Monday, July 30, 2012

"அம்மா வந்தாள்" நாவலைப் பற்றி தி.ஜானகிராமன்...



அம்மா வந்தாளைப்  பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம் . எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. நான் பிரஷ்டன்என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிருந்துதான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.

அம்மா வந்தாள்நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி. மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள் பலவற்றைப் பார்த்து ஊறி வெகு காலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு பாத்திரத்திலும்  நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன. அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாடசாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், ஸம்ஸ்கிருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லௌகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஓர் உருவமாக வந்தன.

மையக் கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுகிவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன். அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குத்தான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம் . அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக் கூடாது”.

---------------------------------