Monday, August 8, 2011

நூல் விமர்சனம் சாருமதியின் அறியப்படாத மூங்கில் சோலை ...



“ முந்திய பகலில் எம்முடன் இருந்தோர்
இந்த இரவில் இல்லாது போயினர் ”


‘கந்தசாமி யோகநாதன்’ எனும் இயற்பெயரைக் கொண்ட சாருமதியின் தொகுக்கப்பட்ட கவிதைகள், அறியப்படாத மூங்கில் சோலை. 1926-இல் இலங்கையில் பிறந்து 51-ஆவது வயதில் 1998-இல் மரணித்துப்போன சாருமதியின் கிடைத்த கவிதைகளைத் தொகுத்து 2010-இல் வெளியிட்டுள்ளனர். பதின் பருவத்திலே மார்க்சியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு மார்க்சிய அரசியல் களத்தில் செயலாற்றியவர், சாருமதி . இந்தியப் புரட்சியாளர் சாருமஜூம்தார்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக ‘க. யோகநாதன் ’ என்னும் தன் பெயரை சாருமதி என மாற்றிக் கொண்டதே மார்க்சியத்தின்மீது அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலை உணர்த்துகிறது. தன் பெயரை மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னிரு பிள்ளைகளுக்கும்கூட சாரு நிவேதன், சாரு வினோதன் எனப் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நூறு கவிதைகளை இந்நூலில் தொகுத்துள்ளனர். பெரும்பாலான கவிதைகள் உலக உழைக்கும் மக்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் ஒரே சித்தாந்தமான மார்க்சியத்தின் அடிப்படையிலே இயங்குகின்றன.

ஒரு சில தீவிரமான காதல் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. தீவிரமான அரசியல் கவிதைகளை எழுதுபவர்கள் காதல் கவிதைகள் எழுதுவதைப் பெரும்பாலும் தவிர்க்கவே செய்கின்றனர். சாருமதி அக்கூச்சத்தை உடைத்திருக்கிறார். தான் நேசித்த ராஜியை உருகிஉருகி எழுதியிருக்கிறார். பாரதிக்குக் கண்ணம்மாபோல், நகுலனுக்கு சுசீலாபோல் சாருமதிக்கு ராஜியாகவும் இருக்கலாம்.

தன் நிலத்தின் அரசியலையும், மக்களையும், சக மனிதர்களின் நயவஞ்சகங்களையும், காதல் ஏக்கங்களையும், துரோக அரசியலையும், குருதிதோய்ந்த நாட்களையும் கவிதையாக்கியிருக்கிறார் ,சாருமதி.

1972-ஆம் ஆண்டு தொடங்கி 1997 வரை கால்நூற்றாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட இக்கவிதைகளில் அக்காலகட்டத்து இலங்கை அரசியல், தமிழின ஒடுக்குமுறை மட்டுமல்லாது இந்திய அரசியல் சூழலையும் கவனப்படுத்தி எழுதியிருப்பது சாருமதியின் அரசியல் புரிதலை உணர்த்துகிறது. தொடக்ககாலக் கவிதைகளுக்கும் பிற்காலக் கவிதைகளுக்குமான வேறுபாடுகள் சூழலின் காரணமாக அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட கருத்துநிலை மாற்றத்தால் விளைந்தவை என்பதனை நம்மால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெரும்பாலான கவிதைகளின் மொழிநடை வானம்பாடிகளின் பாணியில் அமைந்திருப்பது வாசிப்பில் ஒருவித அயர்வை உண்டுபண்ணினாலும் கவிதைகளின் களமும், எழுதப்பட்ட காலமும், பின்புலமும் அவ்வயர்வைத் தணித்துவிடுகின்றன.

