Monday, December 7, 2020

மீண்டும் வலைப்பூவில் ...

வலைப்பூவில் எழுதி சில ஆண்டுகள் ஆகின்றன.முகநூலுக்கு வந்த பிறகு வலைப்பூவில் எழுதுவது அறவே நின்றுவிட்டது,  முரண்களரி இணையதளம் தொடங்கலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழரிடம் கேட்டிருந்தேன். அதற்கான கட்டணமும் கட்டினேன். ஆனால் படைப்புகளை அனுப்பிச் செயல்படத் தொடங்கவில்லை. என்னிடம் வேலைமுறையில் ஒரு ஒழுங்கில்லை. முரண்களரி வலையொளி தொடங்கினேன். அதுவும் இப்போது தொய்வாக இருக்கிறது. இன்னும் கூடுதலாகச் செயல்படவேண்டும். அதற்கு மிகுந்த உற்சாகத்துடன் செயல்படும் மனம் நிலையாக இருக்க வேண்டும்.  

Thursday, March 26, 2020

ம.மதிவண்ணனின் “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”


ம.மதிவண்ணனின் “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”
...........
கவிதையின் தீவிரப் படிப்பாளன் நான். எந்தக் குழுவைச் சேர்ந்தவர் புகழ்பெற்றவரா புதியவரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. தேடித் தேடிப் படிப்பேன். ஆனால் அண்மையாண்டுகளில் கட்டுரை சிறுகதை நாவல் மொழிபெயர்ப்பு எனப் பிற வடிவங்களைப் படிப்பதில்  கவனம் செலுத்தியதால் கவிதையின் மீதான ஆர்வம் சற்றே குறைந்திருந்தது. அவ்வப்போது கிடைக்கும் சில கவிதை நூல்களைப் படிப்பேன். அவ்வளவே. வெறித்தனமாகத் தேடிப் படிக்கும் மனிநிலையெல்லாம் இல்லை. இந்தச் சூழலில் அண்மையில் கவிஞர் ம.மதிவண்ணனின் “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா” எனும் கவிதை நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய “நெரிந்து” “நமக்கிடையிலான தொலைவு” ஆகிய இரு கவிதை நூல்களையும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். அவரின் வேறு சில நூல்களை வாங்கிப் படிக்காமல் வைத்திருக்கிறேன்.
எனக்குப் பிடித்தமான கவிஞர்களில் ஒருவர் மதிவண்ணன். காரணம் அவர் வெறும் கவிஞர் மட்டுமில்லை; சாதி ஒழிப்புப் போராளி. களச்செயல்பாட்டாளர். அவருடைய நெரிந்து கவிதைத் தொகுதி எனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாகும்.
 “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா” 2013 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டிருக்கிறது. கவிஞர் மதிவண்ணனனைக் குறித்து “ பார்ப்பனியமும் சாதியமும் விழுங்கிச் செரிக்க இயலாத கவிதைகளை எழுதி வருபவர்” என்று பின்னட்டைக் குறிப்புத் தெரிவிக்கிறது. உண்மைதான். அதுவே அவருடைய தனித்தன்மையாகும்.
அத்தொகுதியிலிருந்து மூன்று கவிதைகளை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
1.
உன் மொழி உனக்கெவ்வளவு
அந்நியமென்று,
வாய் திறந்தொரு வார்த்தை
பேசுவதெவ்வளவு
கடினமென்று.
ஒரேயொரு பார்வை புகட்டும்
வலியைத் தாள முடியாமல்
போவதெங்ஙனமென்று,
முன்பின் அறியாத ஒருவனிடம்
நொடியில் பகையுணர்ச்சி தோன்றுதல்
எவ்வாறு சாத்தியமென்று
அறிய
கொழுப்பேறிய மிருகமொன்றிடம்
வழி கேட்டுப் பார்
சக்கிலியக் குடிக்கு.  

2.
பரந்து விரிந்த
உனது எல்லைகளைப்
பத்திரப்படுத்தும் தந்திரத்துடன்
நீ போடும் கோட்டுக்குள்
சவம் வேண்டுமானால் கிடக்கலாம்.
உணர்ந்த இவ்வுயிர்ப்பை
உணர்த்த வழியில்லை வேறு
அத்து மீறலைத் தவிர.

3.
சர்ச்சையும் சமயத்தையும்
விழுங்கிய
திருப்தியோடும் திமிரோடும்
தன் பிளவுண்ட நாவை
துருத்தியவாறே
ஊர்ந்து நெளிந்து
வருவதற்கெதிராய்த்
துரும்பை அசைக்கவும்
தெம்பில்லாதவரும்
என்னைப் பெலப்படுத்துகிறவருமான
கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய
பெலனுண்டு
கிறிஸ்தவச் சக்கிலியனான எனக்கு.

இக் கவிதைத் தொகுதியைக் கருப்புப் பிரதிகள் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது.