மௌனம் புதைந்த மனசு

அவர் கண்ணில் நீர்வழிந்து கொண்டேயிருந்தது. சிறு குழந்தையைப் போல் அவன் தோள் மீது சாய்ந்து அழத்தொடங்கினாள். தன் குடும்பத்தின் பழைய நிகழ்வுகளை நினைவு கூருகையில், இப்படி அழத்தொடங்கிவிடுவாள். உறவினர்கள் புறக்கணிப்பையும் ஏளனங்களையும் சிறுவயதிலிருந்து சேகரித்து வைத்திருக்கிறாள். ரணத்தின் வடுக்கள் அவள் மனதில் கிடங்கிட்டுக் கிடக்கின்றன. எப்போதாவது அதன்மீது கீறல் விழுகையில் அவளைச் சமாதானப்படுத்தித் தேற்ற சிலமணி நேரங்களாவது அவனுக்குத் தேவையாயிருக்கிறது.
இன்றும் அப்படித்தான் ஆனது. அவன் மாமியார் ஏதோ பணம் கட்டிவிட்டுவர வங்கிக்குப் போகச் சொன்னதை மறுத்து, ‘உன் தம்பி என்ன செய்கிறான், அவனை அனுப்ப வேண்டியதுதானே?’ என்பதைத் தவிர பெரிதாக ஒன்றும் அவன் சொல்லிவிடவில்லை. சொல்லிமுடித்த சில நிமிடங்களுக்குள் துயரம் கனத்த மனத்துடன் வெளியே நின்றவள் சன்னலோரம் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் அழத்தொடங்கினாள். தற்செயலாக வெளியே வந்தவன் அவள் அழுவதைப் பார்த்து குழப்பத்துடன் அவளை நெருங்கிக் கேட்டான். அழுகையினூடே பேசத் துவங்கினாள்.
"அம்மாவுக்கு எதுவுனா நீங்கதான். அப்பாகூட உங்களையும் மாமாவையுந்தான் நம்பறாரு. தம்பிய பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே. அவனைப் பத்திய கவலையும் அவங்களுக்கு நிறைய இருக்கு " என்றதும், " என்ன அவனுக்கு? " என எரிச்சலுடன் கேட்டான். "சின்ன விஷயத்துக்கெல்லாம் பதற்றமாயிடறான். ரொம்ப கோபப்படறான். ராத்திரியெல்லாம் தூங்கமாட்டேங்கறான். அடிக்கடி எழுந்து பாத்ரூம் போய்ட்டு வர்றான். தூக்க மாத்திரை சாப்பிட்டாக் கூடத் தூங்கமாட்டேங்கறான். இதுதான் அம்மாவுக்கும் கவலையாயிருக்கு. அவன வேல வாங்க பயப்படறாங்க " என்று சொல்லிக் கொண்டே போனவளின் கண்களில் நீர் திரண்டு வழியத் தொடங்கியது. என்ன பிரச்சினை அவனுக்கு என்றதும் மீண்டும் பேசத் தொடங்கினாள்.
" அவன் சின்ன வயசுலேர்ந்து யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டான். நாங்க எல்லாம் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் என்னென்ன நடந்ததுன்னு அம்மாகிட்ட சொல்லுவோம். ஆனால் அவன் மட்டும் எதையும் சொல்லமாட்டான். எங்க அம்மா அப்பாவும் ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ் மாதிரி. எந்தவொரு விஷயத்தையும் அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கலாம் . அவனுடைய ப்ரெண்ட்ஸ் கூட எல்லாத்தையும் அப்பா அம்மாகிட்டே ஷேர் பண்ணிக்குவாங்க. தம்பி மட்டும் ஏனோ அப்படியொரு மூடி டைப்பா இருந்திட்டான். அவனுக்கு ப்ரெண்ட் கூட அவ்வளவா அதிகம் கிடையாது. இதையெல்லாம் நாங்க ரொம்ப பெருமையாத்தான் நினைச்சோம். அந்த மாதிரி ரிசர்வ்டு டைப்பா இருக்கிறது தப்புனு பிறகுதான் புரிஞ்சது. அப்ப இது தெரியலை. இப்போது அவளுக்கு அழுகை நின்றுவிட்டிருந்தது. தன் தம்பியையும் அவன் பிரச்சினையையும் தன் கணவனுக்குப் புரியவைக்க வேண்டும் எனும் விதத்தில் மேலும் அவள் தம்பியைப் பற்றி விவரிக்கத் தொடங்கினாள். ஆறாவது படிக்கும் போது கரும்பலைகையில் ஆசிரியர் எழுதிப்போடுவதை சரியாத் தெரியாம பக்கத்திலிருக்கிறவன் நோட்டைப் பார்த்துதான் எழுதியிருக்கான். இதையும் அவன் வீட்டிலே சொல்லாமல் விட்டதாலே கடைசியிலே பார்வைக் குறைபாடு அதிகமாயிடுச்சு. இப்ப அவன் கண்ணாடி போட்டுக்கிட்டிருக்கிறதை அசிங்கமா உணர்றான். இதையெல்லாம் ஒரு குறையா சொல்லி அப்பா மனசை வேற அப்பப்ப வேதனைப்படுத்துறான். அப்பவே சொல்லியிருந்தான்னா பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்.
அவன் ரொம்ப நல்லா படிப்பான். ஆனால் பத்தாவதுல அவன் ப்ரெண்ட்ஸைவிட மார்க் குறைஞ்சிருச்சின்னு ரொம்ப வருத்தப்பட்டான். அதுக்கெல்லாம் அப்பவே கண் செக்-அப் செய்யாததுதான் காரணம்னு அவன் நம்பறான். அதோட அவனை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காம டிப்ளமோ இன்ஜினியரிங் சேர்த்தார் அப்பா . பேவ்மெண்ட் சீட்தான். அப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. அங்கு என்ன நடந்தது என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. அமைதியாய் போய்க் கொண்டிருந்தவன் திடீரென என்னிடமும் என் தங்கையிடமும் கோபப்பட ஆரம்பித்தான். என் தங்கையை சமயங்களில் அடிக்கக்கூடச் செய்வான். ஒருநாள் அப்பா, " ஏண்டா அவளை அடிக்கிறே, அவள் உன் அக்கா இல்லை ! " எனக் கை ஓங்கியதுதான் தாமதம், " என்னை திட்டிட்டே இல்லைப்பா நீ நான் எங்கேயாவது போறேன் போ, " எனத் தேம்பி அழத்துவங்கிவிட்டான். நாளுக்கு நாள் தம்பியின் பிரச்சினை தீவிரமாகி மிகவும் கோபமாகப் பேச ஆரம்பித்தான். அடிக்கடி "அவளை அடிக்கணும் , அவன சாகடிக்கணும் "என்று ஆவேசமாகக் கையை மடக்கிக் கொண்டு ஓடுவான். ஆரம்பத்தில் மிகவும் பயந்துபோனோம். என் சித்தப்பாவோ, " ஒரு ஆம்பிளை பையன் இப்படிகூட இல்லைன்னா எப்படி? அவன் என்ன பொட்டையா? "என்றெல்லாம் கூறி எங்களை சமாதானப்படுத்திவிட்டார். ஆனால் நாளுக்கு நாள் வேகம் அதிகரித்துக் கொண்டுதான் போனது. கோபத்தை என்மீதும் தங்கை மீதும் அதிகமாகக் காட்ட ஆரம்பித்தான். அவளது பேச்சு அவள் கணவனுக்கு அவள் மீது பரிதாபத்தையும் தன் மைத்துனன் மீது இரக்கத்தையும் ஏற்படுத்தியது.
என் அண்ணா அவனை தனியாக உட்கார வைத்துப் பேரியபோதுதான் தெரிந்தது, அவனது கோபத்திற்கும் மன அழுத்தத்திற்கும் காரணம் உடன் படிக்கும் மாணவர்கள் அவனை ராகிங் செய்திருக்கிறார்கள். அப்படி என்னதான் ராகிங் செய்தார்கள் என்பதுதான் கடைசிவரை தெரியவில்லை. மிகவும் மோசமான முறையில் கிண்டல் , கேலி செய்து அவனை டார்ச்சர் செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
"சரிடா! நான் உன்கூட வர்றேன். அவன் யாருன்னு காட்டு. அவன்கூட நான் பேசறேன் " என்று என் அண்ணன் அவனுடன் சென்றார். திரும்பி வந்தவுடன் ஓடிச்சென்று கேட்டோம்.