மார்க்சியத்தை அவரின் கொள்கையாக வரித்துக் கொண்டதால் இந்தியப் புரட்சிகர இயக்கத்தைத் தோற்றுவித்த சாருமஜூம்தார் பற்றியும், மேதினம், போபால் துயரம், வெண்மணிப் படுகொலை பற்றியும் எழுதியிருக்கிறார். வர்க்க உணர்வும், மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும் இத்தொகுப்பு நெடுக ஊடாடி இருக்கின்றன.

எழுபதுகளில் எழுதிய கவிதைகளில் தமிழன் என்கிற அடையாளத்தை மறுத்தும், உணர்ச்சிகரமான தமிழ் அரசியல் பேசுபவர்களை நகைத்தும், தமிழின விடுதலையை வெறுத்தும் ‘நாங்கள் இலங்கையர்கள்’ (ப.5) எனும் கவிதையை எழுதியிருக்கிறார். அக்கவிதையில் ,
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனைக் கிண்டலடித்திருப்பதோடு, தமிழ் பொல்லாதது என்றும் சாடுகிறார். காரணம், காசி ஆனந்தனின் உணர்ச்சிகரமான கவிதைகளைப் படிக்கும் தமிழர்கள் சிங்களர்கள் மீது காரணமின்றிப் பகைவுணர்வு கொள்கின்றனர் என்று சாருமதி கருதியிருக்கிறார். அதனால் அவர் தமிழன், சிங்களன் வேறுபாடுகளை வெறுத்து, வர்க்க ஒற்றுமையை நேசித்து இக்கவிதையை எழுதியிருக்கிறார். பட்டினி கிடக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்காக ஒரு சிங்களவன், தமிழன் ஒருவனிடம் கடன்வாங்கி அப்பெண்ணுக்கு உதவுவதை நெகிழ்வான கவிதையாக்கித் தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘நாங்கள் மக்கள்; நாங்கள் இலங்கையர்’ (ப. 8) என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

‘ இராமர்களின் வருகைக்காய் அகலிகைகள் காக்கட்டும் ’(ப.23) எனும் கவிதையிலும் அதே உணர்வைப் பதிவு செய்திருக்கிறார்.

“ ....உன்னைப் போலவே
நானுமோர் இளைஞன்
உன்னைப் பிறப்பித்த
இந்த மண்தான்
என்னையும் பிறப்பித்தது
பிறப்பால் நீயும் நானும்
இலங்கையர்
பிறப்பால் மட்டும்தானா?
இல்லை
உணர்வாலும்தான்
அதை நீ
சொல்லில் காட்டிவிட்டாய் ” (ப.25)

என்று.

கால ஓட்டத்தில் வரலாறுகள் மாறுகின்றன. மனிதர்கள் மாறுகின்றனர். சிந்தனைகளும் மாறுகின்றன. ‘அவரே இட்டார்’ (ப.109) எனும் கவிதையில்,

“ ....வாழப் பிறந்தவர் நாங்கள் இல்லையென்ற
வக்கிரம் அவர் கொண்டால்
காலக் கலண்டரில் கட்டாயம் இந்நாடு
கடைசியில் ரெண்டாகும்...
....
....
கயவர் ஆட்சியிலே எங்கள் இனக்
காப்பும் எரிந்த தடா
சொத்தினை இழந்தோமடா நாங்கள் எங்கள்
சுதந்திரம்தான் இழந்தோம்
இத்தனை காலமும் இருமொழி நாடென்ற
இருப்பினை நாம் இழந்தோம்
இனி
எங்களில் ஏது பிழை
இத்தரை இரண்டாய்ப் போவதற்கான வித்தினை
அவரே இட்டுவிட்டார்.” (ப.109-110)

ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில், 1984-இல் சாருமதி எழுதிய கவிதை இச்சூழலுக்கும் பொருந்தி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ‘இந்த நாட்கள்’ (ப.171) எனும் கவிதை இப்படி முடிகிறது-

“ ....
எல்லா எலும்புகளும் ஒன்றாய்த் திரளும்
எல்லாத் தலைகளும் ஓர் நாள் நிமிரும்
கிழக்கின் வானில் செவ்வரி படரும்
தமிழன் தன் கால்களில் எழுவான்
உதய ஞாயிறை என் பூமி காணும்.”

