகளில்
உணவு உண்டிருப்பார்கள்
அவசர ஆபத்திற்கு
உதவியிருப்பார்கள்
வீட்டு நிகழ்வுகளில்
கலந்துகொண்டிருப்பார்கள்
பார்க்கும் போதெல்லாம்
நலம் விசாரித்திருப்பார்கள்
இருசக்கர வாகனத்தில்
ஊர் சுற்றியிருப்பார்கள்
தொலைதூர ஊர்களுக்கு
ஒன்றாய்ப் பயணித்திருப்பார்கள்
பிடித்தமான விடயங்களைப்
பகிர்ந்து கொண்டிருப்பார்கள்
இப்படி
நினைத்து இன்புற
எத்தனையோ விசயங்களிருக்க
கடைசியில் நிகழ்ந்த கசப்புறு நிகழ்வுகளையே
காற்றின் திசையெங்கும்
பேசித் திரிகிறார்கள்
பிரிந்துபோன நண்பர்கள்.
...........................................
No comments:
Post a Comment