Friday, March 28, 2014

சந்திரா மனோகரனின் ”உதிரும் மௌனம்” துளிப்பா நூல் மதிப்புரை - - யாழினி முனுசாமி

சந்திரா மனோகரனின் பதினெட்டாவது நூல் உதிரும் மௌனம். அவரது முதல் ஐக்கூ நூலிது. 17.01.2014 அன்று நூறாவது வயதை நிறைவுசெய்து நூற்றிவொன்றாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் தன் அப்பா அ. நாகசோன் அவர்களுக்கு இந்நூலை அர்ப்பணித்திருக்கிறார். (இன்றைய தேதியில் ( 05- 03- 2014) உலகின் வயதானவர் ஜப்பானைச் சேர்ந்த மிசாவ் ஒகாவா. மிசாவ் ஒகாவாவின் வயதைக்கடந்து வாழ நாகசோன் அய்யாவை வாழ்த்துவோம்!)
    
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

  மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
   என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

எனும் குறள்கள் நினைவுக்கு வருகின்றன.

பெற்றோரைப் போற்றும் குணம் கொண்டிருப்பதனால்தான் சந்திரா மனோகரனால்

       அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
         எப்பவோ கேட்ட பாடல்
         இப்ப நீங்க எங்கே?

என்று எழுத முடிகிறது.

     கவிதை என்பது படிப்பவரின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவே நல்ல கவிதையாக இருக்க முடியும். அப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய உள்ளன.

    இயற்கை நிகழ்வுகளின்மீது தம்கற்பனையை ஏற்றிக் ( தற்குறிப்பேற்ற அணி) கவிதையாக்கிவிடும் கலை சந்திரா மனோகரனுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. நாம் பார்த்துக் கடந்துபோய்விடுகிற பல காட்சிகளை இவர் அழகான கவிதைகளாக்கியிருக்கிறார்.

   கவனம் ஆதவனே!
    மாலையில் நீயிறங்க
    அச்சத்தில் குழந்தை

எனும் முதல் கவிதையே அதை மெய்ப்பித்துவிடுகிறது.

   மழைக்காலங்களில் சூரியனை மேகம் மறைத்துவிடும் . அந்த இயற்கை நிகழ்வை-

     இரவின் அடைமழை
       எழவே தயக்கம்
        உனக்குமா சூரியனே!

என்று கவிதையாக்கிவிடுகிறார். மழைக்கால விடிகாலைகளில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவதற்குச் சுகமாக இருக்கும். சூரியனுக்கும் அப்படி இருக்குமோ என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர்.

     கிணற்றில் தெரியும் நிலாவை வானில் மேலேறித் தற்கொலை செய்துகொண்டதாக எழுதுகிறார். அந்தியில் சூரியனின் மறைவை அதனுடைய வீடு திரும்புதலாகஎழுதுகிறார். மற்றொரு கவிதையில் சூரிய வெளிச்சத்தை வெப்ப வலையாக உருவகப்படுத்துகிறார்.

    பகலவன் வீசிய
     வெப்ப வலையில்
     சிக்கிய உலகம்

இதுவோர் அழகான கற்பனையாகும்.

     இயற்கைக் காட்சிகள் - மூட நம்பிக்கைகள் – அழகியல் – அரசியல் என இவரது கவிதைகள் பயணிக்கின்றன. இறை நம்பிக்கையும் சில கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.

    வீடும் வாசலும்
      முதலில் தந்தாய் கடவுளே
      புயலில் என்ன சேதி?

