Tuesday, April 17, 2012

கவிதை - நட்பின் அகவிலாசம் - சொர்ணபாரதி



நட்பின் அகவிலாசத்தை எவ்வாறுணரலாம்
வழக்கமாய்க் கரங்களில் தரப்படும்
தேநீர்க்குவளை டக்கென நாற்காலியின்
கைப்பிடியில் வைக்கப் படும்போதா

நெடுநாள் நட்பின் அடுத்தகட்ட இயல்பான
நகர்தலுக்கான உரையாடலிலா

உரையாடலின் பொருள்தந்த மகிழ்ச்சி
மழைநீராய் இறங்க ஆழத்தில் விதைத்திருந்த
நேசவிருட்சம் முளைத்து ஒரு திலகத்தில் நின்றபோதா

நின்ற விருட்சத்தைத் தன் உரையாடலின் பொருளைத்
தானே மாற்றி விசவிருட்சமென வெட்டிவீழ்த்தியபோதா
எங்ஙனம் அறிய முடியும்

நட்பென்பது மேட்டிமைச்செறுக்கின் பிச்சையா
படைத்தலைவனுக்கு வீரன்மீதுள்ள கண்டிப்பா
ஒரு முதலாளிக்கு ஊழியன் மேலுள்ள ஆதிக்கமா
மகாராணி உப்பரிகையின்மீது நின்று
கீழே வறியோருக்கு வீசிடும் கருணைப்பண்டமா

ஒரு பக்கத்தின் விருப்பம் தேவை சார்ந்தே
எவ்வாறு சுழலும் நட்புச் சக்கரம்

உயர்வு தாழ்வு
வளமை வறுமை
அறிவு அறிவின்மை
எவையும் பாராது சமமான அன்பின் பகிர்வே
நட்பின் சமத்துவம்

மூளையின் எடையும் பணப்பையின் கனமும்
நிலையற்ற மனமும் எப்படிச் சமன்செய்ய இயலும்
தோழமைத் தராசின் முள்ளை

ஒரு போராட்டம் வெற்றிபெறும் வேளை
வேறொரு தலையீட்டால்
ஓரினமே அழிந்து மீண்டும் தொடக்கப் புள்ளியில் நிற்பது
வரலாற்றில் நிகழலாம்
ஒரு தற்தாலிகப் பணியாளன்
நிரந்தரமாகும்வேளை
பணிநீக்கம் செய்து
மீண்டும் தற்காலிகச் சேர்ப்பு
ஒரு நிறுவனத்தில் முடியலாம்

பெருமரமாய்க் கிளைபரப்பி
வளர்ந்த நட்பை வேரோடு சாய்த்து
மீண்டும் பதியனிட்டு
விதையிலிருந்து முளைக்கச் சொல்வது
எவ்வாறு சாத்தியம்

எனினும் அவன் பயணம் தொடர்கிறது
நட்பின் கரம்பற்றி
எவரிடத்தும் எப்போதும் அவன் நட்பை ஆராதிப்பவன்.