Tuesday, May 31, 2011

பெரியாருக்கு வாய்த்திருக்கிறது

அ.பெரியாரின் “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர்மாற்றமும்” நூல் மதிப்புரை
சமூகத்தின் ஒவ்வோர் அசைவிற்குப் பின்னாலும் வரலாறு களும் போராட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அசைவுகளின் பின்னால் போய்ப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்கள் பலருக்கு இது வாய்க்கவில்லை. 25 நூற்றாண்டுகளாக இலக்கண இலக்கியங்களில் காட்டுகிற அக்கறையைத் தமிழர்கள் வரலாற்றில் காட்டுவதில்லை. அண்மைக்காலத்து அசைவுகளுக்கும் இதே கதிதான். அண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை அறியும் நமக்கு அவர்கள் வரலாறு புதிராகவே தெரிகிறது. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் வாழ்க்கை வரலாறுகளில் காணப்படும் வேறுபட்ட, முரண்பட்ட செய்திகள் இதற்குச் சாந்தியைப் பாரதி சந்தித்த நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளில் முரண்பட்ட குறிப்புகள் உண்டு. பாரதிதாசன் பிறந்த நாள் குறித்தே குழப்பம் உண்டு. இதுதான் நம் நிலை. ஆனந்தரங்கம் பிள்ளையையும் உ.வே.சா. அவர்களையும் வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவர்களின் பதிவு ஆர்வத்திற்குப் பாராட்டலாம்.

தமிழ்நாடு மொழி வாரியாகத் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது அதன் எல்லைகள் குறித்து எழுந்த சிக்கல்களையும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவதில் எழுந்த சிக்கல்களையும் பேராசிரியர் பெரியார் இந்நூலில் ஆவணப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இச்சிக்கல்கள் குறித்துச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த உரைப்போர்களைக் கொண்டு - அவற்றிடையே காணும் இடைவெளிகளைக் கொண்டு - இதன் பின்புலத்தில் செயல்பட்ட மொழியினவுணர்வு அக்கறை, அக்கறை இன்மைகளைக் கொண்டு தமிழ்த் தேசிய உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார்.

தமிழினம் மிகத் தொன்மையானது என்பதும் தமிழ்மொழி மூத்தது என்பதும் தமிழ் வழங்கிய தமிழகப் பரப்பு பரந்தது என்பதும் வெறும் தகவல்கள் மாத்திரம் அல்ல இனத்துக்கும் மொழிக்கும் நிகழ்கால எதிர்காலத் தமிழ் வாழ்விற்கும் வலுச் சேர்க்கிற ஒரு வரலாறு. 3.5. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா (PANGEA) என்ற பெயரில் ஒன்றாக இருந்த நிலபரப்பு 2.5 பில்லியன் ஆண்டளவில் லாரேசியா (LARESIA), கோண்ட்வானா (GONDWANA) என்ற பெயர் தென்னிந்தியாவில் வாழ்ந்த கோண்ட் இனத்தின் பெயரால் உருவானது என்பது நம் கவனத்திற்குரியது. தமிழகத்தின் பழமையை உணருவதற்கு இப்பெயரே போதுமானது எனலாம்.

கி.மு. 70,000 முதல் 50,000 வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுதங்கள் தமிழகப் பகுதிகளில் கிடைத்துள்ளன. தொல்லுயிர் எச்சங்களும் மண்டை ஒடுகளும் தமிழர்களின் தொன்மை இருப்பை உறுதிப்படுத்துகின்றன. கடல் தாழ்ந்திருந்த காரணத்தால் இலங்கை தமிழகத்துடன் குறுகிய நிலப்பரப்பு வழியே தொடர்பு உடையதாக இருந்தது. தமிழகத்தின் ஆதிக்குடிகளே இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அதன் ஆதிக்குடிகளான வேட்டுவர்கள் முருகனை வணங்கியவர்கள். தமிழ் நிலப்பரப்பு மூன்று கடல்கோள்களால் இலங்கையிடமிருந்து பிரிக்கப்பட்டு பரப்பு சுருங்கியது.

இலங்கை தமிழருக்குரிய நிலப்பகுதி என்பதைப் பாரதிதாசன் அழுத்தம் திருத்தமாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

“முந்தாநாள் தோன்றிய சிங்கள மூடர்
செந்தமி ழர்தம் சிறிய திட்டைத்
தமதென்று சொல்லித் தலைதுள்ளுகின்றனர்
குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின்
சிறிய திட்டே அந்தத் திட்டெனக்
கவிஞர் எடுத்துக் காட்ட வேண்டும்”
என்பது அவர் புலப்படுத்தும் தமிழுணர்வின் அடையாளம்.

தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தற்போதைய கேரளாவையும் உள்ளடக்கிய பகுதி தமிழகமாக இருந்தது. தொல்காப்பியப் பாயிரம் இதைச் சுட்டுகிறது. நன்னூல் காலத்தில் மேற்கே குடகுநாடு உருவாகித் தமிழக எல்லை சுருங்கியதை அதன் பாயிரம் உணர்த்துகிறது.

தமிழ்மொழி 2500 ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவம் பெற்ற இலக்கிய மொழியாக இருந்திருக்கிறது. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ்ப் பிராமி வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் செம்பியன் கண்டியூரில் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட கைக்கோடரியில் காணப்படும் எழுத்து சான்றாக உள்ளது. பானை ஒடுகளில் காணும் எழுத்துகளும் இதையே உணர்த்து கின்றன. அசோகர் காலத்திற்கு முந்திய கல்வெட்டுகள் தமிழ்கத்தில் காணப்படுவதும் வரிவடிவத் தொன்மைப் பயன்பாட்டை உணர்த்து கின்றன. இவற்றின் வழியே தமிழ், இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் சாராதது என்பதும் திராவிட மொழிக்குடும்பம் சார்ந்தது என்பதும் உறுதிப்பட்டிருக்கிறது.

இத்தகைய தொன்மைமிக்க இன்த்தின் - மொழியின் வாரிசுகளான நாம் சுருங்கிய போயிருப்பது வேதனைக்குரியது. தமிழகத்தின் எல்லை சுருங்கவும் மொழியின் மேன்மை மங்கவும் நாமே காரணமாகிறோம். கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் தமிழின் உதரத்தில் உதித்தவை என்பதை அம்மொழிகளைப் பேசுபவர்கள் மறுத்துப் பொய் வரலாறுகளை எழுதுகிறார்கள். நாம் இதபற்றி அக்கறையில்லாமல் இருக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டு தனக்கேயுரிய இலக்கியங்களைக் கொண்ட மொழி செம்மொழி என்பதை அடிப்படையில் தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்டது. 1000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான பழமை கொண்டன வெனப் பொய்யுரைத்துச் செம்மொழித் தகுதி கேட்டுப் பெறுவதை மறுக்காமல் அக்கறையின்றி இருக்கிறோம். கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் பகுதியில் உருவாகி தமிழகத்தில் வருகிற ஆறுகளைத் தடுத்து உரிமை கொண்டாடுகிறார்கள். இது பற்றியும் நமக்கு எந்தச் சுரணையும் இல்லை.

இந்தச் சுரணையின்மை தமிழ்நாட்டு எல்லைகளைக் காப்பதிலும் தமிழ்நாடு எனப் பெயர் வைப்பதிலும் எப்படிச் செயல்பட்டது என்பதைப் பெரியாரின் இந்த நூல் உணர்த்துகிறது. சென்னை, திருப்பதி, திருத்தணி, சித்தூர்ப் பகுதிகள் என இருந்த தமிழ் எல்லைப் பகுதிகளை ஆந்திரர்கள் விழுங்க முயன்று ஒரளவு வெற்றி பெற்றதும், தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை ஆகியவற்றை மலையாளிகள் விழுங்க முயன்று வெற்றி பெற்றதும் இந்நூலில் பதிவு பெற்றிருக்கின்றன. மொழிவாரி மாநிலப் பிரிவினை நியாயமாக அமைய வேண்டுமெனப் போராடிய தமிழர்கள் சிலரை, நாட்டின் ஒருமைப்பாடு தேசியம் என்ற பெயரால், தேசிய உணர்ச்சியைக் கொலை செய்பவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்திய இனப்பற்றின்மையை இந்நூல் வெளிப்படுத்தியிருக்கிறது.