" அந்தப் பையனை கூப்பிட்டு டீ வாங்கிக்கொடுத்துப் பேசினோம், இனி அப்படி ஏதாவது பண்ணினால் அவ்வளவுதான்னு சொன்னோம். அவனும் ‘சரி’ கேட்டுட்டான்"". என்றதும்தான் திருப்தி அடைந்தோம். அப்பாவும் துறைத் தலைவரை சந்தித்துப் பேசினார், ஓரிரு நாட்கள்தான் அமைதியாய் போயிருக்கும். மீண்டும் மனநிம்மதி குறைய ஆரம்பித்தது. அப்பாவுக்கும் சித்தாப்பாவுக்கும் நடந்த சண்டை, சித்தப்பா பையன் அப்பாவை முறைச்சதுன்னு எதை எதையோ பேச ஆரம்பித்தான். தியேட்டர் போனால் கூட ஒரு இடமா உட்கார்ந்து சினிமா பார்க்கமாட்டான். சித்தப்பாவும் சித்தப்பாவின் பிள்ளைகளும் அப்பாவிடம் சண்டை போடும்போதெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டு முறைத்து முறைத்துப் பார்ப்பான். ஆனால், ஒரு வார்த்தைக்கூடப் பேசமாட்டான். அதன் விளைவுதான் இது என்பது புரிந்துகொள்ள முடிந்தது.

