Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - ஆர்.ரவிக்குமார்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
திருப்பூரில் சிறிய அளவில் நூல் உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்துவரும் 24 வயதேயான ஆர்.ரவிக்குமார், தன் வேலைகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குறும்படங்களை இயக்கிவருகிறார். சிறுவயதில் ஓவியத்தின் மீது ஆர்வம் செலுத்திய இவரின் கவனத்தை குறும்படத்தின் பக்கம் திசை மாற்றியது 'திருப்பூர் மத்திய அரிமா சங்கம்' நடத்திய குறும்பட விழாக்கள்.

திருப்பூரைக் களமாகக் கொண்டு சிறுவர் தொழிலாளர் மற்றும் வறுமையை அடிப்படைக் கருவாகக் கொண்டு 'லீவு','சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' ஆகிய மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய குறும்படங்களில் முக்கியமானது, 'எட்டா(ம்) வகுப்பு'.

எட்டா(ம்) வகுப்பு :

பழைய பேப்பர் கடையில் வேலை செய்யும் சிறுவன், செல்வம். வறுமையின் கோரப்பிடியில் சிதைந்த இவன் குடும்பத்திற்கு இவன் உழைப்பு தேவைப்படுவதால் தன் பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள நேர்ந்தவன். அவ்வவ்போது பழைய பேப்பர் கடைக்கு வரும் பழைய புத்தகங்களில் எட்டாம் வகுப்பு புத்தகங்களை மட்டும் தேடிப் பிடித்து தன் படுக்கைக்குக் கீழே பாதுகாத்து வைக்கிறான். ஐந்தாம் வகுப்பைக்கூட தாண்டாத இவனுக்கு எதற்கு எட்டாம் வகுப்பு புத்தகங்கள் என்று யோசிப்பதற்குள் காட்சி 'பின்னோக்கு உத்தி'யில் (ஃபிளாஷ்பேக்) நகர்கிறது.

ட்ரை சைக்கிளில் (மூன்று சக்கர சைக்கிள்) செல்வம் பழைய பேப்பர்களை எடுத்து வரும் வழியில் தன்னுடன் படித்த பழைய நண்பன் 'பிரகாஷ்' என்பவனைச் சந்திக்கிறான். இப்போது அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இருவரும் தம் குடும்பச் ழலைப் பேசியபடி செல்கிறார்கள். அவர்களின் உரையாடலில் இரு குடும்பத்து வறுமை ஊடாடுகிறது. நோயால் தன் அம்மா இறந்து போனதையும் அதனால் படிப்பு பாதியில் நின்று போனதையும் சோகத்துடன் சொல்கிறான்.

"எனக்கொரு வேலை பாருடா செல்வம். எங்க வீட்டுலயும் புத்தகம்கூட வாங்க முடியலடா" என்கிறான் பிரகாஷ்.

"என்னைப் போல நீயும் ஆகிடாதடா, பத்து வருசம் கழிச்சி நீ டாக்டர் பிரகாஷ் என்ஜினீயர் பிரகாஷ், அப்படித்தானே!" என்கிறான் செல்வம்.

"எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, எங்க வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்கிறான் ஏக்கத்துடன் பிரகாஷ்.

சைக்கிள் சக்கரம் சுற்றுகிறது வாழ்க்கைச் சக்கரத்தைப் போல.

அந்த நண்பன் பிரகாஷ்க்காகத்தான் இவன் எட்டாம் வகுப்பு புத்தகங்களை தேடித் தேடி எடுத்து வைத்திருக்கிறான். பழைய பேப்பரில் கிடைத்த செருப்பைக்கூட எடுத்து வைத்திருந்து பிரகாஷ்க்குக் கொடுத்து உதவுகிறான் செல்வம். தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நண்பனுக்குக் கொடுத்துவிட்டு வர சென்ற செல்வம், தன் நண்பன் பிரகாஷ் இரண்டு நாளாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவலுடன் குழப்பத்துடன் திரும்புகின்றான்.

காட்சி மாறுகிறது பனியன் கம்பனி ஒன்றிலிருந்து பழைய அட்டைப் பெட்டிகளை எடுத்துவர தன் முதலாளியுடன் (அவரும் ஐந்தாவது படித்தவர் தான்) செல்கிறான் செல்வம். பனியன் கம்பனியின் வாசலில் கிடக்கும் செருப்புகளில் ஒரு ஜோடி செருப்பை மட்டும் உற்று உற்றுப் பார்க்கிறான் செல்வம். மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்கிறான். அங்கே சிறுவர்களோடு ஒருவனாக பிரகாஷ்ம் வேலை செய்து கொண்டிருக்கிறான். "எனக்கு படிக்கனும்னுதான் ஆசை. ஆனா, வீட்டுல வேலைக்குப் போகச் சொல்றாங்க" என்ற பிரகாஷ்ன் குரல் செல்வத்தின் காதில் மீண்டும் ஒளித்தது.

"என்னதான் இலவசப் புத்தகம், இலவசக் கல்வி கொடுத்தாலும் நம்ம வருமானம் வீட்டுக்குத் தேவையா இருக்கும்போது நம்மாள எப்படிடா படிக்க முடியும்?" என்று தனக்குத்தானே ஆறதல் சொல்லிக்கொண்டு ட்ரை சைக்கிளில் செல்கிறான்.

குடும்ப வறுமையின் காரணமாக அடிப்படை உரிமையான கல்வி கூட பலருக்கு கிட்டுவதில்லை என்பதை இப்படம் சோகம் இழையோட சித்திரிக்கிறது. கார்த்தி எனும் சிறுவன் செல்வமாக நன்றாக நடித்திருக்கிறான். பிரகாஷ்க நடித்திருக்கும் சிறுவன் நன்றாகவே நடித்திருக்கிறான். இசை, வசனம் - தாண்டவக்கோன். ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் - ஆர்.ரவிக்குமார்.

ஆர்.ரவிக்குமார் பேசுவார்,"

"நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது. குறும்படம் எனும் தளத்திற்குள் நான் நுழைய முதற்காரணம், திருப்பூர் மத்திய அரிமா சங்கம் நடத்திய குறும்படத் திரையிடல் நிகழ்வுகள்தான். 'கனவு' சிற்றிதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தான் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அங்கு பார்த்த படங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நாமும் குறும்படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக ஏற்பட்டது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு 'லீவு' குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் 'சுழல்', 'எட்டா(ம்) வகுப்பு' என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன்.

நான்காவது படத்தை 1 மணி நேரம் படமாக எடுக்கவுள்ளேன். த.மு.எ.ச. தோழர்கள் எனக்கு உதவி வருகிறார்கள். இத்துறையில் சாதித்து குறிப்பிட்ட இடம் பெற உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் தொழில் நிலை பெரிய வருமானம் தரும்படி இல்லை. என் தந்தையும் தாயும் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள். அதனால் தான் இந்த அளவுக்காவது ஆதரவளித்து வருகிறார்கள். தொழிலை நிலைப்படுத்திக்கொண்டு என் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வேன் என்கிறார், நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment