Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - டி.அருள் எழிலன்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
"சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பாதான் எல்லாம் பத்தாவதோட படிப்ப பாதில விட்டுட்டு எங்கப்பாவோட சம்பளப் பணத்தை எடுத்துக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். அது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டு திரும்ப வீட்டுக்குப் போயி சொல்லிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்திட்டேன். அப்ப எங்கப்பா சொன்னாரு... "படிபடின்னு சொல்றேன் படிக்க மாட்டேங்குற உனக்கு இப்ப தெரியாது, உன்னோட 30, 31வது வயசுல படிக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்படுவ" என்றார்.

தாமஸ் ஆஸ்பிட்டல்ல உடம்புக்கு முடியாம எங்கப்பா அட்மிட் ஆயிருந்தாரு. அப்போ நான்தான் கூட இருந்து பார்த்துக்கிட்டேன். அன்னிக்கி என்னோட 31வது பிறந்த நாள். எங்க அப்பாவாண்ட சொன்னேன்... "படிக்காம போயிட்டோமன்னு 30, 31வது வயசுல வருத்தப்படுவேன்னு சொன்னீங்களே... படிக்கலைங்கிறதுக்காக இப்பக்கூட நான் வருத்தப்படலப்பா" என்றேன். பெற்றோர்கள் நினைப்பது போல் இல்லை வாழ்க்கை. அது துரத்திக் கொண்டே இருக்கிறது என்று எதார்த்தம் புரிந்து பேசிக் கொண்டே போகும் டி.அருள் எழிலன், 'ராஜாங்கத்தின் முடிவு' எனும் குறும்படத்தை இயக்கியவர். இதழியல் துறையிலிருக்கும் அரிதான மனிதர்களில் ஒருவர் இவர். தன் உயர்வுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடையே சமூகம் பற்றிய சிந்தனையை சுமந்து திரியும் இளைஞர். இயல்பான எளிய மனிதர். பாகிஸ்தான் எழுத்தாளர் 'சதத் ஹசன் மாண்டோ'வின் 'ராஜாங்கத்தின் முடிவு' சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார் டி.அருள் எழிலன்.

எதார்த்தத்தை மறந்து கனவுலகில் சஞ்சரிக்கும் இளைஞனைப் பற்றிய குறும்படம் இது. ஓர் அறைக்குள்ளேயே இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓர் இளைஞன், தொலைபேசி, தொலைபேசியின் மறுமுனையில் ஒலிக்கும் பெண்குரல். இவையே கதாபாத்திரங்கள்.

தாடி வைத்த இளைஞன் ரவிக்குமார், துவக்கம் முகம்மது பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி அறிமுகம் செய்கிறது ஒரு பின்னணிக்குரல். "நிறைய படிப்பான், நல்லா ஊரு சுத்துவான், சம்பளத்துக்கு உத்தியோகம் பார்க்கிறது பிடிக்காது. நண்பர்கள் சாப்பாட்டுக்கு உதவி பண்றாங்க, சென்னைல இருக்கிற ஏதாவது ஒரு பிளாட்பாரத்துல தூங்கிக்குவான், இவனுக்கு கிடைக்காத ஒண்ணே ஒண்ணு... பொண்ணு"

தொலைபேசி ஒலிக்கிறது... மறுமுனையில் ஒரு பெண் பேசுகிறாள். முகம் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது. இருவருக்குமான உரையாடல் தொடர்கிறது. இவனது பெயர், பிடித்த பொழுதுபோக்கு, இவனது வாழ்க்கை என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இவனும் தனக்குப் பிடித் Minolta camera விலிருந்து தற்போது தங்கியிருக்கும் நண்பனின் அறை வரை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. அவன் எதிர்பார்த்த மாதிரி அதே குரல். புட்டியை பற்ற வைத்து புகைத்தபடி பேசுகிறான். 'என் பேர கேட்கமாட்டிங்களா என்கிறது பெண்குரல்' 'தேவையில்ல வேணுண்ணா நீ பேசப் போற' இப்படியாக உரையாடல் வெகு சுவாரஸ்யமாய் போகிறது. 'மேகமே மேகமே
பால் நிலா தேயுதே' பாடலை தொலைபேசியில் பாடுகிறாள். பு*றகு அந்தக் குரலுக்காக இவன் காத்திருக்கத் தொடங்குகிறான். இதனிடையில் அவனது நண்பன், "டேய் ரவி, நான் 4 நாள்ல ஊருக்கு வந்துடுவேண்டா, வந்த வேல முடிஞ்சிடுச்சி" என்கிறான். இந்தத் தகவலை தொலைபேசி பெண்ணிடம் சொல்கிறான். அவளைச் சந்திக்க விரும்புகிறான். தன் ராஜாங்கம் முடியப் போவதை வருத்தத்துடன் சொல்கிறான். உடல் நிலை குன்றி இருமியபடி விரக்தியிலிருக்கிறான். வாயில் ரத்தம் ஒழுக பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தின் மீது சாய்ந்துவிடுகிறான். சாய்ந்தவன் சாய்ந்தவன்தான் தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இத்துடன் இக்குறும்படம் முடிவடைகிறது.

டி.அருள் எழிலன்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை எனும் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் எழிலன். இந்தியாடுடே வழங்கிய 'சிறந்த இளம் பத்திரிகையாளர்' விருதை பெற்றிருக்கும் இவர் தற்போது 'ஆனந்த விகடனில்' உதவி ஆசிரியர். வழக்கமான பத்திரிகையாளர்களை போலல்லாது மாறுபட்ட சிந்தனை உடையவர்.

இனி அவருடன்....

• இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

"எங்க வீட்டுல சுமார் ஆயிரம் புத்தகம் இருக்கு, நான் முதன்முதல்ல படிச்ச நாவல் 'தகழி' எழுதிய 'செம்மீன்', இரண்டாவதா படிச்சது மாக்சிம் கார்க்கியின் 'தாய்', அப்பா எப்பப்பார்த்தாலும் 'படி படி என்று வலுக்கட்டாயமா திணிச்சதால படிப்பு மேல ஒரு வெறுப்பு வந்துடுச்சி. நாகர்கோவில்ல பள்ளிக்கூடம் போகாம ஷபி****ப்ஹவுஸ்' ங்கிற இடத்துல ஒளிஞ்சுக்குவோம். அங்க இருந்த பாஸ்டர் சென்ரல் லைப்ரரியில் தான் இந்த 'ராஜாங்கத்தின் முடிவு' என்கிற கதையை படிச்சேன். அப்போ 8வது படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்பவே இந்தக் கதை மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சி."

• குறும்படம் என்பது சினிமாவில் நுழைவதற்கான கருவியா?

"குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை ஏனென்றால் கோடம்பாக்கத்தில் இதெல்லாம் செல்லாது. குறும்படத்தைப் பார்த்துவிட்டெல்லாம் யாரும் வாய்ப்பு தருவதில்லை."

• தமிழ்க் குறும்படங்களின் போக்கு குறித்து?

