Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - முருக சிவகுமார்



லை இலக்கியவாதிகளிடையேயும் புதிய தலைமுறை இளைஞர்களிடையையேயும் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கலை, குறும்படமாகும். குறைவான செலவில் ஒரு குறும்படத்தை எடுத்துவிடக்கூடிய வாய்ப்பு கூடியிருப்பதும் அதற்கொரு காரணமாகும். எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் தூய அழகியல் சார்ந்தும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்தும் பேசும் இரு போக்குகள் காணப்படுவது போல் குறும்படத்துறையிலும் இவ்விரு போக்குகள் நிலவுகின்றன. பெரும்பாலும் அழகியல் சார்ந்தவற்றைக் குறும்படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணப்படங்களும் பேசுகின்றன. உண்மையை உண்மையாக வெளிப்படுத்த இவ்வடிவம் கைக்கொடுக்கிறது.

'ஒரு நதியின் மரணம்' எனும் ஆவணப்படத்தின் மூலம் தாமிரபரணி படுகொலையை வெளியுலகிற்குக் கொண்டுவந்து ஆவணப் படத்தின் வலிமையை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் ஆர்.ஆர்.சீனிவாசன். அவ்வரிசையில் தமிழில் ஒரு சில முக்கியமான ஆவணப்படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருப்பவர் முருகசிவகுமார். அந்த ஆவணப்படம் - 'விடுதீ '.

கிராமப்புறங்களிலிலுந்து வந்து சென்னையில் அரசு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நரகச் சூழலைச் சித்தரிக்கும் ஆவணப்படம் இது. சில விருதுகளையும் பரவலான வரவேற்பையும் பெற்றது இப்படம்.

'விடுதீ ' ஆவணப்படம்... (நிமிடம்:29 ஆண்டு 2005)

சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நரக நிலையை பேசும் படம் 'விடுதீ' .

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கும் படிக்க வரும் ஏழ்மையான தலித் மாணவர்கள் பலருக்கு அடைக்கலம் தருபவை இராயபுரம், வில்லிவாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் விடுதிகள். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் படும் இன்னல்களை அவர்களின் வாயிலாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இத்தகைய விடுதிகளில் கொடுக்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. தண்ணீர் கூட சுகாதார மற்றதாய் இருக்கிறது. இதனால் பலருக்கு டைபாய்டு, அல்சர் போன்ற வியாதிகள் வருவதாக விரக்தியுடன் பேட்டியளிக்கின்றனர் மாணவர்கள். பாசி படிந்த கழிவறைகள், கழிவறைக்கு அருகிலேயே மாணவர்களின் அறை, வெட்டவெளிகுளியல், உடல்களை அடைத்து வைத்ததைப் போல் ஒரே அறையில் பலர், ஈக்கள் மொய்க்கும் குப்பைத் தொட்டி, சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறம் என 'விடுதீ' யின் காட்சிகள் விரிந்து செல்கின்றன.

இத்தகைய சூழலில் படிப்பது சாத்தியமா எனும் கேள்வியை எழுப்புகிறது இவ்விரணப் படம்.

"சாப்பாட்டில் கை வைக்கும் போது சுண்ணாம்பில் கை வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார் ஒரு மாணவர்". "சாப்பிடணும்னு தோணும் ஆனா சாப்பிட முடியாது" என்கிறார், விடுதி மாணவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் முருகசிவகுமார், மாணவர்களில் சிலர் நல்ல உணவுக்காக திருமண மண்டபங்களில் சர்வர் வேலை செய்வதையும் இப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. விடுதிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கெஸ்ட்டாக தங்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகே மீதமுள்ள உணவு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காமல் போய் விடுவதை ஒரு மாணவி குறிப்பிடும்போது பார்வையாளர்களை ஒரு வித சோகம் அழுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருடைய நேர்காணல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.யு.ளு., இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜி.செல்வா, இந்தியா டுடே ராதிகா, துடி பாரதி பிரபு ஆகியோரது நேர் காணல்களும் இடம் பெற்றுள்ளன.

"ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போதாது, உணவுக்கான முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்துதாஸ் காந்தியும், "அரசே தலித்மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை இது" என்று பாரதிபிரபுவும், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் நன்றாகப் பரமாரிக்கப் படுகின்றன. ஆனால், தலித் மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கின்றன அரசே இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது" என்று ராதிகாவும் இப்படத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

"தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி 500 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது அதிகாரிகளின் சாதி மனோபாவத்தை காட்டுகிறது. விடுதிகளின் இத்தகைய அவலநிலை மாற, போராட்டம் தான் தீர்வு கொடுக்கும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என்கிறார் ஜ ப்.செல்வா. "மாணவர்கள் ஒன்றிணைவது எப்போது? இப்பிரச்சினையை உணர்ந்த உங்கள் பங்கு என்ன? போராட்டம் எப்போது?" எனும் கேள்விகளுடன் முடிகிறது 'விடுதீ' .

சக மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் முருகசிவகுமாரின் பணி பாராட்டுக்குரியதாகும்.

இயக்குநர் முருகசிவகுமார் பற்றி ...

தற்போது 26 வயதாகும் முருகசிவகுமார் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முனைவர் ஜார்ஜ் அவர்களிடம் நவீன நாடக வரலாறு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வரும் இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இனி அவருடன் :

இப்படி ஒரு ஆவணப்படத்தை இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?


"விடுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் முதல் காரணம். சென்னை புதுக்கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப் படித்த போது இராயபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இடம் கிடைக்காமல் விருந்தினராக (கெஸ்ட்) தங்கியிருக்க நேர்ந்தது. ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கூடுதலாக பதினைந்து பேர் சேர்ந்து இருபது பேர் தங்கியிருந்தோம். எல்லா அறைகளிலும் இப்படித்தான் மிகுந்த நெருக்கடியுடன் தங்கியிருப்பார்கள். காலையில் டாய்லெட் செல்ல வரிசையில் காத்துகிடக்க வேண்டும். டாய்லெட்டின் உள்ளே இருப்பவனை சீக்கிரம் வரச் சொல்லி வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்டுவார்கள். குளிப்பதற்கும் இப்படித்தான் நெருக்கடி. ஐந்து பேருக்கான உணவையே இருபது பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் தட்டு தூக்குகிறவனுக்கு தான் உணவு கிடைக்கும் என்கிற நிலை. சிலருக்கு உணவு கிடைக்காது இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் பல மாணவர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சர்வர் வேலைக்கு செல்வார்கள். உணவுக்கு உணவும் கிடைக்கும் கை செலவுக்கு காசும் கிடைக்கும். இத்தகைய சூழலில் படித்தால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். அரசு வேலைக்கு மற்ற மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். இந்தக் கொடுமையை வெளி உலகிற்கு உணர்த்த வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன்."

இத்தகைய சூழலிலிருந்து உங்களால் எப்படிப் பணம் செலவு செய்து படம் எடுக்க முடிந்தது?

"சென்னையில் திபீகா என்றொரு நிறுவனம் அதன் குறும்பட விழாக்களிலும் திரையிடல் நிகழ்வுகளிலும் பல குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி ஜெயச்சந்திரன் எனும் நண்பரின் தூண்டுதலாலும் உதவியாலும் தான் இப்படம் எடுக்க முடிந்தது. கேமரா, எடிட்டிங் பணம் என எல்லாவிதத்திலும் உதவினார். அவரின்றி இப்படம் எடுத்திருக்க இயலாது. நானும் என் சக மாணவர்களும் அனுபவித்த இன்னல்களும் வேதனைகளும் இப்படத்திற்கு உயிர் தந்தது".

ஆவணப் படத்துறை நோக்கி வந்த உங்கள் பாதை குறித்து?

