Wednesday, April 27, 2011

ஏப்ரல் 23 : உலக புத்தக தினம் -எஸ் .வி. வேணுகோபாலன்

இல்லங்கள் தோறும் வாசிப்பின் கொடியை
உயர்த்திக் கட்டுவோம் 
                                                                                        - எஸ்.வி. வேணுகோபாலன் 

ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.

புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது  மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை.  தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது  புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது.  ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன்.  நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன. 

ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன.  மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.  திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.  

உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும்.  எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும்.  அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது.  காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம்.  வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம்.  நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம்.  கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம். 

எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.  அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர்.  உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர்.  இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர்.  சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர்.  ஆனால், கண் பார்வை அற்றவர்! 

பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று.  'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த  நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான்.  வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது.  மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது.  கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!  

அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.  

************
நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011



Monday, April 11, 2011

book review : ‘உதிரும் இலை ’- பச்சியப்பன்



அளவில் சிறியதெனினும், நேசத்திற்குரிய உள்ளங்கை பற்றி மலைவழியில் இறங்கி நடப்பதான அனுபவம் தருகிற தொகுப்பு. பிறந்த ஊரின் நினைவு வேலைபார்க்கும் இடத்தின் எதிரொலி, குழந்தை, தன்னியல்பில் மாறிப்போன அம்மா, கரிசன மனைவி, உதிர்ந்த இலை, கல்குவாரிமலை, அலறி வீழ்ந்த பறவை, ரயில் அனுபவங்கள், சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்த குடிகாரன், குடியால் நிர்க்கதியாய் விட்டுப்போன அப்பா, விலைபோகாத கருப்புமாடு என நீளும் விதவிதமான கவிதைப் பாடுபொருள்களைக் கொண்டது இத்தொகுப்பு.

Yazhini Munusamy's book 'Uthirum Ilai' நேரடியாகவும் சில கவிதைகள் பேசுகின்றன, மறைமுகமாகவும் இயங்குகின்றன சில புலம்பலும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. எடுத்தெரியவும் செய்கிறார் கொண்டாடவும் செய்கிறார். ஜனத்திரளுக்கான அரசியலும் பேசுகிறார். திண்ணையில் நடைபெறும் நாலாந்தர பேச்சுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். காதல் உண்டு, நட்பு உண்டு. நிர்க்கதியாய் விட்டுப்போய் பல்லிளிக்கும் மனிதர்களும் கவிதைகளில் உண்டு. கடந்து வந்த பாதையில் தென்பட்ட அனைத்தையும் எழுத்தாக்கும் கலை முனுசாமிக்கு கைவந்திருக்கிறது. நவீன கவிதை என்பது நவீன வாழ்வை எதிர்கொள்வது? அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுப்பில் உள்ள ‘இதோ என் நோக்கியா’கவிதையைச் சொல்லலாம்.

பழக்கப்படுத்தப்பட்ட ஆண் தன்மையை குற்றவுணர்ச்சிக் குள்ளாக்குகிற கவிதை ‘தூக்கம் தளும்பும் உன்னை’ எனத் தொடங்கும் கவிதை. பிரிதொரு மனிதரில் நின்று கொண்டு தன்னை விமர்சனம் செய்து கொள்ளுகிற உத்தியை இந்தக் கவிதையில் கையாண்டிருக்கிறார். இதனுடைய கவிதை மொழி ‘இச்சைமொழிப் பேசி ஆழ்ந்துறங்கி’என செதுக்கிய சொற்களாலும் ஆனது, “லன்ச்”சும் கட்டிக் கொடுத்து என்கிற பாலிதீன் உறைகளாலும் ஆனது.

மழைக்கால மாலை நேரத்தில் மேய்ச்சல் காட்டில் கட்டறுந்து ஓடும் இளம்கன்றின் துள்ளலென தன்போக்கை தானே தீர்மானித்து ஓடும் கவிதை நடையை கவிஞர் கொண்டிருக்கிறார். எனக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்பது போல. இதற்கு எல்லா கவிதைகளும் உதாரணம்.

சிலைசெய்து கடைசியில் கண்ணைத் திறப்பது போன்ற உத்தி சில கவிதைகளில் உண்டு. கல்லூரியைப் பற்றி அழகாகச் சித்திரித்து விட்டு கடைசியில் ‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் முதல்வர்கள் ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’என்று அக்கவிதை முடிகிறது. அதேபோல மலையைப் பற்றி அதன் சிதைவு பற்றி சொல்லி விட்டு கடைசி வரியில் ‘எரிமலைகளை யாரும் நெருங்குவதில்லை’என்று மற்றொரு கவிதை முடிகிறது. இப்படி கடைசி வரியில் சாவியை வைக்கிற உத்தியை நிறைய கவிதையில் கையாண்டிருக்கிறார். அந்த வரிகளிலிருந்து தொடங்குகிற ஆழமான பொருண்மையைப் பொதிந்து வைத்திருக்கிற நுட்பமான பணியையும் செய்கிறார்.

அதேபோல, நாற்று நடுவது மாதிரி தொடக்கமும் முடிவும் அர்த்தப்படுத்தி செய்யப்பட்டுருக்கிற கவிதைகளும் உண்டு. எல்லா மூளையிலும் ஒரே மாதிரியாக பச்சை கட்டி நிற்கிற பயிர்மாதிரி. எதுவும் எதாலும் உயிர் வாழாமல் ஆனாலும் ஒரே கழனியில் இருப்பது போல சில கவிதைகளும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம் ‘அரிதாகவே நேர்கின்றன’எனத் தொடங்கும் கவிதை.

