Tuesday, May 31, 2011

பெரியாருக்கு வாய்த்திருக்கிறது

அ.பெரியாரின் “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர்மாற்றமும்” நூல் மதிப்புரை
சமூகத்தின் ஒவ்வோர் அசைவிற்குப் பின்னாலும் வரலாறு களும் போராட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அசைவுகளின் பின்னால் போய்ப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்கள் பலருக்கு இது வாய்க்கவில்லை. 25 நூற்றாண்டுகளாக இலக்கண இலக்கியங்களில் காட்டுகிற அக்கறையைத் தமிழர்கள் வரலாற்றில் காட்டுவதில்லை. அண்மைக்காலத்து அசைவுகளுக்கும் இதே கதிதான். அண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை அறியும் நமக்கு அவர்கள் வரலாறு புதிராகவே தெரிகிறது. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் வாழ்க்கை வரலாறுகளில் காணப்படும் வேறுபட்ட, முரண்பட்ட செய்திகள் இதற்குச் சாந்தியைப் பாரதி சந்தித்த நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளில் முரண்பட்ட குறிப்புகள் உண்டு. பாரதிதாசன் பிறந்த நாள் குறித்தே குழப்பம் உண்டு. இதுதான் நம் நிலை. ஆனந்தரங்கம் பிள்ளையையும் உ.வே.சா. அவர்களையும் வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவர்களின் பதிவு ஆர்வத்திற்குப் பாராட்டலாம்.

தமிழ்நாடு மொழி வாரியாகத் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது அதன் எல்லைகள் குறித்து எழுந்த சிக்கல்களையும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவதில் எழுந்த சிக்கல்களையும் பேராசிரியர் பெரியார் இந்நூலில் ஆவணப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இச்சிக்கல்கள் குறித்துச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த உரைப்போர்களைக் கொண்டு - அவற்றிடையே காணும் இடைவெளிகளைக் கொண்டு - இதன் பின்புலத்தில் செயல்பட்ட மொழியினவுணர்வு அக்கறை, அக்கறை இன்மைகளைக் கொண்டு தமிழ்த் தேசிய உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார்.

தமிழினம் மிகத் தொன்மையானது என்பதும் தமிழ்மொழி மூத்தது என்பதும் தமிழ் வழங்கிய தமிழகப் பரப்பு பரந்தது என்பதும் வெறும் தகவல்கள் மாத்திரம் அல்ல இனத்துக்கும் மொழிக்கும் நிகழ்கால எதிர்காலத் தமிழ் வாழ்விற்கும் வலுச் சேர்க்கிற ஒரு வரலாறு. 3.5. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா (PANGEA) என்ற பெயரில் ஒன்றாக இருந்த நிலபரப்பு 2.5 பில்லியன் ஆண்டளவில் லாரேசியா (LARESIA), கோண்ட்வானா (GONDWANA) என்ற பெயர் தென்னிந்தியாவில் வாழ்ந்த கோண்ட் இனத்தின் பெயரால் உருவானது என்பது நம் கவனத்திற்குரியது. தமிழகத்தின் பழமையை உணருவதற்கு இப்பெயரே போதுமானது எனலாம்.

கி.மு. 70,000 முதல் 50,000 வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுதங்கள் தமிழகப் பகுதிகளில் கிடைத்துள்ளன. தொல்லுயிர் எச்சங்களும் மண்டை ஒடுகளும் தமிழர்களின் தொன்மை இருப்பை உறுதிப்படுத்துகின்றன. கடல் தாழ்ந்திருந்த காரணத்தால் இலங்கை தமிழகத்துடன் குறுகிய நிலப்பரப்பு வழியே தொடர்பு உடையதாக இருந்தது. தமிழகத்தின் ஆதிக்குடிகளே இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அதன் ஆதிக்குடிகளான வேட்டுவர்கள் முருகனை வணங்கியவர்கள். தமிழ் நிலப்பரப்பு மூன்று கடல்கோள்களால் இலங்கையிடமிருந்து பிரிக்கப்பட்டு பரப்பு சுருங்கியது.

இலங்கை தமிழருக்குரிய நிலப்பகுதி என்பதைப் பாரதிதாசன் அழுத்தம் திருத்தமாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

“முந்தாநாள் தோன்றிய சிங்கள மூடர்
செந்தமி ழர்தம் சிறிய திட்டைத்
தமதென்று சொல்லித் தலைதுள்ளுகின்றனர்
குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின்
சிறிய திட்டே அந்தத் திட்டெனக்
கவிஞர் எடுத்துக் காட்ட வேண்டும்”
என்பது அவர் புலப்படுத்தும் தமிழுணர்வின் அடையாளம்.

தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தற்போதைய கேரளாவையும் உள்ளடக்கிய பகுதி தமிழகமாக இருந்தது. தொல்காப்பியப் பாயிரம் இதைச் சுட்டுகிறது. நன்னூல் காலத்தில் மேற்கே குடகுநாடு உருவாகித் தமிழக எல்லை சுருங்கியதை அதன் பாயிரம் உணர்த்துகிறது.

தமிழ்மொழி 2500 ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவம் பெற்ற இலக்கிய மொழியாக இருந்திருக்கிறது. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ்ப் பிராமி வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் செம்பியன் கண்டியூரில் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட கைக்கோடரியில் காணப்படும் எழுத்து சான்றாக உள்ளது. பானை ஒடுகளில் காணும் எழுத்துகளும் இதையே உணர்த்து கின்றன. அசோகர் காலத்திற்கு முந்திய கல்வெட்டுகள் தமிழ்கத்தில் காணப்படுவதும் வரிவடிவத் தொன்மைப் பயன்பாட்டை உணர்த்து கின்றன. இவற்றின் வழியே தமிழ், இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் சாராதது என்பதும் திராவிட மொழிக்குடும்பம் சார்ந்தது என்பதும் உறுதிப்பட்டிருக்கிறது.

இத்தகைய தொன்மைமிக்க இன்த்தின் - மொழியின் வாரிசுகளான நாம் சுருங்கிய போயிருப்பது வேதனைக்குரியது. தமிழகத்தின் எல்லை சுருங்கவும் மொழியின் மேன்மை மங்கவும் நாமே காரணமாகிறோம். கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் தமிழின் உதரத்தில் உதித்தவை என்பதை அம்மொழிகளைப் பேசுபவர்கள் மறுத்துப் பொய் வரலாறுகளை எழுதுகிறார்கள். நாம் இதபற்றி அக்கறையில்லாமல் இருக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டு தனக்கேயுரிய இலக்கியங்களைக் கொண்ட மொழி செம்மொழி என்பதை அடிப்படையில் தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்டது. 1000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான பழமை கொண்டன வெனப் பொய்யுரைத்துச் செம்மொழித் தகுதி கேட்டுப் பெறுவதை மறுக்காமல் அக்கறையின்றி இருக்கிறோம். கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் பகுதியில் உருவாகி தமிழகத்தில் வருகிற ஆறுகளைத் தடுத்து உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றியும் நமக்கு எந்தச் சுரணையும் இல்லை.

இந்தச் சுரணையின்மை தமிழ்நாட்டு எல்லைகளைக் காப்பதிலும் தமிழ்நாடு எனப் பெயர் வைப்பதிலும் எப்படிச் செயல்பட்டது என்பதைப் பெரியாரின் இந்த நூல் உணர்த்துகிறது. சென்னை, திருப்பதி, திருத்தணி, சித்தூர்ப் பகுதிகள் என இருந்த தமிழ் எல்லைப் பகுதிகளை ஆந்திரர்கள் விழுங்க முயன்று ஒரளவு வெற்றி பெற்றதும், தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை ஆகியவற்றை மலையாளிகள் விழுங்க முயன்று வெற்றி பெற்றதும் இந்நூலில் பதிவு பெற்றிருக்கின்றன. மொழிவாரி மாநிலப் பிரிவினை நியாயமாக அமைய வேண்டுமெனப் போராடிய தமிழர்கள் சிலரை, நாட்டின் ஒருமைப்பாடு தேசியம் என்ற பெயரால், தேசிய உணர்ச்சியைக் கொலை செய்பவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்திய இனப்பற்றின்மையை இந்நூல் வெளிப்படுத்தியிருக்கிறது.

1959 - ஆம் ஆண்டில் பாரதிதாசன் எழுதிய கவிதை தமிழ்த்தாயின் கூற்றாக இதனைப் பதிவு செய்கிறது.

“தமிழ்நாட்டைச் சென்னை என்று சாற்றி எவர்க்கும்
அமையப் பொதுமகள் போல் ஆக்கினார் என்மகனே”

என்று எழுதினார் பாரதிதாசன்.

ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்று தமிழகம் அழைக்கப் பட்ட நிலையில் ஆந்திரம், கன்னடம், கேரளம் என்று அண்டை மாநிலங்கள் பெயர் சூடிக் கொண்ட நிகழ்வுகூட நம்மவர்க்குச் சுரணை தரவில்லை என்பது தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குக் காட்டிய தொடர்ந்த எதிர்ப்பின் வழியே வெளிப்படுவதை இந்நூல் புலப்படுத்தியிருக்கிறது. தமிழில் சென்னை மாநிலம் என்றும் என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் வழங்கலாம் என்பதைத் தாண்டி சிந்திக்க அன்றைய ஆளும் கட்சியான பேராயக் கட்சியால் இயலவில்லை. கட்சியின் தேசியத்தன்மை மாசு படுமென்று கவலைப்பட்டார்களே ஒழியத் தமிழ் மாசுபடுவது பற்றக் கவலைப்படவில்லை.

பாரதிதாசன் கவிதையில் தமிழகப் பரப்பு குறித்த பதிவு நம் ஆழ்ந்த உணர்வுக்கும் கவனத்திற்கும் உரியது. மலையாளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய பகுதிகள் தமிழ்த்தாயின் உடற்பகுதிகள் உடற்பகுதிகள் என்றும் அவற்றை வெட்டுவது தாயின் உடலை வெட்டுவது போன்ற தென்றும் வருந்தியிருக்கிறார்.

“மலையாளம் என் உடம்பே மற்றதனை வெட்டிக்
கொலைகாரர் என்பகையாயக் கொண்டுவந்தார் என்மகனே
பலியானார் ஆந்திரரும் தில்லிப் பகைக்கே
எலியானார் என்பகைவர் ஆனாரோ என்மகனே
என் அடங்கற் பொன்னுடலே என்னை இழப்பதுண்டோ
கன்டைத்தைப் புய்த்த கதையறிவாய் என்மகனே”
என்பது நம் பதிவு கொள்ளப்பட வேண்டியது.

கட்சித் தன்னலத்திற்கு மொழியின மேன்மை பலியிடப் படுவது என்பது தொடர்ந்து நிகழ்ந்ததையே இந்தித் திணிப்பும் காட்டுகிறது.

தமிழினத்தைத் தாழ்த்துவதும், தமிழ்மொழியைக் கைவிடுவதுமே தேசிய நீரோட்டம் என்ற கருத்து பேராயக் கட்சிக்கு மையச் செயல்பாடாக இருப்பதைப் பெரியாரின் இந்நூல் உணர்த்து கிறது. 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்திற்குப் பேராயக் கடசியின் தொடர்ந்த அக்கறையின்மையே காரணம் என்பதும் இந்நூலில் உணர்த்தப்பட்டிருக்கிறது. இன்றும்கூடத் தமிழீழ விடுதலையில் பேராயக் கட்சி காட்டுகிற தன்னலப் போக்கு இனத்தை அடகு வைப்பதாகவே இருக்கிறது. நதிகனை இழந்ததற்கும் நிலப்பகுதிகளை இழந்ததற்கும் நேற்று வந்த மொழிகளும் தமிழுக்கிணையாக்கப்பட்டுத் தமிழ்மொழி தாழ்வதற்கும் இந்த அக்கறையின்மையே அடிப்படை. இனி வரப்போகிற மொழியின இழப்புகளுக்கும் இந்தப் போக்கே காரணமாக இருக்கும்.

