Friday, April 27, 2012



இன்று முகநூலில் படித்த சசிகலா பாபு கவிதை...

பேரன்பும் பெரும்பிரியமும் யாசித்த கைகளில்
அசூயையே எப்போதும் திணித்ததை அறிவீர்களா?

அழகான ஏதோ ஒன்று மலரும் வேளைதோறும்
கொடுவாள் கொண்டு வீசியதை அறிவீர்களா?

இவர்கள் இப்படி தானோயென ஐயம் கொள்ளும்வேளை
நாங்கள் அப்படித்தான் என கோரப்பல் காட்டியதை அறிவீர்களா?

அறிவோ திறமையோ அனைத்திற்குமான
உங்கள் பொது மதிப்பீடு இதுதானென கேலி செய்ததை அறிவீர்களா?

அடக்குதலும் வன்முறையும் அன்பாலும் நிகழ்த்த
இயலுமென நிரூபணம் செய்ததை அறிவீர்களா?

மலரினும் மெல்லிய எங்களை வெல்ல, உங்கள்
ஆயுதங்கள் கண்டு முறுவலிக்கிறோம் நாங்கள்....

இவை அனைத்தையும் "அறிந்துகொண்டு"!

Friday, April 20, 2012

விருதுகள் வழங்கும் இலக்கிய அமைப்புகளுக்கு சில வேண்டுகோள்கள்...

நண்பர்கள் ...தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் இலக்கி அமைப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றாலும் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். 

பரிசோ...விருதோ...படைப்பையும் படைப்பாளியையும் பரவலாகக் கவனப்படுத்துகிற ஒரு நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெரும்பாலான அமைப்புகள் அனைத்துப்பிரிவுகளுக்கும் பரிசு அறிவிக்கின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரது நூல் மட்டுமே பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படுகின்றது. இரண்டாம் பரிசோ மூன்றாம் பரிசோ கிடையாது. ஆனால் போட்டிக்கு குறைந்த பட்சம் 3 நூல்களோ 4 நூல்களோ ஒவ்வொரு நூலிலும் அனுப்பவேண்டுகிறார்கள்.
தேர்வுக் குழுவினரில் அரசியல் பொறுத்தே நூலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்படியானால் பரிசுபெறாத நூல்கள் தரமற்றவையா? எந்தெந்த நூல்கள் போட்டிக்கு வந்தன என்ற தகவல்களோ...பதிவுகளோகூட கிடையாது. குறைந்த பட்சம் இந்தத் தகவல்களையாவது வெளியிட்டால் நூல் அனுப்பியதற்கான ஒரு பதிவாவது இருக்கும். அப்படி யாரும் செய்வதில்லை.எந்தெந்த நூல்கள் இறுதிப் போட்டியில் இருந்தன ..எந்தக் காரணத்திற்காக இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற எந்தச் செய்திகளும் தெரிவிப்பதில்லை.
சிலர் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்களையே தேர்வுக் குழுவில் போட்டுவிட்டு தங்களுக்குத் தேவையானவர்களுக்கே பரிசுகளைக் கொடுத்துக் கொள்கிறார்கள். பிற படைப்பாளர்களுக்கான எந்த அங்கிகாரமோ பதிவோ இல்லாமல் செய்துவிடுகிறார்கள். போட்டியின் போது அனுப்பிவைக்கப்படும் நூல்களைப் பெற்றுக் கொண்டதற்கான எந்தத் தகவலையும் நூலாசிரியருக்கோ...பதிப்பாளருக்கோ தெரிவிப்பதில்லை.

சில ஆலோசனைகள்...

முதலில் நூல்களைப் பெற்றுக்கொண்டதும் தொலைபேசியிலோ...குறுஞ்செய்தியிலோ...மின்னஞ்சலிலோ...கடிதம் மூலமாகவோ தகவலைத் தெரிவியுங்கள்.

கவிதை ...சிறுகதை...நாடகம்...நாவல்...சிறுவர் இலக்கியம் ...மொழிபெயர்ப்பு என்று ஏதேனும் ஒரு பிரிவில் சிறந்த சில நூல்களுக்காவது பரிசளியுங்கள் (ஒரு ஆண்டில் ஒரு நூல்தானா சிறந்த நூலாக இருக்கிறதா?).

பரிசுத் தொகையை அதிகப் படுத்துங்கள்.

போட்டிக்கு வருகின்ற நூல்களின் பட்டியலையும் பதிப்பகங்களின் பட்டியலையும் வெளியிடுங்கள்.அந்தப் பதிவாவது அனுப்பப்படும் நூல்களுக்குக் கிடைக்கும்.அத்துடன் அந்த ஆண்டு வெளிவந்த நூல்பட்டியலாகவும் அது இருக்கும்தானே?

வெவ்வேறு சிந்தனைப் போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்களைத் தேர்வுக் குழுவில் போடுங்கள்.

