Sunday, October 30, 2011

கவிதை - மோகினியுடனான சாத்தானின் உரையாடல் - யாழினி முனுசாமி

லைந்து திரிந்த களைப்புக்கு இதமாய்க்
குளிர்ந்த பழச்சாற்றைக் கண்ணாடிக் குவளையில்
கொண்டுவந்து நீட்டியது மோகினி
மோகினியின் விரல்தொடாமல்
பெற்றுக்கொண்ட சாத்தான்
தன் உதடுகளை அழுத்தி உறிஞ்சியது
கண்ணாடிக் குவளையில் பதிந்திருக்கும்
மோகினியின் உதட்டு ரேகைகளையும் சேர்த்து.
பிறகு எதிரெதிரமர்ந்து உரையாடிக்கொண்டே
தரைபாவாத மோகினியின் கால்விரல்களை
மோகிக்கத் தொடங்கிய சாத்தான்
கொஞ்சம் கொஞ்கசமாய் ஊர்ந்து
கழுத்தின் கீழ்ப் பகுதியில் தடைப்பட்டு நின்றது.
பிறகு
மோகினியிடம் யாசித்துப் பெற்ற
செந்நிற சிறு நிலவுகளைப்
பெருவிருப்புடன் புசிக்கத்தொடங்கிய
சாத்தானின் பசி
மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.
நன்றிகூறி விடைபெற்றபின் மோகினியாலன்றி வேறொன்றாலும்
தீர்க்க முடியாத தீராப்பசியோடு
அலைந்து திரிகின்றான் சாத்தான்
இப்பெருநகரமெங்கும்.

Wednesday, October 26, 2011

தீபாவளி என்றால் என்ன?

நன்றி - 25 அக்டோபர் 2011, 12:24 க்கு தோழர் பெரியார் ஈ.வெ.ரா.ஆல்

(புராணம் கூறுவது)

 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

 2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

 6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

 இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

 இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

 இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

 * பூமி தட்டையா? உருண்டையா?

 * தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

* எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

* சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?

* எங்கிருந்து தூக்குவது?

 * கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

* விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

* அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

* பூமி மனித உருவா? மிருக உருவமா?

 * மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

 இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்லுகிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ´ஆமாம்´ என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

 மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.


- தோழர் பெரியார்

Thursday, October 20, 2011

பச்சைரத்தம் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்: யாழினி முனுசாமி - கி.நடராசன்

“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்”

மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக முக்கியமான ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் தவமுதல்வன. அந்த ஆவணப் படம் அவரை தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களின் வரிசையில் சேர்த்திருக்கிறது. அவருடன் ஒரு நேர்காணல்...


கே: பச்சை ரத்தத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?


படத்தைப் பொறுத்தவரை பாராட்டுகளும் கசப்பான அனுபவங்களும் நிறையவே உள்ளன. உள்ளுரில் ஆகா ஒஹாவெனப் பாராட்டிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவர்கள், சிந்தனையாளர்கள் என்கிற பல பட்டங்களோடு உலவுகிறவர்கள், தொண்டு நிறுவனங்களையெல்லாம் இதன் தயாரிப்புப் பணிக்காகச் சந்தித்தேன். வெளியிடவும் கேட்டேன். அவர்களுக்கு புராஜக்ட் வேலைகள், மக்கள் நலப்பணிகள் (!) இருந்ததால் ஒத்துழைப்பு இல்லாததை உணர்ந்தேன்.

