Monday, April 16, 2012

ஆறாத ரணம் சிறுகதை நூல் அறிமுகம் - பொ. பிரேமாவதி


னக்குத் தோழரை சுமார் 13 ஆண்டுகளாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு தோழர், கம்யூனிஸ்ட், புரட்சிப் பாதையில் பயணித்தவர், நல்ல மனிதர், போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார் என்கிற அளவில் தெரியும். 
தோழர் என்ற வார்த்தையே எனக்கு திருமணத்திற்குப் பிறகுதான் அறிமுகம். அதற்குமுன் ஊடகங்கள் சொல்லும் செய்திகளைத்தான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தவள். அவர்கள் தீவிரவாதிகள் என்று வர்ணித்தவர்கள்தான் இன்று எனக்குத் தோழர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
மார்க்சியம், கம்யூனிசம் முதலியவற்றைப் படித்து அறிந்திருக்க வில்லை என்றாலும், அதன் சாரங்களைப் பல புத்தகங்கள் மூலமும், உரையாடல்கள் மூலமும் ஓரளவுப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
எனினும், இவருடைய சிறுகதைகளில் வரும் காவல்துறை கொடுமைகளைப் பற்றி படிக்கும்போது கண்கள் கலங்கின. எங்கேயோ நடந்ததாக தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் கண்ட, புத்தகங்களில் வாசித்த நிகழ்வுகளை தோழர் அனுபவத்தில் இருந்து படிக்கும்போது அவை என்னைத் திகிலடையச் செய்தன.
கதைகளைப் படித்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள் என்று அவர் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். புத்தகத்தைப் படித்துவிட்டு நான் கருத்து எதையும் சொல்லவில்லை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்னுடைய மனத்தில் ஓர் அழுத்தம் ஏற்பட்டிருந்தது உண்மை.
அவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளுக்கு சிறுகதை வடிவம் தந்து, அவற்றைப் படைப்புகளாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. எனினும், அவற்றை என்னால் ரசிக்க முடியவில்லை. காவலர்களிடம் வாங்கிய அடிகளையும், வசை மொழியையும் ரசிக்க யாரால் முடியும்.
அவர் நெடுங்காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கானக் காரணங்களை இச்சிறுகதை தொகுப்பு எனக்கு உணர்த்தியுள்ளது. 
நேர்மையான போராளியாக இருந்தவர் அந்தத் தளத்திலிருந்து வெளியேறி வந்திருந்தாலும், சந்தர்ப்பவாதியாக, பிழைப்புவாதியாக மாறாமல், தொடர்ந்து பொதுவுடைமைக் கொள்கைக்காக தன்னால் இயன்ற வழிகளில் போராடிக் கொண்டிருந்தார். 
கதைகளைப் பற்றி விமர்சனம் சொல்லாமல், தோழரைப் பற்றிய விமர்சனமாக இவை சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதைகளையும் தோழரையும் தனியாக என்னால் பிரித்து என்னால் பார்க்க முடிய வில்லை
சிறுவயதிலிருந்து அவருக்கு நேர்ந்த அனுபவங்களை சமூக நோக்கோடு அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒய்யாரக் கொண்டையில் சென்னையில் வாழ்கின்ற குடிசை வாழ மக்களின் அவல நிலையையும், பொட்டைக் குட்டி பெண் குழந்தைகளின் சமூக நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 
ஈழத்தில் நடந்த படுகொலைச் சம்பவத்தைப் பார்த்து, கனத்த இதயத்தோடு உலா வந்த பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருத்தி. வானம்பாடி கதையைப் படிக்கும்போது, ஈழப் பிரச்சினை கண் முன்னே விரிகிறது. 
அவர் ஒரு மாற்றுத் திறனாளி என்று எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. அவர் எங்களை விடவும் சுறுசுறுப்பாக, துடிப்புடன் இயங்கக் கூடியவர். ஆரம்பக் காலங்களில் அவரிடம் வண்டி கூட இல்லை. மலையம்பாக்கத்திலிருந்து குன்றத்தூர் வரை நடந்து வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் பல இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். என் கணவரும் அவருடன் பல நாள்கள் சென்றிருக்கிறார் என்பதால் இதைச் சொல்கிறேன். “தோழர் வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறறர். ஆனால் ஊனம் என்ற சொல் அவர் மனதை எந்த அளவுக்குக் காணப்படுத்தியிருக்கிறது என்பதை ஆறாத ரணம் வெளிப்படுத்தி இருக்கிறது.
சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு அவர் முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய மனபாரங்களை இறங்கி வைத்ததால் ஏற்பட்ட ஒரு தெளிவு. ஆறாத ரணம் கதைத் தொகுப்பு மூலம் அவர் ரணங்களை ஆற்றிக் கொண்டு, மற்றவர் மனங்களை ரணமாக்கி இருக்கிறார்.
இந்த ரணத்தை மறக்கவோ, என்னவோ கடைசியாக கடாமீசை என்ற கதையை எழுதி வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். கதையைப் படிக்கும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 
பல தளங்களில் பணியாற்றி தற்போது சிறுகதை எழுத்துலகில் நுழைந்திருக்கும் அவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்.
எழுத்து என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ..... ஆனால் என்னையும் சிறுகதை குறித்து விமர்சனம் எழுதச் சொல்லி ஊக்குவித்த, எழுத்துலகில் அடியெடுத்து வைக்க வற்புறுத்திய தோழர் நடராசன் அவர்களுக்கு நன்றி.


No comments:

Post a Comment