Sunday, October 30, 2011

கவிதை - மோகினியுடனான சாத்தானின் உரையாடல் - யாழினி முனுசாமி

லைந்து திரிந்த களைப்புக்கு இதமாய்க்
குளிர்ந்த பழச்சாற்றைக் கண்ணாடிக் குவளையில்
கொண்டுவந்து நீட்டியது மோகினி
மோகினியின் விரல்தொடாமல்
பெற்றுக்கொண்ட சாத்தான்
தன் உதடுகளை அழுத்தி உறிஞ்சியது
கண்ணாடிக் குவளையில் பதிந்திருக்கும்
மோகினியின் உதட்டு ரேகைகளையும் சேர்த்து.
பிறகு எதிரெதிரமர்ந்து உரையாடிக்கொண்டே
தரைபாவாத மோகினியின் கால்விரல்களை
மோகிக்கத் தொடங்கிய சாத்தான்
கொஞ்சம் கொஞ்கசமாய் ஊர்ந்து
கழுத்தின் கீழ்ப் பகுதியில் தடைப்பட்டு நின்றது.
பிறகு
மோகினியிடம் யாசித்துப் பெற்ற
செந்நிற சிறு நிலவுகளைப்
பெருவிருப்புடன் புசிக்கத்தொடங்கிய
சாத்தானின் பசி
மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.
நன்றிகூறி விடைபெற்றபின் மோகினியாலன்றி வேறொன்றாலும்
தீர்க்க முடியாத தீராப்பசியோடு
அலைந்து திரிகின்றான் சாத்தான்
இப்பெருநகரமெங்கும்.