1959 - ஆம் ஆண்டில் பாரதிதாசன் எழுதிய கவிதை தமிழ்த்தாயின் கூற்றாக இதனைப் பதிவு செய்கிறது.

“தமிழ்நாட்டைச் சென்னை என்று சாற்றி எவர்க்கும்
அமையப் பொதுமகள் போல் ஆக்கினார் என்மகனே”

என்று எழுதினார் பாரதிதாசன்.

ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்று தமிழகம் அழைக்கப் பட்ட நிலையில் ஆந்திரம், கன்னடம், கேரளம் என்று அண்டை மாநிலங்கள் பெயர் சூடிக் கொண்ட நிகழ்வுகூட நம்மவர்க்குச் சுரணை தரவில்லை என்பது தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குக் காட்டிய தொடர்ந்த எதிர்ப்பின் வழியே வெளிப்படுவதை இந்நூல் புலப்படுத்தியிருக்கிறது. தமிழில் சென்னை மாநிலம் என்றும் என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் வழங்கலாம் என்பதைத் தாண்டி சிந்திக்க அன்றைய ஆளும் கட்சியான பேராயக் கட்சியால் இயலவில்லை. கட்சியின் தேசியத்தன்மை மாசு படுமென்று கவலைப்பட்டார்களே ஒழியத் தமிழ் மாசுபடுவது பற்றக் கவலைப்படவில்லை.

பாரதிதாசன் கவிதையில் தமிழகப் பரப்பு குறித்த பதிவு நம் ஆழ்ந்த உணர்வுக்கும் கவனத்திற்கும் உரியது. மலையாளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய பகுதிகள் தமிழ்த்தாயின் உடற்பகுதிகள் உடற்பகுதிகள் என்றும் அவற்றை வெட்டுவது தாயின் உடலை வெட்டுவது போன்ற தென்றும் வருந்தியிருக்கிறார்.

“மலையாளம் என் உடம்பே மற்றதனை வெட்டிக்
கொலைகாரர் என்பகையாயக் கொண்டுவந்தார் என்மகனே
பலியானார் ஆந்திரரும் தில்லிப் பகைக்கே
எலியானார் என்பகைவர் ஆனாரோ என்மகனே
என் அடங்கற் பொன்னுடலே என்னை இழப்பதுண்டோ
கன்டைத்தைப் புய்த்த கதையறிவாய் என்மகனே”
என்பது நம் பதிவு கொள்ளப்பட வேண்டியது.

கட்சித் தன்னலத்திற்கு மொழியின மேன்மை பலியிடப் படுவது என்பது தொடர்ந்து நிகழ்ந்ததையே இந்தித் திணிப்பும் காட்டுகிறது.

தமிழினத்தைத் தாழ்த்துவதும், தமிழ்மொழியைக் கைவிடுவதுமே தேசிய நீரோட்டம் என்ற கருத்து பேராயக் கட்சிக்கு மையச் செயல்பாடாக இருப்பதைப் பெரியாரின் இந்நூல் உணர்த்து கிறது. 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்திற்குப் பேராயக் கடசியின் தொடர்ந்த அக்கறையின்மையே காரணம் என்பதும் இந்நூலில் உணர்த்தப்பட்டிருக்கிறது. இன்றும்கூடத் தமிழீழ விடுதலையில் பேராயக் கட்சி காட்டுகிற தன்னலப் போக்கு இனத்தை அடகு வைப்பதாகவே இருக்கிறது. நதிகனை இழந்ததற்கும் நிலப்பகுதிகளை இழந்ததற்கும் நேற்று வந்த மொழிகளும் தமிழுக்கிணையாக்கப்பட்டுத் தமிழ்மொழி தாழ்வதற்கும் இந்த அக்கறையின்மையே அடிப்படை. இனி வரப்போகிற மொழியின இழப்புகளுக்கும் இந்தப் போக்கே காரணமாக இருக்கும்.

தமிழக எல்லைக்கும் மொழிக்கும் இனத்திற்கும் நெருக்கடிகள் வருகின்ற கட்டங்களில் எதிர்வினைகைள் இல்லாமலில்லை. தமிழகம் பிற இனத்தாரிடம் அடிமைப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில்தான் சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆழ்ந்து பார்ப்பவர்களுக்குப் புலப்படும். கண்ணகி கதை என்பது இளங்கோ அடிகளுக்கு ஒரு சரடுதான். அவர் தொகுத்துக் கொடுப்பது தமிழ்த் தேசிய உணர்வு. முந்நாடு, மூவேந்தர், முத்தமிழ் என்றெல்லாம் கூறுவதும் தமிழ்ப் பண்பாடுகளையும் கலைகளையும் மரபுகளையும் ஆவணப்படுத்துவதும் தமிழகத்தை ஒரே பரப்பாகப் பார்ப்பதும் தமிழ்ப்படை வடவருக்கு எதிராகத் திரள்வதாகச் சொல்வதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். தமிழருக்கே உரிய அக மரபுகளைப் பேணுவதும் தமிழரின் புற மரபுகளைப் பேணுவதும் தமிழ் வீரத்தை உயர்த்துவதும் இந்த உணர்வின் காரணமாகத்தான். அவர் காலத்து மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் பெயர் சீத்தலைச்சாத்தனார் என்று வெளிப்பட்டிருக்க, இளங்கே அடிகளின் இயற்பெயர் மறைக்கப்பட்டதற்குப் பகைச் சூழலும் அவரால் சொல்லப்பட்ட தமிழ்த் தேசியமும் காரணமாக இருக்கலாம். இந்தக் கட்டத்தை அடுத்து எழுந்த முத்தொள்ளாயிரத்திலும் இந்திலையையே காணகிறோம். பகையரசர் போற்றப்பட்ட காலத்தில், தமிழருக்கும் மூவேந்தரை நினைவூட்டுவதாக நூல் அமைந்திருக்கிறது. முத்தொள்ளாயிரத்தின் பல பகுதிகள் மறைந்ததற்கும் ஆசிரியர் பெயரே தெரியாமற் போனதற்கும் இத்தேசிய உணர்வே காரணமாக இருக்கலாம். இதே கட்டத்தில் படைக்கப்பட்ட முப்பேட்டுச் செய்யுள் என்ற நூலும் மூவேந்தரைப் போற்றுவதாக அமைந்தது. இதன் சில பாடல்கள் தவிர ஏனையவை மறைந்து போனதும் அன்றைய வேற்றுச் சூழலை வலியறுத்துவதாக உள்ளது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரின் இன உணர்வு குறித்து இங்குக் குதிப்பிடாமல் விடமுடியாது. அடியார்க்கு நல்லார் தமிழக எல்லைகள் குறித்து எழுதுவதும் தமிழக இலக்கண மரபுகளைப் போற்றுவதும் வடமொழி சாராத தனித்த தன்மை உடையது முத்தமிழ் என்று தமிழைப் போற்றுவதும் அவருடைய இன மொழிப் பற்றுக்குச் சான்றுகள். புராணங்களும் வடமொழிக் கதைகளும் மலிந்திருந்த காலக்கட்டத்தில் உரை எழுதிய அவர் இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுத் தராமல் விடுவதும் குறள் போன்ற நூல்களையே காட்டுவதும் அலரது பற்றை உணர்த்துவன. தமிழ்நாடு அன்று பல அரசர்களின் கீழ் நாடுகளாகப் பிரிந்திருந்தாலும், அடியார்க்கு நல்லார் தமிழ்ப்பூமி என்றே ஒன்றாகத் தமிழ்நாட்டைக் குறிய பிடுவது நம் கவனத்திற்குரியது. ஜரோப்பியர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ்விடு தூதுவும் தமிழின் மேன்மையை உணர்த்த எழுந்த்தே. இதன் ஆசிரியரின் பெயரும் தெரியாமற் போனதற்கு தமிழ்த் தேசிய உணர்வே காரணமெனலாம் இத்தகைய படைப்பாளர்களின் தமிழ்த் தேசிய முயற்சிகள் வேற்றினத்தார் ஆண்ட நிலையில் உருவானவை.

தமிழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலக்கட்டத்திலேயே மொழியின உணர்வுகளுக்கு எதிராகத் தோன்றிய செயல் அவலத்தைச் சொல்வது பெரியாரின் இந்நூல். முந்தைய தமிழ்த் தேசியப் படைப்பாளிகளின் வரிசையில் ஆய்வாளர் பெரியாரையும் சேர்த்துக் கொள்ளலாம். மாணவப் பருவத்தலிருந்தே எப்பொழுதும் மொழியினப் பற்றோடும் பகுத்தறிவோடும் இயங்கும் அ. பெரியார் தமிழகச் சட்டமன்றத்தில் நிகழ்ந்த கருத்துப் போரைக் கொண்டு தமிழக எல்லை, தமிழ்நாடு பொயர் மாற்றம் ஆகியவற்றில் செயல்பட்ட எதிர் அரசியலை எடுத்துக் காட்டியுள்ளார். சட்டமன்றப் பதிவேட்டுப் பக்கங்களில் தோய்ந்தும் வரலாற்றில் வெளிப்படாமல் இருக்கிற தமிழ்த் மேசிய உணர்வுகளுக்கு எதிரான தேசிய உணர்வின் முரண்பாட்டைக் காட்டியிருக்கிறார்.

காலந்தோறும் இத்தகைய கருத்து வரவுகளினால்தான் தமிழ் இனத்தின் மேன்மைகள் நிலைநாட்டப்படுகின்றன. மொழி உணர்விலும், இன உணர்விலும், பெரியார், பெரியார் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. தமிழர்கள் பலருக்கு வாய்க்காத, அமைவு களைத் தாண்டிப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் பெரியாருக்கு வாய்த்திருக்கிறது.
nandri: www.thadagam.com

Monday, May 30, 2011

நூல் அறிமுகம் - தி. பரமேசுவரியின் ஓசை புதையும் வெளி

கவிஞர் தி.பரமேஸ்வரியின் இரண்டாவது கவிதை நூல் இது.
 முந்தைய தொகுப்பைவிட மொழி நடையும் அகம் சார்ந்த கவிதைகளும் 
பிரமிப்பை ஏற்படுத்துகிறது .பிறகு விரிவாக எழுதுகிறேன் . இப்போதைக்கு மூன்று கவிதைகளைப்  படிக்கத் தருகிறேன்...

குரலெனும் புயல் 

ஓசை காட்டி 
அழைக்கிறது மழை 
ஓடிப் பிடிக்க யத்தனிக்கையில்
எங்கேயோ உரத்து ஒலிக்கும் குரல்கள் 
கடும்புயலை நினைவூட்ட 
மனசுக்குள் மழை மறைந்து 
இறுக்கம் பரவுகிறது மெல்ல .
------------------------------------------------------------
துளிகளால் நனையும் பூமி 

அனைத்தையும் விட்டொழித்துத் 
திசைவெளிஎங்கும் பரவுகிறேன் 
மென்காற்றாய் 
மலை முகடுகளில் அலைகிறேன் 
மேகமாய் உருமாறுகிறேன் 
மெல்லக் கரைகிறேன் 
துளிகளால் நனைகிறது பூமி .
-----------------------------------------------------

மனப்பாறையில் சிதறும் பரல்கள் 

மண் மகள் அறியா
வண்ணச்சீரடிப் பாவை 
நிலம் அதிர நடக்கிறாள் 
ஒற்றைச் சிலம்புடன் .
அரண்மனைச் சீற்றப் பயணத்தில் 
மணப்பாறை அடுக்குப் பதிவுகள் 
விட்டுப் பிரிந்ததும் 
நேரவளைக் கலவியதும் 
குலப்பெருமை இழந்ததும் 
செல்வம் தொலைத்ததும் 
நடத்தி நடத்தி மதுரை கொணர்ந்ததும் 
திருட்டுப் பழியால் வுயிர் தொலைத்ததும் 
எண்ணும் பொழுதில் 
கசியும் குருதி 
நெஞ்சின் குமுறல் 
வெடித்தது பரல்களாய் .
விட்டெறிந்த ஒற்றை முலை 
பட்டுத் தெறித்தது பிணத்தில்,
எரிந்தது மதுரையும் ! 
------------------------------------------------------------------------------

 

Wednesday, May 25, 2011

என் கவிதை - மௌனம்

நீ மௌனமாயிருக்கிறாய் 
  என்பதைத் தவிர 
வேறொன்றையும் 
புரிந்து கொள்ள முடியவில்லை 
உன் மௌனத்திலிருந்து .

Tuesday, May 24, 2011

ஆனந்த விகடன் இதழில் (27 -04 -2011) வெளியான என் கவிதை - பாராட்டு விழாது எதுக்கு 
யார் யார் 
யார் யாருக்கு நடத்தலாம்

சாதனையாளர்க்கோ
சமூகத் தொண்டர்க்கோ 
வீரர்க்கோ என்றில்லை 
யார் யார்க்கு வேண்டுமானாலும்
எதற்கு வேண்டுமானாலும் 
நடத்திக்கொள்ளலாம் 

அதிகம் கொலை செய்தவர்க்கு 
கொலைக்குத் துணை நின்றவர்க்கு 
கொலை செய்யப்பட்டவருக்கு 
பயன் பெற்றதற்கு
பயன் பெறுவதற்கு 
பிரபலமாவதற்கு 
விழா நடத்துவதற்கு 
மனத்தில் இடம் பிடிப்பதற்கு 
சும்மா பாராட்டுவதற்கு 
பாராட்டு விழா நடத்தியதற்கு 
சிலரைப் புறக்கணிப்பதற்கு 

பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை
பிறர் பெயரில் 
நாமேகூட நடத்திக்கொள்ளலாம் 
அல்லது 
பிறரைத் தூண்டி 
நடத்திக்கொள்ளலாம் 

பாராட்டு விழாக்கள் 
பாராட்டுவதற்காக மட்டும் 
நடத்தப்படுவதில்லை !

நன்றி : ஆனந்த விகடன்  ( 27 - 04 - 2011 )
Wednesday, May 11, 2011

என் கவிதைகள் ...நன்றி - www.koodu.com / www.thamizhstudio.com

சதுர பூதம்


யாழினி முனுசாமி  

பெண்களின் ருசி கொண்டலைகிறது
சதுர பூதம்
மனித ராசியின் ஓய்வு நேரத்தை
அபத்தங்களால் நிறைத்த வண்ணம்
நாலாதிசையும் வளர்கிறது
வண்ண வண்ணமாய்
அறையுடை வெண் தோல் பருவச்சிகள்
குதறுகின்றன ஆன்மாவை .
குட்டி யாழ்களும்
இன்னதெனத் தெரியாமலே மீட்டுகின்றன
சதுர பூதம் தரும் விசப்பாக்களை
ஏதுமில்லா குகைகளுக்கு
தேவன் ஒரு நாள் பரிசளித்தான் சதுர பூதங்களை
இனிப் பசியற்றுக் கிடக்கும் மானுடம்
----------------------------------------------------------------------------------------------------------
பொய்
யார் சொல்லியிருக்கக்கூடும்
முதல் பொய்யை ?
ஏவாளிடம் ஆதாம் சொல்லியிருப்பானோ?
தெரிந்திலோம் .
மெக்கானிக் தொழில் கற்க
விட்டு வந்த இரண்டாவது வாரத்தில்
வயிற்றுவலி என வீடு சேர்ந்தது
நினைவிலிருக்கும் முதல் பொய் .
பள்ளி நாட்களில்
விடுப்புகளுக்காக
வராத காய்ச்சலும் தலைவலியும்
வந்ததாய்ச் சொன்னபோது
பொய்கள் வளர்ந்தன.
பனையுச்சியில் ஏறமுடியாமல்
தேளிருப்பதாய்ப் பொய்த்துவிட்டுத்
தரைமீண்டது
நுங்காசைப் பொய்த்துப்போன
சென்னை நண்பனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோழைத்தனத்தின் மறுபெயர் பொய்
எச்சூழலிலும் பொய்ச்சொல்லாதவன்
தூய வீரன்.
என்ன செய்ய ?
இப்போதும்
பொய்யைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது
பேராசிரியரான பிறகும்
அவசர விடுப்புக்கு!
------------------------------------------------------------------------------------------------------
எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்
நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கனவுடன் அலைபவள்
முன்பொருமுறை
வெள்ளுடை தரித்த தேவதைகளில்
ஒருத்தியாக இருந்தவள்
பிறகு
இளவரசியின்
நூற்றுக்கணக்கான தோழிகளில்
ஒருத்தியாக மாறினாள்.
அவ்வப்போது அவள்
இப்படி
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
தேவைகளின் பொருட்டு
அடுக்ககத்தில்
தன் உடுப்புகளையும்
களைந்து கொண்டிருக்கிறாள்
இளவரசியாகும் கனவுடன் .
---------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 10, 2011

என் கவிதை - “இல்லை “குறித்தான உரையாடல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

ல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்

நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
' ஷாக்'காவது அடிக்குமா?

காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
' இல்லை ' எதை உணர்த்துகிறது?

எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்

பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்

என்னிடம் பேசாதே !
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .
- யாழினி முனுசாமி yazhinimunusamy@gmail.com

nandri: www.keetru.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்Bookmark and Share

Monday, May 9, 2011

முனுசாமிகளும் எழுதுகிறார்கள்....


த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். கணித ஆசிரியர் வகுப்பு மாணவர்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தார். ‘தேறும் கேஸ்கள்’ , ‘தேறாத கேஸ்கள்’ என்று. என்னையும் என் நண்பர்கள் சிலரையும் தேறாத கேசில் சேர்த்துவிட்டார். அன்று மாலை பற்றி முடித்து வீட்டிற்குப் போகும் போது வழியில் அழுது கொண்டே போனேன். எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பக்கத்து ஊரில் டியூசன் எடுப்பதைக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் போய்ச் சேர்ந்தோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சரவணன் எனும் அண்ணன் ஏசுநாதர் ஆலயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓலைக் குடிசையில் டியூசன் எடுத்தார்.
அவர் தான் முதன் முதலில் எனக்குக் கவிதையை அறிமுகப்படுத்தினார். இரண்டு நோட்டுகள் நிறைய கவிதைகள் எழுதிவைத்திருந்தார். அவரைப் பார்த்து நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். அவரைவிட அதிகமாக எழுதினேன். எல்லாம் ஓசை...... ஓசை...... ஆதிக்கம் கொண்ட கவிதைகள். அவற்றில் ஒன்றுகூடத் தேறவில்லை. கிருத்துவரான அவர் மூலம் ஏசுநாதர் கீர்த்தனைகளும் பைபிளும் அறிமுகமாகின. அதனுடைய கவிதை நயத்துக்காக ஏசுநாதர் பாடல்களை விரும்பிப் பாடுவேன்.
ஏற்கனவே பாட்டி சொன்ன கதைகள் அடித்தளமாக இருந்தன. இயலாமைப் பொழுதுகளில் அம்மா வைத்த ஒப்பாரிப் பாடல்களின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்துவிடும். இந்தத் தருணங்களையெல்லாம்தான் கவிதைகள் என் நிலத்திலும் சொட்டு சொட்டாக இறங்கிய தருணங்களாக நினைக்கிறேன்.
கல்லூரி சேர்வதற்கு முன்பு ‘போலச் செய்தல்’ கவிதைகளை எழுதிக் குவித்து வைத்திருந்தேன் அவை குப்பை என்று பிறகுதான் தெரிந்தது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. கவிஞர் மு. மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’ தொகுப்பு குறித்து அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் சி. என். குமாரசாமி வகுப்பில் பேசினார். அன்றைய சூழலில் எனக்கு மேத்தாவின் கவிதைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கவிஞரும் பேராசிரியருமான முனைவர் பா. உதயகுமார், முனைவர் மங்கையர்க்கரசி, பேரா. மா. உத்திராபதி போன்றோர் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். சக மாணவர் கவிஞர். இரத்ன. அமல்ராஜ் நண்பராக அமைந்தார். இருவரும் கவிதைகள் குறித்து சண்டை போட்டுக் கொள்வோம். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேறு துறை மாணவர் ஒருவர் அவரது கவிதை நூலை கல்லூரியின் எதிரில் வெளியிட்டார். அந்த மாணவர் வேறு யாருமில்லை...... ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத். அந்த நூல் வெளியீட்டு விழாவில் த.மு.எ.ச.வைச் சேர்ந்த கவிஞர். சோலை பழனி, இன்குலாபின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்க’ பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதுதான் எனக்கு முதன் முதலாக முற்போக்கு இலக்கியத்தின் கதவு திறந்தது.
பிறகு, மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தமிழிலக்கியம் படித்தபோது முற்போக்குத் தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. ‘மாணவர் முன்னோடி’, ‘மக்கள் பண்பாடு’ இதழ்களில் ‘பாரதீயன்’ எனும் புனை பெயரில் ஒரு சில கவிதைகள் எழுதினேன். கவிஞர் பச்சியப்பன், பொன். எழிலரசு, நான் மூவரும் சேர்ந்து ‘உளி’ என்கிற கையெழுத்துப் பிரதியை மு. மேத்தாவின் கையால் வகுப்பறையில் வெளியிட்டோம். ஒரே இதழோடு நின்று போனது. மாநிலக் கல்லூரியில் அறிமுகமாகி ஒன்று சேர்ந்த நண்பர்கள் பச்சியப்பன், கங்காதரன், பொன். எழிலரசு, தி. பரமேஸ்வரி, அமல்ராஜ், கஜேந்திரன், சாரோன் ஆகியோர் இன்றும் என் இலக்கியப் பயணத்தில் துணை நிற்கிறார்கள்.
குமுதம் இதழில் பணியாற்றியபோது குமுதம் இணையதளத்திலும் இதழிலும் கவிதைகள் எழுதினேன் என்றாலும் புத்தகம் போடும் அளவுக்கு அப்போது கவிதைகள் இல்லை. பிறகு, ‘கல்கி’, ‘புதிய பார்வை’ போன்ற வெகுசன இதழ்களிலும் ‘கல்வெட்டு பேசுகிறது’ போன்ற சிற்றிதழ்களிலும் எழுதினேன். சிற்றிதழ், தீவிர இடதுசாரி இதழ், வெகுசன இதழ், இணைய இதழ் எனப் பல தளங்களிலும் எழுதினேன் என்றாலும் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் என்னால் அக்கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர முடிந்தது.
என்னோடு பயின்ற நண்பர்கள் இலக்கியத்திலும் ஊடகத்திலும் பரவலாக அறியப்படுகின்ற _ பேசப்படுகின்ற ஆளுமைகளாக பரிணமித்திருந்தபோது நான் அடையாளமற்றிருந்தது பெரும் அவஸ்தையாகவே இருந்தது.
பெரிதாகப் பதிப்பகங்களின் படிகளை ஏறியிறங்கவில்லை. நண்பர்கள் கவிஞர். பச்சியப்பன், பா. ரவிக்குமார் உதவியுடன் ‘மித்ர’ பதிப்பகத்தை அணுகினேன். எழுத்தாளர் எஸ்.பொ. வும் அவரது புதல்வர் ‘இந்ர’வும் என் முதல் கவிதை நூலை வெளியிட ஒப்புக் கொண்டனர். கவிதைகளின் ஒழுங்கமைவில் பச்சியப்பன் _ தி. பரமேஸ்வரி _ ச. விசயலட்சுமி மற்றும் என் துணைவியார் மேரி வசந்தி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘உதிரும் இலை’ எனும் அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்கள் என் துணைவியார் மேரி வசந்தியும் தோழி ச. விசயலட்சுமியும். கவிஞர். கனிமொழி சமகாலக் கவிதைகள் குறித்த ஒரு பொதுவான அணிந்துரையை ‘உதிரும் இலைக்கு’ வழங்கினார்.
குமுதம் இதழில் வேலை பார்த்த சமயம், குமுதத்திற்கு கவிதை கொடுத்தபோது பொறுப்பிலிருந்த ஒருவர், “கவிதை நன்றாக இருக்கிறது. பெயர்தான் பாமரத்தனமாக இருக்கு. பெயரை மாத்திக்கங்க’’ என்றார். ‘நான் பட்டிக்காட்டில் பிறந்தவன்தானே, பாரீஸில் பிறந்தவனா?’ என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றவில்லை. ‘முனுசாமிகளும் எழுதுகிறார்கள்’ என்று தெரியட்டும் என்பதற்காக விட்டுவிட்டேன். தொகுப்பாக வரும்போது ‘ஜெ’ எனும் கிரந்த எழுத்து உறுத்தியதால் என் குழந்தை ‘யாழினி’ இணைத்துக் கொண்டு ‘யாழினி முனுசாமி’யாகி விட்டேன்.
‘உங்கள் நூலகம்’, ‘புத்தகம் பேசுது’, ‘கவிதாசரண்’, ‘நடவு’ உள்ளிட்ட ஏறக்குறைய இருபது இதழ்களில் மதிப்புரை விமர்சனம் அறிமுகம் வெளிவந்தன. பழமலய், கோசின்ரா, லதா ராமகிருஷ்ணன், வே. எழிலரசு போன்ற பலர் எழுதியிருந்தார்கள். அந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘உதிரும் இலையும் உதிரா பதிவுகளும்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளேன். என் முதல் பிரவேசமான ‘உதிரும் இலைக்கு’க் கிடைத்த வரவேற்பே என்னை நம்பிக்கையுடனும் வேகமாகவும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கிறது என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி்- புதிய புத்தகம் பேசுது
www.keetru.com

