Thursday, July 26, 2012

ஆயிரம்விளக்கு மக்கிஸ் கார்டனில் குடிசைகள் எரிப்பு - உண்மை அறியும் குழு அறிக்கை


                                                                                                                                                            சென்னை,
                                                           ஜூலை 21,2012 

  சென்ற 2009 ஜூன், ஜூலை மாதங்களில் சென்னையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் திடீர்த் தீவிபத்துக்கள் ற்பட்டன. கூவம் முதலான கழிவு நீர்ச் சாக்கடைகளாக மாற்றம் பெற்றுள்ள நதிக் கரைகளின் ஓரம் அமைந்திருந்த குடிசைப் பகுதிகள் பலவும் திடீரென மர்மமான முறையில்  தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. அக் குடிசைகளில் வாழ்ந்து வந்த எளிய மக்கள் செம்மஞ்சேரி முதலான தொலைவிலுள்ள மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டனர். அக்குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கப்பட்டவர்கள் என்பதும்,. மர்மமான முறையில் தீப்பிடித்தல், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளாக அவை இருத்தல் ஆகியனவும் அடித்தள மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்தன.  ‘குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்என்னும் அமைப்பு இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலரும் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து ஒரு விரிவான அறிக்கையை அளித்தது.
பல தரப்பட்ட அறிஞர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய அக்குழு இது தொடர்பான பல அம்சங்களையும் ஆய்வு செய்து இரு பகுதிகளாக அவ்வறிக்கையை உருவாக்கியது. முதற்பகுதி இத் தீவிபத்துக்கள் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான சதியாக இருக்கலாம் என்கிற அய்யத்தை முன் வைத்து இது குறித்த விசாரணை ஒன்றைக் கோரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்த கோரிக்கைகள் சிலவற்றையும் முன் வைத்தது. இரண்டாம் பகுதி ஏற்கனவே தொலை தூரங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்தும், நிலப் பறிப்பு மற்றும் மீள் குடியேற்றம் குறித்தும் காத்திரமான சில பரிந்துரைகளை முன் வைத்தது.
இவ்வறிக்கை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டதோடு ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் வினியோகிக்கவும் பட்டன.
எனினும் அரசு இதை முற்றிலுமாகப் புறக்கணித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலன்களும் கிட்டவில்லை என்பதோடு குடிசைகள் எரிக்கப்படுவதும் மக்கள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.
இதன் ஓர் அங்கமாகவே ஆயிரம்விளக்குக் காவல் நிலையம் அருகிலும் அப்போலோ மருத்துவ மனையின் இதய நோய் மையத்திற்கு எதிரிலும், கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் கார்டன் அல்லது திடீர் நகர் (ஆற்றோரப் பகுதி) என்று அழைக்கப்படுகிற குடிசைப்பகுதி தற்போது எரிந்துள்ளது. சென்ற ஒரு மாதத்திற்குள் மும்முறை தீப்பற்றி சுமார் 130க்கும் மேற்பட்ட குடிசைகள் அழிந்துள்ளன. அம்மக்கள் இன்று மழையிலும் வெயிலிலும் இருக்க இடமின்றி அவதிப்படுகின்றனர்.
இது குறித்த உண்மைகளை அறிந்து வெளிக் கொணர  கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:
1.       பேரா. . மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
2.      வழக்குரைஞர் உதயம் மனோகரன், சென்னை
3.      ஸ்ரீநிவாசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை
4.      எழுத்தாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை
5.      சகா, பத்திரிக்கையாளர், சென்னை
6.      மு.திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை
7.      மதுமிதா தத்தா, நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சாரக் குழு, சென்னை
இக்குழு நேற்றும் இன்றும்  மக்கீஸ் கார்டனில் எரிக்கப்பட்ட குடிசைகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசியது.   எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்  திரு..இராமதாஸ், மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயந்தி, குடிசைமாற்று வாரியச் செயலரும் மாவட்ட வருவாய் வாரிய அதிகாரியுமான திரு.செ.பன்னீர்செல்வம், வணக்கத்துக்குரிய சென்னை நகர மேயர் திரு.சைதை துரைசாமி ஆகியோரை நேரில் சந்தித்தும்,. ஆயிரம்விளக்கு பகுதி காவல்துறை உதவி ஆணையர் திரு. சரவணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசியது.