சாதாரண மக்களைப் பொறுத்தவரை படம் அவர்களின் வேதனையை உள்ளபடியே வெளிப்படுத்துவதாக உள்ளன்போடு தெரிவித்தனர். பல குடுப்பங்களில் படம் பார்த்து பழைய நினைவுகள் கிளர்ந்து அழுத்ததாகவும் நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்தனர்.
கே: இந்தப் படத்தை எப்படித் திட்டமிட்டு எடுத்தீர்கள்?
படத்தில் வரும் எல்லா கருத்துக்களும் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை நடத்தவில்லை. சிலவற்றை மட்டும் உறுதியாக தொகுத்துக் கொண்டேன்.
1. மலையக மக்களின் இலங்கை வரலாறு.
2. துரோக அரசியல் தலைமைகள்
3. இலங்கையிலும் தமிழகத்திலும் தேயிலைத் தோட்டப் பசுமைகளுக்குப் பின்னால் உறைந்திருக்கிற உழைப்பின் வரலாறு. ஊடகங்களில் காண்பிக்காத மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவது போன்றவைதான்.
பல காட்சிகள் படப்பிடிப்பு செல்லும் போதுதான் எடுக்க நேர்ந்தது.
கே: இந்த ஆவணப்படம் எடுக்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
படத்தின் மையமான கருத்து எதுவென்றால், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, உழைப்பாளிகளாக இருக்கிற.. தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒரு சராசரி மனிதனின் வாழ்வுகூட இன்றும் முழுமைபெறாமல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது...இந்த வரலாறு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்குத் தெரியாமல் இருப்பது... அதை வெளிப்படுத்துவது.
கே: மலையகத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கான காரணங்களாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
பூர்வீக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை கள்ளத்தோணி, தோட்டக்காட்டான், பறைத் தமிழன் என்று சொல்லுவதற்கு முக்கிய காரணம், அவர்களிடையே ஊறிப்போயிருந்த சாதீயம்தான். மேலும் இங்கிருந்து போனவர்கள் பலர் வணிகர்களாக வளர்ந்தது... அவர்கள் நகர்ப்பகுதிகளில் குவிந்தது... இந்தியாதான் தன் உறவுக்கான மண் என நடந்து கொண்டது.. மலையகத்தவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருந்தது போன்றவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்படக் காரணமாக இருந்தது. குறிப்பாகச் சொன்னால், பூர்வீக இலங்கைத் தமிழர்களின் தலைவர்கள் ஓரிருவரைத் தவிர மலையகத் தமிழர்களை அந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்கிற புரிதலை விரிவாகப் பேசி அந்தக் கருத்தை நிலைபெறச் செய்ய முயற்சிக்கவில்லை. கண்டுகொள்ளாத இந்தப் போக்குதான் தொடர்ந்தது.
கே : இந்த ஆவணப்படம் உருவானவிதம் பற்றிச் சொல்லுங்கள்...?
முன் அனுபவம் என்பதெல்லாம் ஓரிரு குறும்படங்களில் வேலை செய்திருக்கிறேன். வீடியோ கிராபராக திருமண வீடுகளுக்கு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கச் சென்றிருக்கிறேன். ஆனால் குறுப்படங்களை நிறைய பார்ப்பது... அது தொடர்பான புத்தகங்களைப் படிப்பது, சிறுகதைகளை எழுதுவது எனப் பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.
இதில் முதன்மையான பங்களிப்பு என்றால்... ஒருவர் இப்படத்தின் இணை இயக்குநராகப் பணி செய்த G.M சண்முகராஜ் அவர்களைச் சொல்வேன். எழுத்திலும் கருத்திலும் தொகுப்பதிலும் என்னோடு இரண்டு வருடங்கள் தான் சார்ந்த திரைப்பட வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உழைத்தார். இன்னொருவர்... தொகுப்பாளர் திரு.செல்வா அவர்கள். படத்தின் மையக் கருத்துடன் ஒன்றிப்போய் பணமே வாங்கிங் கொள்ளாமல் பலமுறை படத்தொகுப்பை மாற்றியபோதும் எதுவும் சொல்லாமல் சரியான காட்சிகளைத் தொகுத்தும் அதற்கேற்ற இசையை சேர்த்தும் கொடுத்தார்.
படப்பிடிப்பைப் பொறுத்தவரை தனியொருவனாக நானே பெரும்பாலான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்.
கே :  வரவேற்பும் அங்கிகாரமும் எப்படி இருக்கிறது..?