இரயில் பயணத்தில் நேரும் அனுபவத்தை, குறிப்பாக பிச்சைக்காரர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கவிதையில் ஒன்று ‘அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் அப்படி’எனத்தொடங்கும் கவிதை. மனிதனின் கயமைத்தனத்தை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெருமுயற்சியில் வெளிப்படும் கீழ்மையைப் பேசுகிற கவிதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்கிற அடித்தட்டு மக்களின் போர்முழக்கம் நமதாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்தின் நாற்காலி போட்டியை இக்கவிதை பேசுகிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக ஒன்று செயல்படும்போது, மற்றொன்று தனிமனித வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு செயல்பாடு பொது நலம் சார்ந்து இயங்காதபோது, அது எத்தகையதாக கருதப்படுகிறது என்பதற்கு இக்கவிதை உணர்த்தும் செய்தி சான்று. இக்கவிதை ஒரு அலுவலக ஊழியனுக்கு ஒரு பொருள்தரும். அரசியல்வாதிக்கு ஒரு பொருள் தரும். இதுதான் இந்த கவிதையின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வனத்தின் திசைகளில்’என்ற கவிதையில் கவிஞர் உள்வைத்த ரகசியத்தை வாசகன் விளங்கிக் கொள்ளாமல் போகிற ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. மறைமுகமாக பேசப்படும் கவிதையில் இரண்டும் நேரலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை.

நகரத்தின் சகல கொடூரங்களையும் சில கவிதையில் உணர்த்துகிறார் கவிஞர். பிச்சையிடாமல் பாவனை செய்யும் பயணியில் இருந்து, திருமணங்களில் பின்பற்றப்படும் போலி ஆடம்பரங்களில் இருந்து, வாகனவோட்டிகளைக் குறித்த அச்சத்தோடு உருளும் மிதிவண்டிப் பயணத்திலிருந்து, தாமதமானால் சிதையும் ஒரு நாளைக்கான உணவிலிருந்து நிறையவே நகரத்தின் கொடுமையை இவர் கவிதைகளின் வழியே உணரலாம். சீலகமில்லாத கிராம மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் வினோதம் என்னவெனில் இந்த விஷயங்களுக்கு முரணாக ‘காக்கை குருவி’ எனத் தொடங்கும் கவிதை எழுதியிருக்கிறார். இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் ஒரு இடதுசாரி அரசியல் எழுத்தாளன், தனிமனித துரோகங்களுக்குப் புலம்பி இருப்பதும்.

வாழ்க்கை என்பது வினோதமானது. தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு குதூகலிப்பதற்கும், இறந்த தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு மௌனமாய் வயலுக்குப் போவதற்குமான பெருத்த இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் இயங்குகிறது, இந்தக் கவிதை தொகுப்பு.

உதிரும் இலை
ஆசிரியர் : யாழினி முனுசாமி
மித்ரா வெளியீடு (டிசம்பர் - 2005),
32/9, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 24,
விலை : ரூ. 35/-  cell: 9841 374 809

