Friday, March 30, 2012

நான் படித்து நெகிழ்ந்த யூமா வாசுகியின் ஒரு கவிதை...உங்களுக்காக...


இன்டர்வியூ
பரிசீலிக்கும் கரங்களின்
வியர்வைக்கறை படிந்து 
விளிம்புகள் பழுப்பேறிய சில 
காகிதத் தகுதிகளை 
அடுத்த நாளுக்கான ஆயத்தமாய்
அகாலம்
எண்ணிச் சரிபார்க்கும்.
வெக்கையில் முறுகும் நகரத்தினூடே
சில்லறைக்கடன் சித்திக்கும்
அனுகூலத்திசை நாடும்
நடைதளர்ந்த்தும் பசிவேகும் குடல்.
சிகரெட் புகைச் சமாதானமிட்ட
ஒரு கோப்பைத் தேநீரால்
பிரியங்காட்டும்
அறிமுகங்களுக்காக
உடனடித்திருத்தம் வரும் கடன்இலக்கில்.
சாலையோரக் கல்லில் அமர்கையில்
மடிந்துநோகும் வயிற்றின் காலியிடம்
வெட்கமற்றுக் காத்திருக்கிறது-சாத்தியமற்ற
உணவருந்த அழைக்கும் குரலுக்கு.
பெருஞ்சாலையின் வாகனப் பேரிரைச்சலை
மெல்ல விழுங்குகிறது எதுவோ
நீர்த்து நிலையற்று வடிவங்கள் கலந்து
மயங்கிவருகிறது வெயில்.
தவறிய புத்தகம் எடுக்க மயங்கும் தலையைக்
குனியப் போவதில்லை நான்-வீழின்
என் தலையேந்தி மடியில் கிடத்த
இங்கே நீயில்லை.
அறைக்குப்பைகளோடு
என் முகம்காண ஏங்கும் உன் கடிதங்கள்.
முடிவிற்குள் இழுக்கிற உன்
முதுமையின் பொருட்டாயினும் உன்னைத்
தேடிவரும் நினைவு- ஒரு
கேள்விக்கு பதிலற்று அஞ்சுகிறது.
அலுவலகத்திற்கு மாற்றாக சிறு வீடு
மேசையிடத்தில் நைந்த கட்டில்
வாசல் நாய் கதவுச் சேவகனின் பிரதி.
மறந்துபோன கோலத்தைத் தரையில்
கிறுக்கிப் பார்த்தபடி
“ எத்தனைக்காலம் இப்படி இருப்பாய்”
என் ஒரு கேள்வியை முனகுவாயே அம்மா
இன்னமும் கிடைத்தபாடில்லை
ஒரு பதிலும்.
--------------------------------------------

Wednesday, March 28, 2012

யூமா வாசுகியின் இரண்டு கவிதைகள்...

யூமா வாசுகியின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன்...அவருடைய கவிதைகள் குறித்து விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளேன்.
இப்போதைக்கு இரண்டு கவிதைகளைப் படிக்கத் தருகிறேன்.

1.     த்தனைபேர்கூடி
        ரயிலுக்குக் காத்திருக்கையில்
        என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
        ஒரு காக்கை
        தலை தட்டிச் சென்றதும்
        கேன்டீனில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி
        சனி கழிய
        தலையில் தெளித்துப்போவென
        பரிவாகச் சொன்னாள் பெண்ணொருத்தி.

2.    பொழிகிற பெருமழையில்
       என் உப்புமூட்டை கரைகிறது
       சிறிது சிறிதாய்
       அமைத்த தடுப்புகளையெல்லாம்
       தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
      கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
      கடந்த கோடையிலேயே.
-----------------------------------------------------------------

Tuesday, March 27, 2012

மக்கள் கவிஞர் இன்குலாப் கவிதை - ஒவ்வொரு புல்லையும்....

 
வ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
                             ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
                        ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
                          ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
                        ஒவ்வொரு புல்லையும்...

Monday, March 26, 2012

ஆட்சியாளர்கள் பற்றி முகநூலில் படித்த சிறுகதை...பட்ஜெட் – விலை உயர்வு குட்டி கதை
மூன்று மீன்கள்

“லச்சுமி... ஏய் லச்சுமி... நா கூப்பிடுறது காது கேட்கலயா?”
மீனவன் மிகவும் உற்சாகமாக சத்தம் போட்டுக் கூப்பிட்டான்.

“ஏய் மனுசா! தொண்டை கிழிய ஏன் இப்படிக் கத்தற... வானமா இடிஞ்சி விழுத்திடுச்சி.”

“கொழுத்த மீன் ... நல்ல மீனு ... லச்சுமி, மூணு பிடிச்சிட்டேன். கரம் மசால் தூக்கலா போட்டு நல்லா வறுத்துவை.”