வரவேற்பைப் பொறுத்தவரை கருத்தாளர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக தோழர் அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், எஸ்.வி ராஜதுரை, அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் செழியன், மலையக எழுத்தாளர் மு.நித்யானந்தம், தோழர் தியாகு போன்றோர் நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள்.
தமிழக அளவில் கும்பகோணம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில்  திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலர் இலங்கையில் மலையக மக்கள் பற்றிய செய்திகள் வியப்பாக உள்ளதாக  அன்றாடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு குறுந்தகடு வெளியிடும் திட்டம் உள்ளது. தற்பொழுது வெளியிட்ட குறுந்தகடுகளின் நிதி உரிய முறையில் வராத காரணத்தால் பெரும் கடன் சுமையில் உள்ளேன். கடன் தீர்ந்த்தும் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தில் உள்ளேன்.
எங்கள் ஊரைப்  பொறுந்தவரை (நீலகிரி) வரவேற்பு சாதாரண மக்களிடம்தான் உள்ளது. இவர்கள் மத்தியில் “சமூகப்பணி“ செய்வதாகச் சொல்லும் பலருக்கும் “படம் பார்க்கவே நேரமில்லை“. குறைந்த பட்சம் ஐந்து  குறுந்தகடுகளை வாங்கிக் கொள்ளக்கூட நிதியில்லை. அவர்கள் “புரோஜெக்ட்” வேலைகளில் மூழ்கியுள்ளார்கள். கட்சிகளில் உள்ள ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் வாக்குச் சீட்டு அரசியலின் பிழைப்புவாதத்தில் உள்ளனர். இலங்கையில் மலையகத் தலைவர்கள் சிலர் செய்த அதே கருங்காலி வேலையை இந்த மக்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும், வாக்கு வங்கி இருப்பதாக பேரம்பேசி கட்சிகளிடம் பணம் வாங்குவது எனத்தொடர்கிறது அவர்கள் “சமூகப்பணி” . எனவே அவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில், தேயிலைத் தோட்டங்களிலும் தொழிற்சங்கப் பணிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதற்கு மேற் சொன்னவைகள் காரணமாக உள்ளன. கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் கொடுக்கும் மரியாதை தொழிற்சங்கப்பணிகளுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. சில தேயிலைக் தோட்டங்களில் முதலாளிகளே நடத்தும் பெயரளவிற்கான தொழிற்சங்கங்கள் உள்ளன.
மற்ற தொழிலாளர்கள் வீட்டைச் சொந்தமாக வைத்துக் கொண்டு நிறுவனங்களில் வேலை செய்து உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். தேயிலைத் தோட்டங்களில் வீடே அவர்களுகளுடையது. முதலாளகளின் வீட்டிலிந்துகொண்டு உரிமைபேச  யாருக்குத் துணிவு வரும்? வீட்டை காலி செய்யும் நினைப்புதான் முதலில் வரும் உரிமை பற்றிப் பேசினால்.
கே : நில உச்சவரம்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே...அது அங்கு நடைமுறையில் இருக்கிறதா?
நில உச்சவரம்புச் சட்டத்தை டாட்டா, பிர்லாக்களுக்கு யார் நடைமுறைப் படுத்தச் சொல்வது....? அவர்களைப் போல ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட தேயிலை நிறுவனங்கள் இங்கே பல உள்ளன. புறம்போக்கு நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் தோட்டங்களாக மாறியுள்ளன.
நில உச்சவரம்புச் சட்டம் நிலங்களை அவர்கள் பிரித்துக் கொண்டு தன் குடும்ப சொந்தக்காரர்களின் பெயரில் எழுதிக் கொள்வதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சத்தமின்றி எதையும் பட்டா பதியலாம்... தோட்டமாக்கலாம்.
தொழிலாளிகளாக உள்ள தாயகம் திரும்பிய மக்கள் தான் குடியிருக்க 10* 10 என ஒரு இடத்தில் குடிசை போட்டால்தான் போலீஸ் வருகிறது. அரசு அதிகாரிகள் வருகிறார்கள். வனத்துறை வருகிறது. சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.  பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை சட்டமெல்லாம் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்.