குடிசைகள் தீப்பற்றிய நிகழ்வு

  ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலைக்கருகில் கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் தோட்டப் பகுதியில்  சுமார் 200 குடும்பங்கள் 60 ஆண்டு காலமாக வசித்து வருகின்றன. கூவம் நதியின் அனைத்து அழுக்குகளையும் சுமந்துகொண்டு, எந்த அடிப்படை வசதிகளுமில்லாத இப்பகுதியில் நீண்ட காலமாக இம்மக்கள் கொடிய கொசுக்கடிகள் மத்தியில் வாழ்வதற்கான ஒரே காரணம், அவர்களின் வாழ்வாதாரம் இப் பகுதியில் அமைந்துள்ளது என்பதுதான். பெண்கள் பெரும்பாலும்பங்களா வேலை’, அதாவது அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்கின்றனர். மற்ற நேரங்களில் பழைய துணி விற்பது, வெற்றிலை பாக்கு விற்பது. தையல் முதலிய தொழில்களைச் செய்கின்றனர். ஆண்கள் கூலி வேலை, துணி தேய்ப்பது, சாவு மேளம் அடிப்பது, பெயின்ட் அடிப்பது, ஆட்டோ ஓட்டுவது, கட்டிடக் கூலி வேலை முதலான தொழில்களைச் செய்கின்றனர்.
இவர்களின் இந்தக் குடிசை வீடுகளில் அரசு கொடுத்த தொலைக் காட்சி, ஃபேன் முதலியன உண்டு. இக்குடிசைகளிலிருந்து சுமார் 100 குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். குடும்பத்தில் குறைந்த பட்சம் இருவரேனும் வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே அவர்கள் உயிர் வாழ இயலும். குழந்தைகள் படிக்க இயலும். இடம் பெயர்ந்தால் இது சாத்தியமே இல்லை என்கிற ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இத்தனை கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு இங்கே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தக் குடிசைப் பகுதிக்கு இணையாகத்தான் கூவத்தின் மறுகரையில் மதுரவாயிலிலிருந்து சென்னைத் துறைமுகத்தை இணைக்கும் அதிவேக உயர் நெடுஞ்சாலைப் பணி நடை பெறுகிறது. இதற்காக அமைக்கப்படும் தூண்கள் இவ் வீடுகளுக்கு நேர்ப் பின்புறம் அமைந்துள்ளன. இந் நெடுஞ்சாலை முழுக்க முழுக்க கூவம் ஆற்றுக்குள் அமையுமானால் நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்கிற மறுப்பு தெரிவிக்கப்பட்டதன் விளைவாக இந்தப் பாதையைச் சற்றே தள்ளி வைக்கும் (re alignment) பொருட்டு தற்போது இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணி நடைபெறும் இடங்களில் அமைந்திருந்த பல குடிசைப் பகுதிகள்தான் மூன்றாண்டுகளுக்கு முன் திடீர் திடீரென எரிந்து சாம்பலாயின. இது குறித்து எமது 2009 அறிக்கையில் விரிவாகக் காணலாம்.
தற்போது நடைபெற்ற இத் தீவைப்புகள் குறித்து இப்பகுதியச் சேர்ந்தவர்களும்  இன்று வீடிழந்து நிற்பவர்களுமான முத்து மகன் டிக்சன் (42), இறந்துபோன செல்வகுமார் மனைவி பூங்கொடி (50), பாளையத்தின் அம்மா வேணி (50), பாளையத்தின் மனைவி தேவிகா (25), அப்பையன் மனைவி மேரி (29), மூன்று பெண்களுக்குத் தாயான இந்திரா (45) மற்றும் அங்கே நாங்கள் சென்றபோது குழுமியிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட குடிசை வாசிகள் கூறியதிலிருந்து:
சென்ற மாதம் 12 செவ்வாய் மதியம் 11.45 மணி அளவில் திடீரென வீடுகள் பற்றி எரியத் தொடங்கின. தீயணைப்பு எந்திரங்கள் வந்து தீயை அணைப்பதற்கு முன் 70 வீடுகள் எரிந்து சாம்பலாயின. பிரச்சினை அத்தோடு முடியவில்லை. மீண்டும் இன்னொரு செவ்வாய் இரவு, புதன் காலை (ஜூலை2) 12.30 மணி அளவில் தீப்பற்றி இம்முறை 45 வீடுகள் சாம்பலாயின. எஞ்சியிருந்த கூரைக் குடிசைகள் 15ம் சென்ற செவ்வாய் இரவு புதன் காலை (ஜூலை 11) 2.30 மணி அளவில் எரிந்து சாம்பலாயின. ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கான்க்ரீட் கூரையிட்ட சில வீடுகள் மட்டுமே தற்போது தப்பியுள்ளன.
ஒவ்வொரு வீட்டிலுமிருந்த டி.வி, டேபிள் ஃபேன், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ரேஷன் கார்ட், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள், ஓட்டர் .டி முதலிய எல்லாம் எரிந்து போயுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் சராசரியாக 50,000 ரூ இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று அவர்கள் அனைவரும் மழையிலும் வெயிலிலும் மேற்கூரையின்றி அல்லல் படுகின்றனர். வயது வந்த பெண் குழந்தைகளை அருகில் உறவுள்ளவர்கள் அத்தகைய வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது அருகிலுள்ள கடை ஓரங்களிலும் லாட்ஜ் வாசல்களிலும் ஒதுங்கியுள்ளனர்.
மழை இல்லாத நாட்களில் எரிந்துபோன குடிசைகளிலேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு உறங்குகின்றனர். கூவம் நாற்றமும் கொசுக்களும்தான் அவர்களுக்குத் துணை. இரவில் பாம்புகள் வந்துவிடுவதாகவும் ஒரு மூதாட்டி கண்ணீர் மல்கச் சொன்னார்.