matruppathai - யாழன் ஆதி

பூந்தோட்டம் வளர்த்த என்னை
பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள்
ஞானம் பெற்றுத் திரும்புவேன்
அப்பெருங்காட்டிலிருந்து
வுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு "உதிரும் இலை.' கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், "முரண்களரி' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.
கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியில் ஊருக்கு வெளியே/எங்களை ஒதுக்கி வைத்திருக்கும்/உங்கள் கிராமங்களைவிட/அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்'' என்று முடிப்பார்.
செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் யாழினி முனுசாமி. நாடகத்திற்குப் பெயர் பெற்ற ஊர் செய்யாறு. அங்கு நடந்த நாடகங்கள், கலைத்தன்மை மிளிரும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் திருவிழாக்காலங்களில் காணக் கிடைக்கும் இன்னபிற கலைவடிவங்களை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்ததும், சிறு வயதில் அவருடைய பாட்டி சொன்ன கதைகள் அவருள் ஆழப்பதிந்ததும் கலைமேல் தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார்.
தொண்ணூறுகளில் சென்னையில் முதுகலை படிக்க வந்தவர், நிறைய இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்று வந்திருக்கிறார். சிற்றிதழ்களை வாசித்திருக்கிறார். அப்போது வெளிவந்த "பழையன கழிதலும்' என்ற சிவகாமியின் நாவல், அவரை நவீன இலக்கியத்தின் பக்கமும் தலித் இலக்கியத்தின் பக்கமும் திருப்பியிருக்கிறது. மார்க்சியவாதிகளுடனான நட்பும் வாசிப்பும் அவரை மார்க்சியத்தில் பற்றுடையவராக மாற்றி விட்டது.
கொள்கையில் நேர்மையாக இருக்கின்ற சிலரைத் தவிர, மேம்போக்காக மார்க்சியம் பேசுபவர்கள் சாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். தலித் தோழர், வன்னிய தோழர் என்று பிரித்துப் பேசுவார்கள். நாம் மார்க்சியவாதிகளாக இருந்தாலும் நம்மை அவர்கள் மார்க்சியவாதிகளாகப் பார்ப்பதில்லை. எப்படியாவது நம் சாதியை கண்டுபிடித்து விடுவார்கள். மதம் மாறினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிப் போனால், அங்கே சாதி கிறித்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர் என்று பிரிக்கிறது.  இருப்பினும் மார்க்சிய கொள்கையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு'' என்கிறார் யாழினி முனுசாமி.
தலித்துகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு இடஒதுக்கீட்டின் வேலையையும் பெற்றுக் கொண்டு, இறுதியில் தன் மக்களையும் அவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் அப்படியே விட்டுவிட்டு, மூன்றாந்தரப் பார்ப்பனர்களாக மாறிவிடுகின்ற படித்த தலித்துகளை கவிதைக்கான செறிவோடும் அளவோடும் விமர்சிக்கிறார் யாழினி முனுசாமி.
ஒல்லியாய் இருந்தவன்/தொப்பைப் போட்டிருந்தான்/திருமணத்திற்குப் பிறகு/குடும்பத்துடன் ஒட்டுறவு குறைந்துவிட்டதாம்/நண்பர்களுடன் வைராக்கியமாம்/உயர்ந்து காட்டணுமாம்/தங்கியிருக்கும் வீட்டிற்கழைத்தவன்/அங்கவந்து சாதி பத்திப் பேசக்கூடாது என்றான்/குடும்பம் நண்பர்கள்/நலம் விசாரிப்பு முடிந்து/உபசரிக்கும்போது/காதுபடக் கிசுகிசுத்தான்/"அதைத்' தலமுழுகி/ரொம்ப நாளாச்சி/இப்பல்லாம் ஒன்லி மட்டன் சிக்கன்தான்.''
கவிதையின் பகடியும் அதன் மூலம் பதிவாகும் சமூக எதார்த்தமும் குறிப்பிடத்தக்கவை. ஆக்கங்களைத் தருபவராக மட்டுமின்றி, தன்னை ஒரு சிறந்த விமர்சகராகவும் தகவமைத்துக் கொண்டிருப்பது, யாழினி முனுசாமியின் அடையாளம். விமர்சனம் என்பது தனி அளவுகோலுடன் இயங்கக்கூடியது. அதற்கு சாதியும் ஒரு முக்கியமான அளவுகோல். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும் சுஜாதாவுக்கு அனுப்பிவிட்டுதான் மறுவேலை பார்த்த கவிஞர்கள் நிறைய பேருண்டு. அவர் வாயால் அல்லது கையால் கவிதைகளை விமர்சித்துவிட மாட்டாரா என ஏங்கியவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இப்போது யாருக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை!
தீவிர இலக்கியத் தளத்தில் இயங்குபவர்களுக்கு வெங்கட் சாமிநாதன் சொல்லே "சொர்க்கம்'. நவீன கவிஞர்களுக்கு ஞானக் கூத்தன்தான் ஒட்டக்கூத்தன். இப்படி இவர்கள் பரப்பிய விமர்சன வெளியில் தனக்கென்று ஓரி டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யாழினி முனுசாமி. இவருடைய "தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றக் கூடியது. பதினாறு கட்டுரைகள் கொண்ட அந்த நூல், தலித் எழுத்தாளர்களின் அனைத்து வகைமைகள் குறித்தும் பேசுகிறது.
முன்னணி தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட அனைவரது எழுத்துகளையும் அவர் சரியான விமர்சனப் பார்வை கொண்டு எழுதியிருப்பதாகவே வாசிப்பாளனுக்குத் தோன்றும். தலித் இலக்கியம் உருவாகும் தருணம், அதன் வேர் பிடிப்பு, அது பரப்பும் இலக்கிய ஆளுமை, தமிழ் இலக்கியத்தில் அதன் தேவை, தலித் இலக்கியம் நடத்தும் அரசியல் இவை அனைத்தும் அதில் அலசப்படுகின்றன.
யாழினி முனுசாமியின் இன்னொரு முகம் அவர் ஓர் ஆவணப்படக்காரர். அவருடைய "தொழுப்பேடு' ஆவணப்படத்தில், செய்யாறு வட்டத்திலுள்ள தொழுப்பேடு என்ற ஊரில் நடைபெற்ற சாதிய வன்கொடுமையினை ஆவணமாக்கியுள்ளார். 140 தலித் குடும்பங்களும் 500 சாதி இந்து குடும்பங்களும் அருகருகே வாழ்ந்திருக்கும் இடம்தான் தொழுப்பேடு. தலித்துகள் வாழ்கின்ற பகுதிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் சாதி இந்துக்கள் புகுந்து தலித்துகளை தாக்குவார்களாம். இந்த நிகழ்ச்சி அடிக்கடி அங்கு நடக்கும். ஒவ்வொரு முறையும் திடீரென்று தாக்குதல் நடத்தப்படுவதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தலித்துகள் அடி வாங்குவார்களாம்!
பிறகு வேறு வழியே இல்லாமல் தாங்கள் வாழ்ந்திருந்த குடியிருப்புப் பகுதியில் தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த ஏரியில் சென்று குடியேறிவிட்டனர். முன்பிருந்த வீடுகள் எல்லாம் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. அதை அப்படியே படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் யாழினி முனுசாமி. இது மிக முக்கியமான பதிவாக இருப்பினும், பரவலாக கண்டு கொள்ளப்படவில்லை.
வலிகளிலிருந்து வரும் கவிதைகள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பதாகச் சொல்லும் முனுசாமி ஈழக் கவிதைகளை, பெண்ணியக் கவிதைகளை, போர்ச்சூழலிலிருந்து வரும் கவிதைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கிறார். அந்தக் கவிதைகள் குறித்த விமர்சனங் களும் தொகுப்பும் நூலாக வெளிவந்திருக்கிறது. "பின்நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்' என்றநூல், அவருடைய சிறந்த விமர் சனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.
இலக்கியத்தில் பன்முகத்தன்மையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், "முரண்களரி' என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதே அவரை இத்தகைய ஆளுமை கொண்டவராக மாற்றியிருக்கிறது.
தலித் இலக்கியம் தேங்கி விட்டது என்று சொல்பவர்கள் அதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று சினந்தெழும் அவர், தலித் தளத்தில் எழுத வரும் புதியவர்களை மிகச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் எழுத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இன்னும் நிறைய தலித் சிற்றிதழ்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். தலித் இயக்கங்கள் தங்கள் தொண்டர்களை வெறும் தொண்டர்களாகவே வைத்திருக்கின்றன. அவர்களை வாசிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். நம்மைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை தலித் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமலேயே இருக்கும் "படித்த' தலித்துகள் அதிகம். இவ்வாறு செய்வதால் தலித் இலக்கியம் தலித்துகளிடையே மேலும் பரவலாக்கப்படும். தலித் அரசியலும் கோட்பாட்டளவில் இன்னும் கெட்டிப்படும் என்று உறுதியாகக் கூறும் யாழினி முனுசாமி, தலித் இலக்கிய உலகின் முக்கியப் புள்ளி.