என் கவிதை - உலகம(ப)யம்


உலகம(ப)யம்


ளர்ச்சி முகமூடி தரித்து
வலம் வரும் இப்பேய்
சொற்பமாய் விண்ணுயர்த்தி
லட்சமாய் காவு கொள்கிறது
பூர்வ குடிகளின் நில ரத்தம் உறிந்து
வளம் சுரண்டி
மண்ணுயிர் வற்றச் செய்கிறது
நிலம் புசித்து
உழவனின் உயிர்குடித்து
நரதாகம் தணிகிறது
அரசுத் துறைகளை நசித்து
இடஒதுக்கீட்டிற்குக் குழிபறித்து
விஷம் வைத்து
விளிம்பு நிலை மக்களை
வீதிக்குத் துரத்துகிறது
ஆங்கிலமே ஆளுமைமொழி
அறிவுமொழியெனப் பசப்பி
தாய்மொழி பேசுபவரைத்
தாழ்வு கொள்ள வைக்கிறது.
மதர்த்த பணத்தை மண்ணில் கொட்டி
வீடற்றவர்களாக்குகிறது
மேல்நாட்டு டாலருடன் மண்ணில் பண்பாட்டை
வன்புணர்ச்சி செய்கிறது
இத்தனைக்குப் பிறகும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வரவேற்றபடியிருக்கின்றனர்
மக்களின் காவலர்கள்.

Saturday, May 7, 2011

தும்பிகள் மரணமுறும் காலம்
யாழினி முனுசாமி

இளம் தலைமுறைக் கவிஞர்களில் கிராமம் சார்ந்த வாழ்வியலைப் பதிவுசெய்பவர்களில் முன்னணியிலிருப்பவர் கவிஞர் பச்சியப்பன். அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் கிராமத்தின் இழப்புகள், சிதைவுகள். அதன் உருமாற்றம் குறித்த பதிவுகளே இடம்பெற்றிருப்பினும் இந்தக் கட்டுரை நூல் ஊடாகவும் முழுக்க முழுக்கக் கிராமத்தையே பேசுகிறார். வடதமிழகத்தின் - குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்களையும் அம்மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களையும் அதிகம் தாங்கி வந்திருக்கும் கட்டுரை நூல் இது. அம்மக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது இந்நூல், என்றாலும், அனைத்துக் கிராமங்களையும் இந்தக் கட்டுரை நூலின் வழியாகக் காணலாம்.

Pachiappan மீண்டெழுதலை நோக்கமாகக் கொண்டு, வாழ்ந்த கதைகளையும் இழந்த கதைகளையும் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகச் சொல்லிச் செல்கிறார் பச்சியப்பன். வாசக மனதைச் சுண்டியிழுக்கும் எழுத்து நுட்பத்தைக் கைவரப் பெற்றவர் என்பதை அவரது கவிதைகளுடன் அறிமுக முள்ளவர்கள் நன்கு அறிவர். இந்த உரைநடை நூலின் மூலமாகப் புதிய வாசகர்கள் பலர் அந்த அனுபவத்தை அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கும்போது ஏற்படும் தாக்கத்தை விட அதைக் கலை வடிவில் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிவிடுகிறது. கிராமத்தை நாம் நேரில் பார்ப்பதற்கும் அதைப் பச்சியப்பனின் எழுத்தில் காண்பதற்குமான வேறுபாட்டில் அந்தத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

கட்டுரை நூலை ‘படைப்பு’ என்று சொல்லலாமா என்றால், இந்நூலைப் பொறுத்தமட்டில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்நூலின் நடை அப்படி. கதைக்கும் கட்டுரைக்குமான இடைப்பட்ட, கதைக்கு மிகவும் நெருக்கமான நடையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரக் கூடும். இத்தகையக் கட்டுரைகளைக் ‘கதைக்கட்டுரை’ எனும் புதிய வகைமையாகக் கூடக் கொள்ளலாம். இருபத்தைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ‘இது கிராமத்து உன்னதங்களின் வீழ்ச்சி குறித்த மனப்பதிவு’ என இந்நூலை வெளியிட்டுள்ள பொன்னி பதிப்பகம் அறிமுகப்படுத்துகிறது.

காலங்காலமாகக் குடியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கிராமத்தின் ஆன்மா. குடிப்பது நம் மரபு எனக் குடியைப் போற்றும் அறிவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், குடிக்குத் தன் கணவனையோ, மகனையோ, அப்பாவையோ, சகோதரனையோ பலி கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும் குடியின் மகத்துவம்? இன்றும் நம் தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பது இந்தக் குடிதானே? முதல் கட்டுரையே இந்தக் குடியின் கொடூரத்தைப் பற்றித்தான். குடியால் கலகலத்துச் சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை காணாமல்போன ஈச்சங்கூடைகளைப் பற்றியும் கூடைப் பின்னி பிழைப்பு நடத்தியவர்களைப் பற்றியும் பேசுகிறது. இப்படித்தான் எல்லாக் கட்டுரைகளும் கிராமத்தின் ஏதோவொன்றைப் பற்றிப் பேசுகின்றன. நிலத்தடி நீரைப் பற்றி, வரப்புச் சண்டையைப் பற்றி, இயற்கை உரத்தைப் பற்றி, மரங்கள் பற்றி...

இன்னும் நிறைய சொல்லிச் செல்கிறார். அத்தனைக் கட்டுரைகளும் முந்தைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒப்பிட்டுச் சொல்லி வாசகர்களைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“ வெட்டுக் குத்துனுதான் அலைவார்கள். ஆனால் ஆபத்து என்றால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கைகோத்துக் கொள்வார்கள். எதிரி கழனியென்றாலும் மாடுமேய பார்க்க மாட்டார்கள். ஓட்டிவிட்டுதான் மறுவேலை, குழந்தை அழுதால் சொல்லி விடுவார்கள்” (ப. 43) எனவும், “ ஆடோ மாடோ தன் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கும் குடும்பங்கள் இருந்தன. விளைச்சலில் கூடு கட்டி இருந்தால் சுற்றியிருக்கும் கதிர்களை அறுக்காமல் விட்டுவிட்டு வருகிற மனசைக் கொண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

உருட்டிவிட்டுப் போன பூனையை அடித்தால் பாவம்டா விட்டுர்றா என்பார்கள். அதனதன் வாழ்க்கையை அங்கிகரித்த பாசம் அவர்களுடைய தாக இருந்தது” (ப. 79) எனவும் கிராமத்து மனிதர்களின் இயல்புகளை அழகாகச் சொல்லிச் செல்கிறார். எருமையில் சவாரி செய்யும் சிறுவர்களும் ‘வாடா அண்ணா’ என்றழைக்கும் தம்பிகளும் சண்டைக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களும் இந்நூல் நெருக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

கெடை, ஒணத்தி, சத்தமடித்தல், சுளுவு, மோழி, தரூசி, பெண்ணம்பெரிய, கமலைசால், தோட்டாவண்டி, சேடை, ந்தே... எனத் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிக்குரிய பல வட்டார வழக்குச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. இது போன்ற வட்டாரச் சொற்களுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். ஏனென்றால் ‘தும்பி’ என்பதே எல்லா மாவட்டத்துக்காரர்களுக்கும் புரியும் என்று சொல்ல முடியாது. தும்பியை ‘தட்டான்’ எனவும் ‘புட்டான்’ எனவும் வழங்குகின்றனர்.