அரசு நடவடிக்கைகள்

   ஒவ்வொரு முறை தீப்பற்றிக் குடிசைகள் எரிந்தவுடனும் அருகிலுள்ள ஆயிரம்விளக்குக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பாதுகாப்பும் கோரியுள்ளனர். 558/12, 661/12, 701/12 என மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நிலையத்தில் விசாரித்து அறிந்தோம். முதல் தடவையும் இரண்டாம் தடவையும் எரிந்ததை ஒட்டிப் பாதுகாப்புக் கோரியும் எவ்விதப் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் வந்து விசாரிக்கவும் இல்லை. எல்லாம் எரிந்து முடிந்தபின் சில நாட்கள் போலீஸ் பாதுகப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நேற்றிரவு (ஜூலை 19) கொடுக்கப்படவில்லை.
போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதே இரண்டு நாட்களுக்கு முன், இரவில் யாரோ கூவத்தின் அக்கரையிலிருந்து மண்ணெண்ணை போத்தலை வீசியுள்ளனர். சுமார் 40ஆண்டுகளாக வெள்ள ஆபத்து தவிர தீ விபத்து நடந்ததில்லை. சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக அத்தனை குடிசைகளும் எரியுமாறு இன்று விபத்துக்கள் நடந்துள்ளன. திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவே தோன்றும் இவ்விபத்துக்கள் குறித்து இந்த அய்யத்தை முன் வைத்துப் புகார்கள் அளிக்கப்பட்டபோதும் காவல்துறை அந்தக் கோணத்திலிருந்து விசாரிக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் சரவணனைக் கேட்டபோது மின்கசிவால் ஏற்பட்ட விபத்து என்கிற அடிப்படையிலேயே விசாரிக்கப்படுவதாகச் சொன்னார். இம்மக்களை இந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறதே, அந்தக் கோணத்தில் விசாரிக்கவில்லையா எனக் கேட்டபோது, “அப்படியானால் அரசு செய்தது என்றல்லவா ஆகும்? அரசு இப்படிச் செய்யுமா? மக்களுக்கு வசதிகளைத்தானே அரசு செய்து கொடுக்கும்?” என்றார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் இராமதாஸ் கூறும்போது தீயணைப்புத் துறை என்பது ஒரு சேவை அமைப்புத்தான், தீயின் காரணங்கள் குறித்துத் தாம் ஏதும் சொல்ல இயலாது என்றார். எழும்பூர் பகுதியில் இது போல தீ விபத்து வாய்ப்புள்ள பகுதிகள் ஐந்து தான். செய்தி கிடைத்த சில நிமிடங்களில் தாங்கள் அங்கு சென்று விட முடியும் என்றாலும் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு அங்கு ஹோஸ் பைப்களை இணைத்துத் தண்ணீர் கொண்டு செல்வதற்குள் எரிந்து முடிந்து விடுகின்றன என்றார். இப்பகுதிகளில் 20,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய சின்டெக்ஸ் டாங்குகளை நிறுவுவது, சாலிட் ஹய்ட்ரன்ட் முறையில் தீயணைப்புச் சாத்தியங்கள் முதலியன நிறுவப்பட்டால் உடனடியாகத் தீயைப் பரவாமல் தடுக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அரசு அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
முதல் விபத்து நடந்த அடுத்த நாள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான  வளர்மதி அவர்களும் மேயர், துணை மேயர் ஆகியோரும் வந்து பார்த்துள்ளனர். சென்ற வாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் செய்தபோதும் அமைச்சர் வந்துள்ளார். கூட வந்தவர்கள் முழுமையாகக் குறைகளைத் தெரிவிக்கக் கூடத் தங்களை விடவில்லை எனவும், “அம்மா அங்கெல்லாம் வரமாட்டாங்க, யாராவது ஒருத்தர் மட்டும் பேசுங்கஎனக் கறார் பண்ணியதாகவும் கூறினர். “இங்கே ஏன் இருக்குறீங்க/ காலி பண்ணுங்க. செம்மஞ்சேரியில மாற்று இடம் தருகிறோம்என்று அமைச்சர் கூறியுள்ளார். விரும்பியவர்களுக்கு செம்மஞ்சேரியில் இடம் தருவதாகத் தானும் சொன்னதாக மேயர் எங்களிடம் கூறினார்.
தேர்தலின்போது இதே அமைச்சர் அம்மக்களிடம் கூவத்தை ஒட்டி பாதுகாப்புச் சுவர் எழுப்பித் தருவதாகவும், கான்க்ரீட் கூரைகளுடன் கூடிய வீடுகள் கட்டித் தருவதாகவும் வாக்களித்ததை அம் மக்கள் எம்மிடம் நினைவுகூர்ந்தனர். மீண்டும் அதே இடத்தில் கூரை போட்டுக் கொள்வதாக அவர்கள் சொன்னபோது மறுபடியும் எரிந்து போனால் தாம் பொறுப்பல்ல என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாகவும் மக்கள் கூறினர்.
எக்காரணம் கொண்டும் அம்மக்கள் செம்மஞ்சேரி போன்ற தொலை தூரத்திற்குச் செல்லத் தயாராக இல்லை. “இரண்டு பேரும் சம்பாரிச்சாத்தான் பிள்ளைங்களப் படிக்க வைக்க முடியும். அங்கே போனா வீட்டு வேலை செய்கிற எங்கள் பொம்பளைங்களுக்கு வேலை கிடைக்காது. எங்க பிள்ளைகள் 50கி.மீ தினம் பயணம் செஞ்சு படிக்க முடியாது. எங்க வாழ்க்கைதான் சாவு மேளம் அடிச்சும் துணி தேச்சும் கழிஞ்சு போச்சு. எங்க பிள்ளைங்களாவது படிச்சு ஆபீசராகணும் சார்என்றார் ஒருவர்.
அருகில், சுமார் 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் கொடுத்தால் போகத் தயார் என எல்லோரும் கூறினர். அமைச்சரிடம் அவ்வாறு கூறியபோது அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள் என்று பதில் வந்துள்ளது. அப்படிச் சாத்தியம் இல்லை என்கிற தொனியில் சற்றுக் கேலியாக அப்பதில் சொல்லப்பட்டதாக மக்கள் கூறினர். மேயர் அவர்களும் இக் கருத்தை எங்களிடம் கூறினார். அப்படி இடம் ஏதாவது சொன்னால் முதல்வரிடம் சொல்லி உடனடியாகச் செய்து தருகிறேன் என்றார்.
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான புற நகர்ப் பகுதிகளில் மட்டுமே குடிசை மாற்று வாரியம் கட்டிடங்கள் கட்ட முடியும் எனவும் நகரத்திற்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் கட்ட வாய்ப்பில்லை என்றும் குடிசை மாற்று வாரியச் செயலர் பன்னீர்செல்வம் கூறினார்.
முதல் விபத்து நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னரே குடும்பம் ஒன்றுக்கு அய்யாயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். பாட நூல்கள், குடும்ப அட்டைகள், மாற்று உடைகள் என அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு வழக்கமாகத் தரப்படும் அரிசி, புடவை முதலான எந்த உதவிகளும் செய்யப்படவில்லை. அரசு இம்மக்களை இவ்விடத்திலிருந்து வெளியேற்றும் நோக்குடன் செயல்படுவதாகத் தெரிகிறதே என மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் கேட்டபோது அரசுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும், தான் ஒரு சிறிய அதிகாரி எதுவும் செய்ய இயலாது என்றார். எனினும் சாதகமான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதாக வாக்களித்தார்.
கடந்த ஒரு மாத காலமாக அம் மக்கள் ரேஷன் முதலானவற்றையும் பெறவில்லை. உடனடியாக அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென நாங்கள் கேட்டபோது ஆது தன் அதிகாரத்தில் இல்லை எனவும் சிவில் சப்ளை உதவி ஆணையரை அணுகுமாறும் ஆட்சியர் கூரினார். எனினும் மேயரிடம் நாங்கள் இதைக் கூறியபோது மிகவும் விரிவாகவும் அக்கறையுடனும் எங்களிடம் பேசிய அவர், உடனடியாக இதைச் செய்து தருவதாக வாக்களித்தார்.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
1.      
      கடந்த பல ஆண்டுகளாகத் தீவிபத்து ஏதும் ஏற்படாத இப்பகுதியில் திடீரென விபத்துகள் ஏற்பட்டிருப்பதும், அதுவும் தொடர்ச்சியாக மும்முறை அடுத்தடுத்து அனைத்து வீடுகளும் எரியும் வரை விபத்துக்கள் நடந்துள்ளன என்பதும் பல அய்யங்களை ஏற்படுத்துகின்றன. வெறும் மின்கசிவே இதற்குக் காரணம் என்றால் அடுத்தடுத்து இப்படித் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தக் கோணத்திலிருந்தே காவல் துறை இதை விசாரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல்முறை தீப்பற்றியவுடன் உரிய பாதுகாப்பை காவல்துறை அளித்திருக்குமேயானால் அடுத்தடுத்த விபத்துக்களைத் தடுத்திருக்கலாம். குடிசைகள் எரிந்தது தொடர்பான இவ் விசாரணையைத் தமிழகக் காவல்துறையின் பொறுப்பில் விடுவது எந்தப் பயனையும் அளிக்காது. திட்டமிட்டுத் தம்மை வெளியேற்றுவதற்காகக் குடிசைகள் எரிக்கப்பட்டன என்கிற மக்களின் நியாயமான அய்யத்திற்கு மதிப்பளித்து இது தொடர்பாக பதவியிலுள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணை ஒன்றிற்கு ஆணையிட வேண்டும். இவ் விசாரணையில் 2009 முதல் இவ்வாறு வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் நேர்ந்த தீப்பற்றல்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.
2.      தீ விபத்தைக் காரணம் காட்டி அம்மக்களைச் செம்மஞ்சேரி முதலான தொலை தூரப் பகுதிகளுக்கு விரட்டியடிக்கும் அரசு முயற்சி கண்டிக்கத் தக்கது. அது அம்மக்களின் வாழ்வில் பெரிய அழிவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட அம் மக்கள் அனைவரும் தலித்கள். முதல் தலைமுறையாகப் படிக்க நேர்ந்துள்ள அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இதனால் பாழாகும். எனவே அரசு இம்முயற்சியைக் கைவிட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கேயே வசிக்க அனுமதிப்பதோடு ஏற்கனவே குடும்ப அட்டை, மின்வசதி ஆகியவற்றுடன் நீண்டகாலமாக அங்கேயே வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் அவர்களுக்கு அமைச்சர் வளர்மதி அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களித்தபடி கூவம் கரையில் தடுப்புச் சுவர் எழுப்பி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
3.      அல்லது 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றி அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. அரசு நினைத்தால் தற்போது சென்னை நகருக்குள் வசிக்கும் குடிசைப் பகுதியினரை நகருக்குள்ளேயே குடியமர்த்த வாய்ப்புண்டு. சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்.  வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகுபடுத்தல் குறித்த  மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை என்பதையே நாங்கள் சந்தித்தவர்களின் பேச்சுக்களிலிருந்து எங்களால் உணர முடிந்தது.
4.      சென்னை நகரெங்குமுள்ள தீப்பற்றும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் சாலிட் ஹைட்ரன்ட் தீயணைப்பு வசதியையும், 20,000 லி கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதையும் அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்
5.      பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை போதாது. அரசு உடனடியாக அவர்கள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ரூ 50,000 உதவித் தொகை அளிக்க வேண்டும். உதவித் தொகை அளிப்பது, மாற்று இடம் தேடுவது, விபத்தில் அழிந்த ஆவணங்களைப் புதுப்பித்துத் தருவது முதலிய பணிகள் வெவ்வேறு துறைகளிடம் இருப்பது உடனடித் தீர்வுகளைச் சாத்தியமில்லாமல் ஆக்குகிறது. இதுபோன்ற தருணங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இப் பணிகள் ஒருங்கிணைக்கப்படுதல் அவசியம். உடனடியாக இம்மக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி ரேஷன் முதலியவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
6.      தொலை தூரத்தில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் கெடாமல் இருக்க இலவச பஸ் பாஸ் வழங்குதல் வேண்டும்
7.      நகர மத்தியிலிருந்து இம்மாதிரி அடித்தள மக்களை வெளியேற்றி துணை நகரங்களாக உருவாகும் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது அங்கு உருவாகும் காட்டுமானப் பணிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மலிவான உழைப்புச் சக்திகளை உருவாக்கித் தரும் மறைமுகத் திட்டமோ என்கிற அய்யமும் உள்ளது. எனவே அரசு குடிசை வாழ் மக்களை தொலைதூரத்திற்குக் கொண்டு செல்லுதல் என்கிற முயற்சியைக் கைவிட வேண்டும்.
8.      இனி கட்டப்படக் கூடிய குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி அளவில் இருக்க வேண்டும். தற்போது உள்ள 130 சதுர அடி என்பது ஒரு குடும்பம் வாழத் தகுதியற்றது.