இத் தொகுப்பிலிருக்கும் முக்கியமான கவிதைகளில் ஒன்று... ‘இன்றும் நாளையும் தமிழனின் வாழ்வும்’ (ப.172) என்பது. அக்கவிதையில் தமிழனின் தலைவிதியை எண்ணி அழுது வடிந்து கொண்டிராமல் இறுதி வெற்றி மக்களுக்கே எனச் செயல்படத் தூண்டுகிறார்.

“ ....
பங்களாதேஷ்
இங்கும் நிகழலாம்
சரித்திரத் தவறுகள்
மீண்டும் நடக்கலாம்
ஆயினும் ஆயினும் மக்கள் இருப்பர்
மார்க்சீசம்
சொல்வதால் மட்டுமல்ல
மானிட வரலாறும்
அதைத்தான் சொல்கிறது
இறுதி வெற்றி
மக்களுக்கே
அந்த வைகறை வரட்டும்
நான் இல்லாவிடினும்
என் பிள்ளை
புல்லின் நுனியில்
தூங்கும் பணியை
கைகளால் தழுவி
முகத்தில் பூசி
மகிழ்ந்து கொள்ளட்டும் ” என்கிறார்.

அந்நாள் எந்நாளோ..?

“ ..... நன்றியும் வேண்டாம்
நம்பிக்கையும் வேண்டாம்
வெந்ததைத் தின்போம்
விதி வந்தால் சாவோம் ” (ப.22)
என்று விரக்தியாகவும் பேசுகின்றார்.

“......
குடிசைக்கு விடிவுவரும் - அம்மோவ்
கொடுமைக்கு முடிவு வரும்
உடைமைக்கு உரியோராய் - அம்மோவ்
உழைப்பவர்கள் வென்றுவிட்டால் (ப.80)

என்று நம்பிக்கையாகவும் பேசுகின்றார்.


“ ஓ...என் மௌனப் பறவையே
ராஜிப் பேடையே
நீ யெனக்குக் காதலியா?
அல்லது கடவுளா?” (ப.48)

எனக் காதலிக்காக உருகவும்செய்கிறார்.


“.....
சொத்துடைமை வர்க்கங்களின்
சித்தங்களினால்
சிறைவைக்கப்பட்டிருக்கும்
பெண்ணின் சிந்தனைகள்
எப்பொழுது
சுதந்திரத்தை தரிசிக்கும்?
வளையல்களினதும் கொலுசுகளினதும்
வாழ்வில் மதிமயங்கி
வாழ்வின் துயரங்களைப் புதைக்க முயன்ற
தோழியரே எழுக
இனி எழுக .” (ப.88)

என்று பெண்ணுரிமைக்காகக் குரலும் கொடுக்கிறார்.

“கருமை ஒளியாய் நீயிருப்பாய்” என்றும்

“ இயற்கை தந்த இன்னிசையே
இறக்கை கொண்ட வாத்தியமே”

என்றும் குயிலை வியக்கவும் செய்கிறார். காதல், விரக்தி, அரசியல், அழகியல் என அனைத்துவிதமான உணர்வுகளையும் தம் கவிதைகளில் பதித்திருக்கிறார், சாருமதி.

தொடக்ககால ஈழத்துப் புதுக்கவிதைப் போக்கையும், கால்நூற்றாண்டு இலங்கை - இந்தியச் சூழலையும் புரிந்துகொள்ள இத் தொகுப்பு துணைபுரிகிறது.

நூல்: அறியப்படாத மூங்கில் சோலை...(கவிதை)
ஆசிரியர்: சாருமதி
வெளியீடு : நந்தலாலா
133 , 1 / 1 , திம்புல்ல வீதி ,
ஹற்றன்,
இலங்கை.
பக். 242 .
இலங்கை விலை ரூ. 200 . 00 

நன்றி- www.thadagam.com