"நான் தருமபுரி மாவட்டத்துக்காரன். திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழிலக்கியம் படித்தபோது, வறுமையின் காரணமாக பேராசிரியரும் கவிஞருமான வே.நெடுஞ்செழியன் வீட்டில் தங்கிப் படித்தேன். அவரது வழிகாட்டுதலில்தான் என் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. 'சுட்டுவிரல்' எனும் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினார். அதில் வெளியான என் சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு மிகவும் பாராட்டினார். அவர் நடத்திய நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் சென்னைக்கு இலக்கியத்திலும் நாடகத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அலைந்தேன். பாரதிபிரபுவின் 'கனல்' கலைக் குழவில் சேர்ந்து பல மேடைகளில் 'வர்ணாசிரமம்' நாடகத்தில் நடித்தேன். அதன்பிறகு குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உந்துதலே என்னையும் ஆவணப் படத்திற்கு அழைத்து வந்து சேர்த்தது. எனது இந்தப் பயணத்தில் அக்கறை கொண்டவர்களாக பாரதிபிரபு, அரங்க மல்லிகா, ஞாநி, கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஜெயசந்திரன் ஆகியோரை இனம்கண்டு மனதில் பதித்து வைத்திருக்கிறேன்.

அரசு விடுதியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த ஆவணப்படத்தை எடுக்க முடிந்தது?

"பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் இந்த ஆவணப் படத்தை எடுக்க முடிந்தது. பாதிக்கப்படும் மாணவர்களே பேசவும் பேட்டிதரவும் தயங்கினார்கள், பயந்தார்கள். மாணவர்கள், சமையல்காரர்கள், வார்டன் என எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டியிருந்தது. நந்தனம் விடுதியின் வார்டன் கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார், போராடித்தான் திரும்பப் பெற்றேன்".

உங்களைப் பாதித்த குறும்படங்கள், குறும்பட இயக்குநர்கள்?

"ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நரியின் மரணம்' 'Untouchable Country' என்னை மிகவும் பாதித்த படங்கள். சவால்களை எதிர்கொண்டு சமூகப் பிரச்சினைகளை எடுக்கும் ஆர்.ஆர்.சீனிவாசன் எனக்குப் பிடித்தமானவர். அம்ஷன் குமார், பி.லெனின், டி.அருள் எழிலன் ஆகியோரும் பிடிக்கும்.

இன்றைய தமிழ்க் குறும்பட சூழல் குறித்து?

"வணிகத் திரைப் படங்களில் சொல்லப்படாதவற்றை இதில் சொல்ல முடியும். நாடகத்துறையில் சமூக மாற்றத்திற்கான அரங்கை 'மாற்று அரங்கு ' என்பார்கள். அதன் தரை வடிவம் தான் ஆவணப்படம். அத்தகைய வலிமை வாய்ந்த குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான 'விசிட்டிங் கார்டு ' ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்."

உங்களின் அடுத்த திட்டம்?

" நிலா முற்றம் எனும் என் கவிதையைக் குறும்படமாக்கவுள்ளேன். விடுதீ க்கு ஜெயச்சந்திரன் உதவியதைப் போல் யாராவது உதவினால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தான் என்னை அந்நியமாக வைத்துள்ளது."

'விடுதீ' க்குப் பிறகு விடுதிகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா? இப்பிரச்சினைகள் தீர வழி என்ன?

"மிஸோராம் ஆளுநர் ஏ.பத்மனாபன் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை தலைமைச் செயலருக்கும் இந்த ஆவணப்படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகு சில விடுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள் தாம் இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சரியாகப் படிக்க விடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன இந்த விடுதிகள். இந்த மோசமான சூழலில் படிப்பதால் தலித் மாணவர்களால் பிற மாணவர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போட முடியவில்லை. திறமையான மாணவர்கள் பலர் இந்த விடுதிகளில் இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து படிக்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் நல்ல விடுதிகளில் தங்கிப் படிக்க அரசு தான் வழிசெய்ய வேண்டும்."

நம்பிக்கையை சுமந்த மனசுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் முருக சிவகுமார்.
nandri : www.andhimazhai.com
- யாழினி முனுசாமி

No comments:

Post a Comment