தொடர்புக்கு

.மார்க்ஸ், 3/5, 
முதல் குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020.                
செல்: 94441 20582,    98406 98236

                                

Saturday, June 2, 2012

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ...சிங்களவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயார்! மேதானந்த தேரருக்கு விக்கிரமபாகு நேருக்கு நேர் சவால்
01 05 12
இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும்.

இவ்வாறு சிங்களவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அவர்களை அடக்கியாள்வதே இந்திய குழுவின் நோக்கம்
17 04 12
இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் உளவுபிரினராகவே இந்திய பாராளுமன்ற குழு விஐயம் அமைந்துள்ளது என நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை-கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய பாராமன்ற குழுவின் விஐயம் தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையில்லை. ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் பாதுகாப்பதற்கே என தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரவளித்துள்ளமையால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது.

இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும். நஷ்டம் இலங்கை அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்வதாலும், அதன் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதாலும் இந்தியாவிற்கு பாரிய நஷ்டம் ஏற்படும். இதனால் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான உளவுப் பிவினரென்ற ரீதியிலேயே இக்குழுவின் விஐயம் அமைந்துள்ளது.

தமிழக முதலவர் ஜெயலலிதா எடுத்த முடிவினை பாராட்டிய விக்கிரமபாகு, தமிழர்களின் உணர்வுகளை தமிழ் நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழ் இணையங்கள் 


11111111111111111111111111111111111111


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தாது!- விக்கிரமபாகு
22 11 2011
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

போர்க்குற்றம் இழைத்தோருக்குக் கடும் தண்டனை என்ற போர்வையில் அவர்களை அனுசரிப்பதற்கு அரசு முயலுமே தவிர, தண்டனை என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான்.

கறைபடிந்த வரலாற்றுக்கு வெள்ளையடிக்கும் மஹிந்த அரசின் தந்திரங்களுள் முக்கியமானதொன்று தான் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதில் உண்டு என்றும், அந்த அறிக்கையை தாம் பகிரங்கப்படுத்துவோம் என்றும் அரச தரப்பினர் அங்கும் இங்கும் கூறித் திரிகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கடும் எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாகவே அரசு சர்வதேசத்தின் கேள்விகளுக்கு ஆணைக்குழு அறிக்கையில் பதில் அளித்துள்ளது.

எனினும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒரு போதும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது.

இந்தியாவையும், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தவே அரசு அறிக்கை தயாரித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான நிவாரணம் இதில் இல்லை.

அரசின் இன்றைய செயற்பாடுகள் சர்வதேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையவே இருக்கின்றன.

வரவு செலவுத்திட்டம் கூட இந்தியா, அமெரிக்கா, உலக வங்கி ஆகியவற்றின் ஆலோசனைக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

நன்றி தமிழ் இணையங்கள்


(முகநூலில் ஈழ மகான் தமிழ் வெளியிட்டிருந்த செய்திகள் இவை - யாழினி முனுசாமி)

Sunday, May 20, 2012

சே குவேரா நண்பருக்கு எழுதிய கடிதம் ...

                                                                                                    ஹவானா, 1959, பிப்ரவரி
                                                                                                    போசெ ஈ, மார்த்தி லேவா
                                                                                                    மர்த்தயேல் நம்பர் 180, 
                                                                                                    ஹொல்கிவின், ஒரியந்தே.

அன்புள்ள நண்பரே,

நம் அயல்நாடான, சாந்தோ தோ மிஸ்கோவிலுள்ள மக்களினுடைய சுதந்திரத்திற்காகப் போராடத் தயார் என்று நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.

அந்த மகத்தான வார்த்தையை அதனுடைய முழுப் பொருளுடன் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டேன் என்பதை அறிவித்துக்கொள்கிறேன். இந்த உணர்ச்சியும் உறுதியும் குறைந்து விடாமல் எதிர்காலத்திற்காக அப்படியே வைத்திருங்கள். சந்தர்ப்பம் வரும்பொழுது பயன்படுத்தலாம்.இதற்கிடையில் பள்ளிக்கூடததில் உங்களுக்கு இருக்கும் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுங்கள். அதன் மூலம நாட்டிற்குப் பயனுள்ள ஒருவராக மாற முயற்சி செய்யுங்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இன்று கியூபாவிற்குத் தேவைப்படுகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில ஒருவராக இருப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் உறுதிமொழியை எனக்குக் கொடுங்கள்.

டாக்டர் ஏனஸ்டோ சே குவேரா
கமாண்டர் இன் சீப்
மிலிட்டரி டிபார்ட்மெண்ட் ஆப் கபானா.

சே குவேரா தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்...

1965,

என் குழந்தைகளுக்கு,

அன்புள்ள ஹில்டிட்டா, அலைடிட்டா, கியாமிலோ, ஏனெஸ்டோ, என்றாவது ஒரு நாள் நீங்கள் இக்கடிதத்தைப் படிக்க வேண்டி வந்தால் அதனுடைய பொருள் நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டேன் என்பதுதான்.

உங்களி்ல் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவு பெரிதாக ஒரு நினைவு இருக்காது. மிகவும் இளையவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்தே இருக்காது.