nandri; dalitmurasu.
யாழன் ஆதி

Saturday, April 9, 2011

தெருக்கூத்துக் கலைஞர் கோவிந்தவாடி அகரம் து.ஜெயபாலன் நேர்காணல்




தமிழ்மண்ணின் தொன்மையான கலைகளுள் ஒன்று தெருக்கூத்து. வேறெந்த கலையைவிடவும் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள கலை தெருக்கூத்தாகும். படித்தவர் முதல் பாமரர் வரை சிறியோர் முதல் பெறியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் இந்தக் கலை ஒரு காலத்தில் தமிழ்மண்ணில் கோலோச்சியது உணமையென்றாலும் இன்றைய சூழலில் அதன் தாக்கம் குறைந்து கொண்டே வருவது போன்று ஒரு தோற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில் தெருக்கூத்துக் கலைஞர் து.ஜெயபாலன் ”தடாகம்” இணைய இதழின் வாசகர்களுடன் தன் கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

1. எப்பொழுதிலிருந்து நீங்கள் தெருக்கூத்தில் நடித்து வருகின்றீர்கள்? உங்களது தொடக்க கால அனுபவங்களைப் பற்றிக் கூறுங்களேன்?

சுமாராக பதினஞ்சு வயசுல நான் தெருக்கூத்துல நடிக்கத்தொடங்கினேன். முதன்முதல்ல பாண்டவர்களில் அர்ச்ச்சுன்னாக நடித்தேன். அப்பறம் சுந்தரி கல்யாணம் கூத்தில் அபிமன்யுவாக நடித்தேன். அதுக்கப்புறம் தொடர்ந்து குறவஞ்சி, துகில், அரவான் களபலி, சைந்தியன் கர்வபங்கம், அபிமன்யு சண்டை, கர்ணமோட்சம், ஆகிய கூத்துகளில் துரியோதனனாக நடித்தேன். ராஜசுய்யாகம் கூத்தில் முதலில் பீமனாகவும் இப்ப, மரகத மன்னனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

2. உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

அனக்கு விருப்பமான கதாப்பாத்திரம் கர்ணன். அதுக்கு அடுத்ததா அரவான் துரியாதனன்.

3. உங்களுடைய முதல் குரு யார்?
எங்க ஊரான கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த (காஞ்சிபுரம் மாவட்டம்) இராகவன் ஆசிரியர்தான் என் முதல் குருநாதர். பிறகு சுயமா பல நாடக்க கதாப் பாத்திரங்களை நானே ஆடக் கற்றுக் கொண்டேன்.

4. என்னென்ன கூத்தை அந்தக் காலத்தில் பார்த்திருக்கீங்க?

நெறைய பார்த்தோம் எல்லாத்தயும் சொல்ல முடியாதே!

5. ஞாபகத்துல இருக்கிறத சொல்லுங்க?

மகாபாரதக் கூத்து, இராமாயணக்கூத்து என்று ரெண்டுவிதமா நடக்கும்.

மகாபாரதக் கூத்து நிறைய இருக்கு

- பாண்டு வேட்டை,
- வில் வளைப்பு,
- சுபத்திரை திருக் கல்யாணம்,
- இராஜசுய யாகம்,
- பகடைத் துகில் (ரோபதை வஸ்திர பங்கம்),
- அர்ச்சுனன் தபநிலை,
- கீச்சகன் வதை,
- குறவஞ்சி,
- மின்ன்னோளி சிவ புஜை (அர்ச்சுனனின் 8-வது திருக் கல்யாணம்),
- கிருஷ்ணன் தூது,
- சைந்தியவன் கர்வ பங்கம்,
- அரவான் களபலி,
- இடும்பி பீமன் திருக்கல்யாணம்,
- சுந்தரி-அபிமன்பு திருக்கல்யாணம்,
- அபிமன்பு சண்டை (அபி மன்பு-அர்ச்சுனன்-அல்லி மகன்),
- சின்ன அர்ச்சுனன் சண்டை அல்லது புலியேந்திரன் தூது, மணிமாலன் சண்டை,
- பாதாள அரக்கன் அல்லது போகவதி அர்ச்சுனன் திருமணம், பதினெட்டாம் போர்,
- பாஞ்சாலி சபதம்,
- அளம்புஜா சூரன் அம்புஜவல்லி அர்ச்சுனன் திருமணம்“ தரும் அசுவமேத யாகம் அல்லது ப்பபுருவாகனன் சண்டைட்ட,
- உத்தர காண்டம் வஜ்ர காண்டம்

ஆகியவை மகாபாரதக் கூத்துக்களாகும்.

- வெங்கடேசப் பெருமாள் நாடகம்,
- தக்கன் வேள்வி (பார்வதி-சிவன் கல்யாணம்),
- அரணியன் விலாசம் அல்லது பக்த பிரகலாதா,
- இரண்ய அட்சுத சண்டை (வராக அவதாரம்),
- வாலி மோட்சம்,
- பாவாடை ராயன் பரமகேது,
- சோமுகாசூரன் சண்டை(மச்ச அவதாரச் சண்டை),
- மயில்ராவணன் சண்டை,
- சுந்தரகாண்டம் அல்லது அனுமான் தூது,
- போர் மன்னன் சங்கவதி திருமணம்.

ஆகியவை இராமாயணக் கூத்துக்களாகும்.

இந்தக் கூத்துகளெல்லாம் அக்காலத்தில் நடத்தப்பட்டன.

நான் முதன் முதல்ல பார்த்த கூத்து ”அர்ச்சுனன் தபநிலை” எங்கள் ஊரில் கூத்தைக் கத்துக்கிட்டு ஆடுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் கூத்துல நடிக்கணும் என்கிற ஆர்வம் ஏறபட்டது.

6. எதுவரை படிச்சிருக்கீங்க?

பள்ளிக்கூடம் பக்கம் கூடப் போனதில்லை. கேள்வி ஞானம்தான். அனுபவம்தான். செல்போன்ல பச்சை பட்டன், செகப்பு பட்டன் தெரியும் மற்றது எதுவும் தெரியாது. இதுல கேமரா, ரேடியோ எல்லாம் இருக்குதான் எதுவும் தெரியாது.