"தமிழ்க் கலாச்சாரம், இந்து கலாச்சாரம் எனும் 'மைண்டு செட்டப்' தான் படைப்புக்கு முதல் எதிரி. குறும்பட இயக்குநர்களும் பொது புத்தியிலிருந்துதான் செயல்படுகின்றனர். வேகுசில படங்கள் தான் சமூகம் சார்ந்து வெளிவருகின்றன. ஆர்வக் கோளாறின் காரணமாக நிறையபேர் குறும்படம் எடுக்கிறார்கள். எதை எடுத்தால் அரசாங்கம் ஊக்கப்படுத்துமோ அதை எடுக்கிறார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற செய்திப் படங்கள் எடுப்பது அரசு செய்ய வேண்டிய வேலை. அதற்குக் குறும்பட இயக்குநர்கள் தேவையில்லை. நுட்பமான விசயங்கள் குறும்படங்களில் குறைவாக இருக்கு"

• அப்படினா, குறும்படங்கள் எப்படி இருக்குணும்னு நினைக்கறீங்க?

"மனித உறவுகளுக்கிடையில் ஏற்படும் நெருடல்களும் பிரிவுகளும் ஒன்றையொன்று தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தில் உழல்கின்றன. இத்தகைய உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு படைப்பாளி சமகால அரசியலிலிருந்து தப்பிக்க முடியாது. சமகால அரசியல் அதாவது, மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமான குறும்படங்கள் வரவில்லை. மறுகாலனிய ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டக்கூடிய குறும்படங்கள் தமிழில் வரவேண்டும்".

• NGO க்களின் ஆதரவுடன் குறும்படம் எடுப்பவர்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

"அமெரிக்காவின் காலனிய கொள்கையை நியாயப்படுத்தக் கூடிய பொருளாதார அடியாட்களாக NGO குழுக்கள் உள்ளன. இதற்காக அமெரிக்கா மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது. இந்த NGO குழுக்களின் குரல் இடதுசாரிகளின் குரலில் ஒலிக்கும். மக்கள் இடதுசாரி அமைப்புகளின் கீழ் அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த NGO குழுக்கள் பொருளாதார அடியாட்களாக செயல்படுகின்றனர். இவர்கள் போலி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறார்கள். இவர்களைவிட மக்களுக்கு உண்மையாக உழைக்கக் கூடிய குழுக்கள் தமிழகத்தில் பல உள்ளன.

சுனாமிக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1000 கோடிக்கு மேல் புழக்கத்தில் உள்ளது. அமெரிக்கா ஒரு புறம் விவசாயத்தை ஒழிக்கும், மறுபுறம் தங்கள் பூர்விக நிலத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்காக இந்த NGOக்களின் மூலம் குரலும் கொடுக்கும். இடதுசாரிப் பாதையில் மக்கள் அணிதிரண்டால்தான் அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை முறியடிக்க முடியும். எனவே தான் சொல்கிறேன் NGO சார்ந்து இயங்கக் கூடிய இயக்குநர்கள் படைப்பு நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்".

• அப்படியெனில் இடதுசாரிகள் நல்ல குறும்படங்களை எடுக்க வேண்டியது தானே?

"தேர்தல் பாதையில் உள்ள பொதுவுடைமையாளர்கள் தேர்தல் ஏஜென்ட்டுகளாகத்தான் செயல்படமுடியும். அவர்களால் குறும்படங்களை எடுக்க முடியாது."

• நீங்கள் ஏன் ஷராஜாங்கத்தின் முடிவுடன் நிறுத்திவிட்டிர்கள்?


"என்னால் மற்றவர்களைப் போல NGO க்களுடன் இணைந்து செயல்பட முடியாது. தனி நபர்கள் உதவி செய்யும் போது மீண்டும் குறும்படங்கள் எடுப்பேன்."

• ஒரு படைப்பாளியாக, பத்திரிகையாளராக இந்திய தமிழ்ச் சமூகத்தின் மீதான உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?

இந்தியா நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்துமதவாதம் மேலோங்கியுள்ளது. 'சாதிக் கட்சிகள் தேவையில்லை' என்று ஒரு கணக்கெடுப்பில் 95 வீதம் பேர் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மூளையில் சாதியுள்ளது.

குறும்பட இயக்குநர் - மணிமேகலை நாகலிங்கம்

  யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
படைப்பு மனம் கொண்டவர்களுக்குச் செய்யும் வேலையும் வருமானமும் மட்டும் நிறைவளிப்பதில்லை படைப்பு வெளிப்பாட்டின் வாயிலாகவே மன நிறைவெய்துகின்றனர். கைப்பணம் செலவழித்தேனும் தன் கலையார்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் குணாதிசயம் படைத்தவர்கள் இந்தக் கலைஞர்கள். குடும்ப முன்னேற்றம் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை அவர்கள். அப்படித்தான், சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிவரும் 'மணிமேகலை நாகலிங்கம்', 'ஹைக்கூ தரிசனம்' எனும் குறும்படத்தின் மூலம் தன்னை ஒரு குறும்பட இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு அவர் செலவழித்த தொகை... ஒரு லட்சத்திற்கும் மேல்.

குறும்படம் : ஹைக்கூ தரிசனம்

இக்குறும்படத்தில், மு.முருகேஷ், பா.உதயகண்ணன், வானவன், மணிமேகலை நாகலிங்கம் ஆகிய நான்கு கவிஞர்களின் 36 ஹைக்கூ கவிதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம் இயற்றிய ஹைக்கூ பற்றிய ஒரு பாடலும் தலைப்புப்பாடலாக ஒலிக்கிறது. நா.பூவரசி இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார்.

அழகியலை அதிகம் தொடாமல் சமூகமும் அரசியலும் சார்ந்த ஹைக்கூ கவிதைகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



'அறிவியலில்

நூற்றுக்கு நூறு

நோட்டுக்குள் மயிலிறகு'

எனும் ஹைக்கூ முதலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

'அவளின் ஆயுள்

இறந்தும் தொடர்கிறது

நினைவாய் நான்'

எனும் ஹைக்கூ கவிதையுடன் இக்குறும்படம் முடிவடைகிறது.



36 கவிதைகளும் தனித்தனியாக 36 இடங்களில் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது இக்குறும்படத்தின் சிறப்பு.

'எல்லோரும் சாப்பிட்டாச்சு

மனசு மட்டும் நிறைந்த

அம்மா'

எனும் கவிதைக்குப் பொறுத்தமாக வறுமை சூழ்ந்த ஒரு குடும்பமும் அக்குடும்பத்தின் அம்மாவின் மனசும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

கருவேள மரங்கள் அடர்ந்த பகுதியை திறந்தவெளி கழிவறையாகப் பயன்படுத்தும் கிராமத்து மனிதர்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.


'கருவேள மரங்கள்

அடர்ந்து வளரட்டும்

வேண்டும் கழிப்பறை'

எனும் கவிதைக்கு.

பல்வேறு நாளிதழ்களில் வந்த காவிரி பற்றிய செய்திகளும் அறிக்கைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'நீரின்றி

செழித்து வளர்கிறது

காவிரி அரசியல்'

எனும் கவிதைக்கு.

இப்படியான கவிதைகள் இக்குறும்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அ.வெண்ணிலா, சொர்ணபாரதி, வே.எழிலரசு, அமிர்தம் சூர்யா, தமிழ்மணவாளன் போன்ற நவீன கவிஞர்களின் பங்களிப்பும் இக்குறும்படத்தில் உள்ளது.

சுமாரான கவிதைகளையும் நேரத்தையும் குறைத்திருந்தால் இதன் வீச்சு இன்றும் அதிகமாயிருக்கக்கூடும் என்றாலும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக இக்குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் காட்சி ஆவணம் என்கிற வகையில் இக்குறும்படம் முக்கியமானதாகும்.

இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம்...

