Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - டி.அருள் எழிலன்

யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
"சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பாதான் எல்லாம் பத்தாவதோட படிப்ப பாதில விட்டுட்டு எங்கப்பாவோட சம்பளப் பணத்தை எடுத்துக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். அது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டு திரும்ப வீட்டுக்குப் போயி சொல்லிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்திட்டேன். அப்ப எங்கப்பா சொன்னாரு... "படிபடின்னு சொல்றேன் படிக்க மாட்டேங்குற உனக்கு இப்ப தெரியாது, உன்னோட 30, 31வது வயசுல படிக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்படுவ" என்றார்.

தாமஸ் ஆஸ்பிட்டல்ல உடம்புக்கு முடியாம எங்கப்பா அட்மிட் ஆயிருந்தாரு. அப்போ நான்தான் கூட இருந்து பார்த்துக்கிட்டேன். அன்னிக்கி என்னோட 31வது பிறந்த நாள். எங்க அப்பாவாண்ட சொன்னேன்... "படிக்காம போயிட்டோமன்னு 30, 31வது வயசுல வருத்தப்படுவேன்னு சொன்னீங்களே... படிக்கலைங்கிறதுக்காக இப்பக்கூட நான் வருத்தப்படலப்பா" என்றேன். பெற்றோர்கள் நினைப்பது போல் இல்லை வாழ்க்கை. அது துரத்திக் கொண்டே இருக்கிறது என்று எதார்த்தம் புரிந்து பேசிக் கொண்டே போகும் டி.அருள் எழிலன், 'ராஜாங்கத்தின் முடிவு' எனும் குறும்படத்தை இயக்கியவர். இதழியல் துறையிலிருக்கும் அரிதான மனிதர்களில் ஒருவர் இவர். தன் உயர்வுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடையே சமூகம் பற்றிய சிந்தனையை சுமந்து திரியும் இளைஞர். இயல்பான எளிய மனிதர். பாகிஸ்தான் எழுத்தாளர் 'சதத் ஹசன் மாண்டோ'வின் 'ராஜாங்கத்தின் முடிவு' சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார் டி.அருள் எழிலன்.

எதார்த்தத்தை மறந்து கனவுலகில் சஞ்சரிக்கும் இளைஞனைப் பற்றிய குறும்படம் இது. ஓர் அறைக்குள்ளேயே இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓர் இளைஞன், தொலைபேசி, தொலைபேசியின் மறுமுனையில் ஒலிக்கும் பெண்குரல். இவையே கதாபாத்திரங்கள்.

தாடி வைத்த இளைஞன் ரவிக்குமார், துவக்கம் முகம்மது பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி அறிமுகம் செய்கிறது ஒரு பின்னணிக்குரல். "நிறைய படிப்பான், நல்லா ஊரு சுத்துவான், சம்பளத்துக்கு உத்தியோகம் பார்க்கிறது பிடிக்காது. நண்பர்கள் சாப்பாட்டுக்கு உதவி பண்றாங்க, சென்னைல இருக்கிற ஏதாவது ஒரு பிளாட்பாரத்துல தூங்கிக்குவான், இவனுக்கு கிடைக்காத ஒண்ணே ஒண்ணு... பொண்ணு"

தொலைபேசி ஒலிக்கிறது... மறுமுனையில் ஒரு பெண் பேசுகிறாள். முகம் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது. இருவருக்குமான உரையாடல் தொடர்கிறது. இவனது பெயர், பிடித்த பொழுதுபோக்கு, இவனது வாழ்க்கை என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இவனும் தனக்குப் பிடித் Minolta camera விலிருந்து தற்போது தங்கியிருக்கும் நண்பனின் அறை வரை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. அவன் எதிர்பார்த்த மாதிரி அதே குரல். புட்டியை பற்ற வைத்து புகைத்தபடி பேசுகிறான். 'என் பேர கேட்கமாட்டிங்களா என்கிறது பெண்குரல்' 'தேவையில்ல வேணுண்ணா நீ பேசப் போற' இப்படியாக உரையாடல் வெகு சுவாரஸ்யமாய் போகிறது. 'மேகமே மேகமே
பால் நிலா தேயுதே' பாடலை தொலைபேசியில் பாடுகிறாள். பு*றகு அந்தக் குரலுக்காக இவன் காத்திருக்கத் தொடங்குகிறான். இதனிடையில் அவனது நண்பன், "டேய் ரவி, நான் 4 நாள்ல ஊருக்கு வந்துடுவேண்டா, வந்த வேல முடிஞ்சிடுச்சி" என்கிறான். இந்தத் தகவலை தொலைபேசி பெண்ணிடம் சொல்கிறான். அவளைச் சந்திக்க விரும்புகிறான். தன் ராஜாங்கம் முடியப் போவதை வருத்தத்துடன் சொல்கிறான். உடல் நிலை குன்றி இருமியபடி விரக்தியிலிருக்கிறான். வாயில் ரத்தம் ஒழுக பஷீரின் 'மரணத்தின் நிழலில்' புத்தகத்தின் மீது சாய்ந்துவிடுகிறான். சாய்ந்தவன் சாய்ந்தவன்தான் தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இத்துடன் இக்குறும்படம் முடிவடைகிறது.

டி.அருள் எழிலன்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை எனும் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் எழிலன். இந்தியாடுடே வழங்கிய 'சிறந்த இளம் பத்திரிகையாளர்' விருதை பெற்றிருக்கும் இவர் தற்போது 'ஆனந்த விகடனில்' உதவி ஆசிரியர். வழக்கமான பத்திரிகையாளர்களை போலல்லாது மாறுபட்ட சிந்தனை உடையவர்.

இனி அவருடன்....

• இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

"எங்க வீட்டுல சுமார் ஆயிரம் புத்தகம் இருக்கு, நான் முதன்முதல்ல படிச்ச நாவல் 'தகழி' எழுதிய 'செம்மீன்', இரண்டாவதா படிச்சது மாக்சிம் கார்க்கியின் 'தாய்', அப்பா எப்பப்பார்த்தாலும் 'படி படி என்று வலுக்கட்டாயமா திணிச்சதால படிப்பு மேல ஒரு வெறுப்பு வந்துடுச்சி. நாகர்கோவில்ல பள்ளிக்கூடம் போகாம ஷபி****ப்ஹவுஸ்' ங்கிற இடத்துல ஒளிஞ்சுக்குவோம். அங்க இருந்த பாஸ்டர் சென்ரல் லைப்ரரியில் தான் இந்த 'ராஜாங்கத்தின் முடிவு' என்கிற கதையை படிச்சேன். அப்போ 8வது படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்பவே இந்தக் கதை மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சி."

• குறும்படம் என்பது சினிமாவில் நுழைவதற்கான கருவியா?

"குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை ஏனென்றால் கோடம்பாக்கத்தில் இதெல்லாம் செல்லாது. குறும்படத்தைப் பார்த்துவிட்டெல்லாம் யாரும் வாய்ப்பு தருவதில்லை."

• தமிழ்க் குறும்படங்களின் போக்கு குறித்து?

"தமிழ்க் கலாச்சாரம், இந்து கலாச்சாரம் எனும் 'மைண்டு செட்டப்' தான் படைப்புக்கு முதல் எதிரி. குறும்பட இயக்குநர்களும் பொது புத்தியிலிருந்துதான் செயல்படுகின்றனர். வேகுசில படங்கள் தான் சமூகம் சார்ந்து வெளிவருகின்றன. ஆர்வக் கோளாறின் காரணமாக நிறையபேர் குறும்படம் எடுக்கிறார்கள். எதை எடுத்தால் அரசாங்கம் ஊக்கப்படுத்துமோ அதை எடுக்கிறார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற செய்திப் படங்கள் எடுப்பது அரசு செய்ய வேண்டிய வேலை. அதற்குக் குறும்பட இயக்குநர்கள் தேவையில்லை. நுட்பமான விசயங்கள் குறும்படங்களில் குறைவாக இருக்கு"

• அப்படினா, குறும்படங்கள் எப்படி இருக்குணும்னு நினைக்கறீங்க?

"மனித உறவுகளுக்கிடையில் ஏற்படும் நெருடல்களும் பிரிவுகளும் ஒன்றையொன்று தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தில் உழல்கின்றன. இத்தகைய உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு படைப்பாளி சமகால அரசியலிலிருந்து தப்பிக்க முடியாது. சமகால அரசியல் அதாவது, மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமான குறும்படங்கள் வரவில்லை. மறுகாலனிய ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டக்கூடிய குறும்படங்கள் தமிழில் வரவேண்டும்".

• NGO க்களின் ஆதரவுடன் குறும்படம் எடுப்பவர்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

"அமெரிக்காவின் காலனிய கொள்கையை நியாயப்படுத்தக் கூடிய பொருளாதார அடியாட்களாக NGO குழுக்கள் உள்ளன. இதற்காக அமெரிக்கா மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது. இந்த NGO குழுக்களின் குரல் இடதுசாரிகளின் குரலில் ஒலிக்கும். மக்கள் இடதுசாரி அமைப்புகளின் கீழ் அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த NGO குழுக்கள் பொருளாதார அடியாட்களாக செயல்படுகின்றனர். இவர்கள் போலி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறார்கள். இவர்களைவிட மக்களுக்கு உண்மையாக உழைக்கக் கூடிய குழுக்கள் தமிழகத்தில் பல உள்ளன.

சுனாமிக்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1000 கோடிக்கு மேல் புழக்கத்தில் உள்ளது. அமெரிக்கா ஒரு புறம் விவசாயத்தை ஒழிக்கும், மறுபுறம் தங்கள் பூர்விக நிலத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்காக இந்த NGOக்களின் மூலம் குரலும் கொடுக்கும். இடதுசாரிப் பாதையில் மக்கள் அணிதிரண்டால்தான் அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை முறியடிக்க முடியும். எனவே தான் சொல்கிறேன் NGO சார்ந்து இயங்கக் கூடிய இயக்குநர்கள் படைப்பு நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்".

• அப்படியெனில் இடதுசாரிகள் நல்ல குறும்படங்களை எடுக்க வேண்டியது தானே?

"தேர்தல் பாதையில் உள்ள பொதுவுடைமையாளர்கள் தேர்தல் ஏஜென்ட்டுகளாகத்தான் செயல்படமுடியும். அவர்களால் குறும்படங்களை எடுக்க முடியாது."

• நீங்கள் ஏன் ஷராஜாங்கத்தின் முடிவுடன் நிறுத்திவிட்டிர்கள்?


"என்னால் மற்றவர்களைப் போல NGO க்களுடன் இணைந்து செயல்பட முடியாது. தனி நபர்கள் உதவி செய்யும் போது மீண்டும் குறும்படங்கள் எடுப்பேன்."

• ஒரு படைப்பாளியாக, பத்திரிகையாளராக இந்திய தமிழ்ச் சமூகத்தின் மீதான உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?

இந்தியா நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்துமதவாதம் மேலோங்கியுள்ளது. 'சாதிக் கட்சிகள் தேவையில்லை' என்று ஒரு கணக்கெடுப்பில் 95 வீதம் பேர் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மூளையில் சாதியுள்ளது.

No comments:

Post a Comment