7. தெருக்கூத்துக்கான வரவேற்பு அநதக் காலத்திலயும் இந்தக் காலத்திலயும் எப்படி இருக்கு?

அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு இருந்துச்சி. இப்பவும் வரவேற்பு இருக்கு. கொஞ்சம் குறைஞ்சிருக்கு அவ்வளவுதான். ஆனா, எப்பவும் தெருக் கூத்துக்கு மவுசு குறையவே குறையாது. வருசத்துக்கு 200 ராத்திரிக்கு மேல் கூத்து ஆடுறோம். பொதுவா மாசி மாதத்திலிருந்து புரட்டாசி மாதம் வரை தெருக்கூத்து நடக்கும்.

8. தெருக்கூத்து உங்களுக்கு வேலையா, கலையா?

தொடக்கத்துல வருமானத்துக்கான வேலையா இதைப் பார்க்கல. கலையாகத்தான் பார்த்தேன் இன்றைய தேதியில் வெறும் கலையா ஆடமுடியல. வருமானமும் பார்த்துதான் ஆடவேண்டியுள்ளது.

9. வருமானம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒரு கூத்துல நடிச்சா குறைந்தது ஜந்நூறு ருபாய் கிடைக்கும் ஏதாவது ஒரு கூத்துர் கம்பனியில ஒரு வருசத்துக்கு ஒப்பந்தத்துல இருப்போம். 50 ஆயிரமோ 60 ஆயிரமோ முன்பணம் வாங்கிக்குவோம் அதை கொஞ்சம் கொஞ்சமாக கழிச்சிக்குவாங்க. ஒரு கம்பனி ஒப்பந்தத்துல இருக்கும் போது வேற கம்பனியில் ஆடக்கூடாது. என்ன ஆனாலும் அதே கம்பனியிலதான் இருக்கணும்.

10. ஒரு குழுவுல எத்தனைப் பேரு இருப்பீங்க?

நடிகர்கள் பத்து பேர் ஆர்மோனியம் ஒருவர், மிருதங்கம் ஒருவர், முகவீணை ஒருவர் என மொத்தம் 13 பேர் இரும்போம். நடிகர்களைவிட வாத்தியிக் கலைஞர்களுக்கு 50 ருபாய் கூடுதலாகக் கிடைக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

11. வெளி மாநிலங்களில் எல்லாம் கூத்து ஆடியிருக்கீங்களா?


கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் கலைபண்பாட்டுத்துறை முலமாகப் போய் ஆடி இருக்கோம்.

12. மொழிப் பிரச்சினையை எப்படி சமாளிப்பிங்க?

எங்க போய் கூத்து ஆடினாலும் எங்களுடைய பேச்சுமொழியிலதான் பேசி நடிப்போம்.

13. அரசு உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமா இருக்கு?

அரசு எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஓரளவுக்கு உதவிகள் செய்யுது. கூத்துக்கலை அழியாமலிருக்க மேலும் உதவிகள் செய்யப்பட வேண்டும். இயல் இசை நாடக மன்றத்தினர் ஒர சில குழுக்களுக்கே திரும்பத் திரும்ப வாய்ப்புகள் தருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாய்ப்புபகள் வழங்கப்பட வேண்டும்.

14. காஞ்சிபுரத்தைச் சுற்றி எத்தனை சுமாரா 15 குமுக்கள் இருக்கு.

திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களையும் சேர்த்துப் பார்த்தா சுமாரா 50 குழுக்கள் இருக்கும்.

15. எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் கூத்து நடக்குமா?

எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி இடையாது, மேல சொன்ன மாவட்டங்கள்ல ஒரு மாதிரியாக இருக்கம். திணடிவனத்திலிருந்து மாறும். தஞ்சவுர் பக்கமெல்லாம் வெறமாதிரி இருக்கும் தெருக்கூத்துல சினிமா பாட்டு, சினிமா பாட்டு பாடினா ரசிகர்கள் பணம் குத்துவாங்க. அது கூடுதலி வருமானமதானே. ஏதோ கலையைக் காப்பாத்திக்கிட்டு இருக்கோம். சுத்தமா நல்ல முறையில கூத்த நடத்த முடியல. தஞ்சாவுர் பக்கம் எல்லாம் சினிமா கலப்பில்லாம சுத்தமா நடத்து வாங்க.

16. மேடை நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு மேடை நாடகம் ஒரு வரும் இரண்டு வருடம் ஓடும். புகழ்பெற்று ஓடும். திடீர்னு காணாமப் போயிடும். ஆனா தெருக்கூத்து அப்படி கிடையாது. என்னைக்கும் அழியாது நாடக்க கதைகளுக்கு மூலம் கிடையாது தெருக்கூத்துக்கு மகாபாரதம், இராமாயணமது மூலம் உண்டு. அதனால் தெருக்கூத்து என்னிக்குமே அழியாது.


17. உங்கள் வீட்டில் வேறு யாறேனும் கூத்து நடிக்கிறாங்களா?

என்னுடைய மகனும் கூத்துக்கலைஞர்தான்.

18. இனறைய தேதியில கிராம்ம-நகரம் எங்கு கூத்துர்கு வரவேற்பு அதிகம் இருக்கு?

நகரம் சார்ந்த இடங்கள்ல கூத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நகர மக்கள் கூத்த நல்லா விரும்பிப் பார்க்கிறாங்க நல்ல மரியாதையும் கொடுக்கிறாங்க. சென்னையில் கோட்டுர்புரம், குரோம்பேட்டை, தாம் பரம் நுற்றியுள்ள பல இடங்கள்ல ஆடியிருக்கோம்.நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

19. தெருக்கூத்துக் கலையை இளைய தலை முறையலினருக்குச் சொல்லிக் கொடுக்க தெருக்கூத்துல் பள்ளிகள் இருக்கா?

