குப்பை

அன்று ஞாயிற்றுக்கிழமை தன் வேலைகளில் மும்முரமாயிருந்தாள் நளினி. வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் மோகன். வழக்கம்போல் கணவனுக்கு காபியை கலந்து கொடுத்துவிட்டு மீண்டும் தன் வேலைகளில் ஈடுபட்டாள் நளினி. ‘குப்பை வண்டி’ யின் குரல் கேட்டதும் தன் சிந்தையை கலைத்தவன் உள்ளிருக்கும் நளினியை அழைத்தான்.

‘’குப்பை கொட்ட கூட நான்தான் வரணுமா? ஏன் நீங்க கொட்டக்கூடாதா? வீட்ல இருந்தா ஒரு சின்ன வேலை கூட செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ‘’ என்று கோபப்பட்டவாறே வெளியில் இருக்கும் குப்பைக் கூடையைக் கொண்டு போனாள்.

அவர்கள் வசிக்கும் ஏரியாவில் குப்பை வண்டிக்கு மாதம் பத்து ரூபாய் தரவேண்டும். வீட்டி வேலையில் இருந்த டென்ஷனில் அதை மறந்தே போனார்.

குப்பை சேகரிக்க வரும் பெண்மணி அதை நினைவுபடுத்தவே, ‘’ ச்சே! மறந்தே போய்ட்டேன். இதோ கொண்டு வரேன்’’ என்று காம்பவுண்டின் உள்ளே நுழைந்ததும் வெளியில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் தன் கணவனிடம், ‘’ என்னங்க! பத்து ரூபாய் கொடுங்களேன். குப்பை வண்டிக்காரங்க கேக்குறாங்க’’ என்று கேட்டாள்.

ஏன்? எதுக்கு? என்று கேள்விக் கனைகளைத் தொடுத்தவன், குப்பை வண்டிக்குத் தர வேண்டுமென்றதும்‘’ என்னடி இது அநியாயமாயிருக்கு, கவர்மென்ட்ல சம்பளம் வாங்கலை? ஏதோ ஐந்து ரூபாய்னா பரவாயில்லை மாதம் பத்து ரூபாய் தருவாங்க? எழுதிப்போட்டாதான் சரிப்பட்டு வரும்’’ என்று ஆத்திரப்பட்டான்.

இங்கே எல்லார் வீட்லையும்தான் தராங்க. என்னவோ இன்னைக்கு நேத்துதான் நடக்கிற மாதிரி கோபப்படுறீங்க! என்று பதிலுக்குக் கத்தியவாறே வெங்காயக் கூடையில் வைத்திருந்த சில்லறைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மறுநாள் தன் கணவனுடன் குழந்தையை அழைத்துக் கொண்டு தங்கசாலையில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்குச் சென்றாள். அலுவலக நேரமென்பதால் தங்கசாலை போக்குவரத்து நெரிசலில் திணறியது. திடீரென்று துர்நாற்றம் மூக்கைத் துளைக்க, மூச்சுவிட முடியாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே நோட்டமிட்டனர் பயணிகள்.

இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்துக்கு முன்பு ஒரு குப்பை லாரி நின்று கொண்டிருந்தது. வெகு நேரம் மூக்கை மூடி, மூச்சு விடமுடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.

குழந்தையின் மூக்கை கர்சீஃப் வைத்துமூட... சிறிது நேரத்துக்கெல்லாம் கர்சீஃபை எடுத்துவிட்டுக் கத்திய குழந்தை, எப்பொழுது குப்பைலாரி செல்லும் என்றாகி விட்டது மோகனுக்கு. குப்பை லாரி சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் . பயணிகள் அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கினர்.

‘’கொஞ்ச நேரத்துக்கே நம்மாலே நாற்றத்தைப் பொறுத்துக்க முடியலை. அவங்க ஒரு நாள் முழுவதும் அதுலேயே கஷ்ட்டப்படுறாங்களே, அவங்களுக்கு எப்படி இருக்கும். நாம என்னடான்னா மாதத்துக்கு பத்து ரூபாய் தர்றதுக்கு அழுவுறோம். பாவம் இல்லீங்க அவங்க’’ என்றாள் நளினி.

மோகன் அதை ஆமோதித்தவாறே அமைதியாய் நடந்தான். இப்பொழுதெல்லாம் குப்பை வண்டிக்காரர்களுக்கு நளினிக்கு முன்பே காசு கொடுத்துவிடுகிறான் மோகன்.