‘மூழ்கி மரித்த கதை’, ‘நண்டு நாற்காலி ஏறுமா?’, ‘பொண்ணு பிடிச்சிருக்கா ராசா’, ‘இன்றிரவு நடத்தப்படும் நாடகம் யாதெனில்’, ‘மருந்து’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். ‘தும்பிகள் மரணமுறும் காலம்’ என்பது கவிதை நூலுக்கான தலைப்பாக இருக்கிறது. ‘மரம்போல்வர் எம்மக்கள்’ எனும் கட்டுரைத் தலைப்பையே இந்நூலுக்கும் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கருத்து ரீதியாகச் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. சிறுநிலவுடைமைச் சமூகப் பிரதிநிதியின் குரலாகப் பச்சியப்பன் குரல் ஒரு சில கட்டுரைகளில் ஒலிக்கிறது.

ஆட்டுக்கிடை மடக்குவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொண்டு, ‘கிடை’ மடக்கியவர்கள் கூலியாகக் குண்டான் நிறைய கூழ், சோறு, வெத்தலை, பொயலை, சுருட்டு, ஒரு ரூபாயோ காசு பெற்றுக் கொள்வதைச் சிலாகித்து எழுதுகிறார் (ப. 34). கூலி கேட்காமல் கூழ் குடித்துவிட்டுக் கொடுப்பதை வாங்கிக் கொண்டுபோனால் மகிழும் நிலக்கிழார் மனசு இதில் வெளிப்படுகிறது. வேறோர் இடத்திலோ கூலி கேட்டால் சலித்துக் கொள்கிறார்.

“வெள்ளம் காய்ச்ச ஆலை ஆடுவது என்றால் நாய் படாத பாடு. மாட்டுக்குச் சோகை வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கருப்பு வெட்ட வருவார்கள். அவர்களை வைத்தே கழனியிலிருந்து கரும்பை ஆலைகரைக்குத் தூக்கிவந்து விடலாம். இது மாடுகள் நிறைந்திருந்த காலத்தில் நடந்தவை. இப்பொழுதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் கூலி.” (ப. 57), “சரி, கரும்பு வேண்டாம். வாழைக்கு வருவோம். குழி எடுக்கக் கூலி. கன்று தோண்டக் கூலி. கன்றுக்குக் கூலி (ப. 57) என விவசாயக் கூலிகளுக்குக் கூலி கொடுக்கச் சலித்துக் கொள்ளும் மனம் இதில் வெளிப்படுகிறது.

சோறு போடவும் கூழ் ஊத்தவும் எல்லோருக்கும் மனம் வரும். ஆனால் கூலி கொடுக்கத்தான் மனம் வராது போலும். விவசாய வேலைகளுக்குக் கூலி கொடுக்கவும் புலம்ப வேண்டும்; கிராமத்து ஆட்கள் வேலை தேடி நகரை அடைந்தாலும் ‘அய்யோ! கிராமம் காலியாகிவிடுகிறதே’ என்று புலம்ப வேண்டும். நல்ல கிராமப் பற்று!

சமீபத்தில் கடலூரில் நடந்த உழவுத் தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிட்ட சில செய்திகளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நவீன வேளாண்மை தொடங்கப்பட்டு அறுவை இயந்திரம் வந்துவிட்டது. நிலம் இல்லாத உழவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் உழவுத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிபேர் ஆதிதிராவிடர்கள்” (தமிழ் ஓசை, 2. 9. 07) என்கிறார் நல்லகண்ணு.

அறுவை இயந்திரத்தால் விவசாயக் கூலிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறது. ஆனால், பச்சியப்பனோ, “ஏக்கர் கணக்கில் என்றால் அறுவை இயந்திரம் கொண்டு அறுக்கலாம்” (ப. 58) என அறுவை இயந்திரத்தை வரவேற்கிறார். அறுவடைக்கு ஆள்வருவதில்லை என்பதைக் காரணமாகச் சொன்னால், ஏன் வருவதில்லை என்ற கேள்விதான் எழுகிறது. பச்சியப்பனின் மொழியில் சொல்வதென்றால், கூலிப் பிரச்சினையன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

இந்நூல் கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் கிராமத்துச் சிக்கல்களை அரசியல் புரிதலுடன், விரிவாகவும் நுட்பமாகவும் பேசவில்லை. வாசகர்களின் மேலோட்டமான உணர்வுகளைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்திய சாதிய அமைப்பைக் கிராமங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் சமூகப் பேராசிரியர்கள். சாதியம் பற்றியோ தலித் மக்களின் கலையான ‘பறை’ யின் அழிவு பற்றியோ இந்நூலில் எவையும் பதிவுகள் இல்லை.

இது கிராமத்து இனிய அனுபவங்களை அசைபோட நினைப்பவர்களுக்கான புத்தகம். கிராமத்து வாசகர்களுக்கான புத்தகம். அந்த அளவில் இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான புத்தகம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தும்பிகள் மரணமுறும் காலம்
ஆசிரியர் : இரா. பச்சியப்பன்,
வெளியீடு: பொன்னி பதிப்பகம்,
2/1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம்,
சென்னை - 91, விலை : ரூ. 60.
 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Previous post
Next post

பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்
தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மைக் கருவியான “பறை” க்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப் படும் இசைக் கருவி பம்பை. பம்பைக் கருவியின் சிறப்புகள் குறித்தும் இன்றைய நிலையில் பம்பைக் கலைஞர்களின் வாழ்நிலை குறித்தும், பம்பை கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்........

1.வணக்கம். பம்பையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்களேன்.
வணக்கம். பம்பை ஒரு மிக சிறந்த கருவி. இந்தக் கருவி சைவக் கடவுள்களுக்கு வாசிக்கும் ஒரு அருமையான இசைக் கருவி. பெரும்பாலும் நிங்கள் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பம்பை அடிப்பதைப் பார்க்கலாம்.

2.மற்ற தோல் கருவிகளுக்கும்; பம்பைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்ற தோல் கருவிகள் நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் உப யோகப்படுத்துவார்கள் ஆனால் பம்பையைத் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்ல; மற்ற கருவிகளை எந்தத் தோலில் வேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் பம்பையை ஆட்டின் தோலில்தான் செய்வோம்.

3.பம்பையின் துணைக் கருவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
முதலில் உடுக்கைதான். அதனுடைய துணைக் கருவிதான் பம்பையும்; சிலம்பும். இந்த மூன்றையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அருமையான இசை தோன்றும். அந்த இசையில் இறைவனே மயங்கி மனிதர்கள் மேலே ஆடி வருவார்.

4.பம்பை ஆட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக்க் கூறுங்கள்?
இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டாகும்.

தீப்பந்தாட்டம்:-
வாயில் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கையில் திப்பந்தம் வைத்து ஊதுவர்.

தண்ணீர்க்குடம்:-
ஒரு குடம் நிறைய தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்தக் குடத்தில் ரூபாய் நோட்டை வைப்பர். அந்தக் குடத்தைத் தனது வாயினால் தூக்கி தண்ணீரைத் தன் மேல் ஊற்றிக் கொள்வோம். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்துப்போம்.

சோடாபாட்டில்:-
சோடா பாட்டிலைத் திறக்காமல் வைப்பர். அதை நாங்கள் வாயினால் திறந்து சோடாவைக் குடிக்குவிட்டுப் பிறகு அதை மூடிவிடுவோம் ஆனால் அந்த பாட்டிலைத் திறக்கக் கையைப் பயன்படுத்தக் கூடாது. கஷ்டமாக இருக்கும்.

கண்ணினால் ஊசியை எடுப்போம்; நெற்றியினால் செங்கல்லை உடைப்போம். இவற்றை யெல்லாம் செய்யும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் ஒசிப்பார்கள். வெறுமனே பம்பை மட்டும் அடித்துக் கொண்டு போனால் ஒசிக்க மாட்டார்கள்.

5.உங்களுக்கு பம்பை செய்யத் தெரியுமா?
எனக்கு முழுமையாக செய்யத் தெரியாது.

6.எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் பம்பை அடிக்கிறார்களா? இல்லை வேறுபாடுகள் உண்டா?
கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்குது. இத்தொழிலை பரம்பரையாக, புர்விகமாக செய்பவரின் இசை ஒரே மாதிரி தான் இருக்கும். இடையில் வந்தவர்களால் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு மலையனுரில் அடிப்பவர்கள் மீனவர்கள், அவர்களின் இசை வேற மாதிரியாக இருக்கும். அவர்கள் அடிக்கும் விதம் வேறு மாதிரியானது.