இருக்கு. பெருங்கட்டூரில் பிறந்து தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கும் அராஜ கோபால் என்பவர், காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் புஞ்சை அரசந்தாங்கல் எனும் ஊரில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்.

ஒரு யதார்த்தமான சாமான்யமானக் கலைஞனைச் சந்தித்த மனநிறைவுடன் விடை பெற்றோம்

nandri :
தடாகம்.காம்

Thursday, April 7, 2011

நூல் விமர்சனம் - கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு)


   தமிழினம் போற்றும் தமிழ்மனம் - யாழினி முனுசாமி
      ஒரு மனிதன் படைப்பாளியாகப் பரிமாணம் கொள்ளும் தருணம் உன்னதமானது. ஏனெனில், படைப்பாளியாக இருப்பதென்பது சமூக மனிதனாக இருப்பதாகும். இன்றைய சமூகம் என்னவாக இருக்கிறது என்பது கண்கூடு.
கண்முன் நடக்கும் எத்தகைய அநியாயம் குறித்தும் கவலைப்படவோ கவனங்கொள்ளவோ அவன் தயாராக இல்லை. விலங்குகளைப் போலவே புசித்து, புணர்ந்து, இனப்பெருக்கம் செய்து சந்ததியை வளர்ப்பதோடும் வளப்படுத்துவதோடும் அவன் கடமை முடிந்துவிடுவதாகக் கற்பிக்கப்படுகின்றான். ஆனால், உண்மையான படைப்பாளியால் அப்படி வாழ முடியாது. சமூகம் குறித்த அக்கறை உள்ளவனாக, சமூகத்தை மேம்படுத்தும்/மாற்றும் பேரவா உள்ளவனாகவே அவனால் தொழிற்பட முடியும். அப்படித் தொழிற்படுபவனே உண்மையான சமூகப் படைப்பாளியாவான். அத்தகைய ஒரு படைப்பாளியாக- கவிஞராகப் பரிமாணம் கொண்டிருக்கிறார் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன். தமிழின் செழுமையான சங்க இலக்கியத்தில் திளைத்தூறி, ஆய்ந்து, ஆய்வாளராக நிலைபெற்று, கவிதைத்துறைக்கு வந்திருக்கிறார் என்றாலும், கவிதை இவருக்குப் புதியதல்ல. இணையதள வாசகர்களுக்குக் கவிதைவழி நன்கு அறிமுகமானவர் இவர்.
manavazhagan_bookஎதை எழுதவேண்டும் என்பதிலாகட்டும், எதை எழுதக்கூடாது என்பதிலாகட்டும் ஒவ்வொருவருக்கும் ஓர் அரசியல் உண்டு. அப்படி அரசியல் இருப்பதொன்றும் தேசத் துரோகமல்ல; இல்லாமல் இருப்பதுதான் தேசத் துரோகம். மணவழகன் என்கிற மனிதனின், தமிழ்ப் பேராசிரியனின், கவிஞனின் மனம் எத்தகையது எனும் கேள்விக்கு அவரது கவிதைகளின்வழி ஒரு வரியில் பதில் சொல்லவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்; ‘தமிழினம் போற்றும் தமிழ்மனம்’. இந்தக் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்கையில் இதை உணரமுடிகிறது. அகம் சார்ந்த கவிதைகளானாலும் சரி, புறம் சார்ந்த கவிதைகளானாலும் சரி இந்தத் தமிழ் மனத்தையே வெளிப்படுத்துகின்றன.
தமிழினம் குறித்துப் பெருமைப்பட இனியொன்றுமில்லை. துரோகங்களாலும் வஞ்சகங்களாலும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் குறித்துப் பெருமைப்பட என்ன இருக்கிறது? தனிமனிதர்களும் தன்னலவாதிகளாகவும் இரட்டை வேடதாரிகளாகவும் இருக்கின்றனர். அதற்கு இலக்கியம் என்ன செய்யும்? பெரிய புரட்சியை உண்டாக்குமோ உண்டாக்காதோ தெரியாது. ஆனால், ஒன்றைச் செய்யும். தனிமனிதர்களின் ‘சிரித்தாளும் சூழ்ச்சி’யையும், அரசியல் வேடதாரிகளின் நாடகங்களையும் அம்பலப்படுத்தும். மனிதர்களை ஓரளவிற்கேனும் மேம்படுத்தும். மேலாக, எழுதப்பட்ட இனத்தை அடையாளப்படுத்தும். வீழ்த்தப்பட்டவர்களின் வீரத் தியாகத்தையும் வீழ்த்தியவர்களின் வஞ்சகத் துரோகத்தையும் வரலாறாகப் பதிவு செய்யும். அத்தகைய பதிவுகள் இந்தக் கவிதைத் தொகுதியில் நிறைய காணக்கிடைக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள ‘தமிழ் அடையாளம்’ சார்ந்த கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘இந்தியத் தமிழனாக’ உணரும் தமிழகத் தமிழனை, ‘தமிழனாக’ உணர்வுபெற வைக்க இக்கவிதைகள் பயன்படக்கூடும். ‘திராவிடன்’, ‘இந்தியன்’ என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறார்.
                       ‘கன்னடம்
தண்ணீர் தரட்டும்
நானும் திராவிடன்
இந்தியா
ஈழம் அமைத்துத் தரட்டும்
                       நானும் இந்தியன்
கானல்நீர் தாகம் தீர்க்காது
                       விட்டுவிடு
 நான் தமிழன்’
உண்மைதானே! ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தி மாணவன் தாக்கப்பட்டால் ‘இந்திய மாணவர்’ தாக்கப்பட்டார் என்று குரல் கொடுக்கிறார்கள், எழுதுகிறார்கள். பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக்கொல்லப்படும் சிங் சிப்பாய் ‘இந்திய சிப்பாய்’ ஆகிறார். ஆனால், இராமேஸ்வர மீனவர்கள் மட்டும் ‘தமிழக மீனவர்கள்’ ஆகிறார்கள். வெளிநாட்டில் வாழும் ‘சிங்’குகளின் ‘மயிர்’ பிரச்சினைக்காக (தாடி வைத்துக்கொள்ளுதல், தலைப்பாகை அணிதல்) குரல் கொடுக்கும் இந்தியப் பிரதமர் தமிழனின் உயிர் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லா கோவமும் சேர்ந்தால்தானே கவிதை.
                நடையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எளிமையும் நவீனமும் இவரது கவிதைகளின் தனித்துவ நடையாக இருக்கின்றது. ‘.... தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை’ என்ற ‘கவிமணி’யின் நடைக் கொள்கையைப் பின்பற்றி எழுதியிருக்கிறார். காதல் கவிதைகளைத் தவிர்த்த பிற கவிதைகளையே கவிஞரை அடையாளப்படுத்தும் கவிதைகளாகக் கொள்ளலாம். சொல்முறையிலும் காதல் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும், அறிவுறுத்தும் கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் நவீனத்தன்மை கொண்ட கவிதைகளுக்கென்று ஒரு பாணியும் இயல்பாகவே அதனதன் தன்மைக்கேற்ற நடையில் அமைந்திருக்கின்றன.
                தமிழ்க் கவிதை மரபில் குழந்தை பற்றிய சித்திரிப்புகள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. தம்மக்களின் எச்செயலும் இன்பம் பயக்கக் கூடியதே. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் / சிறுகை அளாவிய கூழ்’ என்கிறார் திருவள்ளுவர். குழந்தைகள் பற்றிய கவிதைகளைப் படிக்கும்போது நம் மனம் பறக்கத் தொடங்கிவிடுகிறது. குழந்தைகளின் குதூகலம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ‘பெருமாள் திருமொழி’யில் குலசேகர ஆழ்வார் குழந்தைக் காட்சிகளை மிக அழகாகத் தீட்டியிருப்பார். மனத்தைக் கிளர்த்தும் குழந்தைமைச் செயல்களை ‘படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்’(புறம்.188) என்ற சங்கப் பாடலில் பாண்டியன் அறிவுடைநம்பி வியக்கிறார். பருகப் பருக வற்றாத அமிழ்தம் குழந்தைமை இன்பம் என்பதை இன்றும் வெளிவந்த வண்ணமிருக்கும் கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. கவிஞர் எழுதுகிறார்,