சரியென்று தோன்றுவதைச் செய்யவும் சொந்தக் கருத்துகளில் இருந்து எப்பொழுதும் மாறாமல் வாழ்ந்து வந்த ஒருவராயிருந்தார் உங்களுடைய அப்பா. நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்த அப்பாவின் விருப்பம். கருத்தூன்றிக் கற்கவும் கலையில் திறமை பெறவும் வேண்டும். புரட்சிதான் அனைத்திற்கும் மேலானது என்றும் எந்தத் தனிமனிதருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனிலும் முக்கியமானது அநீதியை எங்கு கண்டாலும் எதிர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சிக்காரனுடைய மிகவும் முக்கியமான குணம் அதுதான்.

குழந்தைகளே, இந்த அப்பாவைப் போக அனுமதியுங்கள் . என்றாவது ஒரு நாள் சந்திக்க முடியும் என்று நம்பலாம்.

அப்பாவினுடைய முத்தங்களையும் அரவணைப்பையும் இத்துடன் அனுப்புகிறேன்.

என்றும்,

உங்கள் அப்பா.
( நன்றி- மு.ந.புகழேந்தி மொழிபெயர்த்த சே குவேரா எழுதிய கடிதங்கள் நூலிலிருந்து...)

Wednesday, May 2, 2012

தோழர் ரமணி அனுப்பியிருந்த மேநாள் வாழ்த்துச்செய்தி...!

1887 நியூயார்க் நகரின் வீதியிலே அமெரிக்க முதலாளிக்கு சாவு மணி அடிக்க திரண்டெழுந்த உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்டங்களில்,   8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்,  ஓய்வுநேரம் என்ற கோரிக்கை வைத்து வெடித்தெழுந்த வேலை நாள்.

எதிரியின் அடக்குமுறையால் துப்பாக்கிக்கு முகம் கொடுத்து தியாகம் செய்து  
 உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற மார்க்ஸ், லெனின் அறைகூவலுக்கு இணங்க முதலாளியத்தின் அதிகாரத்தை அடிபணிய வைத்து வெற்றி பெற்ற நாள் மே நாள்.

இன்றும் கால் சென்டர், பிபிஓ, ஐ.டி, வீட்டுவேலை செய்வோர், நவீனத்தின் காலடிச்சுவட்டிலும் உரிமையற்று இரவு பகல் உழைத்து உண்ண உணவின்றி தெருவோர, முட்டைத் தூக்கும் தொழிலாளர்கள், மாடி மேல மாடி ஏறி கலவை கலக்கி, செங்கல் தூக்கி, கட்டிடத்தின் உச்சியில் நின்று இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளியாய்  உயிரின் அச்சம் இன்றி உறங்கும் வரை வேலை செய்யும்  தொழிலாளி வர்க்கத்தின் உழைபபு மதிப்பையும் சமூக வளர்சசிக்கு அடித்தளம் மனித உழைப்பே என அறியும் நாள். 

செங்கொடி பிடித்து சிவ்ந்தெழுந்த நேரம் சிகரத்தின் உச்சியில் அச்செங்கொடி ஏறிய நேரம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய் நின்ற அதிகாரத்தை அதிரவைத்த நாள் மேநாள். 
 
அடுப்படியில் வேலை செய்து அமராமல் கணவனை அனுப்பி விட்டு தானும் வேலை க்கு செல்லும் இரட்டை உழைப்பாளியாய் திகழும் பெண் தொழிலாளர்களை நினைவுகூர்வோம். சமத்துவம் நோக்கி உழைப்பவர்க்கே அதிகாரம். என . 

Friday, April 27, 2012



இன்று முகநூலில் படித்த சசிகலா பாபு கவிதை...

பேரன்பும் பெரும்பிரியமும் யாசித்த கைகளில்
அசூயையே எப்போதும் திணித்ததை அறிவீர்களா?

அழகான ஏதோ ஒன்று மலரும் வேளைதோறும்
கொடுவாள் கொண்டு வீசியதை அறிவீர்களா?

இவர்கள் இப்படி தானோயென ஐயம் கொள்ளும்வேளை
நாங்கள் அப்படித்தான் என கோரப்பல் காட்டியதை அறிவீர்களா?

அறிவோ திறமையோ அனைத்திற்குமான
உங்கள் பொது மதிப்பீடு இதுதானென கேலி செய்ததை அறிவீர்களா?

அடக்குதலும் வன்முறையும் அன்பாலும் நிகழ்த்த
இயலுமென நிரூபணம் செய்ததை அறிவீர்களா?

மலரினும் மெல்லிய எங்களை வெல்ல, உங்கள்
ஆயுதங்கள் கண்டு முறுவலிக்கிறோம் நாங்கள்....

இவை அனைத்தையும் "அறிந்துகொண்டு"!

Friday, April 20, 2012

விருதுகள் வழங்கும் இலக்கிய அமைப்புகளுக்கு சில வேண்டுகோள்கள்...

நண்பர்கள் ...தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் இலக்கி அமைப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றாலும் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். 

பரிசோ...விருதோ...படைப்பையும் படைப்பாளியையும் பரவலாகக் கவனப்படுத்துகிற ஒரு நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெரும்பாலான அமைப்புகள் அனைத்துப்பிரிவுகளுக்கும் பரிசு அறிவிக்கின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரது நூல் மட்டுமே பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படுகின்றது. இரண்டாம் பரிசோ மூன்றாம் பரிசோ கிடையாது. ஆனால் போட்டிக்கு குறைந்த பட்சம் 3 நூல்களோ 4 நூல்களோ ஒவ்வொரு நூலிலும் அனுப்பவேண்டுகிறார்கள்.
தேர்வுக் குழுவினரில் அரசியல் பொறுத்தே நூலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்படியானால் பரிசுபெறாத நூல்கள் தரமற்றவையா? எந்தெந்த நூல்கள் போட்டிக்கு வந்தன என்ற தகவல்களோ...பதிவுகளோகூட கிடையாது. குறைந்த பட்சம் இந்தத் தகவல்களையாவது வெளியிட்டால் நூல் அனுப்பியதற்கான ஒரு பதிவாவது இருக்கும். அப்படி யாரும் செய்வதில்லை.எந்தெந்த நூல்கள் இறுதிப் போட்டியில் இருந்தன ..எந்தக் காரணத்திற்காக இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற எந்தச் செய்திகளும் தெரிவிப்பதில்லை.
சிலர் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்களையே தேர்வுக் குழுவில் போட்டுவிட்டு தங்களுக்குத் தேவையானவர்களுக்கே பரிசுகளைக் கொடுத்துக் கொள்கிறார்கள். பிற படைப்பாளர்களுக்கான எந்த அங்கிகாரமோ பதிவோ இல்லாமல் செய்துவிடுகிறார்கள். போட்டியின் போது அனுப்பிவைக்கப்படும் நூல்களைப் பெற்றுக் கொண்டதற்கான எந்தத் தகவலையும் நூலாசிரியருக்கோ...பதிப்பாளருக்கோ தெரிவிப்பதில்லை.

சில ஆலோசனைகள்...

முதலில் நூல்களைப் பெற்றுக்கொண்டதும் தொலைபேசியிலோ...குறுஞ்செய்தியிலோ...மின்னஞ்சலிலோ...கடிதம் மூலமாகவோ தகவலைத் தெரிவியுங்கள்.

கவிதை ...சிறுகதை...நாடகம்...நாவல்...சிறுவர் இலக்கியம் ...மொழிபெயர்ப்பு என்று ஏதேனும் ஒரு பிரிவில் சிறந்த சில நூல்களுக்காவது பரிசளியுங்கள் (ஒரு ஆண்டில் ஒரு நூல்தானா சிறந்த நூலாக இருக்கிறதா?).

பரிசுத் தொகையை அதிகப் படுத்துங்கள்.

போட்டிக்கு வருகின்ற நூல்களின் பட்டியலையும் பதிப்பகங்களின் பட்டியலையும் வெளியிடுங்கள்.அந்தப் பதிவாவது அனுப்பப்படும் நூல்களுக்குக் கிடைக்கும்.அத்துடன் அந்த ஆண்டு வெளிவந்த நூல்பட்டியலாகவும் அது இருக்கும்தானே?

வெவ்வேறு சிந்தனைப் போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்களைத் தேர்வுக் குழுவில் போடுங்கள்.

குறிப்பு...

முரண்களரி படைப்பகத்தில் வெளிவந்த ஆறுபேருடைய புத்தகங்களை
ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பல்வேறு பரிசுப் போட்டிகளுக்கு அனுப்பிவிட்டு எந்தப் பதிவும் இல்லாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது நண்பர்களே!

முக்கிய முடிவு...

அடுத்த ஆண்டுமுதல் நாமும் விருது கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டியதுதான்...

அப்படியில்லையென்றால்...
எந்தப் போட்டிக்கும் இனி நூல்களை அனுப்பக் கூடாது!

Tuesday, April 17, 2012

கவிதை - நட்பின் அகவிலாசம் - சொர்ணபாரதி



நட்பின் அகவிலாசத்தை எவ்வாறுணரலாம்
வழக்கமாய்க் கரங்களில் தரப்படும்
தேநீர்க்குவளை டக்கென நாற்காலியின்
கைப்பிடியில் வைக்கப் படும்போதா

நெடுநாள் நட்பின் அடுத்தகட்ட இயல்பான
நகர்தலுக்கான உரையாடலிலா

உரையாடலின் பொருள்தந்த மகிழ்ச்சி
மழைநீராய் இறங்க ஆழத்தில் விதைத்திருந்த
நேசவிருட்சம் முளைத்து ஒரு திலகத்தில் நின்றபோதா

நின்ற விருட்சத்தைத் தன் உரையாடலின் பொருளைத்
தானே மாற்றி விசவிருட்சமென வெட்டிவீழ்த்தியபோதா
எங்ஙனம் அறிய முடியும்

நட்பென்பது மேட்டிமைச்செறுக்கின் பிச்சையா
படைத்தலைவனுக்கு வீரன்மீதுள்ள கண்டிப்பா
ஒரு முதலாளிக்கு ஊழியன் மேலுள்ள ஆதிக்கமா
மகாராணி உப்பரிகையின்மீது நின்று
கீழே வறியோருக்கு வீசிடும் கருணைப்பண்டமா

ஒரு பக்கத்தின் விருப்பம் தேவை சார்ந்தே
எவ்வாறு சுழலும் நட்புச் சக்கரம்

உயர்வு தாழ்வு
வளமை வறுமை
அறிவு அறிவின்மை
எவையும் பாராது சமமான அன்பின் பகிர்வே
நட்பின் சமத்துவம்

மூளையின் எடையும் பணப்பையின் கனமும்
நிலையற்ற மனமும் எப்படிச் சமன்செய்ய இயலும்
தோழமைத் தராசின் முள்ளை

ஒரு போராட்டம் வெற்றிபெறும் வேளை
வேறொரு தலையீட்டால்
ஓரினமே அழிந்து மீண்டும் தொடக்கப் புள்ளியில் நிற்பது
வரலாற்றில் நிகழலாம்
ஒரு தற்தாலிகப் பணியாளன்
நிரந்தரமாகும்வேளை
பணிநீக்கம் செய்து
மீண்டும் தற்காலிகச் சேர்ப்பு
ஒரு நிறுவனத்தில் முடியலாம்

பெருமரமாய்க் கிளைபரப்பி
வளர்ந்த நட்பை வேரோடு சாய்த்து
மீண்டும் பதியனிட்டு
விதையிலிருந்து முளைக்கச் சொல்வது
எவ்வாறு சாத்தியம்

எனினும் அவன் பயணம் தொடர்கிறது
நட்பின் கரம்பற்றி
எவரிடத்தும் எப்போதும் அவன் நட்பை ஆராதிப்பவன்.