7.சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள ஒசனை எப்படி இருக்கிறது?
சென்ற தலைமுறையில் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருந்த்து. முன்பு இருந்த ஒசனை வேறு, இப்போது இருக்கும் ஒசனை வேறு. அதனால் பம்பைக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

8.உங்களுடைய அடுத்த தலைமுறையினர் பம்பைக் கலையைப் பின்பற்றுவார்களா?
கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். நான் என் சொல்றேன்னா, எனது தாத்தாவின் கலையை நான் பின்பற்றினேன். எனது கலையை எனது மகன் பின்பற்றுவான்.

9.பம்பையைக் கற்றுக் கொடுக்க ஏதேனும் பள்ளிகள் நிறுவனங்கள் இருக்கின்றனவா?
இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் எந்த நிறுவனமும் இல்லை. இனிவரும் காலங்களில் வரலாம் என நம்புகிறேன்.

10.பெண்கள் பம்பை அடிக்கிறார்களா?
இல்லை.

11.இனிவரும் காலங்களில் பெண்கள் பம்பை அடிக்க நேர்ந்தால் நிங்கள் ஏற்பீற்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம்.

12.குறிப்பிட்ட சாதியினர் தான் பம்பை அடிக்க வேண்டுமா? அல்லது யார் வேண்டு மானாலும் அடிக்கலாமா?
முன்பு கோவில் புசாரி மட்டும் தான் பம்பை அடித்தனர். காலம் மாறும் போது இக்கலையின் மீது உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால், ஆனிசயால் வேறு சில இனத்தவரும் இக்கலையைக் கற்று இத்தொழிலை செய்கின்றனர்.

13.உங்கள் பிள்ளைகள் விரும்பினால் இந்தத் தொழில் செய்ய நிங்கள் அனுமதிப்பிர்களா?
அனுமதிப்பேன். அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தால்; அவன் நல்வழியில் சென்றால் கண்டிப்பாக அனுமதிப்பேன். காலங்காலமாக இந்தக் கலை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பம்பைக் கலைஞர்களுக்கும் இந்தக் கலைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்த்தின் கையில்தான் இருக்கிறது.

14.பம்பைக் கலைஞர்களுக்கும், பம்பை கலை வளர்ச்சிக்கும் தமிழக அரசு எத்தகைய திட்டங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறிர்கள்?
இக்கலை வளர எங்களுக்கு என்று ஒரு தனிச் சங்கம் அமைக்க வேண்டும். அதில் உறுப்பினராக எல்லாப் பம்பைக் கலைஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பம்பைக் கலைஞர்களுக்கென்று தனி வாரியம் அரசு அமைக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு இசைக் கல்லூரிகளிலாவது பம்பையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

15.ஆர்வமுடைய இளைஞர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் பம்பை இசைக் கருவியை வாசிக்கக் கற்றுத் தருவீர்களா?
உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் அதுவே இக்கலை மீது ஈடுபாட்டை உண்டாக்கும். நிங்கள் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் நான் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கேன்.

16.எல்லா கோவில்களிலும் பம்பை அடிப்பீர்களா?
இந்து மதக் கடவுள் அனைவருக்கும் இதை வாசிப்போம். அம்மன்; சிவன்; முருகன்; காவல் தெய்வங்கள் போன்றவர்க்கு இசைப்போம். வைணவக் கோயில்களில் இசைக்க மாட்டோம்.

17.எத்தனைத் தலைமுறையாகப் பம்பை அடிக்கிறீர்கள்?
இது ஒரு நகைச்சுவையான கேள்வி, எங்களது பரம்பரை தொழிலே இது தான்.

18.எப்படி இந்தக் கலையில் ஆர்வம் வந்தது.?
இந்த ஆர்வம் பிறப்பிலிருந்துதே இருந்த்து. எனது தந்தை, தாத்தா போன்ற முன்னோர்களின் இசையைக் கேட்டு கேட்டு எனக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிட்டது.

19.வருமானம் எப்படி இருக்கிறது?
வருமானம் கிடைக்கிறது. ஆனால் அன்று கிடைப்பது அன்றே செலவாகிவிடும். மறு நாள் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றால் தான் எங்களது பிழைப்பு நடக்கும். அந்த அளவில்தான் இப்போதைக்கு இந்தத் தொழில் உள்ளது.

20.முழு நேரத் தொழிலாக இதைச் செய்ய முடியாதா?
செய்ய முடியாது. இத்தொழிக்கு என்று ஒரு சீசன் உண்டு, ஆடி, மாசி, சித்திரை போன்ற மாதங்களில் வேலை தொடர்சியாக இருக்கும். மற்ற மாதத்தில் ஒன்றோ இரண்டோ தான் வரும்.

கிராமங்கள் இருக்கும்; மக்கள் இருப்பார்கள்;
கோயில்கள் இருக்கும்; மதம் இருக்கும்;
வழிபாடும் இருக்கும்;
ஆனால்..........
இந்தக் கலை இருக்குமா?
காலந்தான் பதில்சொல்ல வேண்டும்
நன்றி. வணக்கம்
நேர்காணல் உதவி; சுகுமார்

nandri : thadagam.com
இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
யாழினி முனுசாமி

சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.

மனித குல வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் உலகந் தழுவிய வளர்ச்சியின் காரணமாக பல புதிய துறைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒப்பாய்வு, இலக்கிய ஒப்பீடு அல்லது ஒப்பிலக்கியம் என்றும் ஆய்வு முறையைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் சாட்விக் என்பர். பிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் தோன்றியது. இன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் பரவி தனித்துறையாக நிலை பெற்றுள்ளது. இத்துறை ஆய்வுகள் தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வரிசையில் அ.அ. மணவாளன் ‘இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள் எனும் ஒப்பாய்வு நூல் முக்கியமானது.

288 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ தொடங்கி, ‘தமிழ்க் காப்பிய மரபில் கவியோகி சுத்தானந்தரின் இடம்’ கட்டுரை வரை 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலிலிருக்கும் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ எனும் முதல் கட்டுரையில், காப்பிய இலக்கணம் குறித்தும் தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் குறித்தும் வடமொழி காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம், கிரேக்கக் காப்பியங்களான இலியதம் (LLiad) ஒடிசி (Odyssey) இலத்தின் காப்பியமான ‘ஈனிட்’ ஆகிய முதற்காப்பியங்களின் பாவிகம் (கருத்து, குறிக்கோள்) மற்றும் தலைமைப் பாத்திரங்களின் பண்பு பயன் குறித்தும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி பிறமொழி முதற்காப்பியங்களின் மையக் கருத்தை நம்மால் உய்த்துணர முடிகிறது. அக்காப்பியங்களைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனையே ஒப்பாய்வின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

வெவ்வேறு மொழிப் பண்பாட்டு காப்பியங்களின் கதைச் சுருக்கங்களும் தலைமைப் பாத்திரங்களின் குணநலன்களை ஒப்பிடும் வாசிப்பில் விறுவிறுப்பும் கூட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூலுக்குப் பெரிதும் வழிகோலியிருக்கிறது. அவ்வகையில், கம்பராமாயணத்தை மில்டனின் ‘இழந்த சுவர்க்கம் மீண்ட சுவர்க்கம்’ காப்பியங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பதை முக்கியமானதாகக் கூறலாம். கி.மு. (70-19)வில் வாழ்ந்த வெர்ஜில் இயற்றிய இலத்தின் மொழியின் ஆதி காவிய ஏனதம் (AENEID). இக்காப்பியத்தின் நாயகன் ஏனியஸ். இவனுடன் இராமனை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார். தனக்கு நேரடி எதிரியல்லாத வாலியை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட இக்கட்டான நிலைபோல ஏனியாஸீக்கும் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறார். ஒப்பற்ற ரோம் நகரை உருவாக்கும் ஏனியஸின் குறிக்கோளுக்கு உதவிய டர்னஸ் என்பவனை கொன்றுவிடும் இக்கட்டான சூழலை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார்.

