Saturday, October 1, 2011

சிறுகதை - அறியாப் பருவத்தில்... - யாழினி முனுசாமி



ன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவள் வெகு நாட்களுக்குப் பிறகு தேவாலயத்திற்குச் சென்று முழங்காலிட்டு மனதுக்குள் ஜெபிக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஆண்டவரே... பிரிட்டோ காணாமப் போய் இன்னையோட ரெண்டு நாள் ஆகுது. நாங்க  யாருக்கு என்ன பாவம் செஞசோம்...? எப்படியாவது அவனை எங்க கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிறுத்திடு. இல்லனா இங்க நான் இனிமே வரவே மாட்டேன்...

பிரார்த்தனை முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியேறினாள்.

என்ன நடந்தது என்று புரியாமல் அழுகையாக வந்தது கேத்ரினுக்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது , எங்கடா போறே?என்று கேட்ட அம்மாவுக்கு , பாட்டி வீட்டுக்கு என்று ஏனோதானோவென்று பதில் சொல்லிவிட்டுப் போனான். அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்த தாத்தாவைப் பார்த்ததும் அனைவரும் குழம்பினர்.

பிரிட்டோ அங்கு செல்லவில்லை என்ற செய்தி அனைவரையும் கலவரமடையச் செய்தது. அவன் அங்கதானப்பா வரேன்னு சொன்னான் என்று அழத் தொடங்கிவிட்டாள் அம்மா. அழாதம்மா , வேற எங்கனா போயிருப்பான். வந்துடுவான் என்று தேற்றினார் தாத்தா.

இரவு வெகுநேரமாகியும் அவன் வீடுதிரும்பவில்லை. ஆளுக்கொரு பக்கமாய்த் தேடத் தொடங்கினர்.

ஏதேதோ சிந்தனைகள் தோன்றி கேத்ரினை க் குழப்பத்தில் ஆழ்த்தின.

கேத்தி நான் செத்துட்டா நீ அழுவியா?என்று பிரிட்டோ கேட்டது நினைவுக்கு வந்தது.
என்ன உளர்றே? என்றவளிடம் ,
இல்லை கேத்தி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். யார்க்கிட்டயும் சொல்லக் கூடாது, சின்னுவ நான் விரும்பறேன். அவ இல்லனா நான் செத்துடுவேன் என்றான்.
அவளுக்குத் தெரியுமா?
இல்லை கேத்தி. நான் எதுவும் அவக்கிட்ட சொல்லவுமில்ல  கேட்கவுமில்ல. கேட்டு அவ இல்லைன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாது கேத்தி என்றழுதான்.
இதெல்லாம் சரி வருமா? ஏதோ ஃபேமலி ஃபிரெண்டா வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்காங்க... இது தெரிஞ்சதுன்னா பிரச்சினையாயிடுமில்ல? நாவேண்ணா கேட்டுப் பாக்கட்டுமா?

வேண்டாம் கேத்தி. சின்னோட படிப்பு வசதியெல்லாம் வச்சிப் பாக்கும்போது கண்டிப்பா ஒத்து வராது.

பிரிட்டோவின் டைரியில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த காதல் கவிதைகளிலும், காதல் வசனங்களிலும், காதல் பாடல்களிலும் சின்னுவே நிறைந்திருந்ததும் சின்னுவின் புகைப்படம் ஒன்றையும் டைரியில் மறைத்து வைத்திருந்ததும் நினைவுக்கு வந்து அவளை பயமுறுத்தின. இடையிடையே, கடவுளே, அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது என்று மனத்தில் வேண்டிய படியே வந்து கொண்டிருந்தாள். வீட்டை நெருங்க நெருங்க  அவள் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது. ஓட்டமும் நடையுமாக வீடடைந்தாள்.

தெருக்காரர்கள் எல்லாம் அப்பாவைச் சூழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் மனத்தில் கலவரம் உண்டானது. வழியில் சுகுமார் அண்ணன் சொன்னது உண்மைதான் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது.