Monday, April 16, 2012

ஆறாத ரணம் சிறுகதை நூல் அறிமுகம் - பொ. பிரேமாவதி


னக்குத் தோழரை சுமார் 13 ஆண்டுகளாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு தோழர், கம்யூனிஸ்ட், புரட்சிப் பாதையில் பயணித்தவர், நல்ல மனிதர், போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார் என்கிற அளவில் தெரியும். 
தோழர் என்ற வார்த்தையே எனக்கு திருமணத்திற்குப் பிறகுதான் அறிமுகம். அதற்குமுன் ஊடகங்கள் சொல்லும் செய்திகளைத்தான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தவள். அவர்கள் தீவிரவாதிகள் என்று வர்ணித்தவர்கள்தான் இன்று எனக்குத் தோழர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
மார்க்சியம், கம்யூனிசம் முதலியவற்றைப் படித்து அறிந்திருக்க வில்லை என்றாலும், அதன் சாரங்களைப் பல புத்தகங்கள் மூலமும், உரையாடல்கள் மூலமும் ஓரளவுப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
எனினும், இவருடைய சிறுகதைகளில் வரும் காவல்துறை கொடுமைகளைப் பற்றி படிக்கும்போது கண்கள் கலங்கின. எங்கேயோ நடந்ததாக தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் கண்ட, புத்தகங்களில் வாசித்த நிகழ்வுகளை தோழர் அனுபவத்தில் இருந்து படிக்கும்போது அவை என்னைத் திகிலடையச் செய்தன.
கதைகளைப் படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள் என்று அவர் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். புத்தகத்தைப் படித்துவிட்டு நான் கருத்து எதையும் சொல்லவில்லை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்னுடைய மனத்தில் ஓர் அழுத்தம் ஏற்பட்டிருந்தது உண்மை.
அவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளுக்கு சிறுகதை வடிவம் தந்து, அவற்றைப் படைப்புகளாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. எனினும், அவற்றை என்னால் ரசிக்க முடியவில்லை. காவலர்களிடம் வாங்கிய அடிகளையும், வசை மொழியையும் ரசிக்க யாரால் முடியும்.
அவர் நெடுங்காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கானக் காரணங்களை இச்சிறுகதை தொகுப்பு எனக்கு உணர்த்தியுள்ளது. 
நேர்மையான போராளியாக இருந்தவர் அந்தத் தளத்திலிருந்து வெளியேறி வந்திருந்தாலும், சந்தர்ப்பவாதியாக, பிழைப்புவாதியாக மாறாமல், தொடர்ந்து பொதுவுடைமைக் கொள்கைக்காக தன்னால் இயன்ற வழிகளில் போராடிக் கொண்டிருந்தார். 
கதைகளைப் பற்றி விமர்சனம் சொல்லாமல், தோழரைப் பற்றிய விமர்சனமாக இவை சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதைகளையும் தோழரையும் தனியாக என்னால் பிரித்து என்னால் பார்க்க முடிய வில்லை
சிறுவயதிலிருந்து அவருக்கு நேர்ந்த அனுபவங்களை சமூக நோக்கோடு அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒய்யாரக் கொண்டையில் சென்னையில் வாழ்கின்ற குடிசை வாழ மக்களின் அவல நிலையையும், பொட்டைக் குட்டி பெண் குழந்தைகளின் சமூக நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 
ஈழத்தில் நடந்த படுகொலைச் சம்பவத்தைப் பார்த்து, கனத்த இதயத்தோடு உலா வந்த பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருத்தி. வானம்பாடி கதையைப் படிக்கும்போது, ஈழப் பிரச்சினை கண் முன்னே விரிகிறது. 
அவர் ஒரு மாற்றுத் திறனாளி என்று எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. அவர் எங்களை விடவும் சுறுசுறுப்பாக, துடிப்புடன் இயங்கக் கூடியவர். ஆரம்பக் காலங்களில் அவரிடம் வண்டி கூட இல்லை. மலையம்பாக்கத்திலிருந்து குன்றத்தூர் வரை நடந்து வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் பல இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். என் கணவரும் அவருடன் பல நாள்கள் சென்றிருக்கிறார் என்பதால் இதைச் சொல்கிறேன். “தோழர் வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறறர். ஆனால் ஊனம் என்ற சொல் அவர் மனதை எந்த அளவுக்குக் காணப்படுத்தியிருக்கிறது என்பதை ஆறாத ரணம் வெளிப்படுத்தி இருக்கிறது.
சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு அவர் முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய மனபாரங்களை இறங்கி வைத்ததால் ஏற்பட்ட ஒரு தெளிவு. ஆறாத ரணம் கதைத் தொகுப்பு மூலம் அவர் ரணங்களை ஆற்றிக் கொண்டு, மற்றவர் மனங்களை ரணமாக்கி இருக்கிறார்.
இந்த ரணத்தை மறக்கவோ, என்னவோ கடைசியாக கடாமீசை என்ற கதையை எழுதி வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். கதையைப் படிக்கும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 
பல தளங்களில் பணியாற்றி தற்போது சிறுகதை எழுத்துலகில் நுழைந்திருக்கும் அவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்.
எழுத்து என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ..... ஆனால் என்னையும் சிறுகதை குறித்து விமர்சனம் எழுதச் சொல்லி ஊக்குவித்த, எழுத்துலகில் அடியெடுத்து வைக்க வற்புறுத்திய தோழர் நடராசன் அவர்களுக்கு நன்றி.


Wednesday, April 11, 2012

தமிழ் அய்யா - இரா .பாலன்

ஏகாதிபத்தியத்தை விரட்டணும் அய்யா
நிச்சயம் விரட்டணும்

நிலப்பிரபுத்துவம்கூட மோசமானது அய்யா
ஆமாம் ஆமாம்

முதலாளித்துவம் என்றதும்
அய்யா தொடர்ந்தார்...

தமிழுக்கு எதிரானதையெல்லாம் எதிர்க்கணும்
ஜாதியைக்கூட சாதியாக்கணும்


Friday, March 30, 2012

நான் படித்து நெகிழ்ந்த யூமா வாசுகியின் ஒரு கவிதை...உங்களுக்காக...


இன்டர்வியூ
பரிசீலிக்கும் கரங்களின்
வியர்வைக்கறை படிந்து 
விளிம்புகள் பழுப்பேறிய சில 
காகிதத் தகுதிகளை 
அடுத்த நாளுக்கான ஆயத்தமாய்
அகாலம்
எண்ணிச் சரிபார்க்கும்.
வெக்கையில் முறுகும் நகரத்தினூடே
சில்லறைக்கடன் சித்திக்கும்
அனுகூலத்திசை நாடும்
நடைதளர்ந்த்தும் பசிவேகும் குடல்.
சிகரெட் புகைச் சமாதானமிட்ட
ஒரு கோப்பைத் தேநீரால்
பிரியங்காட்டும்
அறிமுகங்களுக்காக
உடனடித்திருத்தம் வரும் கடன்இலக்கில்.
சாலையோரக் கல்லில் அமர்கையில்
மடிந்துநோகும் வயிற்றின் காலியிடம்
வெட்கமற்றுக் காத்திருக்கிறது-சாத்தியமற்ற
உணவருந்த அழைக்கும் குரலுக்கு.
பெருஞ்சாலையின் வாகனப் பேரிரைச்சலை
மெல்ல விழுங்குகிறது எதுவோ
நீர்த்து நிலையற்று வடிவங்கள் கலந்து
மயங்கிவருகிறது வெயில்.
தவறிய புத்தகம் எடுக்க மயங்கும் தலையைக்
குனியப் போவதில்லை நான்-வீழின்
என் தலையேந்தி மடியில் கிடத்த
இங்கே நீயில்லை.
அறைக்குப்பைகளோடு
என் முகம்காண ஏங்கும் உன் கடிதங்கள்.
முடிவிற்குள் இழுக்கிற உன்
முதுமையின் பொருட்டாயினும் உன்னைத்
தேடிவரும் நினைவு- ஒரு
கேள்விக்கு பதிலற்று அஞ்சுகிறது.
அலுவலகத்திற்கு மாற்றாக சிறு வீடு
மேசையிடத்தில் நைந்த கட்டில்
வாசல் நாய் கதவுச் சேவகனின் பிரதி.
மறந்துபோன கோலத்தைத் தரையில்
கிறுக்கிப் பார்த்தபடி
“ எத்தனைக்காலம் இப்படி இருப்பாய்”
என் ஒரு கேள்வியை முனகுவாயே அம்மா
இன்னமும் கிடைத்தபாடில்லை
ஒரு பதிலும்.
--------------------------------------------

Wednesday, March 28, 2012

யூமா வாசுகியின் இரண்டு கவிதைகள்...

யூமா வாசுகியின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன்...அவருடைய கவிதைகள் குறித்து விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளேன்.
இப்போதைக்கு இரண்டு கவிதைகளைப் படிக்கத் தருகிறேன்.

1.     த்தனைபேர்கூடி
        ரயிலுக்குக் காத்திருக்கையில்
        என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
        ஒரு காக்கை
        தலை தட்டிச் சென்றதும்
        கேன்டீனில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி
        சனி கழிய
        தலையில் தெளித்துப்போவென
        பரிவாகச் சொன்னாள் பெண்ணொருத்தி.

2.    பொழிகிற பெருமழையில்
       என் உப்புமூட்டை கரைகிறது
       சிறிது சிறிதாய்
       அமைத்த தடுப்புகளையெல்லாம்
       தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
      கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
      கடந்த கோடையிலேயே.
-----------------------------------------------------------------

Tuesday, March 27, 2012

மக்கள் கவிஞர் இன்குலாப் கவிதை - ஒவ்வொரு புல்லையும்....