"ஓவியக்கவிஞரான மணிமேகலை நாகலிங்கம் எவ்விதமான செயலிலும் முனைப்போடு உழைப்பவர். அமெச்சூர் நாடக நடிகராக, கவிஞராக, ஓவியராக தன்னை வளர்த்துக் கொண்டவர், இப்போது ஐக்கூக் கவிதைகளைக் காட்சிப் படுத்தி குறும்பட இயக்குநராகவும் பரிணமித்திருக்கிறார்" எனக் 'கல்வெட்டு பேசுகிறது' சிற்றிதழ் இவரை அறிமுகம் செய்கிறது. ஓவியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், ஹைக்கூ 'புகைப்படக் காட்சி' ஒன்றையும் சென்னையில் நடத்தியுள்ளார்.

'நினைவுகளோடு', 'நினைவில் நீ' எனும் இரு நூல்களைத் தொகுத்திருக்கிறார்.

இனி, அவருடன் ...

· ஹைக்கூ கவிதைகளை குறும்படமாக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?

"அடிப்படையில் நானொரு நாடக நடிகர் ஒவ்வொரு நாடகக் கலைஞருக்குள்ளும் திரைப்பட கனவு இருக்கும். எனக்கும் அத்தகைய சினிமா கனவு இருந்தது. எந்தவொரு செயலுக்கும் ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. என்னுடைய சிறுகதையை குறும்படமாக்க நண்பர் கவின் அவர்களை அணுகினேன். அதில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 5 வரி கதை கேட்டுவிட்டு 50 ஆயிரம் ஆகும் என்றார், நான் 15 ஆயிரத் தான் பட்ஜெட் வைத்திருந்தேன். எனவே அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

2002 இல் மு.முருகேஷ் நடத்திய 'ஹைக்கூ திருவிழா' நிகழ்ச்சியில் 'ஹைக்கூ ஓவியக்கண்காட்சி ' நடத்த எனக்கு வாய்ப்பளித்தார். அதன் தொடர்ச்சியாகவும் 'ஹைக்கூ தரிசனம் ' எனும் இக்குறும்படத்தை இயக்கினேன்".

· ஹைக்கூ தரிசனம் எடுக்கும் போது இருந்த உங்கள் மனநிலைக்கும் இப்போதைய புரிதலுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?

"ஹைக்கூ கவிதைகளை யாரும் குறும்படமாக்கவில்லை. எனவே, சமூக அக்கறையுள்ள ஹைக்கூ கவிதைகளைத் தேர்வு செய்து குறும்படமாக்கினேன். அப்போது ஆவணப் படங்களில் 'கிரியேட்டிவ்' இல்லை, அது தேவையற்றது என்ற நினைப்பிருந்தது. பாரதி கிருஷ்ணாவின் 'ராமய்யாவின் குடிசை' 'என்று தணியும்' ஆகிய ஆவணப் படங்களைப் பார்த்த பின் அதன் தேவையை உணர்ந்து கொண்டேன். குறைந்த செலவில் கூட நல்ல குறும்படம் எடுக்க முடியும் என்பதை ஆர்.ரவிக்குமாரின் 'எட்டா(ம்) வகுப்பு' படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன் கண்ணீர் வரவைத்த குறும்படம் அது".



குறும்பட இயக்குநர் - ஆர்.ரவிக்குமார்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
திருப்பூரில் சிறிய அளவில் நூல் உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்துவரும் 24 வயதேயான ஆர்.ரவிக்குமார், தன் வேலைகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குறும்படங்களை இயக்கிவருகிறார். சிறுவயதில் ஓவியத்தின் மீது ஆர்வம் செலுத்திய இவரின் கவனத்தை குறும்படத்தின் பக்கம் திசை மாற்றியது 'திருப்பூர் மத்திய அரிமா சங்கம்' நடத்திய குறும்பட விழாக்கள்.

திருப்பூரைக் களமாகக் கொண்டு சிறுவர் தொழிலாளர் மற்றும் வறுமையை அடிப்படைக் கருவாகக் கொண்டு 'லீவு','சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' ஆகிய மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய குறும்படங்களில் முக்கியமானது, 'எட்டா(ம்) வகுப்பு'.

எட்டா(ம்) வகுப்பு :

பழைய பேப்பர் கடையில் வேலை செய்யும் சிறுவன், செல்வம். வறுமையின் கோரப்பிடியில் சிதைந்த இவன் குடும்பத்திற்கு இவன் உழைப்பு தேவைப்படுவதால் தன் பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள நேர்ந்தவன். அவ்வவ்போது பழைய பேப்பர் கடைக்கு வரும் பழைய புத்தகங்களில் எட்டாம் வகுப்பு புத்தகங்களை மட்டும் தேடிப் பிடித்து தன் படுக்கைக்குக் கீழே பாதுகாத்து வைக்கிறான். ஐந்தாம் வகுப்பைக்கூட தாண்டாத இவனுக்கு எதற்கு எட்டாம் வகுப்பு புத்தகங்கள் என்று யோசிப்பதற்குள் காட்சி 'பின்னோக்கு உத்தி'யில் (ஃபிளாஷ்பேக்) நகர்கிறது.

ட்ரை சைக்கிளில் (மூன்று சக்கர சைக்கிள்) செல்வம் பழைய பேப்பர்களை எடுத்து வரும் வழியில் தன்னுடன் படித்த பழைய நண்பன் 'பிரகாஷ்' என்பவனைச் சந்திக்கிறான். இப்போது அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இருவரும் தம் குடும்பச் ழலைப் பேசியபடி செல்கிறார்கள். அவர்களின் உரையாடலில் இரு குடும்பத்து வறுமை ஊடாடுகிறது. நோயால் தன் அம்மா இறந்து போனதையும் அதனால் படிப்பு பாதியில் நின்று போனதையும் சோகத்துடன் சொல்கிறான்.

"எனக்கொரு வேலை பாருடா செல்வம். எங்க வீட்டுலயும் புத்தகம்கூட வாங்க முடியலடா" என்கிறான் பிரகாஷ்.

"என்னைப் போல நீயும் ஆகிடாதடா, பத்து வருசம் கழிச்சி நீ டாக்டர் பிரகாஷ் என்ஜினீயர் பிரகாஷ், அப்படித்தானே!" என்கிறான் செல்வம்.

"எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, எங்க வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்கிறான் ஏக்கத்துடன் பிரகாஷ்.

சைக்கிள் சக்கரம் சுற்றுகிறது வாழ்க்கைச் சக்கரத்தைப் போல.

அந்த நண்பன் பிரகாஷ்க்காகத்தான் இவன் எட்டாம் வகுப்பு புத்தகங்களை தேடித் தேடி எடுத்து வைத்திருக்கிறான். பழைய பேப்பரில் கிடைத்த செருப்பைக்கூட எடுத்து வைத்திருந்து பிரகாஷ்க்குக் கொடுத்து உதவுகிறான் செல்வம். தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நண்பனுக்குக் கொடுத்துவிட்டு வர சென்ற செல்வம், தன் நண்பன் பிரகாஷ் இரண்டு நாளாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலுடன் குழப்பத்துடன் திரும்புகின்றான்.

காட்சி மாறுகிறது பனியன் கம்பனி ஒன்றிலிருந்து பழைய அட்டைப் பெட்டிகளை எடுத்துவர தன் முதலாளியுடன் (அவரும் ஐந்தாவது படித்தவர் தான்) செல்கிறான் செல்வம். பனியன் கம்பனியின் வாசலில் கிடக்கும் செருப்புகளில் ஒரு ஜோடி செருப்பை மட்டும் உற்று உற்றுப் பார்க்கிறான் செல்வம். மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்கிறான். அங்கே சிறுவர்களோடு ஒருவனாக பிரகாஷ்ம் வேலை செய்து கொண்டிருக்கிறான். "எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்ற பிரகாஷ்ன் குரல் செல்வத்தின் காதில் மீண்டும் ஒளித்தது.