அந்த அண்ணன் சொல்றது உண்மையாப்பா?என்றவளின் முகம்பார்க்க முடியாமல் குமுறி அழத்தொடங்கினார் அப்பா. அவளுக்கு அழுகை பெறுக்க முடியவில்லை. வீரிட்டு அழுதாள்.

தகவலறிந்து சிறிது நேரத்திற்குள் உறவினர்கள் ஒவ்வொருவராய் வீடுவரத் தொடங்கினர்.

சின்ன வயசு. என்ன பண்றது...நாமதான் மனச தேத்திக்கணும்பா!
அம்மாடி, அம்மா அம்மானு உன்னயே சுத்தி சுத்தி வருவானேம்மா அவனுக்கு எப்படிமா உன்னவிட்டுப் போக மனசு வந்தது?

ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இனிமே எனக்குன்னு யாருக்கா இருக்கா...? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்?என்று அம்மா உடைந்து அழுதுகொண்டிருந்தாள். தெருவில் சாமியானம் கட்டப்பட்டது. உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன.

தொலைபேசி மணி அடித்தது. ஓடிப்போய் எடுத்தாள் கேத்ரின். எதிர்முனையில் அத்தைமகன் தேவா. அப்பாவிடம் கொடுத்தாள்.

நீங்களே எல்லாத்தயும் பாத்துக்குங்கஎன்றபடி போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது ஓடிவந்து கேத்ரினைக் கட்டிக்கொண்டு அழுதாள் சின்னு. சின்னுவின் அம்மா அழுதுகொண்டே புலம்பிக்கொண்டிருந்தாள்.
ஏன் இப்படிச் செஞ்சான்... அழகுபையனாச்சேம்மா! யாரு கண்ணுபட்டதோ...வீட்டுக்கு வரும்போதெல்லாம் மாமி ...மாமின்னு உயிரை விடுவானே...இனிம யார் என்ன அப்படி கவனிப்பாங்க...
மல்லிகா மாமியின் புலம்பல் கேத்ரினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லாம் உன்னாலதானடி பாவி...ஒனக்கு சாதி முக்கியம் . சாதியையும் ஒறவுங்களையும் விட்டுக்கொடுக்க முடியாதவங்க எதுக்கு அவனோட மனசுல ஆசையை விதைக்கணும்? இப்ப வந்து புலம்பறாளே  என எரிச்சல் பட்டாள்.
“ அந்தக் கொடுமைய நான்தானே முதல்ல பார்த்தேன். காணும்னு தேடிட்டுப் போனப்ப ரெட்டேரியில அவனோட சட்டையைப் பார்த்தேன். பாடிய போலிசு  ஜிஎச்.க்கு எடுத்துட்டுப் போயிட்டதா பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க... இப்படி  ஆகும்னு தெரிஞ்சிருந்தா அவன  நான் தனியா விட்டிருக்க மாட்டேனே...என்று முகத்தைப் பொத்திக் கொண்டு கேவிக்கேவி அழுதான் தேவா.

தன் தோள்மீது சாய்ந்து அழுதுகொண்டிருந்த சின்னுமீது கோபம்கோபமாய் வந்தது கேத்ரினுக்கு.

ஒருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது சின்னுவும்  அவள் அம்மாவோடு வந்திருந்தாள். தனியாக இருந்த சமயம்பார்த்து கேத்ரினும் தேவாவும் பிரிட்டோ அவளைக் காதலிக்கும் விசயத்தைச் சொன்னார்கள்.

நான் பிரிட்டோகிட்ட இதுவரைக்கும்  அப்படி நெனச்சுப் பழகல என்று சிரித்தாள்.

அவன் உன்ன ரொம்ப டீப்பா லவ்பண்றான் சின்னு!

எதைவச்சு அவன் அப்படி நினைச்சான்னு எனக்குத் தெரியல. ஆனா நான் அவன அப்படி நெனக்கல என்று மறுத்துவிட்டாள்.