என்று கேட்கிறார். மனிதர்களுக்கு வீடும் வாசலும் கடவுளா தருகிறார். அப்படியெனில் வீடற்ற மனிதர்களை ஏன் கடவுள் நடைபாதையில் வீசியெறிந்திருக்கிறார்? கடவுளர்களுக்கு வீடும் வாசலும் கோபுரங்களும் கட்டித்தருவதே மனிதர்கள்தான் என்று சொன்னால் அந்த உண்மையை எந்தக் கடவுளும் மறுக்க மாட்டார்தானே? வீடும் வாசலும் தந்தது கடவுள்தான் என்றால் புயலைத் தருவதும் கடவுள்தான் என்றாகிறது. அத்தனை அப்பாவி உயிர்களை ஏன் பலிவாங்க வேண்டும்? அதுவும் எளிய மக்கள்தான் பலியாவார்கள்…பணக்காரர்கள் அல்லர். இப்படியெல்லாம் இக்கவிதை குறித்துக் கேள்விகளை முன்வைக்கலாம் என்றாலும் இக்கவிதையின் கடைசி வரி கேட்கும் கேள்விக்குப் பதில்…. இயற்கையை அழிக்காதே! சக மனிதனை மனிதனாக நடத்து. எப்போது வேண்டுமானாலும் உன் வாழ்க்கை முடிந்துபோகலாம் என்பதுதான்.

    ஒரு சில கவிதைகளில் பறவைகளைப் பெண்களுக்குக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்.

    வானமில்லா இலக்கு இப்போது
     தாய்ப் பறவைக்கு
     தன் கூடு. தன் குஞ்சு.

திருமணம் ஆகாதவரையில் பெண்கள் வாழ்க்கையில் இலட்சியங்களை வைத்துக்கொண்டிருப்பார்கள். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும்… குடும்பமும் அந்தக் குழந்தையுமே அவளது வாழ்க்கையாகிவிடும். அதனை இக்கவிதை அழகாகச் சித்திரிக்கின்றது. மற்றொரு கவிதையில் பெண்களின் சுதந்திரம் வீட்டுக்குள்ளாக மட்டும் சுருக்கப்பட்டிருப்பதைச் சித்திரித்திருக்கிறார். அக்கவிதை-

     அந்தப் பறவைக்கு
      விடுதலை
      கூண்டுக்குள்ளேயே

கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும் மூடநம்பிக்கையைக் கவிஞர் அறவே வெறுக்கிறார்.  எதற்கெடுத்தாலும் நல்லநாள் நல்லநேரம் பார்ப்பவர்களுக்கு உறைக்கும்படியாக எழுதியிருக்கிறார்.

      “ அன்று அகால மரணம்
      எதற்கெடுத்தாலும்
      நல்லநாள் பார்த்தவன்

இக்கவிதை பல கேள்விகளைப் பொதித்துவைத்திருக்கிறது. நல்லநாள் நல்லநேரம் பார்த்துத்தான் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நல்ல நேரம் பார்த்துத்தான் பயணங்களைத் தொடங்குகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் திருமணத்திற்குச் செல்பவர்கள் விபத்தில் இறக்க நேரிடுகிறது? அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் ஏன் விபத்தில் கொத்து கொத்தாகச் சாகிறார்கள்? கும்பமேளாக்களில் ஏன் நூற்றுக்கணக்கானவர்கள் சாகிறார்கள்? இதே சாயலில் இன்னொரு கவிதையையும் எழுதியிருக்கிறார்.

 மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதைப்போலவே சடங்குகளையும் எதிர்க்கிறார் கவிஞர்.

      இறந்தவன் போயாச்சு
      இருப்போர் கிளறுவர்
      சடங்குக் குப்பைகள்

என்ன கொடுமையென்றால் வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடவுள் நம்பிக்கைகளையும் மறுத்து நாத்திகராகவும் தோழராகவும் வாழ்ந்தவர்களையும் அவர்களது வாரிகளும் உறவினர்களும் தங்களின் சாதி மதச் சடங்குகளின்படியே அடக்கம்செய்வதுதான்.   

      தன்னைப்பற்றி மட்டுமின்றித் தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் உற்றுநோக்கி எழுதுபவனே கவிஞன். புறவுலகை உற்றுநோக்கி எழுதுகிறார் சந்திரா மனோகரன். மனிதர்களின் புழுக்கத்தைப் போக்கும் மரத்திற்கே வியர்க்கிறது அவருடைய கவிதையில்.

      உயரும் நூதனக் கட்டடங்கள்
      வியர்த்தது மரத்துக்கு
      விஞ்சுவதே அடுத்த இலக்கு

கட்டடங்களால் மரத்திற்கு வியர்க்கும் சிந்தனை நல்ல சூழலியல் சிந்தனையாகும்.