“உனக்குயின்னா மூளை கீளை மழுங்கி போயிடுச்சா என்ன? ஒரு வாரமா நான் நாயாட்டம் கத்திகினு இருக்கேன். வீட்ல உப்பும் இல்ல, மிளகாயும் இல்ல, இதுல கரம் மசாலாவுக்கு எங்க போறது?”

“சரி சரி புலம்பாத, எண்ணெயில் போட்டாவது பொறிச்சு வை”

“இன்னாய்யா இஷ்டத்துக்கும் பேசிகிட்டே போறே, உப்பில்லாத வீட்ல எண்ணெய்க்கு எங்க போறது. நம்ம குழந்தைங்க சாப்பாட தொட்டு நாலு நாள் ஆகுது.”

“உம் புராணத்தை எல்லாம் இங்க பாடாத, மீனை நெருப்பிலாச்சும் பொறிச்சு வை.”

“இன்னாய்யா நினைச்சுக்கிட்டு இருக்கிற. நெருப்புக்கு எங்க போறது. விறகு கட்டைக்கு நான் எங்க போறது?”

“இன்னா பொம்பள நீ. மீனை பிடிச்சு கொடுத்தாலும் சமைக்க மாட்டுறியே? நான் ஒரு முட்டாப் பயல். தேவையில்லாம இந்த மீன்களைப் புடிச்சி வந்துட்டேன். பாவம் தண்ணீரிலே கொண்டு போய் விட்டுடறேன். இதுகளாவது உயிர் பொழைச்சு போகட்டும்.”

இப்படி சொல்லிவிட்டு மீனவன் குளத்தை நோக்கிச் சென்றான். உயிருக்கு துடித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று மீன்களையும் எடுத்து தண்ணிரில் வீசி எறிந்தான். தண்ணிரில் அந்த மீன்கள் வீழ்ந்தவுடன். “ஜிந்தாபாத் .. ஜிந்தாபாத்”என்று முழக்கமிட்டன.

மீனவனுக்கு ஆச்சரியத்தில் வாய் பிளந்து கொண்டது. மூன்று மீன்களில் ஒரு மீன் “செயலலித்தா ஜிந்தாபாத்” என்று கத்தியது.

மற்றொரு மீன் “மன்மோகன் சிங், சோனியா ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மூன்றாவது மீன் “கருணாநிதி, அத்வானி ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது.

மீனவன் அவைகளைப் பார்த்து கேட்டான் : “மோசமான பிசாசுகளாக இருப்பீங்க போல இருக்கே. நான் தானே உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தேன். நன்றி கெட்ட ஜென்மங்களா… நீங்க செயலலிதா, மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, கருணாநிதி என்று புதியதாக யார், யார் பெயரையோ புகழுறீங்க.”

அதற்கு மீன்கள் பதில் உரைத்தது.

“ஏய் பாவப்பட்ட மனுசனே! இவர்கள் ஆட்சி புரிவதனால் தான் உங்க வீட்ல சாப்பிட ஏதும் இல்லை. அதனால நாங்க உயிர் பொழச்சோம். இல்லாவிடில் இன்னேரம் நீ எங்களை சாப்பிட்டு விட்டு இருப்பாய்.”
---------------------------------------------------------------------
விஜய்(தெலுங்கு)…. மக்கள் பண்பாடு இதழ், 2000

----------------------------------------------
நன்றி...தோழர் கி.நடராசன்.

Tuesday, March 20, 2012

கவிதை - அவரின் புன்சிரிப்பு - பானு ஜியோத்சனாலஹரி

படுகொலை செய்யப்பட்ட தோழர் கிஷன்ஜியைப் பற்றிய கவிதை...


சித்திரவதைகள் முடிவுற்றன
அவர்களில்
 ஒருவன்
நிலம் நோக்கி உமிழ்ந்தான் வெறுப்புடன்


மேல் நோக்கி நிலைகுத்தி
நின்றது அவரது பார்வை


அவர்களும் பார்த்தார்கள்
சித்திரதை செய்யப்பட்ட
முகத்தின் ஓரத்தே
வழியும் இரத்தம்


அவர் இன்னமும் 
சிரித்துக் கொண்டே இருக்கிறார்.


அவர்களில் ஒருவன்
துவக்கை உறுவி எடுத்தான்
ஒருமுறை சுட்டான்
அவரின் புன்சிரிப்பை இலக்காக்கி
மேலும் ஐந்து துவக்குகள்
வதை முகாமின்
விளக்குகள் அணைந்தன


ஜன்னல் வழியே உற்றுப் பார்த்து
திகிலுற்றனர்
கிழக்கு சிவந்தது
அவரின் புன்சிரிப்பாய்!

( இக்கவிதையை எழுதியவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர். ஜனநாயக மாணவர் சங்கப் பொறுப்பாளர்.)