பிரிட்டோ ...எப்படி சொல்லறதுன்னு தெரியல. அவ மனசுல அப்படியெல்லாம் ஒண்ணுமில்லனு சொல்லிட்டா.என்றதும்,
சொல்லாத கேத்தி! சொல்லாதஎன்று கத்திக்கொண்டே ஓடினான்.
பிரிட்டோ நான் சொல்றதைக் கேளு! தயவுசெஞ்சி தப்பாப் புரிஞ்சுக்காத. என்ற தேவாவிடம்,
உங்கள யாரு கேட்கச் சொன்னது? தெரியாம இருந்தாலாவது அது முகத்தைப் பாத்துப் பேசறத கேட்டுக்கிட்டே சந்தோசமா இருந்திருப்பேனில்ல. இனிமே இங்க வந்தா நான் எப்படிப் பாப்பேன்...நேர்ல நின்னு எப்படிப் பேசுவேன்?என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

என்ன சொன்னுச்சு...அப்படி நெனச்சு பழகலையாமா? அப்போ அது பேசுனது பழகினதுக்கு ...என்னையே சுத்தி சுத்தி வந்ததுக்கெல்லாம் என்ன அர்த்தமாம்? நல்லா படிக்குது. இங்கிலீஷ்ல எல்லாம் பேசுது. அதான் வேணாங்குது. அவங்க கேஸ்ட்ல பொறந்திருந்தாலாவது எனக்குக் கட்டிக் கொடுத்திருப்பாங்கல்ல என்று குழந்தைமாதிரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒருதடவை வீட்டுக்கு வந்திருந்தப்ப மல்லிகா மாமி, பிரிட்டோ பாக்கறதுக்கு அழகா இருக்கான். எங்க கேஸ்ட்டா இருந்தா சின்னுவ அவனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருப்பேன் னு பேசிக் கொண்டிருந்தது பிரிட்டோவின் செவியில் நுழைந்து மனத்தில் ஆழப் பதிந்துவிட்டிருக்கிறது.
அவங்க ஏதோ விளையாட்டா சொல்லி இருப்பாங்க. அதைப்போய் மனசுல வச்சுக்கிட்டு. எல்லாத்தையும் மறந்துடு பிரிட்டோ.

முடியாது கேத்தி.என்று தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். அதற்குப் பிறகு அவன் சந்தோசம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. சின்னுவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டது. பிரிட்டோ மௌனமாகவே இருந்தான். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

ஆம்புலன்ஸ் வேன் தெருமுனையில் நுழைந்தது. வாசலிலிருந்து தெருவுக்கு ஓடிய கூட்டம் பெருங்குரலெடுத்துக் கதறியது. ஆம்புலன்ஸ் வீட்டுவாசலில் வந்து நின்றது. பாடி இறக்கப் பட்டது.  பாட்டி மார்பிலடித்துக் கொண்டு அழுதாள். அம்மா தெருவில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். தம்பி தங்கைகள் கதறினார்கள். அப்பா பெரியப்பா சித்தப்பாவெல்லாம் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள்.

உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு முகம் கருவடைந்து காணப்பட்டது. இறந்து மூன்றுநாள் ஆகிவிட்டதால் பாடியை சீக்கிரமாக எடுத்துவிட அவசரப்படுத்தினார்கள்.

மொகம் பாக்கிறவங்கயெல்லாம் சீக்கிரமா பாத்துடுங்க.!

கேத்தி...வாம்மா...கடைசியா ஒருதடவை அண்ணனைப் பாத்துடு. எடுத்துடப் போறாங்கம்மா... என்று  வற்புறுத்தி அழைத்து வந்து காட்டினார்கள்.

முகம் பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.

இது எங்க அண்ணன் இல்ல...இது பிரிட்டோ இல்ல...என்று பயந்து கத்தினாள்.

கொஞ்ச நேரத்தில் அதே ஆம்புலன்ஸ் வேனில் பாடியை இடுகாட்டிற்குக் கொண்டுபோனார்கள்.

பிரிட்டோவுடன் சேர்ந்து அவனது காதலும் புதைந்துபோனது.
--------------------------------------------------------------