"என்னதான் இலவசப் புத்தகம், இலவசக் கல்வி கொடுத்தாலும் நம்ம வருமானம் வீட்டுக்குத் தேவையா இருக்கும்போது நம்மாள எப்படிடா படிக்க முடியும்?" என்று தனக்குத்தானே ஆறதல் சொல்லிக்கொண்டு ட்ரை சைக்கிளில் செல்கிறான்.

குடும்ப வறுமையின் காரணமாக அடிப்படை உரிமையான கல்வி கூட பலருக்கு கிட்டுவதில்லை என்பதை இப்படம் சோகம் இழையோட சித்திரிக்கிறது. கார்த்தி எனும் சிறுவன் செல்வமாக நன்றாக நடித்திருக்கிறான். பிரகாஷ்க நடித்திருக்கும் சிறுவன் நன்றாகவே நடித்திருக்கிறான். இசை, வசனம் - தாண்டவக்கோன். ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் - ஆர்.ரவிக்குமார்.

ஆர்.ரவிக்குமார் பேசுவார்,"

"நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது. குறும்படம் எனும் தளத்திற்குள் நான் நுழைய முதற்காரணம், திருப்பூர் மத்திய அரிமா சங்கம் நடத்திய குறும்படத் திரையிடல் நிகழ்வுகள்தான். 'கனவு' சிற்றிதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தான் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அங்கு பார்த்த படங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நாமும் குறும்படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக ஏற்பட்டது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு 'லீவு' குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் 'சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன்.

நான்காவது படத்தை 1 மணி நேரம் படமாக எடுக்கவுள்ளேன். த.மு.எ.ச. தோழர்கள் எனக்கு உதவி வருகிறார்கள். இத்துறையில் சாதித்து குறிப்பிட்ட இடம் பெற உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் தொழில் நிலை பெரிய வருமானம் தரும்படி இல்லை. என் தந்தையும் தாயும் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள். அதனால் தான் இந்த அளவுக்காவது ஆதரவளித்து வருகிறார்கள். தொழிலை நிலைப்படுத்திக்கொண்டு என் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வேன் என்கிறார், நம்பிக்கையுடன்.

குறும்பட இயக்குநர் - அருண்மொழி


ருண்மொழி - தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது இவரது பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

தற்போது 49 வயதாகும் அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் 'காணிநிலம்' எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் 'ஏர்முனை' எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்...

நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55நிமிட படமிது.

பண்ணை வேலையார் 'சோடாமாணிக்கம்', காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று...

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

மூன்றாவது இனம் :

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா - 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் 'நூரி'யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த 'ஆஷா பாரதி' எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

'இரண்டாம் பிறவி' (1998) 'கூடவாகம்' (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி 'தோழி' எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions :

1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது. ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நதியின் மரணம்' ஆவணப்படம் இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் 'விடியல் வரும்' (45 நி) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் 'Key Maker ' , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன் இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

இனி அவருடன்...

திரைப்படத் துறையிலிருந்து குறும்படத்துறைக்கு வந்ததேன்?

"ஏதேனும் ஓரிடத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தாக்கம் தான் காரணம். அத்துடன் விவரணப் படங்களில் பிரச்சினைகளை ஆழமாக சொல்ல முடியும். திரைப்படத்திற்கு ஆவதைப் போல் பெரிய செலவெல்லாம் கிடையாது".

குறும்படம் - விவரணப்படம் - திரைப்படம் குறித்து?

"ஒரு சிறுகதையைப் போன்றது குறும்படம், கட்டுரையைப் போன்றது விவரணப்படம். தொடர் கதையைப் போன்றது திரைப்படம். குறும்பட இயக்கம் சனநாயகப் பூர்வமாகி விட்டதால் பெண்களும் இத்துறையில் எளிதாக ஈடுபடமுடிகிறது".

உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

"பி.லெனின், அம்ஷன் குமார், ஆர்.வி.ரமணி, லீனா மணிமேகலை, பிரசன்னா ராமசாமி, ஆனந்த்பட்வர்த்தன், அரூர் கோபாலகிருஷ்ணன்".

இன்னும் சிறந்த குறும்படங்கள் ஃவிவரணப்படங்கள் வெளிவர உங்கள் ஆலோசனை என்ன?

"சிறந்த ஆவணப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் தமிழக அரசு பரிசுகள் தரலாம். இயல் இசை நாடக மன்றம் போல் இதற்கென்று தனியாக ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம் நல்ல பதிவுகள் வரும். வெகுஜன மக்களின் எழுச்சிமிக்கல் போராட்டங்களைப் பதிவு செய்து எதிர்கால் சமூதாயத்திற்குக் காட்டவேண்டி லத்தீன் அமெரிக்கா, பொலிவியா, சிலி, வியட்நாம் போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்ற டாக்குமெண்டரி இயக்கங்களைப் போல இந்தியாவில் நிகழவில்லை. அதுபோன்ற இயக்கங்கள் இந்தியாவிலும் உருவாகவேண்டும்" என்று கூறும் அருண்மொழி, தொடர்ந்து ஆவணப்படங்களை இயக்கும் முயற்சியிலிருக்கிறார்.
nandri: www.andhimazhai.com
- யாழினி முனுசாமி

குறும்பட இயக்குநர் - முருக சிவகுமார்



லை இலக்கியவாதிகளிடையேயும் புதிய தலைமுறை இளைஞர்களிடையையேயும் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கலை, குறும்படமாகும். குறைவான செலவில் ஒரு குறும்படத்தை எடுத்துவிடக்கூடிய வாய்ப்பு கூடியிருப்பதும் அதற்கொரு காரணமாகும். எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் தூய அழகியல் சார்ந்தும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்தும் பேசும் இரு போக்குகள் காணப்படுவது போல் குறும்படத்துறையிலும் இவ்விரு போக்குகள் நிலவுகின்றன. பெரும்பாலும் அழகியல் சார்ந்தவற்றைக் குறும்படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணப்படங்களும் பேசுகின்றன. உண்மையை உண்மையாக வெளிப்படுத்த இவ்வடிவம் கைக்கொடுக்கிறது.

'ஒரு நதியின் மரணம்' எனும் ஆவணப்படத்தின் மூலம் தாமிரபரணி படுகொலையை வெளியுலகிற்குக் கொண்டுவந்து ஆவணப் படத்தின் வலிமையை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் ஆர்.ஆர்.சீனிவாசன். அவ்வரிசையில் தமிழில் ஒரு சில முக்கியமான ஆவணப்படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருப்பவர் முருகசிவகுமார். அந்த ஆவணப்படம் - 'விடுதீ '.

கிராமப்புறங்களிலிலுந்து வந்து சென்னையில் அரசு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நரகச் சூழலைச் சித்தரிக்கும் ஆவணப்படம் இது. சில விருதுகளையும் பரவலான வரவேற்பையும் பெற்றது இப்படம்.

'விடுதீ ' ஆவணப்படம்... (நிமிடம்:29 ஆண்டு 2005)

சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நரக நிலையை பேசும் படம் 'விடுதீ' .