கே : உங்களது பச்சை ரத்தம் அரசாங்கத்தின் கவனம் பெற்றிருப்பதாக உணர்கிறீர்களா?
ஆமாம். தற்போதைய அ.இ.அ.திமுக. அரசு கடந்த சட்டசபை விவாதத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. திராவிடமணி (தி.மு.க) தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது பற்றிப் பேசியுள்ளார்.
யானை அடித்து இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக இதுவரை 25,000 கொடுக்கப்பட்டது. தற்பொழுது 2,50,000 (இரண்டரை லட்சம்) ரூபாயாக முதல்வர் அவர்கள் கொடுத்துள்ளார்கள். ஏதோ ஒருவகையில் இதை என் ஆவணப் படத்திற்கான எதிர்வினையாகக் கருதுகிறேன்.
கே : நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பிய மக்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு?
நல்ல உழைப்பாளிகள். தொட்டால் துலங்கும் கரங்களுக்குச் சொந்தக் காரர்கள். படத்தில் சொல்லியிருப்பதுபோல இவர்களின்றி தேயிலைத் தோட்டங்களில் பசுமையில்லை.
ஆனால் காலம் காலமாகக் கல்வியறிவு இல்லாத காரணத்தால் நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து பழகியதால் அதே அடிமை மனோபாவம்தான் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இம் மாவட்டம் முழுவதும் சுமார் 400 - க்கு மேற்பட்ட இடங்களில் காலனிகளை வாழ்கிறார்கள். பெரும்பாலான வீடுகளுக்குப் பட்டா இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. முறையான கல்விக்கூடங்கள் இல்லை. மருத்துவம் இல்லை. இதைப் பற்றிய கவலை அவர்களிடம் விழிப்புணர்வாக வெளிப்படுவதில்லை. ஊருக்கு ஊர் கோயில் கட்டுவது. அதற்கு வரி வசூலிப்பது.   அது தொடர்பான சண்டை சச்சரவுகள். பிறகு சபரிமலைக்கு ஆண்கள். மேல்மருவத்தூருக்கு பெண்கள் எனக் கோயில்களுக்கு பண்டிகைகளுக்குச் செலவு செய்தது போக மீதி மருத்துவமனைகளுக்குப் போய்விடுகிறது.
குடியிருக்க வீடில்லாதபோதும் கோயில் பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். புதிதாக வருகிற இளைஞர்களும் பெரும்பாலும் அதைநோக்கியே செல்வது வருத்தமளிக்கிறது. எனவே கல்வி அடிப்படையான விசயமாகவும் நல்ல தலைமைகளும் தேவைப்படுகிறது.
கே : இலங்கையிலுள்ள மலையக மக்களைப் பற்றி...
இனம், வர்க்கம், சாதி என்கிற மூன்று அடையாளங்களால் இம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. சாதியில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பால் தொழிலாளிகளாகவும் இருப்பதால்தான் இவர்கள் ஈழத் தமிழர்களைப்போல் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து போக முடியவில்லை. அவர்களைப்  பற்றிப் பேசவும்  பெரிய ஆட்களில்லை. மு. நித்யானந்தம், தெளிவத்தை, மாத்தனை சோமு போன்றவர்களைத் தவிர. ஈழப்பிச்சினையைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு இவர்களைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பயன்பாடுகூட இருக்கப் போவதில்லை. எனவே பேசவில்லை. இங்கு அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், தியாகு, எஸ்.வி. ஆர்., சி.மகேந்திரன் போன்றவர்கள்தான் சிறப்பான பதிவுகளை தந்துள்ளனர்.
கே : உங்களது தனிப்பட்ட அனுபவம்....?
வேதனையானதுதான் என்றாலும் இதனால் ஏற்பட்ட கடன் சுமை பற்றியோ இதன் தயாரிப்பாளர் தனலெட்சுமி (என்மனைவி) கொழுந்து கிள்ளிய பணத்தில்தான் இப்படம் தயாரிக்க முடிந்தது என்பது பற்றியோ எனக்குக் கவலையில்லை. ஈழப் பிரச்சினையில் வாய்கிழிய வீராவேசமாகப் பேசுகிற பலருக்கு ஈழத்தின் பிரச்சினை பற்றிய முழுமையான வரலாற்றுப் பார்வையோ, மலையக மக்கள், பூர்வீக இலங்கைத் தமிழர்கள் பற்றிய புரிதலோ இல்லை. தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்கள் மட்டும் மறந்துவிடுகிறது அல்லது தெரியவில்லை. அவர்களுடைய தேடல் எல்லாம் “அண்ணன் வருவார்” … “அண்ணன் பார்த்துக் கொள்வார்”  …   “அவர் இருக்கிறா...?இல்லையா?” என்பதுதான்.