அவனை அழைத்துக்கொண்டு மனநல மருத்துவரிடம் சென்றோம். "அவன் ரிசர்வ்டு டைப்பா இருக்கிறான்னா பேற்றோர்கள் தான் அவனிடம் பேச வேண்டும். ஆரம்பத்திலேயே அப்படி விட்டதுதான் தப்பு. எல்லாத்தையும் மனசுலேயே போட்டு இப்பொழுது மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறான். " என கூறிச் சில மாத்திரைகளைக் கொடுத்தார். மாத்திரைகள் போட ஆரம்பித்ததும் கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

வீட்டில் இயல்புநிலை மெல்ல திரும்பியது. அமைதியாக இருந்தான். இந்தப் பிரச்சினையில் டிப்ளமோ எக்ஸாமில் ஒரு தேர்வை எழுத முடியாமல் போனது. மருத்துவத்திற்குப் பிறகு அந்தத் தேர்வை எழுதி வெற்றியும் பெற்றான். மாத்திரை போடுவதை நிறுத்திவிட்டான். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.சரி, நான்றாகத்தானே இருக்கிறான் என நாங்களும் விட்டுவிட்டோம்.

"வீட்டிலேயே இருக்க போரடிக்குது. என் ப்ரெண்டோட சேர்ந்து கம்ப்யூட்டர் வகுப்பிற்கு போறேன்போ "என்றான். அப்பாவும் பணம் கட்டிச் சேர்த்துவிட்டார். மீண்டும் பிரச்சினை புதிய வடிவில் ஆரம்பமானது. எல்லோருடனும் சேர்ந்து சத்தம்போட்டு சிரித்து சிரித்துப் பேசத் தொடங்கினான். ரோடு என்றுகூடப் பார்க்காமல் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவான். டேய் ! ஏண்டா இப்படியெல்லாம் பண்ற என நானும் என் தங்கையும் பயந்துபோய் அழுதால்... அடிக்க வருவான்.

எல்லோரும் அவனை கோமாளியாக்கி சிரிக்கக்கூடச் செய்தார்கள். எங்களால் தாங்க முடியவில்லை. எங்களின் குடும்ப நண்பர் ஒருவர், "என்ன , உன் தம்பி பைத்தியக்காரன் மாதிரி பண்றான். என் பிள்ளைகளையெல்லாம் போட்டு அடிக்கிறான். எங்கேயாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே"" என்றார், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகளைப் போடச் சொல்லிக் கொடுத்தால் கத்துவான். அடிக்க ஓடி வருவான். அந்தச் சமயம் ஊரிலிருந்து வந்த என் அத்தை, "ஏண்டா இப்படி உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்தச் சமயம் ஊரிலிருந்து வந்த என் அத்தை, " ஏண்டா இப்படி உங்க அப்பாவும்க்கும் அம்மாவுக்கும் கஷ்டம் கொடுக்கிறே? " என்று மிரட்டியதுதான் தாமதம், மீண்டும் குழந்தையாய் அழத்துவங்கிவிட்டான். " இப்படியெல்லாம் பேசினா நான் எங்கேயாவது போய் செத்திடுவேன். "என்று அழுததும் அனைவருமே அழுதுவிட்டோம். ஆனால் எங்க அண்ணனோ. "போய் சாவுடா. இப்படியொரு பிள்ளை இருந்து, அவரை சாகடிக்கறதைவிட பேசாம போய் செத்துடு!’’ என்றதும் தேம்பிக் கொண்டே ஓடினான். இழுத்தவந்து சமாதானப்படுத்தி மறுநாள் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மருத்துவர் நீண்ட நேரம் அவனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அவன் மீண்டும் இப்படி ஆனதற்கான காரணத்தை அந்த உரையாடல் தெளிவுபடுத்தியது. கம்ப்யூட்டர் வகுப்பில் இவனுக்குப் பயிற்றுவித்த பெண்தான் அதற்கு காரணம். அந்தப் பெண் ஒரு முஸ்லிம். வயதிலும் இவனைவிட மூத்தவள். அவள் மற்ற பையன்களைவிட என் தம்பியிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்திருக்கிறாள். அவனுடன் கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்ற அவன் நண்பன் அந்தப் பெண்ணையும் என் தம்பியையும் ஒப்பிட்டுப் பேசப்பேச அவன் மனதில் ஆசை வளர்ந்திருக்கிறது. பிரச்சினை என்னவெனில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் செய்தி நண்பர்கள் மூலம் பிறகுதான் தம்பிக்கு தெரிந்திருக்கிறது. இருந்தும் அவள் என் தம்பியின் மனசில் ஆசை வளரக் காரணமாகிவிட்டிருக்கிறாள். இந்த ஏமாற்றத்தையும் யாரிடமும் சொல்லாமல் உழன்று உழன்று மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