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கும் படிக்க வரும் ஏழ்மையான தலித் மாணவர்கள் பலருக்கு அடைக்கலம் தருபவை இராயபுரம், வில்லிவாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் விடுதிகள். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் படும் இன்னல்களை அவர்களின் வாயிலாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இத்தகைய விடுதிகளில் கொடுக்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. தண்ணீர் கூட சுகாதார மற்றதாய் இருக்கிறது. இதனால் பலருக்கு டைபாய்டு, அல்சர் போன்ற வியாதிகள் வருவதாக விரக்தியுடன் பேட்டியளிக்கின்றனர் மாணவர்கள். பாசி படிந்த கழிவறைகள், கழிவறைக்கு அருகிலேயே மாணவர்களின் அறை, வெட்டவெளிகுளியல், உடல்களை அடைத்து வைத்ததைப் போல் ஒரே அறையில் பலர், ஈக்கள் மொய்க்கும் குப்பைத் தொட்டி, சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறம் என 'விடுதீ' யின் காட்சிகள் விரிந்து செல்கின்றன.

இத்தகைய சூழலில் படிப்பது சாத்தியமா எனும் கேள்வியை எழுப்புகிறது இவ்விரணப் படம்.

"சாப்பாட்டில் கை வைக்கும் போது சுண்ணாம்பில் கை வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார் ஒரு மாணவர்". "சாப்பிடணும்னு தோணும் ஆனா சாப்பிட முடியாது" என்கிறார், விடுதி மாணவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் முருகசிவகுமார், மாணவர்களில் சிலர் நல்ல உணவுக்காக திருமண மண்டபங்களில் சர்வர் வேலை செய்வதையும் இப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. விடுதிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கெஸ்ட்டாக தங்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகே மீதமுள்ள உணவு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காமல் போய் விடுவதை ஒரு மாணவி குறிப்பிடும்போது பார்வையாளர்களை ஒரு வித சோகம் அழுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருடைய நேர்காணல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.யு.ளு., இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜி.செல்வா, இந்தியா டுடே ராதிகா, துடி பாரதி பிரபு ஆகியோரது நேர் காணல்களும் இடம் பெற்றுள்ளன.

"ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போதாது, உணவுக்கான முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்துதாஸ் காந்தியும், "அரசே தலித்மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை இது" என்று பாரதிபிரபுவும், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் நன்றாகப் பரமாரிக்கப் படுகின்றன. ஆனால், தலித் மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கின்றன அரசே இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது" என்று ராதிகாவும் இப்படத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

"தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி 500 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது அதிகாரிகளின் சாதி மனோபாவத்தை காட்டுகிறது. விடுதிகளின் இத்தகைய அவலநிலை மாற, போராட்டம் தான் தீர்வு கொடுக்கும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என்கிறார் ஜ ப்.செல்வா. "மாணவர்கள் ஒன்றிணைவது எப்போது? இப்பிரச்சினையை உணர்ந்த உங்கள் பங்கு என்ன? போராட்டம் எப்போது?" எனும் கேள்விகளுடன் முடிகிறது 'விடுதீ' .

சக மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் முருகசிவகுமாரின் பணி பாராட்டுக்குரியதாகும்.

இயக்குநர் முருகசிவகுமார் பற்றி ...

தற்போது 26 வயதாகும் முருகசிவகுமார் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முனைவர் ஜார்ஜ் அவர்களிடம் நவீன நாடக வரலாறு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வரும் இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இனி அவருடன் :

இப்படி ஒரு ஆவணப்படத்தை இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?


"விடுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் முதல் காரணம். சென்னை புதுக்கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப் படித்த போது இராயபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இடம் கிடைக்காமல் விருந்தினராக (கெஸ்ட்) தங்கியிருக்க நேர்ந்தது. ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கூடுதலாக பதினைந்து பேர் சேர்ந்து இருபது பேர் தங்கியிருந்தோம். எல்லா அறைகளிலும் இப்படித்தான் மிகுந்த நெருக்கடியுடன் தங்கியிருப்பார்கள். காலையில் டாய்லெட் செல்ல வரிசையில் காத்துகிடக்க வேண்டும். டாய்லெட்டின் உள்ளே இருப்பவனை சீக்கிரம் வரச் சொல்லி வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்டுவார்கள். குளிப்பதற்கும் இப்படித்தான் நெருக்கடி. ஐந்து பேருக்கான உணவையே இருபது பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் தட்டு தூக்குகிறவனுக்கு தான் உணவு கிடைக்கும் என்கிற நிலை. சிலருக்கு உணவு கிடைக்காது இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் பல மாணவர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சர்வர் வேலைக்கு செல்வார்கள். உணவுக்கு உணவும் கிடைக்கும் கை செலவுக்கு காசும் கிடைக்கும். இத்தகைய சூழலில் படித்தால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். அரசு வேலைக்கு மற்ற மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். இந்தக் கொடுமையை வெளி உலகிற்கு உணர்த்த வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன்."

இத்தகைய சூழலிலிருந்து உங்களால் எப்படிப் பணம் செலவு செய்து படம் எடுக்க முடிந்தது?

"சென்னையில் திபீகா என்றொரு நிறுவனம் அதன் குறும்பட விழாக்களிலும் திரையிடல் நிகழ்வுகளிலும் பல குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி ஜெயச்சந்திரன் எனும் நண்பரின் தூண்டுதலாலும் உதவியாலும் தான் இப்படம் எடுக்க முடிந்தது. கேமரா, எடிட்டிங் பணம் என எல்லாவிதத்திலும் உதவினார். அவரின்றி இப்படம் எடுத்திருக்க இயலாது. நானும் என் சக மாணவர்களும் அனுபவித்த இன்னல்களும் வேதனைகளும் இப்படத்திற்கு உயிர் தந்தது".

ஆவணப் படத்துறை நோக்கி வந்த உங்கள் பாதை குறித்து?

"நான் தருமபுரி மாவட்டத்துக்காரன். திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழிலக்கியம் படித்தபோது, வறுமையின் காரணமாக பேராசிரியரும் கவிஞருமான வே.நெடுஞ்செழியன் வீட்டில் தங்கிப் படித்தேன். அவரது வழிகாட்டுதலில்தான் என் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. 'சுட்டுவிரல்' எனும் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினார். அதில் வெளியான என் சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு மிகவும் பாராட்டினார். அவர் நடத்திய நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் சென்னைக்கு இலக்கியத்திலும் நாடகத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அலைந்தேன். பாரதிபிரபுவின் 'கனல்' கலைக் குழவில் சேர்ந்து பல மேடைகளில் 'வர்ணாசிரமம்' நாடகத்தில் நடித்தேன். அதன்பிறகு குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உந்துதலே என்னையும் ஆவணப் படத்திற்கு அழைத்து வந்து சேர்த்தது. எனது இந்தப் பயணத்தில் அக்கறை கொண்டவர்களாக பாரதிபிரபு, அரங்க மல்லிகா, ஞாநி, கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஜெயசந்திரன் ஆகியோரை இனம்கண்டு மனதில் பதித்து வைத்திருக்கிறேன்.

அரசு விடுதியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த ஆவணப்படத்தை எடுக்க முடிந்தது?

"பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் இந்த ஆவணப் படத்தை எடுக்க முடிந்தது. பாதிக்கப்படும் மாணவர்களே பேசவும் பேட்டிதரவும் தயங்கினார்கள், பயந்தார்கள். மாணவர்கள், சமையல்காரர்கள், வார்டன் என எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டியிருந்தது. நந்தனம் விடுதியின் வார்டன் கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார், போராடித்தான் திரும்பப் பெற்றேன்".