                                ‘உருக வைக்கும் / பனிக்கட்டி
                                என் மடியில் / எழில்மதி’
அறிவுடைநம்பியின் பாட்டைப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்திருப்பதைப்போல் அத்தனை ‘சில்லென்று’ இருக்கிறது இக்கவிதை. குழந்தைகளின் கிறுக்கல்களை நவீன ஓவியங்களாக இரசித்திருக்கிறோம். ஆனால், கசக்கி எறிந்த காகிதத்தையே கவிதையாகப் பார்க்கும் மனம் எழில்மதியின் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறது.
                சோழனின் பிறந்தநாளுக்காக நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லோரும் இன்புற்றிருக்கும் இத்தருணத்தில் அரண்மனை அலங்காரத்தின் போது கூடிழந்த சிலந்திக்காக ‘சிலம்பி தன் கூடிழந்த வாறு’ என்று வருந்துகிறான் முத்தொள்ளாயிரப் புலவன். இவர் கவிதையிலும் முத்தொள்ளாயிரக் கவிஞனின் தாக்கம் வெளிப்படுகிறது.
                                ‘ஐயோ! / துடைத்து விடாதே
                                ஒட்டடை அல்ல
                                வீடு! / சுவரில் சிலந்தி’
இப்படியாக, சங்கக் கவிஞன், முத்தொள்ளாயிரக் கவிஞனின் நீட்சியாகவும் மண்சார்ந்த கவிஞர்களின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறார், கவிஞர் ஆ.மணவழகன்.
                பெருநெல்லியின் சுவையும், மலைக் கள்ளிமடையானின் தித்திப்பும் இவர் கவிதைகளில் உண்டு. புளிக்குழம்பு, ஆவிபறக்கும் கேழ்வரகின் உருண்டை, இளம் முருங்கைக்கீரைக் கூட்டு, புதுச்சோளச் சோற்றுக் கவளம், களிகம்பஞ்சோறு ஆகியவற்றின் மீதான ஏக்கம் கலந்த ஆசை இவரது கவிதைகளில் மணக்கின்றது.
எழுத்து என்பது வெறும் எழுத்தாக மட்டுமே இருப்பதில்லை. அது, படிப்பவரின் சிந்தனையைக் கட்டமைக்கிறது. அச்சிந்தனை வாழ்க்கையை வழிநடத்துகிறது. சமயங்களில் அதனால் உணர்வுக்கும் நடப்புக்கும் இடையே ஊசலாட்டம் ஏற்படுகின்றது. இந்த மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது ‘நன்றாமோ தீது’ கவிதை. ‘வீடு சுமந்து அலைபவன்’, ‘வாழ்க்கை வணிகன்’, ‘கனவு சுமந்த கூடு’, ‘எம்மையும் மன்னியும்’, ‘யார் நீ’, ‘மே 2009’, ‘புதுமனை புகுவிழா’, ‘பொய்த்தேவு’, ‘பிறர்தர வாரா’ போன்ற பல கவிதைகள் குறிப்பிடத்தகுந்த கவிதைகளாகும்.
                அரசியல் கவிதைகளில் தோழனாக, கிராமியக் கவிதைகளில் மண்ணின் மைந்தனாக, நன்னெறி வலியுறுத்தும் கவிதைகளில் ஆசிரியனாக, பிற உயிர்க்காக வருந்தும் கவிதைகளில் ஜீவகாருண்யவாதியாக, காதல்-குழந்தை-நட்பு-அலுவலகம் சார்ந்த கவிதைகளில் சக மனிதனாகப் புலப்படுகிறார் கவிஞர். தூக்கணாங்குருவிக் கூட்டைப் பற்றி யாரேனும் இப்படி வியந்திருப்பார்களா தெரியவில்லை.
                                ‘ஆயிரம் தாஜ்மகால் / அதிசயம்
                                ஒற்றைச் சித்தனின் / உயிர்த்தவம்’
உண்மைதானே!
                ‘உள்ளம் செதுக்கும் உளிகள்’ கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கவிதை.
                                ‘ஒழுக்கம் படி! / எதிர் நிற்போர்
உணர்வைப் படி!’
‘ஏழ்மை கீழ்மையல்ல
உண்மை / நாகரிகம் படி!’
இப்படியான சமூக ஒழுங்கமைப்புக்கான பாடங்களைப் படிக்க வலியுறுத்துகிறார். இது, மாணவர்களுக்கான கவிதை மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான கவிதையும்கூட.
இவரது கவிதைகளில், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றிய விமர்சனக் கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பெருந்தொழிலதிபர்கள் போன்றோர் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் அது ‘வாராக்கடன்’. ஆனால், ஒரு விவசாயியால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாமல்போனால் அவரது வீடு ‘ஜப்தி’ செய்யப்படும். இதுதான் இந்தியா!. ‘புதுமனை புகுவிழா’ கவிதை இந்த அவலத்தை, அநியாயத்தை வெளிப்படுத்துகின்றது.
‘பிறர்தர வாரா’ கவிதையில், குடிகாரர்களையும், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களையும் அழகான அனுபவக் கவிதையின் ஊடாக எச்சரிக்கின்றார் கவிஞர். மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் அரசாங்கத்தின் செயல்திட்டத்திலிருந்து விடுபடும் வழி மக்களிடமே உள்ளதை உணர்த்துகிறார். ஒப்புசாண் மலைமீது பீடி பற்றவைத்தது போன்ற கிராமத்து ‘திருவிளையாடல்’ முதல், 320, மூன்றாவது மாடியில், ‘குழந்தை மாதிரி சார்/ஒன்னுமே பண்ணாது’ என்று ‘இராணுவ ரம்மை/ சோடாவில் கலந்து’ குடித்த நகரத்துத் திருவிளையாடல்கள் வரை அத்தனையும் பட்டியலிட்டு, அவற்றில் ஒரு ’....ம்’ இல்லை என்று வாக்குமூலம் கொடுத்து (சில நண்பர்களையும் காட்டிக் கொடுத்து) ‘விட முடியலை’ என்பவர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.
                                ‘உன் மனைவி / விதவையாவது பற்றி
                                உன் குடும்பம் / நடுத்தெருவில் நிற்பது பற்றி
                                எந்த அரசுக்கும் / இங்குக் கவலையில்லை’
உண்மைதானே! எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனை கோடி ‘கல்லா’ கட்டுகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.       பாமர மக்கள் மட்டுமல்ல, ஊருக்கே அறிவுரை சொல்லும் அக்ரகாரத்து ஐயரின் மகன்கூடக் குடித்துவிட்டுச் சாக்கடையில் விழுந்துகிடக்கும் அளவுக்கு நம் செம்மொழித் தமிழ்த்திருநாட்டில் ‘மது’ ஜனநாயகப் படுத்தப்பட்டு இருக்கிறது.
                இத்தொகுதியில் பேசுவதற்குரிய கவிதைகள் இன்னும் நிறைய உள்ளன. பிரதியில் பயணிக்கையில் நீங்களே அதை உணர்வீர்கள். தமிழ்க் கவிதை மரபை அறிந்தவர் கவிதைத் துறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நல்ல கவிதை நடையும் சீரிய சமூகச் சிந்தனையும் இவருக்கு ஒருங்கே வாய்த்திருக்கின்றன. இவர் தொடர்ந்து சிரத்தையுடன் செயல்பட்டு நிலையானதொரு இடத்தைக் கவிதையிலும் பெறவேண்டும் என்பதே எம்போன்றோரின் அவாவாகும்.                              
கூடாகும் சுள்ளிகள் (கவிதைத் தொகுப்பு)
ஆ. மணவழகன் (
 tamilmano77@gmail.com)
அய்யனார் பதிப்பகம்
32, இராமகிருஷ்ணாபுரம்
2வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை-88
விலை ரூ.50