குறிப்பு...

முரண்களரி படைப்பகத்தில் வெளிவந்த ஆறுபேருடைய புத்தகங்களை
ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பல்வேறு பரிசுப் போட்டிகளுக்கு அனுப்பிவிட்டு எந்தப் பதிவும் இல்லாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது நண்பர்களே!

முக்கிய முடிவு...

அடுத்த ஆண்டுமுதல் நாமும் விருது கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டியதுதான்...

அப்படியில்லையென்றால்...
எந்தப் போட்டிக்கும் இனி நூல்களை அனுப்பக் கூடாது!

Tuesday, April 17, 2012

கவிதை - நட்பின் அகவிலாசம் - சொர்ணபாரதி



நட்பின் அகவிலாசத்தை எவ்வாறுணரலாம்
வழக்கமாய்க் கரங்களில் தரப்படும்
தேநீர்க்குவளை டக்கென நாற்காலியின்
கைப்பிடியில் வைக்கப் படும்போதா

நெடுநாள் நட்பின் அடுத்தகட்ட இயல்பான
நகர்தலுக்கான உரையாடலிலா

உரையாடலின் பொருள்தந்த மகிழ்ச்சி
மழைநீராய் இறங்க ஆழத்தில் விதைத்திருந்த
நேசவிருட்சம் முளைத்து ஒரு திலகத்தில் நின்றபோதா

நின்ற விருட்சத்தைத் தன் உரையாடலின் பொருளைத்
தானே மாற்றி விசவிருட்சமென வெட்டிவீழ்த்தியபோதா
எங்ஙனம் அறிய முடியும்

நட்பென்பது மேட்டிமைச்செறுக்கின் பிச்சையா
படைத்தலைவனுக்கு வீரன்மீதுள்ள கண்டிப்பா
ஒரு முதலாளிக்கு ஊழியன் மேலுள்ள ஆதிக்கமா
மகாராணி உப்பரிகையின்மீது நின்று
கீழே வறியோருக்கு வீசிடும் கருணைப்பண்டமா

ஒரு பக்கத்தின் விருப்பம் தேவை சார்ந்தே
எவ்வாறு சுழலும் நட்புச் சக்கரம்

உயர்வு தாழ்வு
வளமை வறுமை
அறிவு அறிவின்மை
எவையும் பாராது சமமான அன்பின் பகிர்வே
நட்பின் சமத்துவம்

மூளையின் எடையும் பணப்பையின் கனமும்
நிலையற்ற மனமும் எப்படிச் சமன்செய்ய இயலும்
தோழமைத் தராசின் முள்ளை

ஒரு போராட்டம் வெற்றிபெறும் வேளை
வேறொரு தலையீட்டால்
ஓரினமே அழிந்து மீண்டும் தொடக்கப் புள்ளியில் நிற்பது
வரலாற்றில் நிகழலாம்
ஒரு தற்தாலிகப் பணியாளன்
நிரந்தரமாகும்வேளை
பணிநீக்கம் செய்து
மீண்டும் தற்காலிகச் சேர்ப்பு
ஒரு நிறுவனத்தில் முடியலாம்

பெருமரமாய்க் கிளைபரப்பி
வளர்ந்த நட்பை வேரோடு சாய்த்து
மீண்டும் பதியனிட்டு
விதையிலிருந்து முளைக்கச் சொல்வது
எவ்வாறு சாத்தியம்

எனினும் அவன் பயணம் தொடர்கிறது
நட்பின் கரம்பற்றி
எவரிடத்தும் எப்போதும் அவன் நட்பை ஆராதிப்பவன்.