உங்களைப் பாதித்த குறும்படங்கள், குறும்பட இயக்குநர்கள்?

"ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நரியின் மரணம்' 'Untouchable Country' என்னை மிகவும் பாதித்த படங்கள். சவால்களை எதிர்கொண்டு சமூகப் பிரச்சினைகளை எடுக்கும் ஆர்.ஆர்.சீனிவாசன் எனக்குப் பிடித்தமானவர். அம்ஷன் குமார், பி.லெனின், டி.அருள் எழிலன் ஆகியோரும் பிடிக்கும்.

இன்றைய தமிழ்க் குறும்பட சூழல் குறித்து?

"வணிகத் திரைப் படங்களில் சொல்லப்படாதவற்றை இதில் சொல்ல முடியும். நாடகத்துறையில் சமூக மாற்றத்திற்கான அரங்கை 'மாற்று அரங்கு ' என்பார்கள். அதன் தரை வடிவம் தான் ஆவணப்படம். அத்தகைய வலிமை வாய்ந்த குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான 'விசிட்டிங் கார்டு ' ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்."

உங்களின் அடுத்த திட்டம்?

" நிலா முற்றம் எனும் என் கவிதையைக் குறும்படமாக்கவுள்ளேன். விடுதீ க்கு ஜெயச்சந்திரன் உதவியதைப் போல் யாராவது உதவினால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தான் என்னை அந்நியமாக வைத்துள்ளது."

'விடுதீ' க்குப் பிறகு விடுதிகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா? இப்பிரச்சினைகள் தீர வழி என்ன?

"மிஸோராம் ஆளுநர் ஏ.பத்மனாபன் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை தலைமைச் செயலருக்கும் இந்த ஆவணப்படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகு சில விடுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள் தாம் இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சரியாகப் படிக்க விடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன இந்த விடுதிகள். இந்த மோசமான சூழலில் படிப்பதால் தலித் மாணவர்களால் பிற மாணவர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போட முடியவில்லை. திறமையான மாணவர்கள் பலர் இந்த விடுதிகளில் இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து படிக்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் நல்ல விடுதிகளில் தங்கிப் படிக்க அரசு தான் வழிசெய்ய வேண்டும்."

நம்பிக்கையை சுமந்த மனசுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் முருக சிவகுமார்.
nandri : www.andhimazhai.com
- யாழினி முனுசாமி

இயக்குநர் - வ.கௌதமன்

யாழினி முனுசாமி
நன்றி--www.andhimazhai.com

யக்குநர் வ.கௌதமன் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்', 'பூ', 'மலை', 'ஏரி', 'பனை' ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார். வ.கௌதமன் அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குநர். 1999ல் "கனவே கலையாதே" எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். “மகிழ்ச்சி ”எனும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி இருக்கிறார். 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்' எனும் ஆவணப்படத்தை, சாகித்ய அகாதெமிக்காக இயக்கினார். சாகித்ய அகாதெமி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இதுவரை பல குறும்படங்களையும் விவரணப் படங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றில் நீலபத்மனாபனைப்பற்றி 2004இல் வெளிவந்த இந்த விவரணப் படமே சிறந்த படமாக சாகித்ய அகாதெமிக்காரர்களால் பாரட்டப்படுவதாகப் பெருமிதம் கொள்கிறார் வ.கௌதமன்.

35 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இவர் மக்கள் தொலைக்காட்சிக்காக இயக்கிய பூ, மலை, ஏரி, பனை குறும்படங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றன.

வ.கௌதமன் இயக்கிய குறும்படங்கள் பற்றி...

'சினிமாவுக்குப் போன சித்தாளு'

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' குறுநாவலை ஒரு அழகான குறும்படமாக்கியிருக்கிறார். நடிகர்களின் மீதான கவர்ச்சி மோகத்தால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கதை இது. பணத்துக்காகவும் புகழுக்காகவும் நினைக்கும் ரசிகனை அடித்து நொறுக்கும் குறும்படம் இது.

கணவன் பகலில் வாடகை ரிக்ஷா ஓட்டுபவன். இரவில் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பவர். அவர் மனைவியோ சித்தாள் வேலை செய்பவள். என்றாலும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளை அன்பு கொண்டவர்கள். தன்னைவிட தன் தலைவன் (நடிகன்) மீது மனைவி அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அவன் நடித்தப் படத்திற்குப் போக அனுமதி மறுக்கிறான் கணவன். கணவனுக்குத் தெரியாமல் தன் கணவனின் முதலாளியுடன் (ரிக்ஷா உரிமையாளன்) சினிமாவுக்குச் செல்கிறாள். அவனோ அவளை மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கெடுத்துவிடுகிறான். தன் மீது பாசம் கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டதால் விபச்சார விடுதியிலேயே தங்கி விடுகிறாள். என்றாலும் எந்த ஆணையும் தன்னிடம் சேர்ப்பதில்லை. கணவன் வீட்டிற்கு அழைத்தும், போக மறுக்கிறாள். பிறகொரு நாள் மன உளைச்சலில் பைத்தியமாகிவிடுகிறாள். வீதியோரத்தில் நான்கு பேர் அவளை வண்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒரு கொடூர சூழலில் கணவன் மீண்டும் அவளை பார்க்க நேரிடுகிறது. கதறுகிறான். அவளோ தன்னை பலாத்காரம் செய்த தன் கணவனின் முதலாளியை பழிவாங்கப் போவதாகவும் தன் அன்பான கணவனுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அரற்றிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய ரிக்ஷாவிலேயே அவளை கை கால்களைக் கட்டி அழைத்துச் செல்வதுடன் கதை முடிவடைகிறது. பார்வையாளர்களைக் கலங்கச் செய்யும் அற்புதமான படைப்பு இது.

தலைவாசல் விஜய் (கணவன்) ஐஸ்வர்யா (மனைவி) தலுக்கான சங்கர் (முதலாளி), பசிசத்யா நடித்திருக்கும் இக்குறும்படம் தமிழிலக்கியவாதிகளிடம் குறும்பட ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இசை : அரவிந்த், ஒளிப்பதிவு : சிவக்குமார், எடிட்டிங் : பி.லெனின்-வி.டி.விஜயன், வசனம் : த.ஜெயகாந்தன், வ.கௌதமன்.

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக கவிஞர், பச்சியப்பனின் பூ, மலை, ஏரி ஆகிய மூன்று கவிதைகளையும் பாவலர் வையவனின் 'பனை' கவிதைகளையும் அழகிய குறும்படங்களாக்கி மிகுந்த வரவேற்பைப் பெற்றார். வாழ்க்கையில் எப்போதுமே சிரிக்காத பாட்டி, புகைப்படத்தில் மட்டும் எப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லும் குறும்படம் பூ.
ஒரு காலத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான இடமாக இருந்து பிறகு கல் குவாரி முதலாளிகளால் வெடிவைத்துத் தகர்க்கப்படும் மலையைக் காட்சிப் படுத்தும் குறும்படம் 'மலை', ஏரிகள் வீடுகளாவதை 'ஏரி' குறும்படமாகவும் எடுத்திருக்கிறார். நேர்த்தியாகவும் அதே நேரத்தில் பார்வையாளர்களின் மனதில் குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தி விடுகின்றன இக் குறும்படங்கள்.