மனம் திறந்த விமர்சனங்களோ உரையாடல்களோ அதற்காக உணர்வாளர்களைப் பயிற்துவிப்பதோ பெரும்பாலான முன்னணியாளர்களிடம் இல்லை. இவர்கள் பின்னால் திரள்கிற உண்மையிலேயே உணர்வாளர்கள் பலர் வேதனையுடன் இருப்பதைக் காண முடிகிறது. இந்தப் போக்கு அவர்களை எதிர்காலத்தில் எதிலும் நம்பிக்கையற்றவர்களாகத்தான்  உருவாக்கும்.
கே : முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு இப்படத்தில் எதிரொலிக்கிறதா?
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பாதிப்பு படத்தில் இல்லை. ஆனால் கடைசிக்கட்ட போரில் இறந்துபோனவர்கள்... இப்போது முள்வேலிகளுக்குப் பின்னால் இருப்பது பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் என்பதை எழுத்தால் மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது.
கே : குறிப்பிடும்படியான விமர்சனங்கள்.....?
பலர் தயக்கத்துடன் இது இப்போது தேவையில்லை என்றனர். ஆனால் பேசப்பட வேண்டியது என்றனர். ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக்க் கூறினர். அதற்காக இதைப் பேசாமல் இருக்க முடியாது. அப்போது பேசமுடியவில்லை. விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் இப்போதும் பேசத் தயங்கினால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை எனக்கூறினேன்.
விடுதலை என்பது மக்களுக்கானது. குறிப்பாக உழைக்கும் மக்களுக்கானது...... அதில் மலையக மக்களைப் பற்றிப் பேசாமல் இனிமேலும் மௌனம் சாதிப்பது இங்கே உள்ள தலைவர்களை சந்தேகப்படவைக்கும்.
கே : இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
சிலருக்குத் தனிப்பட்ட முறையில்  நன்றிகள் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இப்போதும் கொழுந்து கிள்ளி கடன்கட்டும் என் மனைவி... படத்தில் பின்னணிக்குரல் கொடுத்ததோடு நிதிக்காகவும் பலரிடம் சென்று நிதி திரட்டி முழு ஒத்துழைப்பையும் கொடுத்த விழுப்புரம் கவிஞர் ராமமூர்த்தி, கேமிரா கொடுத்து உதவிய புகைப்படக் கலைஞர் திரு. ஹரிசாந்தன், கவிஞர் யாழ்மதி போன்றோர்கள் எனது நன்றிக்குரியவர்கள்.
nandri: thadagam.com

