Friday, June 10, 2011

முத்தங்களால் உன்னை....

தூக்கம் தளும்பும் உன்னை
முழுதாய் உறங்கவிடுவதில்லை நான்

இச்சைமொழிபேசிப் புணர்ந்து ஆழ்ந்துறங்கி
தானாய் விழித்தெழும் என்முன்
அலாரம் வைத்தெழுந்து அரைத்தூக்கத்தில் தயாரித்த
காப்பியை நீட்டுகிறாய்

சிறுபொழுதினில் டிபன் செய்து
பரபரப்பாய் லன்ச்சும் கட்டிக்கொடுத்து விடுகிறாய்
உட்கார்ந்த இடத்திலேயே
கையலம்ப நீரெனக்கு
எல்லாம் முடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் கிளம்புகிறாய்

நகரநெரிசலில்
பேருந்து உரசலில்
அலுவலக 'இரட்டை அர்த்த ' வார்த்தைகளில்
உடலும் உள்ளமும் கசகசத்துத் திரும்புகிறாய்
மீண்டும் சமைத்து இரவுணவுமுடித்து ஓய்ந்துறங்குகையில்
விழித்துக்கொள்ளும் என் காமம்...

மறுவிடிகாலை அலாரம் வைத்தெழுந்து...
சிறுவுதவியும் செய்யாது
தப்பித்துக்கொள்கிறேன் நான்
முத்தங்களால் உன்னைக் குளிர்வித்து!
-------------------------------------------------------------------------------
நன்றி...குமுதம் - 08 -03 - 04 
(குறிப்பு - என் முதல் கவிதைத் தொகுப்பான உதிரும் இலை யிலிருந்து எடுக்கப்பட்டது.)

No comments:

Post a Comment