Thursday, June 9, 2011

நூல் விமர்சனம் : வரும்வரை வானம் பார்த்திரு - மேரி வசந்திஉறவுகளையும் உணர்வுகளையும் பேசும் கவிதைகள்

து பெண்கவிஞர்களின் காலம் என்று புலப்பட்டாலும் சமீபகாலமாக பெண்கவிஞர்களின் வருகை சொல்லிக் கொள்ளும்படியாக நிகழவில்லை என்றே சொல்லலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கவிஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் எழுத்துலகிற்கு “ வரும்வரை வானம் பார்த்திரு ” எனும் தன் முதல் கவிதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் ச. சதாசிவானந்த சௌந்தரநாயகி.

சொற்கள் , முயற்சி ...தொடங்கி திருமதி வரை சிறியதும் பெரியதுமாக எண்பத்தைந்து கவிதைகள் உள்ளன. திருமணத்திற்கு முன்னும் பின்னுமான தன் வாழ்வியல் அனுபவங்களை உணர்த்தும் விதமாக எளிய நடையில் வெளிப்பட்டுள்ளன இவரது கவிதைகள் . இழந்துவிட்ட அல்லது பிரிந்துபோன நட்புகள் , மறக்க நினைக்கும் காதல் , பிறந்த வீட்டின் பெருமித உணர்வுகள் , குழந்தை மீதான அன்பு , கணவன் கணவன் சார்ந்த உறவுகள் மீதான குறைகூறல் , பெண்களுக்கேயான வலிகள் , வீட்டிற்கும் அலுவலகத்திற்குமான அலைச்சல் , “கணவன் - முதலாளி என இரு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் அவலம் ” என எதார்த்த வெளியில் பயணிக்கின்றன கவிதைகள்.


குழந்தைகள் போல் மகிழ்ந்துபோக , இளவயது ஞாபகங்களை அசைபோட , உணவுகளை நிதானமாய் சுவைத்திட என எதற்குமே நேரம் ஒதுக்க இயலாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கை பற்றிப் பேசுகிறது “இல்லை ” எனும் கவிதை.

“ கால்கள் வாட / உன்னைப் பிரியும் காலைகள் / மனம் மலர மீண்டும் சந்திக்கும் மாலைகள் / சமையலறையோ குளியலறையோ / என்னை ஏந்திக் கொள்ளும் / சிறு பிரிவையும் பொறுக்காத உன் நொடிகள் / .....அயர்ந்த தூக்கத்திலும் / அனிச்சையாய் / என் இருப்பு தேடி / அருகே பயணிக்கும் உன் உடல் ” எனும் இனிமை கவிதை குழந்தையைப் பரிந்து அலுவலகம் செல்லும் பெண்களின் மனவுணர்வை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறது .

ஒரு கரு உருவாகி சில நாட்கள் மட்டுமே இருந்து கலைந்துபோனாலும் அதன் நினைவு அந்தத் தாய்க்கு உயிர்வுள்ளவரை இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக பேசுகிறது மகனா மகளா ? எனும் கவிதை. வட்டக்கிணறு , ஊத்துக்கிணறு , ஓரக்கிணறு , தோட்டக் காட்டுக் கிணறு , வெள்ளையங் கிணறு ,கெராப் பள்ளத்துக் கிணறு , நத்தக் காட்டுக் கிணறு என கிணற்றில் இத்தனை வகைகளா என்று வியக்க வைக்கும் ஈரமாய் எனும் கவிதை பட்டென்று முடிந்துவிடுகிறது.

அழகியல் சார்ந்த மற்றுமொரு கவிதை வா...மழை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. “ இன்றாவது வா / என்னை உனதாக்கு / என் தாகம் தீர் / என்னை நனை முழுவதுமாய் / எங்காவது கடத்து மனதை / குடை மறந்தேன் / இன்றாவது வா .”