Saturday, October 1, 2011

சிறுகதை - அறியாப் பருவத்தில்... - யாழினி முனுசாமின்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவள் வெகு நாட்களுக்குப் பிறகு தேவாலயத்திற்குச் சென்று முழங்காலிட்டு மனதுக்குள் ஜெபிக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஆண்டவரே... பிரிட்டோ காணாமப் போய் இன்னையோட ரெண்டு நாள் ஆகுது. நாங்க  யாருக்கு என்ன பாவம் செஞசோம்...? எப்படியாவது அவனை எங்க கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிறுத்திடு. இல்லனா இங்க நான் இனிமே வரவே மாட்டேன்...

பிரார்த்தனை முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியேறினாள்.

என்ன நடந்தது என்று புரியாமல் அழுகையாக வந்தது கேத்ரினுக்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது , எங்கடா போறே?என்று கேட்ட அம்மாவுக்கு , பாட்டி வீட்டுக்கு என்று ஏனோதானோவென்று பதில் சொல்லிவிட்டுப் போனான். அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்த தாத்தாவைப் பார்த்ததும் அனைவரும் குழம்பினர்.

பிரிட்டோ அங்கு செல்லவில்லை என்ற செய்தி அனைவரையும் கலவரமடையச் செய்தது. அவன் அங்கதானப்பா வரேன்னு சொன்னான் என்று அழத் தொடங்கிவிட்டாள் அம்மா. அழாதம்மா , வேற எங்கனா போயிருப்பான். வந்துடுவான் என்று தேற்றினார் தாத்தா.

இரவு வெகுநேரமாகியும் அவன் வீடுதிரும்பவில்லை. ஆளுக்கொரு பக்கமாய்த் தேடத் தொடங்கினர்.

ஏதேதோ சிந்தனைகள் தோன்றி கேத்ரினை க் குழப்பத்தில் ஆழ்த்தின.

கேத்தி நான் செத்துட்டா நீ அழுவியா?என்று பிரிட்டோ கேட்டது நினைவுக்கு வந்தது.
என்ன உளர்றே? என்றவளிடம் ,
இல்லை கேத்தி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். யார்க்கிட்டயும் சொல்லக் கூடாது, சின்னுவ நான் விரும்பறேன். அவ இல்லனா நான் செத்துடுவேன் என்றான்.
அவளுக்குத் தெரியுமா?
இல்லை கேத்தி. நான் எதுவும் அவக்கிட்ட சொல்லவுமில்ல  கேட்கவுமில்ல. கேட்டு அவ இல்லைன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாது கேத்தி என்றழுதான்.
இதெல்லாம் சரி வருமா? ஏதோ ஃபேமலி ஃபிரெண்டா வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்காங்க... இது தெரிஞ்சதுன்னா பிரச்சினையாயிடுமில்ல? நாவேண்ணா கேட்டுப் பாக்கட்டுமா?

வேண்டாம் கேத்தி. சின்னோட படிப்பு வசதியெல்லாம் வச்சிப் பாக்கும்போது கண்டிப்பா ஒத்து வராது.

பிரிட்டோவின் டைரியில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த காதல் கவிதைகளிலும், காதல் வசனங்களிலும், காதல் பாடல்களிலும் சின்னுவே நிறைந்திருந்ததும் சின்னுவின் புகைப்படம் ஒன்றையும் டைரியில் மறைத்து வைத்திருந்ததும் நினைவுக்கு வந்து அவளை பயமுறுத்தின. இடையிடையே, கடவுளே, அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது என்று மனத்தில் வேண்டிய படியே வந்து கொண்டிருந்தாள். வீட்டை நெருங்க நெருங்க  அவள் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது. ஓட்டமும் நடையுமாக வீடடைந்தாள்.

தெருக்காரர்கள் எல்லாம் அப்பாவைச் சூழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் மனத்தில் கலவரம் உண்டானது. வழியில் சுகுமார் அண்ணன் சொன்னது உண்மைதான் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது.

அந்த அண்ணன் சொல்றது உண்மையாப்பா?என்றவளின் முகம்பார்க்க முடியாமல் குமுறி அழத்தொடங்கினார் அப்பா. அவளுக்கு அழுகை பெறுக்க முடியவில்லை. வீரிட்டு அழுதாள்.

தகவலறிந்து சிறிது நேரத்திற்குள் உறவினர்கள் ஒவ்வொருவராய் வீடுவரத் தொடங்கினர்.

சின்ன வயசு. என்ன பண்றது...நாமதான் மனச தேத்திக்கணும்பா!
அம்மாடி, அம்மா அம்மானு உன்னயே சுத்தி சுத்தி வருவானேம்மா அவனுக்கு எப்படிமா உன்னவிட்டுப் போக மனசு வந்தது?

ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இனிமே எனக்குன்னு யாருக்கா இருக்கா...? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்?என்று அம்மா உடைந்து அழுதுகொண்டிருந்தாள். தெருவில் சாமியானம் கட்டப்பட்டது. உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன.

தொலைபேசி மணி அடித்தது. ஓடிப்போய் எடுத்தாள் கேத்ரின். எதிர்முனையில் அத்தைமகன் தேவா. அப்பாவிடம் கொடுத்தாள்.

நீங்களே எல்லாத்தயும் பாத்துக்குங்கஎன்றபடி போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது ஓடிவந்து கேத்ரினைக் கட்டிக்கொண்டு அழுதாள் சின்னு. சின்னுவின் அம்மா அழுதுகொண்டே புலம்பிக்கொண்டிருந்தாள்.
ஏன் இப்படிச் செஞ்சான்... அழகுபையனாச்சேம்மா! யாரு கண்ணுபட்டதோ...வீட்டுக்கு வரும்போதெல்லாம் மாமி ...மாமின்னு உயிரை விடுவானே...இனிம யார் என்ன அப்படி கவனிப்பாங்க...
மல்லிகா மாமியின் புலம்பல் கேத்ரினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லாம் உன்னாலதானடி பாவி...ஒனக்கு சாதி முக்கியம் . சாதியையும் ஒறவுங்களையும் விட்டுக்கொடுக்க முடியாதவங்க எதுக்கு அவனோட மனசுல ஆசையை விதைக்கணும்? இப்ப வந்து புலம்பறாளே  என எரிச்சல் பட்டாள்.
“ அந்தக் கொடுமைய நான்தானே முதல்ல பார்த்தேன். காணும்னு தேடிட்டுப் போனப்ப ரெட்டேரியில அவனோட சட்டையைப் பார்த்தேன். பாடிய போலிசு  ஜிஎச்.க்கு எடுத்துட்டுப் போயிட்டதா பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க... இப்படி  ஆகும்னு தெரிஞ்சிருந்தா அவன  நான் தனியா விட்டிருக்க மாட்டேனே...என்று முகத்தைப் பொத்திக் கொண்டு கேவிக்கேவி அழுதான் தேவா.

தன் தோள்மீது சாய்ந்து அழுதுகொண்டிருந்த சின்னுமீது கோபம்கோபமாய் வந்தது கேத்ரினுக்கு.

ஒருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது சின்னுவும்  அவள் அம்மாவோடு வந்திருந்தாள். தனியாக இருந்த சமயம்பார்த்து கேத்ரினும் தேவாவும் பிரிட்டோ அவளைக் காதலிக்கும் விசயத்தைச் சொன்னார்கள்.

நான் பிரிட்டோகிட்ட இதுவரைக்கும்  அப்படி நெனச்சுப் பழகல என்று சிரித்தாள்.

அவன் உன்ன ரொம்ப டீப்பா லவ்பண்றான் சின்னு!

எதைவச்சு அவன் அப்படி நினைச்சான்னு எனக்குத் தெரியல. ஆனா நான் அவன அப்படி நெனக்கல என்று மறுத்துவிட்டாள்.