அது ஒரு மனநல மருத்துவமனை போன்றே தெரியாது. வீடுமாதிரியிருக்கும் . தனித்தனி அறையுடன் எல்லா வசதிகளும் நிறைந்திருக்கும். அங்குதான் என் தம்பியை சேர்த்தனர். சேர்ந்ததிலிருந்து அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டி அவன் கேட்பதாக மருத்துவர் கூறினார். ஊசிபோட்டு அவனைத்தூங்க வைத்தனர். நானும் என் அம்மாவும் ஒருநாள் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினோம். "நான் சாதாரணமாகத்தான் பழகினேன். " என்றாள் அவள், இது போன்ற வார்த்தை விபச்சாரிகளுக்கு எல்லாம் சாதாரணம்தான் என் அப்பாதான் மிகவும் துவண்டு போனானர். ரொம்பவும் அழுவார். வேலைக்குக் கூடக்செல்லாமல் மருத்துவமனை, வீடு என்று அலைந்து கொண்டிருக்கிறார். சுயநினைவற்றவர் போல் நடந்துவருவார். மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு அழுதுக்கிடப்பார். ஒரே பையனாயிற்றே. அவரைத் தேற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். ஒருசில மாதங்களுக்குப் பின் தம்பி குணமாகி வீடு திரும்பினான். ஆனால் அப்பாவுக்குத்தான் அவனைப் பற்றிய கவலை இன்னும் மாறலை.

எப்பொழுதும் அவனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாய் மாத்திரை சாப்பிட வேண்டும் இல்லையெனில் மீண்டும் பதற்றப்படுவதும் கோபப்படுவதுமாக இருக்கிறான். எனவேதான் அப்பாவும் அம்மாவும் அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர் அப்படித்தான் அவன் டூவீலர் கேட்டதும் வாங்கிக் கொடுத்துவிட்டார். எப்படி ஓட்டுகிறானோ என்று இப்போது பயந்து கொண்டிருக்கிறார். அவன்கிட்டே எந்த கஷ்டத்தையும் சொல்றது கிடையாது.

வயது முதிர்ந்த காலத்தில் தந்தையின் கஷ்டங்களுக்குத் தோள் கொடுத்து கமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியவன் எல்லாம் சுமையையும் தந்தைமீது சுமத்திவிட்டு ஓன்றுமறியா சிறுவனைப்போல் சுற்றித்திரிகிறான். அவனை எண்ணி என் தந்தைதான் கலங்கிய விழிகளுடனும் குழம்பிய மனதுடனும் சுற்றுகிறார் நாங்க இருக்கிறவரைக்கும்தான், அப்புறம் அவனுக்கு யாருன்னு நினைச்சாதான் கவலையாயிருக்கு , இப்போதெல்லாம் அப்பாவிடமிருந்து வரும் அதிகப்படியான துயரமான வார்த்தைகள் இவையாகத்தான் இருக்கின்றன.

மீண்டும் தன் கணவனின் தோள்மீது சாய்ந்து அழத் தொடங்கினாள். ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு வங்கிக்குப் புறப்பட்டான் அவன்.