Monday, April 16, 2012

ஆறாத ரணம் சிறுகதை நூல் அறிமுகம் - பொ. பிரேமாவதி


னக்குத் தோழரை சுமார் 13 ஆண்டுகளாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு தோழர், கம்யூனிஸ்ட், புரட்சிப் பாதையில் பயணித்தவர், நல்ல மனிதர், போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார் என்கிற அளவில் தெரியும். 
தோழர் என்ற வார்த்தையே எனக்கு திருமணத்திற்குப் பிறகுதான் அறிமுகம். அதற்குமுன் ஊடகங்கள் சொல்லும் செய்திகளைத்தான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தவள். அவர்கள் தீவிரவாதிகள் என்று வர்ணித்தவர்கள்தான் இன்று எனக்குத் தோழர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
மார்க்சியம், கம்யூனிசம் முதலியவற்றைப் படித்து அறிந்திருக்க வில்லை என்றாலும், அதன் சாரங்களைப் பல புத்தகங்கள் மூலமும், உரையாடல்கள் மூலமும் ஓரளவுப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
எனினும், இவருடைய சிறுகதைகளில் வரும் காவல்துறை கொடுமைகளைப் பற்றி படிக்கும்போது கண்கள் கலங்கின. எங்கேயோ நடந்ததாக தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் கண்ட, புத்தகங்களில் வாசித்த நிகழ்வுகளை தோழர் அனுபவத்தில் இருந்து படிக்கும்போது அவை என்னைத் திகிலடையச் செய்தன.
கதைகளைப் படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள் என்று அவர் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். புத்தகத்தைப் படித்துவிட்டு நான் கருத்து எதையும் சொல்லவில்லை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்னுடைய மனத்தில் ஓர் அழுத்தம் ஏற்பட்டிருந்தது உண்மை.
அவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளுக்கு சிறுகதை வடிவம் தந்து, அவற்றைப் படைப்புகளாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. எனினும், அவற்றை என்னால் ரசிக்க முடியவில்லை. காவலர்களிடம் வாங்கிய அடிகளையும், வசை மொழியையும் ரசிக்க யாரால் முடியும்.
அவர் நெடுங்காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கானக் காரணங்களை இச்சிறுகதை தொகுப்பு எனக்கு உணர்த்தியுள்ளது. 
நேர்மையான போராளியாக இருந்தவர் அந்தத் தளத்திலிருந்து வெளியேறி வந்திருந்தாலும், சந்தர்ப்பவாதியாக, பிழைப்புவாதியாக மாறாமல், தொடர்ந்து பொதுவுடைமைக் கொள்கைக்காக தன்னால் இயன்ற வழிகளில் போராடிக் கொண்டிருந்தார். 
கதைகளைப் பற்றி விமர்சனம் சொல்லாமல், தோழரைப் பற்றிய விமர்சனமாக இவை சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதைகளையும் தோழரையும் தனியாக என்னால் பிரித்து என்னால் பார்க்க முடிய வில்லை
சிறுவயதிலிருந்து அவருக்கு நேர்ந்த அனுபவங்களை சமூக நோக்கோடு அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒய்யாரக் கொண்டையில் சென்னையில் வாழ்கின்ற குடிசை வாழ மக்களின் அவல நிலையையும், பொட்டைக் குட்டி பெண் குழந்தைகளின் சமூக நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 
ஈழத்தில் நடந்த படுகொலைச் சம்பவத்தைப் பார்த்து, கனத்த இதயத்தோடு உலா வந்த பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருத்தி. வானம்பாடி கதையைப் படிக்கும்போது, ஈழப் பிரச்சினை கண் முன்னே விரிகிறது. 
அவர் ஒரு மாற்றுத் திறனாளி என்று எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. அவர் எங்களை விடவும் சுறுசுறுப்பாக, துடிப்புடன் இயங்கக் கூடியவர். ஆரம்பக் காலங்களில் அவரிடம் வண்டி கூட இல்லை. மலையம்பாக்கத்திலிருந்து குன்றத்தூர் வரை நடந்து வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் பல இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். என் கணவரும் அவருடன் பல நாள்கள் சென்றிருக்கிறார் என்பதால் இதைச் சொல்கிறேன். “தோழர் வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறறர். ஆனால் ஊனம் என்ற சொல் அவர் மனதை எந்த அளவுக்குக் காணப்படுத்தியிருக்கிறது என்பதை ஆறாத ரணம் வெளிப்படுத்தி இருக்கிறது.
சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு அவர் முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய மனபாரங்களை இறங்கி வைத்ததால் ஏற்பட்ட ஒரு தெளிவு. ஆறாத ரணம் கதைத் தொகுப்பு மூலம் அவர் ரணங்களை ஆற்றிக் கொண்டு, மற்றவர் மனங்களை ரணமாக்கி இருக்கிறார்.
இந்த ரணத்தை மறக்கவோ, என்னவோ கடைசியாக கடாமீசை என்ற கதையை எழுதி வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். கதையைப் படிக்கும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 
பல தளங்களில் பணியாற்றி தற்போது சிறுகதை எழுத்துலகில் நுழைந்திருக்கும் அவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்.
எழுத்து என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ..... ஆனால் என்னையும் சிறுகதை குறித்து விமர்சனம் எழுதச் சொல்லி ஊக்குவித்த, எழுத்துலகில் அடியெடுத்து வைக்க வற்புறுத்திய தோழர் நடராசன் அவர்களுக்கு நன்றி.


Wednesday, April 11, 2012

தமிழ் அய்யா - இரா .பாலன்

ஏகாதிபத்தியத்தை விரட்டணும் அய்யா
நிச்சயம் விரட்டணும்

நிலப்பிரபுத்துவம்கூட மோசமானது அய்யா
ஆமாம் ஆமாம்

முதலாளித்துவம் என்றதும்
அய்யா தொடர்ந்தார்...

தமிழுக்கு எதிரானதையெல்லாம் எதிர்க்கணும்
ஜாதியைக்கூட சாதியாக்கணும்