Friday, March 30, 2012

நான் படித்து நெகிழ்ந்த யூமா வாசுகியின் ஒரு கவிதை...உங்களுக்காக...


இன்டர்வியூ
பரிசீலிக்கும் கரங்களின்
வியர்வைக்கறை படிந்து 
விளிம்புகள் பழுப்பேறிய சில 
காகிதத் தகுதிகளை 
அடுத்த நாளுக்கான ஆயத்தமாய்
அகாலம்
எண்ணிச் சரிபார்க்கும்.
வெக்கையில் முறுகும் நகரத்தினூடே
சில்லறைக்கடன் சித்திக்கும்
அனுகூலத்திசை நாடும்
நடைதளர்ந்த்தும் பசிவேகும் குடல்.
சிகரெட் புகைச் சமாதானமிட்ட
ஒரு கோப்பைத் தேநீரால்
பிரியங்காட்டும்
அறிமுகங்களுக்காக
உடனடித்திருத்தம் வரும் கடன்இலக்கில்.
சாலையோரக் கல்லில் அமர்கையில்
மடிந்துநோகும் வயிற்றின் காலியிடம்
வெட்கமற்றுக் காத்திருக்கிறது-சாத்தியமற்ற
உணவருந்த அழைக்கும் குரலுக்கு.
பெருஞ்சாலையின் வாகனப் பேரிரைச்சலை
மெல்ல விழுங்குகிறது எதுவோ
நீர்த்து நிலையற்று வடிவங்கள் கலந்து
மயங்கிவருகிறது வெயில்.
தவறிய புத்தகம் எடுக்க மயங்கும் தலையைக்
குனியப் போவதில்லை நான்-வீழின்
என் தலையேந்தி மடியில் கிடத்த
இங்கே நீயில்லை.
அறைக்குப்பைகளோடு
என் முகம்காண ஏங்கும் உன் கடிதங்கள்.
முடிவிற்குள் இழுக்கிற உன்
முதுமையின் பொருட்டாயினும் உன்னைத்
தேடிவரும் நினைவு- ஒரு
கேள்விக்கு பதிலற்று அஞ்சுகிறது.
அலுவலகத்திற்கு மாற்றாக சிறு வீடு
மேசையிடத்தில் நைந்த கட்டில்
வாசல் நாய் கதவுச் சேவகனின் பிரதி.
மறந்துபோன கோலத்தைத் தரையில்
கிறுக்கிப் பார்த்தபடி
“ எத்தனைக்காலம் இப்படி இருப்பாய்”
என் ஒரு கேள்வியை முனகுவாயே அம்மா
இன்னமும் கிடைத்தபாடில்லை
ஒரு பதிலும்.
--------------------------------------------