‘சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு’ கட்டுரையில் சிலப்பதிகார ஆணாதிக்கக் சொற்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே’ - எனவும் இன்னபிறவுமாய்க் கோவலன் கண்ணகியைப் பாராட்டுவது, பெண்ணை ஆணுக்குரிய நுகர்பொருளாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சிலம்பை மறுவாசிப்பு செய்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள இந்தியானா, கொலம்பியா பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த கருத்தரங்குகள் ஆய்வரங்குகள், பணிப் பட்டறைகள் போன்றவற்றில் படித்தளித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கும், டாக்டர் அ.அ. மணவாளன் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இலக்கியங்களிலும் புலமை உடையவர் என்பதால் தமிழ், வடமொழி, ஆங்கிலக் காப்பியங்களைத் திறம்பட ஒப்பாய்வு செய்ய முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் காணப்படும் மகாபாரதச் செய்திகளையும் ஆய்ந்திருக்கிறார். மகாபாரதப் போரில் இருசார் வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்த வள்ளல் என்று சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதை பின்வரும்
‘ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் / பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ - எனும் புறநானூற்றுப் பாடல்வழி எடுத்துக் காட்டியுள்ளார். இப்படிச் சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல் இது.

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
ஆசிரியர் : அ.அ. மணவாளன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 100.00.


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

புத்தக விமர்சனம் - குரலற்றவனின் குரல் ( தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதைகள் )


ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலம்கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா - பாட்டிகளின வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரலர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ என்னவோ! நமக்கு ஓரளவிற்கு வாய்த்திருந்த்து ஆனால். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாத்தாவோ பாட்டியோ தன் பேரப்பிள்ளைகளுக்கு. தான் சாதி ரீதியாக அனுபவித்த கொடுமைகளைக் கதைகளாகவேனும் சொல்லியிருப்பார்களா? இது நமக்கு மூத்த தலைமுறை வரையிலாக தொக்கி நின்ற கேள்வி. துன்பத்தைக் கதைகளாகக்கூட வெளிப்படுத்த முடியாத சூழலைத்தான் அற்றைச்சமூகம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆயினும், தற்போது பெருகி வருகிற தலித்திய படைப்புகளும், சிந்தனைகளும் அனறைய தாத்தாக்களின் நிலை இன்றைய பேரர்களுக்கு இல்லை என்பதை ஓரளவிற்கு உணர்த்துகின்றன.

கேள்வி அனுபவத்திலிருந்து எழுதகிறேன் என்றில்லாமல், பட்ட பாடத்திலிருந்து படைப்புகள் உருவாகின்றன என்ற தலித்திய எழுத்தாளர்களின் இன்றைக்குமான வாக்குமூலங்கள் நாகரிக சமூகத்தின்(!) முகத்தில் உமிழ்வதாகத்தான் இருக்கிறது. பட்டனுபவம் நல்லவற்றிற்கு இருக்கலாம், சமூக அவலங்களுக்கு இருக்கக்கூடாது. ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக்கூட பேசப்பட முடியாத தங்கள் முன்னோர்களின் அவலங்களை, நிகழ்கால நடப்புகளை, பதிவுகளாக்கி படைப்புகளாகத் தரும் தற்காலச் சூழல் தலித்திய மறுமலர்ச்சியாகவே தோன்றுகிறது.

தலித்தியம் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. தலித்திய ஆய்வுகளும் தம் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளன. என்.டி.ராஜ்குமார், அழகிய பெரியவன், விழி.ப. இதயவேந்தன, ரவிக்குமார், சிவகாசி போன்ற பலர் தங்கள் படைப்புகளில் தலித்தியத்தை ஆழமாகவே பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தலித்திய படைப்புகள் ஏதேனும் ஒரு பொருண்மையில் தொகுப்பாக வெளிவந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக சிறுகதைகள். இச்சூழலில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறந்த தலித்திய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் யாழினி முனுசாமி. “குரலற்றவனின் குரல்” தேவையான, வரவேற்கத்தக்க சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 31 சிறுகதைகள் 31 எழுத்தாளர்களால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டு, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. கவிதைகளையோ சிறுகதைகளையோ தொகுப்பவர்கள் தங்களுகென்று ஓர் அரசியலைக் கொண்டிருப்பர். ஆனால், “சிறந்த தலித்திய சிறுகதைகள்” என்ற அரசியலை மட்டுமே கையாண்டு இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர். படைப்பாளர்களுள் பலரை முன்பின் அறியாவிட்டாலும், கதைகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்பட்டிருப்பது தொகுப்பின் பலம். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, இலங்கை, டென்மார்க், மலேசியா, ஜெர்மனி, மும்பை என நாட்டின், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இயங்கும் எழுத்தாதளர்களின் தலித்தியம் சார்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தொகுப்பின் பரந்த நோக்கினைக் காட்டுகிறது. கதைகளைப் படிக்கும்போது, உலகெங்கிலும் எது இருக்கிறதோ இல்லையோ சாதியக் கொடுமை என்ற அவலம் இருப்பதை வேதனையோடு உணர முடிகிறது.

மேல்நிலையாக்கத்தால் தன் அடையாளத்தை இழந்து உருமாறிப்போன சிறுதெய்வங்கள் பற்றிய பதிவை “அடையாளம்” சிறுகதை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மேல்நிலையாக்கம் என்பது தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமும் சந்தித்த சந்திக்கிற அடையாள அழிப்பு என்பதை உணர வேண்டும். இதேபோல, தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கென இருந்த தனிக குவளை முறை, அதை எதிர்த்து நடந்த போராட்டம், பாரதி விரும்பிய சாதி ரீதியிலான சுதந்திரம், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் படிப்பைத் தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள், பல இன்னல்களுக்கு இடையில் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டு, படிப்பைப் பாதியில் இழக்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள், தேர்தல் கால சிக்கல்கள், உறவுசிலைச் சிக்கல்கள் போன்ற பல சமூக அவலங்களைத் தொகுப்பின் சிறுகதைகள் படம்பிடிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதைகள் ஒரு குறும்படக்கிற்கான கூறுகளோடு அமைந்துள்ளது சிறப்பு ஒடுக்கப்பட்டவனின் வாக்குமூலத்தை அவனுடைய குரலிலேயே அச்சுபிசகாமல் பதிவு செய்திருக்கும் “குரலற்றவனின் குரல்” பல்கலைக்கழகங்களுக்குப் பாடமாக வைக்கும் எல்லா தகுதிகளோடும் வெளிவந்திருக்கிறது. சமூகச் சிந்தனையாளர்களும், தலித்திய ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் வாங்கி படிக்கவேண்டிய, குறிப்பு நூலாகப் பாதுகாக்க வேண்டிய நல்ல தொகுப்பு.


நன்றி : தடாகம்.காம்

Wednesday, May 4, 2011

என் கவிதை - குழந்தைமையிடம் பொய்யுரைக்காதீர்

ரபலியிடும் சாமியாருக்குத் தெரியும் 
குழந்தைப்பேறு வேண்டிவரும் 
பேதைப் பெண்ணை வஞ்சித்துப் புணரும் 
சாமியாருக்குத் தெரியும் 
உண்டியல் பணத்தில்
பொய்க் கணக்கு காட்டும் 
குருக்களுக்குத் தெரியும்
கன்னியாஸ்திரியை வன்புணர்ச்சி செய்யும் 
பாதிரியாருக்குத் தெரியும் 
ஆசிரமத்தைக் காமச் சுரங்கமாக்கும் 
ஆனந்தாக்களுக்குத் தெரியும் 
தர்காவுக்கு வருபவர்களிடம் 
மந்திரித்துப் பணம் பறிப்பவருக்குத் தெரியும்
கருவறையில் காமுகனாக உருமாறும் 
அர்ச்சகருக்குத் தெரியும் 
'தொழில் ' சேவை புரியும் 
மாது அதிபர்களுக்குத் தெரியும்
நடிகையை பூஜித்தனுப்பும் 
இளந்துறவிக்குத் தெரியும் 
கணக்கு கேட்கும் நிர்வாகியின் 
' கணக்கை முடித்துவிடும் '
மடாதிபதிக்குத் தெரியும் 

...............................தெரியும்
.................................தெரியும்
..................................தெரியும் 

'தவறு செய்பவர்களின் கண்ணை 
சாமி குத்தாது' என்பது.
-------------------------------------------------------