      இன்றைய நவீன மனிதர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகத் தமிழர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் கல்விமுறை ஒன்று. தனியார் கல்வி நிறுவனங்களில் முறையற்ற கட்டணங்கள் கெடுபிடிகள் என்றால் அரசுக்கல்வி நிலையங்களில் பொறுப்பற்ற ஆசிரியர்களால் தரமற்றக் கல்விச் சூழல் நிலவுகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் என்பது பெருஞ்சுமையாகத்தான் இருகின்றது. வீட்டுப்பாடங்களையும் செய்முறைகளையும் பெற்றோர்கள்தான் செய்யவேண்டி இருக்கின்றன. அதனை ஒரு கவிதையில் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

      பேய் மழை
      பள்ளிகளுக்கு விடுமுறை
      பெற்றோரை எழுப்பாதீர்

   சில நேரத்தில் தர்க்கத்தைப் புறந்தள்ளிவிட்டால் கவிதையை இரசிக்கலாம். அப்படியான ஒரு கவிதை –

      மேலே போகிற அவசரத்தில்
      கடவுளின் கடைசி ஹைக்கூ
      ஒரு பட்டாம்பூச்சி


உழவர்களின் பாடு பெரும்பாடுதான் . மழை பெய்யவில்லையென்றாலும் பிழைப்பு கெடும். அதிகமாகப் பெய்தாலும் பிழைப்ப கெடும். ஒரு கவிதையில் அதைச் சுட்டியுள்ளார் –
     
      வெள்ளநீர்ச் சகதியில்
      பயிரோடு
      உழவன் வாழ்வும்

போராளியின் அர்ப்பணிப்பையும் உறுதியையும் ஒரு கவதையில் பதிவு செய்கிறார்-
       
      போர்வீரன் கீழே சாய்கிறான்
      பிரிக்க முடியாமல்
      கையில் துப்பாக்கி”

சர்வதேச போர்விதிமுறைகளைப் புறக்கணித்துவிட்டு அட்டூழியங்கள் புரியும் இனவாத அரசுகளின் இழிசெயலைப் பின்வரும் கவிதையில் பதிவுசெய்துள்ளார் –

      தொடரும் அமைதிப்பேச்சு
      காத்திருக்கும்
      சவக்குழிகளுடன் அந்தி

அமைதிப்பேச்சை நடத்திக்கொண்டே மக்களையும் போராளிகளையும் கொன்றுகுவிக்கும் அரசுபயங்கரவாதத்தை இக்கவிதை நினைவுபடுத்துகிறது.

      தோழமையோடு ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறேன். எதைப் பற்றி எழுதுகிறோமோ அது படிப்பவர் மனத்தை ஏதோவொரு விதத்தில் பாதிக்க வேண்டும். சில கவிதைகள் வெற்றுக் காட்சிகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. ஒருசில கவிதைகள் முரண்பாடாக உள்ளன. குறிப்பாகப் பின்வரும் இரண்டு கவிதைகளைச் சொல்லலாம்.

      கிழிந்த ஓலைக் குடிசைக்கு
      கம்பீரம் வந்தாயிற்று
      ஆதவன் நுழைவு

            ” குடிசை பற்றி எரிகிறது
      சிதிலங்களுக்குள் திணறின
      ஒளிச்சிதறல்கள்

சூரியவொளி விழுவதால் எப்படி ஒரு குடிசைக்குக் கம்பீரம் வந்துவிடும்? ஓட்டைக் குடிசை ஓட்டைக் குடிசைதானே? மழைக்காலத்தில் தண்ணீர் கொட்டுமே…. அப்போது என்ன சொல்வது ? அதைப்போலத்தான் பற்றியெரியும் குடிசையில் ஏழையின் வாழ்க்கைக் கருகுவதைப் பார்க்கவேண்டுமே ஒழிய சிதிலங்களுக்குள் திணரும் ஒளிச்சிதறல்களையல்ல. விமர்சிக்கப்படவேண்டிய கவிதைகள் இன்னும் உள்ளன. அதைவிட அதிகம் உள்ளன … படித்து இரசிக்க வேண்டிய நல்ல கவிதைகள்.

                        ---------------