பிரிட்டோ ...எப்படி சொல்லறதுன்னு தெரியல. அவ மனசுல அப்படியெல்லாம் ஒண்ணுமில்லனு சொல்லிட்டா.என்றதும்,
சொல்லாத கேத்தி! சொல்லாதஎன்று கத்திக்கொண்டே ஓடினான்.
பிரிட்டோ நான் சொல்றதைக் கேளு! தயவுசெஞ்சி தப்பாப் புரிஞ்சுக்காத. என்ற தேவாவிடம்,
உங்கள யாரு கேட்கச் சொன்னது? தெரியாம இருந்தாலாவது அது முகத்தைப் பாத்துப் பேசறத கேட்டுக்கிட்டே சந்தோசமா இருந்திருப்பேனில்ல. இனிமே இங்க வந்தா நான் எப்படிப் பாப்பேன்...நேர்ல நின்னு எப்படிப் பேசுவேன்?என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

என்ன சொன்னுச்சு...அப்படி நெனச்சு பழகலையாமா? அப்போ அது பேசுனது பழகினதுக்கு ...என்னையே சுத்தி சுத்தி வந்ததுக்கெல்லாம் என்ன அர்த்தமாம்? நல்லா படிக்குது. இங்கிலீஷ்ல எல்லாம் பேசுது. அதான் வேணாங்குது. அவங்க கேஸ்ட்ல பொறந்திருந்தாலாவது எனக்குக் கட்டிக் கொடுத்திருப்பாங்கல்ல என்று குழந்தைமாதிரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒருதடவை வீட்டுக்கு வந்திருந்தப்ப மல்லிகா மாமி, பிரிட்டோ பாக்கறதுக்கு அழகா இருக்கான். எங்க கேஸ்ட்டா இருந்தா சின்னுவ அவனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருப்பேன் னு பேசிக் கொண்டிருந்தது பிரிட்டோவின் செவியில் நுழைந்து மனத்தில் ஆழப் பதிந்துவிட்டிருக்கிறது.
அவங்க ஏதோ விளையாட்டா சொல்லி இருப்பாங்க. அதைப்போய் மனசுல வச்சுக்கிட்டு. எல்லாத்தையும் மறந்துடு பிரிட்டோ.

முடியாது கேத்தி.என்று தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். அதற்குப் பிறகு அவன் சந்தோசம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. சின்னுவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டது. பிரிட்டோ மௌனமாகவே இருந்தான். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

ஆம்புலன்ஸ் வேன் தெருமுனையில் நுழைந்தது. வாசலிலிருந்து தெருவுக்கு ஓடிய கூட்டம் பெருங்குரலெடுத்துக் கதறியது. ஆம்புலன்ஸ் வீட்டுவாசலில் வந்து நின்றது. பாடி இறக்கப் பட்டது.  பாட்டி மார்பிலடித்துக் கொண்டு அழுதாள். அம்மா தெருவில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். தம்பி தங்கைகள் கதறினார்கள். அப்பா பெரியப்பா சித்தப்பாவெல்லாம் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள்.

உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு முகம் கருவடைந்து காணப்பட்டது. இறந்து மூன்றுநாள் ஆகிவிட்டதால் பாடியை சீக்கிரமாக எடுத்துவிட அவசரப்படுத்தினார்கள்.

மொகம் பாக்கிறவங்கயெல்லாம் சீக்கிரமா பாத்துடுங்க.!

கேத்தி...வாம்மா...கடைசியா ஒருதடவை அண்ணனைப் பாத்துடு. எடுத்துடப் போறாங்கம்மா... என்று  வற்புறுத்தி அழைத்து வந்து காட்டினார்கள்.

முகம் பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.

இது எங்க அண்ணன் இல்ல...இது பிரிட்டோ இல்ல...என்று பயந்து கத்தினாள்.

கொஞ்ச நேரத்தில் அதே ஆம்புலன்ஸ் வேனில் பாடியை இடுகாட்டிற்குக் கொண்டுபோனார்கள்.

பிரிட்டோவுடன் சேர்ந்து அவனது காதலும் புதைந்துபோனது.
--------------------------------------------------------------