 
வ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
                             ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
                        ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
                          ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
                        ஒவ்வொரு புல்லையும்...

Monday, March 26, 2012

ஆட்சியாளர்கள் பற்றி முகநூலில் படித்த சிறுகதை...



பட்ஜெட் – விலை உயர்வு குட்டி கதை
மூன்று மீன்கள்

“லச்சுமி... ஏய் லச்சுமி... நா கூப்பிடுறது காது கேட்கலயா?”
மீனவன் மிகவும் உற்சாகமாக சத்தம் போட்டுக் கூப்பிட்டான்.

“ஏய் மனுசா! தொண்டை கிழிய ஏன் இப்படிக் கத்தற... வானமா இடிஞ்சி விழுத்திடுச்சி.”

“கொழுத்த மீன் ... நல்ல மீனு ... லச்சுமி, மூணு பிடிச்சிட்டேன். கரம் மசால் தூக்கலா போட்டு நல்லா வறுத்துவை.”

“உனக்குயின்னா மூளை கீளை மழுங்கி போயிடுச்சா என்ன? ஒரு வாரமா நான் நாயாட்டம் கத்திகினு இருக்கேன். வீட்ல உப்பும் இல்ல, மிளகாயும் இல்ல, இதுல கரம் மசாலாவுக்கு எங்க போறது?”

“சரி சரி புலம்பாத, எண்ணெயில் போட்டாவது பொறிச்சு வை”

“இன்னாய்யா இஷ்டத்துக்கும் பேசிகிட்டே போறே, உப்பில்லாத வீட்ல எண்ணெய்க்கு எங்க போறது. நம்ம குழந்தைங்க சாப்பாட தொட்டு நாலு நாள் ஆகுது.”

“உம் புராணத்தை எல்லாம் இங்க பாடாத, மீனை நெருப்பிலாச்சும் பொறிச்சு வை.”

“இன்னாய்யா நினைச்சுக்கிட்டு இருக்கிற. நெருப்புக்கு எங்க போறது. விறகு கட்டைக்கு நான் எங்க போறது?”

“இன்னா பொம்பள நீ. மீனை பிடிச்சு கொடுத்தாலும் சமைக்க மாட்டுறியே? நான் ஒரு முட்டாப் பயல். தேவையில்லாம இந்த மீன்களைப் புடிச்சி வந்துட்டேன். பாவம் தண்ணீரிலே கொண்டு போய் விட்டுடறேன். இதுகளாவது உயிர் பொழைச்சு போகட்டும்.”

இப்படி சொல்லிவிட்டு மீனவன் குளத்தை நோக்கிச் சென்றான். உயிருக்கு துடித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று மீன்களையும் எடுத்து தண்ணிரில் வீசி எறிந்தான். தண்ணிரில் அந்த மீன்கள் வீழ்ந்தவுடன். “ஜிந்தாபாத் .. ஜிந்தாபாத்”என்று முழக்கமிட்டன.

மீனவனுக்கு ஆச்சரியத்தில் வாய் பிளந்து கொண்டது. மூன்று மீன்களில் ஒரு மீன் “செயலலித்தா ஜிந்தாபாத்” என்று கத்தியது.

மற்றொரு மீன் “மன்மோகன் சிங், சோனியா ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மூன்றாவது மீன் “கருணாநிதி, அத்வானி ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மீனவன் அவைகளைப் பார்த்து கேட்டான் : “மோசமான பிசாசுகளாக இருப்பீங்க போல இருக்கே. நான் தானே உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தேன். நன்றி கெட்ட ஜென்மங்களா… நீங்க செயலலிதா, மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, கருணாநிதி என்று புதியதாக யார், யார் பெயரையோ புகழுறீங்க.”

அதற்கு மீன்கள் பதில் உரைத்தது.

“ஏய் பாவப்பட்ட மனுசனே! இவர்கள் ஆட்சி புரிவதனால் தான் உங்க வீட்ல சாப்பிட ஏதும் இல்லை. அதனால நாங்க உயிர் பொழச்சோம். இல்லாவிடில் இன்னேரம் நீ எங்களை சாப்பிட்டு விட்டு இருப்பாய்.”
---------------------------------------------------------------------
விஜய்(தெலுங்கு)…. மக்கள் பண்பாடு இதழ், 2000

----------------------------------------------
நன்றி...தோழர் கி.நடராசன்.

Tuesday, March 20, 2012

கவிதை - அவரின் புன்சிரிப்பு - பானு ஜியோத்சனாலஹரி

படுகொலை செய்யப்பட்ட தோழர் கிஷன்ஜியைப் பற்றிய கவிதை...


சித்திரவதைகள் முடிவுற்றன
அவர்களில்
 ஒருவன்
நிலம் நோக்கி உமிழ்ந்தான் வெறுப்புடன்


மேல் நோக்கி நிலைகுத்தி
நின்றது அவரது பார்வை


அவர்களும் பார்த்தார்கள்
சித்திரதை செய்யப்பட்ட
முகத்தின் ஓரத்தே
வழியும் இரத்தம்


அவர் இன்னமும் 
சிரித்துக் கொண்டே இருக்கிறார்.


அவர்களில் ஒருவன்
துவக்கை உறுவி எடுத்தான்
ஒருமுறை சுட்டான்
அவரின் புன்சிரிப்பை இலக்காக்கி
மேலும் ஐந்து துவக்குகள்
வதை முகாமின்
விளக்குகள் அணைந்தன


ஜன்னல் வழியே உற்றுப் பார்த்து
திகிலுற்றனர்
கிழக்கு சிவந்தது
அவரின் புன்சிரிப்பாய்!

( இக்கவிதையை எழுதியவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர். ஜனநாயக மாணவர் சங்கப் பொறுப்பாளர்.)

Sunday, February 5, 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

nandri...
Jazzakallah Khai

Saturday, December 31, 2011

வயதில் ஒன்று கூடும் நாள்- கவிதை- யாழினி முனுசாமி

இப்போதுதான் வந்ததுபோலிருக்கிறது
மதுவாலும் மகிழ்ச்சியாலும் இரவை நிரப்பி
அந்நிய மனிதர்களுடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட அந்த நாள்.
நண்பர் கொடுத்த நாட்குறிப்பேட்டில்
ஜனவரிகூட முழுதாய்த் தாண்டவில்லை
அலுவலகத்தில் தந்த அழகான நாட்குறிப்பேடோ
கவிதை நோட்டாய் அலமாரியில்
ஒருவருட திட்டங்கள்
டைரி எழுதுவதைப் போலவே
ஒரு மாதத்தோடு முடிவடைந்துவிடுகின்றன.
“இந்த ஆண்டாவது பி.எச்டி.முடித்துவிட வேண்டும்”
என நினைத்த ஒன்பதாவது ஆண்டிது.
வயதில் ஒன்று கூடுவதைத் தவிர
ஒன்றும் பெரிதாய் நடந்துவிடுவதில்லை
செக்குமாட்டு வாழ்வில்.
என்றாலும்
எதிர்பார்ப்புடன் வரவேற்கத்தான் செய்கிறோம் அந்த நாளை.