Tuesday, April 5, 2011

nool arimugam

 மதியழகன் சுப்பையா மொழிபெயர்த்த 'கருப்பாய்  சில ஆப்பிரிக்க மேகங்கள்' கவிதை நூலைப் படித்தேன். பினவுலா டோவ்லிங் தொடங்கி ஜோலா சிக்கிதி வரை 17 கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் , ஆசிரியர் குறிப்புகளுடன்.கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். அதிலிருந்து இரண்டு  கவிதைகள் ...


 இருந்திருக்கிறோம் - மிஜி மகோலா
 
 பலமுறை
இதற்கு முன்னும் நாங்கள்
இங்கிருந்திருக்கிறோம்
ஆனாலும் ஒவ்வொரு முறையும்
வலியானது
ஒரே  மாதிரியாகத்தான் இருக்கிறது.

மாறிய மக்கள்  -மிஜி மகோலா

முன்பெல்லாம் 
சவங்களைக் கண்டால்
வழி மாறி நடந்திருக்கிறோம் 
இல்லையேல்
இதயங்களை தாண்டி வந்திருக்கிறோம்
இன்றோ, அதன் தலைகளை 
தோண்டி எடுக்கிறோம்
 அதன் வாயுள் இருக்கும் 
தங்கத் தகடிடப்பட்ட பல்லை
கொள்ளையடிக்க  திட்டமிடப் படுகிறது.

அந்திமழை இணைய இதழில் வெளிவந்த தொடர் இது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பக்கம் 160 . விலை 70 ரூபாய். தொடர்புக்கு- 044 -25582552 / 9444640986 .

 மதியழகன் சுப்பையா-91 -9323306677, மதியழகன்@ஜிமெயில்.com
 -------------------------------------------------------------------------------------------------------------