சின்ன விசயங்களில் கணக்குப் பார்த்துவிட்டு பெரிய அளவில் கோட்டைவிடுபவர்களைப் பற்றிப் பேசுகிறது துரும்பு கவிதை.
“ பிச்சைக்காரரிடம் / கணக்குப் பார்த்த ஐம்பது பைசா / ஆட்டோகாரரிடம் / கொடுக்காதுவிட்ட ஒரு ரூபாய் / காய்க்காரரிடம் / பேரம்பேசிய இரண்டு ரூபாய் / வெள்ளத்தில் துரும்பாய் / அடித்துக்கொண்டுபோனது / ஷேரில் போட்ட லட்சங்களாய். ”

பிறந்தகம் பற்றிய கவிதைகளும் அப்பா நட்பு காதல் பற்றிய கவிதைகளும் நேர்மறையாகவும் கணவர் மற்றும் அவர் சார்ந்த உறவுகள் பற்றிய கவிதைகள் எதிர்மறையாகவும் வெளிப்பட்டுள்ளன. கணவன் என்பவன் அல்லது ஆண் என்பவன் குறைசொல்லியே ஆகவேண்டியவன் என்கிற பெண்கவிஞர்களின் விதியை சிரம்மேற்கொண்டு இவரும் பின்பற்றியிருக்கிறார். ஒரு வித்தியாசம் இவரது கவிதைகளில் ஆணைப் பற்றிய பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுக்கள் குறைவாகவுள்ளன. அப்பா என்கிற ஆணைப் பற்றிய கவிதைகள் பெருமிதவுணர்வோடு பேசுகின்றன. கணவன் சார்ந்த குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை பொருளாதாரம் பற்றியும் குறைந்த அளவில் உணர்வுகள் சார்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. கல்யாணம் பற்றிய பெரும்கனவு நினைவானபோது ஏற்பட்ட ஒரு பெண்ணின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இத்தகைய கவிதைகள் உள்ளன.

வாழ்க்கைப்“பட்ட” வீடு ,

“ சில சுவர்கள் / மேலும் உட்புறமாய்ச் சில / நிறைய துணிகள் / அழுக்கும் அழுக்கற்றவையுமாய் / ஒரு சோபா / .......ஒரு டி.வி./ உடைந்துபோன ரிமோட் / இவற்றோடு இன்னுமொன்றாய்/ நீயும் / என் வாழ்க்கை நிரப்பிகள். ”

கணவனின் வீடு “ பட்ட ” மரம்போல்...“ பட்ட” வீடு.! கணவன்... “உடைந்துபோன ரிமோட்டைப் போன்ற ” ஒரு பொருள்!

தான் செய்யும் தவறுகளுக்குக்கூட மனைவியை குறைகூறி பிழையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆண்களைப் பற்றிப் பேசுகிறது பேசு கவிதை . “ மிகச் சரியானவை உன் வார்த்தைகள் / மிகத் தவறானவை என் வார்த்தைகள் / என்பதான உன் தீர்ப்பை / பொறுமையின் எல்லைக்கப்பால் / சென்றேனும் / ஒத்துக்கொண்டேயாக வேண்டும் நான் .” இக்கவிதை வரிகள் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தும் சிறந்த வரிகளாக உள்ளன. செறிவான நடையில் இயல்பாக சென்றுகொண்டிருக்கும் கவிதையின் முடிவு நாடகத்தன்மையாக இருக்கிறது. திருமணத்திற்குப் பின் தன் சுயத்தை இழந்துவிடும் பெண்களின் மனத்தை வெளிப்படுத்துவதாக திருமதி கவிதை அமைகிறது .

பெரும்பாலான கவிதைகளுக்கு கவிதை வரிகளையே தலைப்பாக வைத்தருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கவிதைக்குத் தலைப்பு கட்டாயமா என்ன ? சில கவிதைகளைச் செதுக்கியும் சில கவிதைகளைத் தவிர்த்துமிருந்தால் தொகுப்பு இன்னும் கூடுதல் கவனம்பெற ஏதுவாக அமைந்திருக்கும். கவிதைகள் நவீனத் தன்மையிலும் அட்டை வடிவமைப்பு மற்றும் நூல் வடிவமைப்பு தலைப்பு ஆகியவை வெகுசன ரசனைசார்ந்தும் அமைந்திருப்பது முரண்பாடாக உள்ளது. இப்படிச் சில குறைகளிருப்பினும் ஒரு நிறைவான தொகுப்பாகவே உள்ளது.

வரும்வரை வானம் பார்த்திரு
ஆசிரியர் - ச. சதாசிவானந்த சௌந்தரநாயகி
வெளியீடு - வனிதா பதிப்பகம்
எண் 11 நானா தெரு
பாண்டி பஜார்
தி்.நகர்
சென்னை 17
044- 42070663

No comments:

Post a Comment