'பனை' கவிதையின் மூலம் மட்டும் பாவலர் வையவனுடையது எனினும் கவிதையாக்கம் செய்தவர் பச்சியப்பன். 'பனை'யின் அருமைப் பெருமைகளைப் பட்டியலிடும் குறும்படம் இது.

இனி அவருடன்.....

கே : குறும்படங்கள் குறித்து உங்கள் கருத்து?


குறும்படம் என்பது ஒரு அற்புதமான விசயம். முழுநீளத் திரைப்படங்களை விடத் தாக்கம் உண்டாக்கும். இன்றைய சூழலில் உலக அளவில் முக்கிய இடம் வகிக்கின்றன குறும்படங்கள். இப்போது நிறைய பேர் குறும்படம் எடுக்க வருகிறார்கள். இதற்கென்று பெரிதாகத் திரைப்பட வடிவமோ, பெரிய நடிகர்களோ, தொழில் நுட்ப வல்லுநர்களோ தேவையில்லை. சாதரண வீடியோ கேமராக்களிலும் கூடச் சமூகச் சிந்தனையுள்ள குறும்படங்களையும் விவரணப் படங்களையும் தரமுடியும் என்பதே இதற்குக் காரணம். கூழ் காய்ச்சிக் குடிப்பதைக் கூட ஒரு அழகான குறும்படமாக எடுக்கலாம். மூளையை கசக்கி யோசித்துத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவை மனதை நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும்.

கே : குறும்படத்திற்கான கருவை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான் கலை. எனது அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன். எந்த 'தியரி'யும் படித்துவிட்டு நான் இதைச் சொல்லவில்லை. நான் உணர்ந்த வாழ்க்கையைத் தான் பச்சியப்பனின் பூ, மலை, ஏரி கவிதைகளில் செய்தேன். பார்வையாளனின் ஏற்பு தான் வெற்றி. பார்வையாளன் தான் வெற்றியை நிர்ணயிப்பவன். வாழ்க்கையிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இத்தகைய படங்கள் எடுக்கப்பட வேண்டும். தாகூர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது. "அற்புதத்தையும் அழகையும் தேடி உலகம் முழுக்க அலைந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. களைத்து வீட்டுக் கூடத்தில் விழுந்தேன். குக்லையில் விழித்த போது, புல் நுனியிலிருந்த பனித்துளியில் கண்டேன்" எனும் தாகூரின் இச்சிந்தனை, படைப்பை நம்மைச் சுற்றித் தேட வேண்டும் என்கிறது. இது தான் எனது கொள்கை.

கே : விவரணப் படங்களுக்குக் கலை நேர்த்தி தேவையா?

விவரணப் படத்திற்கு அழகும் நேர்த்தியும் முக்கியம் தான். ஆனால், கட்டாயமில்லை செல்போனில் எடுத்த சதாமின் மரணதண்டனைக் காட்சி தான் இன்றைக்கு முக்கியமான பதிவாக ,ஆவணமாக இருக்கிறது. சமூக அநியாயங்களை எல்லோரும் இதுபோல் கிடைக்கின்ற கருவிகளைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். தகவல்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும். தெரிந்த செய்திகளாக இருந்தாலும் எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் அது அடுத்த தலைமுறைக்கான ஆவணம்.

கே : இன்றைய தமிழ்க்குறும்பட விவரணப்பட இயக்குநர்களின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தமிழன் தன் நிலை மறந்து மயக்கத்தில் இருக்கிறான். சூடு, சுரணையற்று மயங்கிக்கிடக்கிறான். ஐம்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் இங்குதான் இருக்கின்றன. குடும்பப் பெண்கள் வீட்டிற்கான பொருட்களை ரிமோட்டில் தேடுகிறார்கள். விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கி கணவனின் பணத்தை அழிக்கிறார்கள். ஆண்கள் லஞ்சம் வாங்க இத்தகை பெண்களின் ஆசை தான் காரணம். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், பெரும் பத்திரிக்கைகள் இந்தச் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவுகளையெல்லாம் குறும்பட இயக்குநர்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

கே : பொதுவாகப் படைப்பாளிகள் சமூக உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்களே?

சமூகப் பிரச்சனைகளைப் பேசாத படைப்பாளிகள், படைப்பாளிகளே அல்ல. அவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். இவர்களெல்லாம் சோரம் போன படைப்பாளிகள். முழுக்க முழுக்க குறும்படமாக, பிரச்சாரப் படமாக எடுக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு சிறு விசயத்தையாவது செய்ய வேண்டும். சமூகச் சீர்கேட்டின் மீது சிறு கோபத்தையாவது வெளிப்படுத்த வேண்டும்.

"கெட்ட விஷயங்கள் நாட்டில் நடக்கிறது அதனால் படமாக எடுக்கிறேன்" என்பவன், "என் வீட்டில் நடந்தது" என்று சொல்ல வேண்டியதுதானே? ஏன் சமூகத்தின் மீதே பழிபோட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

கே : நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் இருப்பதால் இக்கேள்வி... இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழல் பற்றி....?

மைக்கேல் மூர் என்பவர் இயக்கிய ஃபாரன் ஹீட் 9/11 எனும் படம் உலகை உலுக்கியது. இதில் அவன் ஜார்ஜ்புஷ்ஷை அம்பலப்படுத்தியிருக்கிறான். இதற்காக அவனது காலை கூடத் தொட்டுக் கும்பிடலாம். தமிழ்த்திரைப்பட இயக்குநர்களோ இன்னும் ஆம்லெட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருத்து ரீதியாக மாறுபாடு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக மணிரத்னம், தரமாக எடுக்கிறார். அடுத்து சேரன், தற்போது இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் திரைப்படத் துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால தமிழ் சினிமா உலகத்தரத்திலிருக்கும். உலக அரங்கில் பேசப்படும்.

கே : இளந்தலைமுறை படைப்பாளிகளுக்கு குறும்பட இயக்குநர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?

படைப்பாளிகளும் தமது பொறுப்பிலிருந்து விலகி தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை இளம் படைப்பாளர்கள் தான் மாற்ற வேண்டும். அவர்களும் தவறு செய்தால் பூஜ்யத்தில் தான் வந்து நிற்கும்.

கே : உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

நல்ல சிறுகதைகளைக் குறும்படமாக்கிய பாலு மகேந்திரா, "நாக் அவுட்" எனும் சிறந்த படத்தை இயக்கிய எடிட்டர் பி.லெனின், ராமைய்யாவின் "குடிசை" ஆவணப் படத்தை இயக்கிய பாரதிகிருஷ்ணகுமார்.




 
                                        

குறும்பட இயக்குநர்கள் - புதிய தொடர்

தினகரன் ஜெய்....

ழுத்து, ஓவியம், இசை போன்ற நுண் கலைகளைவிடக் காட்சி ஊடகமான குறும்படக் கலை இன்றைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் சினிமாவுக்கான நுழைவுச் சீட்டாக இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட மறுபுறம் சமூகச் செயல்பாடாகவும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அழகியல் நேர்த்தியுடன் சிலரது சிறுகதைகளும், கவிதைகளும், குறும்படமாக்கப்பட்டுள்ளன.சமூகப்பிரச்சினைகளையும் பலர் விவரணப் படங்களாக்கிச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த வண்ணமிருக்கின்றனர். அத்தகைய இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் குறும்பட அனுபவங்கள் பற்றியும் இத்தொடரில் காணலாம் முதல் அறிமுகமாக தினகரன் ஜெய்.

விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய். இவர் இயக்கிய "ரேகை" விவரணப் படம் அண்மையில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்பு இவரை மக்கள் தொலைக்காட்சிக்காக 52வாரங்கள் 52விவரணப்படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது. அனைத்தும் தென்னிந்திய வரலாறு தொடர்பானவை என்பதுதான் நமக்குச் சிறப்புச் செய்தி.

தினகரன் ஜெய் இயக்கிய குறும்படங்களைப் பற்றி...

இவர் இயக்கிய இரண்டு விவரணப்படங்களுடன் தென்னிந்திய குறிப்பாக தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவை. இவர் இயக்கிய முதல் விவரணப்படம் "மருதிருவர்" மருது சகோதர்களான சின்னமருது, பெரியமருது ஆகியோரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அவர்கள் கோயில்களுக்கு ஆற்றிய திருப்பணியையும் ஓவியங்களின் மூலமாகவும் ஆவணங்களின் ஊடாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மருதிருவரின் வீரத்தையும் திருப்பணிகளையும் நினைவுகூறவும் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இப்படம் பயன்படக்கூடும். அடுத்து இவர் இயக்கிய "ரேகை" வீரஞ்செறிந்த இந்திய மக்களை ஒடுக்க பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்த ரேகை சட்டத்தின் கொடூரத்தைப் பேசுகிறது இப்படம். "ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் ஆணவத்தையும் அதனால் சிதைந்த இந்திய மக்கள் அவலத்தையும் இப்படம் முன் வைக்கிறது எனும் அறிவிப்புடன் தொடங்கும் இவ்விவரணப்படம் நம்மை நம் வீரஞ்செறிந்த வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. சாதியும் மதமும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. எனவே ஏகாதிபத்தியம் அவர்களை ஒடுக்க முடிவு செய்தது. பிரான்சில் பிரெஞ்சுபரட்சி நடந்த போது பழங்குடியினரின் பங்களிப்பு அதில் அதிகமிருந்தது. எனவே அவர்களை ஒடுக்க முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைப்போலவே இந்தியப் பழங்குடி இனத்தவரை ஒடுக்க குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டம் (1911) பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நான்கு முறை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பஞ்சாப், மும்பை, கல்கத்தா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. கள்ளர் மறவர் அகமுடையவர் என 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். பிறமலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டனர். இதில் 15,000 பேர் கண்காணிக்கப்பட்டு 33 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றனர் என இச்சட்டத்தின் கொடூரத்தை உணர்த்துகிறது இப்படம்.

1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு இரத்தம் சிந்தி பெறப்பட்ட சுதந்திரத்தை சாதியும் மதமும் சேர்ந்து இன்னொரு அடிமைதனத்துக்குள் சிறைப்படுத்தப் போகிறது என்பதை மறுக்கமுடியாது என எச்சரிக்கை செய்கிறது இப்படம். குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை வரலாற்றில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


இனி அவருடன்.....

கே : நீங்கள் குறும்படதுறைக்கு வரக்காரணியாக இருந்தது எது?

அடிப்படையில் நானொரு சிறுகதை எழுத்தாளன். 1997-இல் தாமரை இதழில் எனது முதல் சிறுகதையான 'அந்நியன்' வெளிவந்தது. சொல்புதிது, பன்முகம் போன்ற இதழ்களிலும் எனது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. புதியகாற்று, நிழல் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். புதியகாற்று இதழில் சுதந்திர பத்திரிகையாளனாக ( கசநந டயன்உநச) பணியாற்றியபோது 'தேசியத்தின் தற்கொலை' எனும் தலைப்பில் கட்டுரை எழுதும் தயாரிப்பிலிருந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழக விடுதலை வரலாற்றுக்கும் இந்திய விடுதலை வரலாற்றுக்கும் முரண்பாடுகள் நிறைய உள்ளன. 1857இல் நடந்த சிப்பாய் புரட்சியைத் தான் முதல் சுதந்திரப் போராக இந்திய தேசிய கல்வி இலாகா பாடப்புத்தகங்களில் கற்பித்து வருகிறது. அதற்கு முன்பாக 1801இல் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, மருது சகோதரர்கள் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து நடத்திய புரட்சியை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் மறைத்து வருகின்றனர். புலித்தேவன், சுந்தரலிங்கம், வீரபாண்டியகட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றோரது போராட்டங்களும் தியாகங்களும் தேசிய அரங்கில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லவே தென்னிந்திய விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்தி விவரணப்படங்களை இயக்கத் தொடங்கினேன். ஜெகமதி கல்வி அறக்கட்டளை சார்பாக தீனதயாள பாண்டியன் தென்னிந்திய வரலாற்றை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனபதற்காக நான் இயக்கிய 'மருதிருவர்', 'ரேகை' என்கிற இரண்டு படங்களைத் தயாரித்தார். இப்படியாகத் தான் நான் குறும்படத்துறைக்கு வந்தேன்.

கே : குறும்படம் இயக்குவதற்கான நோக்கம்?

வரலாறுகள் ஒரு தேசத்திற்கு மிக முக்கியம். அவை விருப்பு வெறுப்பின்றி சாதி மத இன வேறுபாடுகள் இல்லாமல் முறையாகவும் சரியாகவும் போதிக்கப்பட வேண்டும் என்பதால் நான் குறும்படங்களை இயக்கி அவற்றைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறேன். இதனூடாக சிறுபகுதியினரிடமாவது விழிப்புணர்வை உண்டாக்க முடியும் என்று நம்புகிறேன்.

கே : எதிர்கால திட்டம் என்ன?

இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். பொருளாதார ரீதியாக அச்சமிருக்கு. போதிய உதவிகள் கிடைத்தால் உலக அளவிலான படமாக அதை எடுப்பேன். இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் அதில் வரும். ஆனால், விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் அதில் இடம் பெறாது. அதே நேரத்தில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றிய வரலாறு அதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கே : இன்றைய தமிழ்க் குறும்பட /ஆவணப்படச் சூழல் குறித்து உங்கள் கருத்து?

ஆவணப்படங்கள் தமிழில் நிறைய வரவேண்டும். ஆரோக்கியமான பார்வையாளர்களை குறும்பட இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இத்துறைக்கு மிகுதியாகத்தேவை.

கே : சினிமாவில் நுழைவதற்காக 'விசிட்டிங்கார்டாக' குறும்படங்கள் பயன்படுத்துவது குறித்து?

தமிழக சூழலில் சினிமாவில் நுழைவதற்கான ஒரு விசிடிங்கார்டாக தான் குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். பார்வையாளர்களும் குறைவு. சீரியஸான விஷயத்தையும் பாமர மக்களுக்கும் புரியும்படியாக எடுக்க வேண்டும். குறும்படத்திற்கான சந்தையையும் உருவாக்க வேண்டும். ஐந்து, பத்து பேர்தான் தற்போது குறும்பட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக இயங்கக்கூடிய இன்னும் நிறைய பேர் இத்துறைக்கு வரவேண்டும்.

கே : குறும்படங்களாலும் ஆவணப்படங்களாலும் சமூகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

குறும்பட மற்றும் ஆவணப்படங்களின் மூலமாக இந்தச் சமூகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்க முடியும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் தான் நானும் இத்துறைக்கு வந்திருக்கிறேன். ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்,

என்று கூறும் தினகரன் ஜெய் அடுத்த விவரணப்படங்கள் எடுப்பதற்கான முனைப்பில் தீவிரமாக இருக்கிறார்.
nandri:  www.andhimazhai.com
- யாழினி முனுசாமி