தமிழக எல்லைக்கும் மொழிக்கும் இனத்திற்கும் நெருக்கடிகள் வருகின்ற கட்டங்களில் எதிர்வினைகைள் இல்லாமலில்லை. தமிழகம் பிற இனத்தாரிடம் அடிமைப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில்தான் சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆழ்ந்து பார்ப்பவர்களுக்குப் புலப்படும். கண்ணகி கதை என்பது இளங்கோ அடிகளுக்கு ஒரு சரடுதான். அவர் தொகுத்துக் கொடுப்பது தமிழ்த் தேசிய உணர்வு. முந்நாடு, மூவேந்தர், முத்தமிழ் என்றெல்லாம் கூறுவதும் தமிழ்ப் பண்பாடுகளையும் கலைகளையும் மரபுகளையும் ஆவணப்படுத்துவதும் தமிழகத்தை ஒரே பரப்பாகப் பார்ப்பதும் தமிழ்ப்படை வடவருக்கு எதிராகத் திரள்வதாகச் சொல்வதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். தமிழருக்கே உரிய அக மரபுகளைப் பேணுவதும் தமிழரின் புற மரபுகளைப் பேணுவதும் தமிழ் வீரத்தை உயர்த்துவதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். அவர் காலத்து மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் பெயர் சீத்தலைச்சாத்தனார் என்று வெளிப்பட்டிருக்க, இளங்கே அடிகளின் இயற்பெயர் மறைக்கப்பட்டதற்குப் பகைச் சூழலும் அவரால் சொல்லப்பட்ட தமிழ்த் தேசியமும் காரணமாக இருக்கலாம். இந்தக் கட்டத்தை அடுத்து எழுந்த முத்தொள்ளாயிரத்திலும் இந்திலையையே காணகிறோம். பகையரசர் போற்றப்பட்ட காலத்தில், தமிழருக்கும் மூவேந்தரை நினைவூட்டுவதாக நூல் அமைந்திருக்கிறது. முத்தொள்ளாயிரத்தின் பல பகுதிகள் மறைந்ததற்கும் ஆசிரியர் பெயரே தெரியாமற் போனதற்கும் இத்தேசிய உணர்வே காரணமாக இருக்கலாம். இதே கட்டத்தில் படைக்கப்பட்ட முப்பேட்டுச் செய்யுள் என்ற நூலும் மூவேந்தரைப் போற்றுவதாக அமைந்தது. இதன் சில பாடல்கள் தவிர ஏனையவை மறைந்து போனதும் அன்றைய வேற்றுச் சூழலை வலியறுத்துவதாக உள்ளது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரின் இன உணர்வு குறித்து இங்குக் குதிப்பிடாமல் விடமுடியாது. அடியார்க்கு நல்லார் தமிழக எல்லைகள் குறித்து எழுதுவதும் தமிழக இலக்கண மரபுகளைப் போற்றுவதும் வடமொழி சாராத தனித்த தன்மை உடையது முத்தமிழ் என்று தமிழைப் போற்றுவதும் அவருடைய இன மொழிப் பற்றுக்குச் சான்றுகள். புராணங்களும் வடமொழிக் கதைகளும் மலிந்திருந்த காலக்கட்டத்தில் உரை எழுதிய அவர் இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுத் தராமல் விடுவதும் குறள் போன்ற நூல்களையே காட்டுவதும் அலரது பற்றை உணர்த்துவன. தமிழ்நாடு அன்று பல அரசர்களின் கீழ் நாடுகளாகப் பிரிந்திருந்தாலும், அடியார்க்கு நல்லார் தமிழ்ப்பூமி என்றே ஒன்றாகத் தமிழ்நாட்டைக் குறிய பிடுவது நம் கவனத்திற்குரியது. ஜரோப்பியர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ்விடு தூதுவும் தமிழின் மேன்மையை உணர்த்த எழுந்த்தே. இதன் ஆசிரியரின் பெயரும் தெரியாமற் போனதற்கு தமிழ்த் தேசிய உணர்வே காரணமெனலாம் இத்தகைய படைப்பாளர்களின் தமிழ்த் தேசிய முயற்சிகள் வேற்றினத்தார் ஆண்ட நிலையில் உருவானவை.

தமிழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலக்கட்டத்திலேயே மொழியின உணர்வுகளுக்கு எதிராகத் தோன்றிய செயல் அவலத்தைச் சொல்வது பெரியாரின் இந்நூல். முந்தைய தமிழ்த் தேசியப் படைப்பாளிகளின் வரிசையில் ஆய்வாளர் பெரியாரையும் சேர்த்துக் கொள்ளலாம். மாணவப் பருவத்தலிருந்தே எப்பொழுதும் மொழியினப் பற்றோடும் பகுத்தறிவோடும் இயங்கும் அ. பெரியார் தமிழகச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த கருத்துப் போரைக் கொண்டு தமிழக எல்லை, தமிழ்நாடு பொயர் மாற்றம் ஆகியவற்றில் செயல்பட்ட எதிர் அரசியலை எடுத்துக் காட்டியுள்ளார். சட்டமன்றப் பதிவேட்டுப் பக்கங்களில் தோய்ந்தும் வரலாற்றில் வெளிப்படாமல் இருக்கிற தமிழ்த் மேசிய உணர்வுகளுக்கு எதிரான தேசிய உணர்வின் முரண்பாட்டைக் காட்டியிருக்கிறார்.

காலந்தோறும் இத்தகைய கருத்து வரவுகளினால்தான் தமிழ் இனத்தின் மேன்மைகள் நிலைநாட்டப்படுகின்றன. மொழி உணர்விலும், இன உணர்விலும், பெரியார், பெரியார் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. தமிழர்கள் பலருக்கு வாய்க்காத, அமைவு களைத் தாண்டிப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் பெரியாருக்கு வாய்த்திருக்கிறது.
nandri: www.thadagam.com